Wednesday, December 24, 2014

சிறுகதை -"சிறைச்சிறகுகள்"

தனித்து விடப்பட்ட ஒரு பறவையின் ஒடிந்த
சிறகினைப் போலத்தான்
ராமுவின் வாழ்க்கை ஒரு வித்தியாசம் கூடு இருந்தும் கூடிவாழும்
போக்கில்லாமல் வீட்டில் அனாதையாகப்பட்ட ஒரு பதின்ம வயதுச் சிறுவன்
விடிவது தெரிந்ததும் கானாமல் போகும் முதல் நபராய் தந்தை தனுசு இருந்தார்.
பதற்றச்சூழலில் பட்சிகளுக்குப் பதிலாக
வாகன அலறல் சத்தங்கள் அவசர அவசரமாக வேலைக்காரி தயார் செய்து வைத்திருந்த
காலை சிற்றுண்டியை பையில் திணித்த படியே தன்னை தயார் செய்தாள்
.அலுவலகத்திற்கு கிளம்ப எத்தனித்த நேரத்தில் மேசையில்
அமர்ந்திருந்தவனிடம்
ராமூ மம்மி ஆபிஸுக்கு கெளம்பிட்டேன் சமத்தா சாப்டுட்டு டீவி பாரு வெளில
எங்கும் போகாதே ! என்று அதட்டக்குரலோடு அதிகார தோனியும் கலந்தே கத்தினாள்
, ராமு பதிலேதும் பேசவில்லை மவுனமாகவே அம்மாவின் முகத்தைப் பார்த்து
தலையசைத்தான். சிறிது நேரத்தில் பரபரப்பு அடங்கி மயான அமைதி பூண்டது அந்த
வீடு . வேலைக்காரிக்கு முழுநேர பணியானாலும் இருவரும் இல்லையென உறுதி
செய்து அவ்வப்போது பக்கத்து வீட்டு குடும்பஸ்த்ரீயிடம்
ஊர்க்கதை பேசப் போய்விடுவாள் இது வாடிக்கையாகவே இருந்தது அவளுக்கு ,
மதியவேளை உச்சி வெயிலின் ஆக்ரோஷம் பூமியை பதம் பார்த்துக்கொண்டிருந்­­த
நேரம் ராமு தனியாக டிவி பார்த்துக்கொண்டிருந்­­தான் சனிக்கிழமையாதலால்
அவரவர் தன் கடமைக்கு நிகழ்சிகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார்கள் .
ஏற்கனவே தேய்ந்து போன டிவி ரிமோட் இன்னும் தேய்ந்து கொண்டிருந்தது
ராமுவின் கையில் சேனலை மாற்றிக்கொண்டே வருகையில் ஓரிடத்தில் நின்றான்
கவனமாக உற்றுபார்க்க தயாரானான் ஒலியை மென்மையாக்கினான் இரு காதுகளையும்
கூர்மையாக்கினான் அந்தச் சேனலில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது
அந்நிகழ்ச்சி ஒரு ஆணும் பெண்ணும் கடற்கரை மணலில் அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கிறா­­ர்கள் கடலுக்கு மிக அருகில் இரு குழந்தைகளும்
வயதான இரு பெரியவர்களும் மிக எச்சரிக்கையாய் அவ்வெச்சரிக்கையை
வெளிகாட்டாமல் அக்குழந்தைகளோடு இணைந்து விளையாடிக்கொண்டிருந்­­தார்கள் .
இந்நிகழ்ச்சியை வைத்தகண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்­­த ராமு
திடீரென டிவியை நிறுத்தி விட்டு எழுந்தான் சற்றும் முற்றும் பார்த்தான்
யாருமில்லையென்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது வேலைக்கார பெண்மணி
பக்கத்து வீட்டில் தான் இருப்பாள் கவலையில்லை நெஞ்சம் படபடத்தவாறே
மாடிப்படியேறி அப்பாவின் அறைக்குச் சென்று அலமாரியைத் துறந்து சில
காசுகளை எடுத்துக்கொண்டு அதே வேகத்தோடு வீட்டு வாசலுக்கு வந்தான்
திரும்பவும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சாலை மரங்களுக்கு நடுவே
நடக்கலானான். மாலை மணி ஐந்தென காட்டியது கடிகாரத்துடன் கைசேர்ந்தே
பயணிக்கும் இளமை குன்றாத அந்த இளஞ்சூரியன் . ஒருவழியாக ஒருநாள் அசதியை
அசைப்போட்டுக் கொண்டு ராமுவின் அம்மாவும் அப்பாவும் வீட்டை நோக்கி வருவதை
அறிந்த வேலைக்காரி இப்போது பவ்யமாய் ஹாலுக்குள் நுழைந்து ராமுவை
அழைத்தாள். பதிலேதும் வரவில்லை குரலை உயர்த்திக்கொண்டே தேடலானாள் ராமு
எங்கேயும் இல்லை என்பது உறுதியாய் தெரிந்து விட்டது அதற்குள் தனுசும்
தனுசோடு சேர்ந்து அவர் மனைவி இருவரும் வந்துவிட்டார்கள். வேலைக்காரி
என்னசெய்வதென்றே தெரியாமல் அழுதுக்கொண்டே!
ஐயா, அம்மா! ராமுவ எங்கேயும் கானல ,இப்பதான் இங்க டிவில கேம்
வெளையாடிட்டு இருந்தான் சரி வெளையாடுரானேனு நானும் சமையகட்டுக்கு
போய்ட்டேன் , திரும்ப வந்து பார்த்தா புள்ளைய கானோம்மா ! என்று
அழுதுக்கொண்டே சில பொய்களையும் வீசினாள் . வந்தவர்களும் ராமு!! ராமுவென
அழைத்தவரே நாலாபுறமும் தேடினார்கள் எங்கேயும் இல்லை என்பதை உறுதி செய்து
வேலைக்காரியை திட்டிவிட்டு தணியாத பதற்றத்தோடே அக்கம் பக்கத்தாரிடம்
விசாரிக்க கிளம்பினார்கள் . யாருக்கும் தெரியவில்லை இறுதியாக காவல்துறை
அணுக முடிவு செய்து கிளம்பத் தயாரான சமயத்தில் தனுசின் செல்போனுக்கு
அழைப்பு ஒன்று வந்தது எடுத்து பேசினான், எதிர்முனையிலிருந்து ஹலோ!!! சார்
நாங்க அடைக்கல இல்லத்திலிருந்து பேசரோம் மதியத்திலிருந்து உங்க
போனுக்கும் மேடம் போனுக்கும் பேச முயற்சித்தோம் செல்போன் அணைத்தே
இருந்தது வீட்டிற்கு போன் செஞ்சோம் யாரும் எடுக்கல மதியம் உங்க பிள்ள
ராமு வந்தான் சார் தாத்தா பாட்டிய பார்க்கனும்னு சொன்னான் சரி
பார்க்கலாம் தனியாவா வந்தேன்னு கேட்டேன் ஆமா அம்மா அப்பாக்கு தெரிஞ்சா
அடிப்பாங்கனு சொன்னான் ஏன்? சார் பையன தனியாவா அனுப்பர்ரது கூட நீங்களோ
இல்ல உங்க மனைவியையோ அனுப்பியிருக்கலாமே ! ஒன்றும் கவலபடாதிங்க சார்
பையனும் பையனோட தாத்தா பாட்டியும் பக்கத்துல இருக்குர ஃபீச்சுக்கு போரதா
சொன்னாங்க உங்களிடமும் சொல்ல சொன்னாங்க இனிமேலாவது பிள்ளைய தனியா
அனுப்பாதீங்க சார்! நான் வைச்சுடுரேன்,, என்று சொல்லிவிட்டு செல்போன்
அணைக்கப்பட்டது.
இருவருக்கும் ஒருவித நிம்மதி கிடைத்தது . வேலைக்காரி வீட்டிலில்லை
என்பதும் அவள் வீட்டில் இருப்பதில்லை என்பதையும் உறுதி செய்து அவளை
கண்டித்துவிட்டு வாகனத்தை கடற்கரை நோக்கி செலுத்தினார்கள்
சிறிது நேரத்தில் கடற்கரை வந்த அவர்கள் தன் பேரனோடு விளையாடுவதை பார்த்து
கண்ணீர் விட்டபடியே அருகே சென்று தலை குனிந்தவாரே " எங்கள
மன்னிச்சுடுங்கப்பா தப்பு செஞ்சிட்டோம் இனிமே அந்த அரோக்கிய இல்லம்
வேனாம் எங்க கூடவே வந்துடுங்க நாங்க தப்ப உணர்ந்துட்டோம் எங்களுக்காக
இல்லாட்டியும் உங்க பேரனுக்காக வீட்டுக்கு வாங்கப்பா ,,,, தனுசும்
தனுசோடு மனைவியும் தழுதழுத்த குரலிலேயே பேச அனைவரின் கண்களிலும் கண்ணீர்
பெருக்கெடுத்து ஓடியது. இரவு மூடி காலை திறந்தது இப்போது அந்த வீடு சமூக
கூட்டுப் பறவைகளின் கூடாரமாக பிரகாசமாய் ஒளிர்ந்தது.

Monday, December 22, 2014

மதுபாட்டில் எச்சம்

"மதுபாட்டில் எச்சம்"

பிச்சைப் பாத்திரம் பிழைப்பாகி
அதிலே
விழும் எச்சில் உணவுபோல
என்னுடலை மேய்ந்துவிட்டு! உள்ளாடையில் ஊறுகாவை ருசிபார்த்து சில ரூபாய்
சொருகிவிட்டு! தீர்ந்ததடி ஆசையென சிரித்தபடி சிகரெட்டில் டாட்டூ
வரைந்தான்
காமம் அவனை கண்மறைத்தே
போனது!

படுக்கையறை பாய்விரிப்பில்
பாய்ந்த ரத்தம் உறையவில்லை! பட்டென
உட்புகுந்து பிரியாணிக்கும் பீருக்கும் பிடுங்கிச் சென்றான் தரகரவந்தான்!

பரத்தையென பட்டம் வாங்கினேன்! பட்டைபட்டையாக சூடும் வாங்கினேன் !
இறுதியில் எய்ட்ஸையும் பெற்றுவிட்டேனம்மா!

குடிகார அப்பனுடன் கூடவே உயிர்விட்டவளே!
உன்கூட பிறந்தவனுக்கு ஏனடி எனை மண முடித்தாய்!

குழந்தைகள் பிறந்தவுடன் குடும்பம் நடத்த வக்கில்லை
அவனும் குடித்தழித்தான்
உம்பேர பேத்திகளை
தெருவில் விட்டான்
எமனும் பொருப்பானா
இல்லை குடிதான் வாழவிடுமா
உங்கூடவே அவனும்
வந்தானம்மா

பிழைப்புக்கு வழியில்லை
பிள்ளைகளும் பீத்திண்ண
கூலிக்கு போனாலோ
அங்கொருவன்
குடலில் குத்த
சென்ற இடமெல்லாம்
ஆணுறைகள்
அழுத்திப் பிடிக்க
அடுத்த தொழிலோ
அதுவாக மாறிப்போக
இறுதியில்
எய்ட்ஸையும் பெற்றுவிட்டேனம்மா!
இனி எண்ணுவது
நாட்களையம்மா!
இதோ எமனானவன்
ஏறி வருகிறான்
என்னுடல் அவனுக்கு
வேண்டுமாம்
எமன்தான் எத்துனை
நல்லவன்
எனது பெண்ணுறுப்பை
ஏறெடுத்தும் பாராதவன்

கண்ணீர்த் துளிகளில்
கடைசி மட்டும் இனிக்குதம்மா
கவலை வேண்டாம்
உம் பேரப்பிள்ளைகள்
படிப்புக்கும் பணத்துக்கும்
பாதுகாப்பளித்தேன்
பரத்தையென பாவிமகளென பரிகாசம்
இனியில்லை பக்குவமாய் மறைத்தேன்
கண்கானா தேசத்து
கல்வி விடுதியொன்றில்
என் கண்களை தாரைவார்த்தேன்!

இனி கவலையில்லை
கல்லறையின் கண்ணத்தில் முத்தமிட
இதோ வருகிறேன்
இறுதி வரை மூடர்கள்
மூடாத மதுபாட்டில்
எச்சமாக
இதோ வருகிறேன்!

Sunday, December 21, 2014

ஹைக்கூ "இம்சை வரங்கள்"

இளைப்பு
இருமல்
இடுப்புவலி
இதயநோய்
இறங்கிய இமைகள்
இல்லத்தாயின்
இம்சை வரங்கள்

___

உறைந்து போன
மானிடம்
உரக்க சொன்னது
உறங்க மறந்த
-எறும்புகள்

___

வேர் நரம்பில்
வியர்வைத்
துளிகள்
வானம் பார்த்த
மரம்

___

மேடு பள்ளத்
தண்ணீர்
தேசம்
அழுவது யாருக்கும்
தெரியவில்லை
தரையில்
மீன்

___

மலர்களாடும்
மார்கழியில்
வாசலில்
மயிலாடும்
-கோலங்கள்

___

நீண்ட
வரிசையில்
நட்சத்திரங்கள்
யாருக்கு மாலையிட?
மலரிடம் கேட்டது
மார்கழி
பனித்துளிகள்

___

குடிசை தோறும்
குவிந்த
காக்கைகள்
கைகளில் பகிர்ந்த
உணவு

___

Saturday, December 20, 2014

சுவாசத்தின் முன்னேற்பாடு

காதலொரு
சுவாசத்தின்
முன்னேற்பாடு!
இதயம்
பற்றவைத்த
பாசப் பரவச
நெருப்பு!
உறங்காதே
உள்ளமே!
உணர்வுகள்
விழித்தெழுவதை
பார்!!
அதோ!! சோலை ரோசாக்கள்
சுதந்திரத்தை
தேடியே சோர்ந்து இருக்கிறது!
நீயும்
உன் சுயநலத்தை
சூனியமாய் எண்ணி
எதிர் நோக்கும்
தென்றல் காற்றிற்கு
ஒரு முத்தமிடு!
தேவதைக்கு
தேரிழுப்பது அவைகள்தான்!
பதில் முத்தம்
பதிந்து வருவதை பகைவனாலும்
தடுத்திட முடியாது!
காதலை சுமந்துவரும்
தென்றல் காற்றிற்கும்
கடைசியாக முத்தமிட்டு
செய்நன்றியை
செதுக்கிவிடு
காதல் கை
கூடலில் தான்
சோலை ரோசாக்கள் சுதந்திரம்
அடையுமாம்!
முதல் சந்திப்பை அச்சோலையிலே தொடங்கிவிடு!
காதல் என்றுமே
சுவாசத்தின் முன்னேற்பாடு!
இவ்வுண்மை
உலகிற்கு இனி உரைக்கட்டும்!

Friday, December 19, 2014

ஹைக்கூ "எங்கும் ஓலக்குரல்"

கையில் ஏந்திய
துப்பாக்கி
மூடியே கிடந்த
கண்கள்
இனி தொடரும்
மனிதமெனும்
வீழ்ச்சி

___

தவித்த
வாய்க்கெட்டா
தண்ணீர்
பக்கத்திலேயே
வெடிக்கிறது
எவனோ வீசிய
-அணுகுண்டு

___

பற்றி
எரிகிறது
வயிறு
தீராத வலிதானோ!
-தீவிரவாதம்

___

அழுகிறது
மரம்
செதுக்காதீர்கள்
சிறிய சமாதி
பெட்டிகளை
கொலையில்
வீழ்ந்த
-குழந்தைகள்

___

"தீ"
ஓரெழுத்து
உனை
கொல்லும்
விடு
"தீ"விரவாதத்தை!

___

பெஷாவர் நகருக்கு பேரறிக்கை
"மை" இல்லா
பேனாவில்
எழுதிய
-உலக நாடுகள்

___

கொடுத்த அறிவு
இப்படி
பயன்படுகிறதே
துயருற்றாள்
பூமித்தாய்
இறந்த
-குழந்தைகள்

___

சுயநலம்
உனக்கா எனக்கா வாதமிடும்
முன்னரே
தலை குனிந்தது
-பூமி

___

இரவெது
பகலெது
தெரியவில்லை
ஓயாமல்
கேட்டது
ஓலச்சத்தங்கள்
தொடர்ந்து துரத்தியது
-தீவிரவாதம்

___

உதவி செய்தே
சிவந்த கரங்கள் செஞ்சிலுவை
சொந்தங்கள் குற்றவுணர்வில்
குமுறாதோ
-வன்முறை

___

மழைபோல்
அழுகிறது
மனம்
மலைபோல்
குவிந்த
சின்னஞ்சிறு
-சவபெட்டிகள்

__*__

Thursday, December 18, 2014

கால்தடம் தேடி!

மண்வாசம்
மதிமயங்க
மங்கையவள்
உனைத்தேடி
ஒற்றைக் காலுடனே காதலன் நானும்
தவம் புரிகிறேன்!
எங்கேயென?
உன்னுதடு வினவுவதை விதைநெல்லும்
அறிந்து வந்து விடைதேட துடிக்கிறது
நீ முதல் பார்வை
விதைத்தாயே
அதேயிடத்தில் கானல்நீரோடு
என் கண்ணீரும் சேர்ந்தணைத்து
காற்று வெளியில் கரைந்தோடி
காலம் கைகூடாத
கல்மரமாகி காத்துக்கிடக்கிறேன் விடையறந்த விதைநெல்லும் வீடுநோக்கி
வருகிறது காது கொடுத்து கேட்பாயா என்னிதய மறுதுடிப்பே!
இன்னமும் மண்தொட மறுக்கிறதென்
மறுகால்!
காதலின் காசநோயால் நானும்
உனைத்தேடி ஒற்றைக் காலுடனே
தவம் புரிகிறேன்!
காதல் வலிதான்
எனக்கு கடைசிவரை
மிஞ்சுமோ கடற்கரை கால்தடம் தேடி இதயமும் போகுமோ! கல்லறைதான் எனதெல்லை
என்னவளே
எட்டியேனும் பார்த்துவிடு இவ்வொற்றை
தாமரை
இனி உலகினை துறக்கட்டும்,,,!

Wednesday, December 17, 2014

வேண்டாம் தீவிரவாதம்

சிறகுகளை பதம்பார்த்த
தோட்டாக்களே
தோழமையின் பலமறிவீர்களோ!
எவனோ எங்கிருந்தோ
தூண்டிவிட
தூசிபடிந்த மதநூலுக்கு
துள்ளி திரிந்த
குழந்தைகளை பலிகொண்டீரே!
பாவத்தை புனிதமென்கிறதோ
உங்கள் மதம்
பள்ளி வாசலென்ன
பாசிசத்தை பூசியதா
பாவிகளே!!
பள்ளிக்கூடம் நுழைந்த
தாலிபான்களே!
நீங்கள்
பள்ளி வாசல்
நுழையாத
காட்டுமிராண்டிகள்!
கிழித்து எறியப்பட்ட
நூற்று அருபத்து நாலுயிர்களும்
திருக்குரானின் தீரா வலிகொண்ட
பக்கங்கள்
பல கனவுகளை கண்டிருக்குமே
அப்பள்ளிக் குழந்தைகள்
பட்டங்களா ,விருதுகளா,
படிப்பறிவா, பார்முழுதும்
புகழா! பார்த்து விடுவோம் ஒருகை
பறக்கத்தான் சிறகுகள்
பிறந்தவனவே விடிவெள்ளியும் விடியலை சுமந்திடுமே!
-இப்படி
கனவுகளை
சுமந்த கானக்குயில்
குழந்தைகளை
கவனம் திருப்பத்தான்
காட்சிக்கு கொன்றோமென, கடவுளை காரணம் காட்டி கண்கட்டி
வித்தை நடத்தினீரோ!
ஏ!!! தாலிபனே!
தண்ணீர் தேசத்தை கண்ணீர் தேசமாக்கி!
குருதியாறை இம்மண்ணில் ஓடவிட்ட குள்ளநரிகளே
குறித்துக் கொள்ளுங்கள்!
வஞ்சநெஞ்சில் விரைவில் நஞ்சு புகும்! நாதியற்ற உடற்குவியல்
எங்கள் மழலைகளின்
காலடியில் காணிக்கையாகும்! தாலிபனே குறித்துக் கொள்ளுங்கள் !

Tuesday, December 16, 2014

பறவைகளே வாருங்கள்!

புது
விடியலைத் தேடி
பறவைகளே வாருங்கள்!
கலங்கரை விளக்கில்
காதலை ஏற்றியதொரு
கப்பல் தெரிகிறது!
வானமகள் கைகொடுக்க
தேவதைகளாய்
பனிதுளிகள்
மண்ணில் பாதம்
பதிக்கிறது!
பறவைகளே வாருங்கள்!
சிவந்த முகத்தோடு
சினங்கொண்டு
சினுங்கும்
விதைகளிங்கே
விருட்சக் கனவோடு
சிதறிக் கிடக்கிறது!
யாரும் சீண்டாமல்
விதைகளோ
செல்லரிக்கிறது!
சொல்லொன்றை
சுமந்து வாருங்கள்
சுகப்பயணம்
விதைக்கு தாருங்கள்!
இறக்கைகள் ஆட
பனிதுளி தேவதைகள் நமக்கோர் பாதை வகுத்திடுமே!
அன்பும்,கருணையும்
அதனிடத்திலும்
சேர்ந்திடுமே! பனைமரத்தில் ஆழமாய் வேரிட்ட ஆலமரம் அழகின் பாசப் பிணைப்பல்லவா!
பூவரசம் பூவில்
புன்னகை தெளித்திடும் புது மல்லிப்பூவின்
புகு விழாக் கோலமல்லவா!
இமைகளை மூடும்
முன்னே இவ்வுலகை இம்சிக்கலாம்!
இனி தனிமையில் விதைகள்
தவிக்கலாமா! தோழமையை தோளில் சுமந்து
பல தோப்புகளை இப்பூமியில்
பரப்பலாம்!
புது
விடியலைத் தேடி
பறவைகளே
வாருங்கள்!

Monday, December 15, 2014

தேவை அதுதானோ!

நடனமாடும்
இளம்பொழுதில்
நாவிசைப்
பார்வை விதைத்தவள்
நீயோ!
நதியாடும் நாணலிங்கே
நகைப்பது ஏனோ!
வெள்ளித் தாரகை
விளக்கேந்தி
விழுந்து கிடக்கிறது
இங்கே!
உன் பாதம் தழுவ
அதற்கோர் தயவு
தந்திடுவாயோ!
தொகை விரித்தாடும்
தோழமைத் தேடிநாடும்
வண்ண மயில்தனை
வாழ்த்திட வழிவிடுவாயோ!
வான் விடியலுக்கு
வாழ்வுதனை
சேர்த்திடுவாயோ!
எங்கே அழகென்று?
ஏக்கமாய் எட்டிபார்க்கும்
மலரை மடியில்
சுமந்தாயோ!
மலர்மேயும் வண்டானேன்
தேனை சுவைத்திட,
தேரில் அமர்ந்திட
தேவியே அனுமதி
தாராயோ!
இந்த தேவன் உனை
மணக்க தேவையே
அதுதானோ!
சொல்லொன்றும்
புதிதல்ல!
சுமைதானே
சுவையாகும்!
மாலைக்கு அனுமதி
தாயேன்டி!
அதை
அந்திமாலைக்குள்
வாய்திறந்து சொல்லேண்டி!
என் தேவதையே
வாய்திறந்து
சொல்லேண்டி!

Friday, December 12, 2014

மின்கட்டண உயர்வு 15%

தமிழகம் ஏற்கனேவே பல இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கிறது எந்த
ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் மக்களின் நலனில் அக்கரை
செலுத்துவது போல் நாடகமாடுகிறார்களே தவிர முழுபங்களிப்பினை தருகிறார்களா?
என்று கேட்டால் முற்றிலுமாக இல்லையென்றே பதில் வரும் அனைத்து தென்னிந்திய
மாநிலங்களுக்கும் நம் மாநிலத்திலிருந்தெ மின்சாரம் அளிக்கப்படுகிறது .
காற்றாலையாகட்டும் நெய்வேலி கல்பாக்கமாகட்டும் சென்னை யாகட்டும் இவை
அனைத்துமே நம் தேவைகளுக்காக இயக்கப்படுகின்றதா? என்ற கேள்வி நம்மிடையே
எழுகிறது கிட்டதட்ட பத்து ஆண்டுகளாக இரு ஆட்சியாளர்களையும் கண்ட தமிழகம்
ஏன் மின்சாரத்தின் மீதான பொதுவிநியோகத்தில் தாமதமும் கட்டணத்திணிப்பும்
மக்கள் மீது சுமத்துகிறது என்பதை சிந்திக்க மக்களும் முன்வரவேண்டும்.
ஏற்கனவே மின்துறையை தனியாருக்கு விற்க ஆலோசனைகளும் மும்முயற்சியும்
நடைபெறுகிறது. இது போதாதென்று ஆளும் அரசு படிப்படியாக கட்டண உயர்வையும்
மக்கள் மீது திணிக்கிறது இன்றையச் சூழலில் மின்இணைப்பு இல்லையெனில்
மக்களின் வாழ்வென்பதே கேள்விக்குறியாகும் சூழலை நாம் பெற்றுள்ளோம். இதனை
பயன்படுத்தி மின்சாரத்துறை நட்டத்தில் இயங்குகிறதென காரணம் காட்டி ஆளும்
அரசு மின்வினியோகத்தை தடை செய்தும் மின்கட்டணத்தை உயர்த்தியும்
தனியாருக்கு மின்துறை செல்வது நல்லது என்ற அபிப்ராயத்தை மக்கள் மீது
உண்டாக்குகிறது.இதை விட இது நல்லதென்ன யுக்தி இது. தற்போது 15%
மின்கட்டண உயர்வு அறிவிப்பென்பது மிகவும் அபாயகரமானது ஏற்கனவே
தமிழகத்தில் தொழிற்துறை நலிவடைந்த சூழலும் அனைத்து அடிப்படை தேவைகளும்
அளவுக்கு மீறியதான விலையேற்றத்தாலும் தன் வருமானத்தில் சேமிப்பு என்பதே
இல்லாத சூழலில் தான் மக்கள் வாழ்கின்றனர். இவ்வாரிருக்க திடீரென்று 15%
மின் கட்டண உயர்வெனும் அறிவிப்பு மக்களை பாதிக்கும் என்பதை ஆளும் அரசு
கவனத்தில் கொள்வில்லை இது இவ்வரசின் அக்கரையின்மையையே
காட்டுகிறது. மேலும் பொதுவானதாக ஆளும் அரசு தன் மின்கட்டண உயர்வினை
நியாயப்படுத்த மற்ற மாநிலங்களை ஒப்படுகிறது அவ்வாறு ஒப்பிடும் ஆளும் அரசு
அம்மாநில வளர்ச்சி திட்டங்களுக்கும் தன்னாட்சி திட்டங்களுடன் ஒப்பிட ஏன்
தயங்குகிறது . ஏற்கனவே பல்வேறு சூழலில் கஷ்டப்படும் மக்கள் நிச்சயம்
இம்மின்கட்டண உயர்வில் மிகுந்த பரிதாபத்திற்குள்ளாகு­ம் நிலையில்
தள்ளப்படுவார்கள். ஆளும் அரசு இதனை கவணத்தில் கொண்டு மின்கட்டண உயர்வை
திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் ஆளும் அரசிற்கு எதிராக அவை
போராட்டமாக வெடிக்கும் சூழலை சந்திக்க நேரிடும். தமிழக ஆளும் அரசு
முனைப்புடன் இம்மின்கட்டண உயர்வுக்கு தக்க தீர்வினை தேடுவதை தவிர வேறு
வழியில்லை.

Monday, December 08, 2014

சிறுகதை" ஆழ்துளைக் கிணறு"


  • சிறுகதை" ஆழ்துளைக் கிணறு" காலை விடிவதற்கு ஒரு நாழிகை இருந்தது அதற்குள்ளாக அந்த வீட்டின் முற்றத்தில் கிணற்றுத் தண்ணீர் அலும்பல் சத்தம் கேட்டது. விடியும் முன்பே குளிக்கத் தொடங்கினார் முத்தையன் குளியலை முடித்துக்கொண்டு பூசையறையில் இருந்த தன் மனைவியிடம் பூசாரி! சொன்ன பூச சாமான்களையெல்லாம் எடுத்து வச்சுட்டியாடி நமக்கு முன்னே பூசாரி காத்துகினு இருக்காராம் கேளம்பு நல்ல நேரம் முடியர்துக்குள்ள பூச போட்டாகனும், புள்ளைகள எழுப்பாதே நாம ரெண்டு பேரும் மட்டும் போய்ட்டு வந்துடலாம், என்று சொல்லியவாரே வேட்டி சட்டை போட்டுக்கொண்டுடார். இருவரும் கிளம்ப எத்தனித்த நேரத்தில் இருடி! வாசலாண்டே யாராவது வர்ராங்களானு பாரு அபச குணமாகிட போவுது என்றார். மனைவியும் வாசலில் எட்டிப்பார்த்து யாரும் வரவில்லையென்று உறுதியாக தெரிந்த பின் இருவரும் வீட்டை விட்டு பக்கத்திலிருந்த கழனிக்கு கிளம்பினார்கள் . வளமில்லா இடம் எங்கும் அமைதி சூழ்ந்திருந்தது கழனியில், சென்ற பருவத்தில் செய்து அருவடைத் தழும்புகள் அப்படியே இருந்தது செதுக்கிய வரப்பின் எல்லையில் ஒரு மூலையோரம் பாசணக்கிணறு தண்ணீர் வற்றிப்போயிருந்தது. அந்த எழுபது அடி கிணறு பம்பு செட்டில் மட்டும் ஒரு உருவம் நின்றுக்கொண்டிருந்தத­ு பூசாரிதான் அதுவென்று கிணற்றை நோக்கி வந்துக்கொண்டிருந்த தம்பதிகளுக்கு தெரிந்திருந்தது நடையை அவசரப்படுத்தினார்கள்.­ விரைவில் பூசாரியை நெருங்கியும் விட்டார்கள், பூசாரி சிரித்த படியே வணக்கம் தெரிவித்து விட்டு நல்ல நேரம் முடிய இன்னும் அர நாழிக இருக்கு பூசயை ஆரம்பிச்சுட்டுங்களா என்று கேட்க முத்தையன் பூசாரியய்யா நீங்க ஆரம்பிங்க உங்களுக்கு தெரியாததா என்று சொல்லிவிட்டு பய பக்தியுடன் நின்றிருந்தார். ஆழ்துளைக் கிணறுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட ஊற்றிடத்தில் தொடங்கியது அந்த விவசாய விடியலுக்கான பூசை மூவரும் பயபக்தியுடன் பூசையை நிறைவேற்றிவிட்டு வீடு திரும்பினார்கள். காலை ஒன்பது மணியானது முத்தையன் பிள்ளை குமுதன் வேலை செய்யும் கம்பெனிக்கு கிளம்பினான். கம்பெனிக்கு போகும் வழியில் தான் அவர்களின் கழனியும் இருந்தது வேலைக்கு கிளம்பும் முன் அம்மாவிடம் விடைபெற்றுக்கொண்டு அப்பாவின் அருகில் வந்தான் . என்னய்யா கம்பெனிக்கு கிளம்பிட்டியா சாந்திரம் சீக்கிரம் வந்துடு நம்ம கழனில போர்வேல் போட்ர வேல இருக்கு என்றார் . அப்பா யாரு மோட்டர் வாங்க போரது நம்ம மெக்கானிக் சுந்தரமா ? ஆமாபா அவரு தான் இவ்ளோ ஆகும்னு சொன்னாரு, காச முன்னவே கொடுத்துட்டேன் பத்தலனா அந்த காசுக்குள்ளேயே பொருள வாங்க சொல்லிட்டேன். போவும் போது !அவரையும் ஒரு எட்டு பார்த்துட்டு போ . சரிப்பா என்று சொல்லிவிட்டு கிளம்பினான் குமுதன் . ஊராட்சி பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பு வரை படித்திருந்ததால் ஒரளவிற்கு உலக நடப்பு தெரிந்திருந்தது அவனுக்கு கழனியில் பூசை போட்டிருப்பதை பார்த்துக்கொண்டே சுந்தரம் வீட்டருகில் வந்தான் குமுதன். அவரும் மோட்டருக்கு தேவையானதை பட்டியலிட்டுக்கொண்டு­ கடைக்கு கிளம்ப தயாராகிருந்தார் . வணக்கமய்யா அப்பா பார்த்துட்டு வர சொன்னாரு !சாந்திரம் போர்வேல் வேல ஆரம்பிக்குதாம் நீங்க தான் கிட்டநின்னு எல்லாத்தையும் பார்த்துகிடனும் கடைக்கு தானே போறீங்க வாங்க அந்த வழியாதான் நான் போறேன் உங்களையும் விட்டுட்டு போரேன் என்று முச்சு விடாமல் சொல்லி முடித்தான் குமுதன் .,நல்லாதாப்போச்சி எப்படி போவர்துனு முழுச்சிட்டுருந்தேன்­ நீ வந்துட்ட தம்பி அப்பா கிட்ட சொல்லு எல்லாம் நல்லபடியா நடக்கும்னு என்று சொல்லியவாரே குமுதனின் வண்டியில் அமர்ந்தார் சுந்தரம். வண்டி கிளம்பி கடைத்தெரு நோக்கி போய்க்கொண்டிருந்தது வழியில் ஏதேதோ பேசிக்கொண்டு வண்டி ஓட்டினான் குமுதன். கடைத்தெரு வந்ததும் இந்த கட தாம்பா வண்டிய நிறுத்து என்றார் சுந்தரம் . சுந்தரம் சென்ற கடையை நன்றாக பார்த்துவிட்டு கம்பெனிக்கு சென்றான் குமுதன் . மதியம் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு காலையில் சுந்தரம் சென்ற அதே கடைக்கு குமுதன் சென்றான் கடைக்காரரிடம் விசாரித்தான் . சுந்தரம் வாங்கிப்போனதெல்லாம் தரமான பொருள்தான் தம்பி! காலகாலமா உழைக்கும் ,ஆனா!! போர் பழுப்போடு மூடாப்பு வாங்கிட்டு போல தம்பி காசு பத்தலையாம் அப்பாக்கு போன் போட்டு கேட்டாப்ல இப்போதைக்கு காசு இல்ல அப்புரம் வாங்கிகலாம்னு சொல்லிட்டாரு மூடாப்பு போட்டேயாகனும் தம்பி, கடைக்காரர் சொல்லி முடித்தார் .சிறிது நேரம் யோசித்துவிட்டு எவ்ளோ ஆகும் என்று குமுதன் கேட்டேன் . இரண்டாயிரத்து ஐநூரூவா தம்பி என்றார் கடைக்காரர். சரி கொடுங்க நல்ல பொருளா கொடுங்க அப்படியே பில்லும் போட்டு கொடுங்க என்றான் குமுதன். மூடியை வாங்கிக்கொண்டு நேரே கழனியை நோக்கி வண்டியை செலுத்தினான். அத்தனை ஆட்களையும் விழுங்கும் அளவிற்கு அந்த ஆழ்துளைக் கிணறிடும் இயந்திரம் கழனியில் பன்னிரண்டு அங்குல பள்ளத்தில் தண்ணீர் தேடி தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்­தது. அதனருகில் தன் வண்டியை நிறுத்தி விட்டு அனைவரையும் உற்று நோக்கினான் குமுதம். அத்தனை உடல்களும் தண்ணீர் வரவிற்காக காத்திருந்தது. ஒரு வழியாக இருநூறு அடி ஆழத்தை அவ்வியந்திரம் தொட்டதும் கொதித்தெழும் எரிமலை போல் இயந்திரத்தின் மீது வெகுண்டெழுந்தது தண்ணீர். அனைவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி ஒருவரையொருவர் புன்னகையினால் அம்மகிழ்சியை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். குமுதன் மட்டும் இயந்திர செயல்பாட்டாளர் அருகில் சென்று நன்றி! தெரிவித்து விட்டு மெல்ல நகர்ந்து மோட்டர் பொருத்த காத்திருந்த சுந்தரத்தை அனுகினான். எதுவும் பேசவில்லை,

  • சிறிது நேரத்தில் தண்ணீரை பூமிக்களித்த அந்த இயந்திரமும் கிளம்பிற்று . இப்போது சுந்தரத்தின் வேலை ஆரம்பமாதலால் அதற்கு முன்பே பேசத் தொடங்கினான் குமுதன் . என்னன்னே! முக்கிய மான பாதுகாப்பான மூடியை வாங்காம வந்துட்டுங்களே! இதனால எவ்ளோ பெரிய பாதிப்பு வரும்னு தெரிஞ்சிருந்தும் வாங்காம வந்துட்டுங்களே! என்றான் . தலைசொரிந்த படியே மன்னிச்சிடுங்க தம்பி அப்பா தான் இப்ப வேணாம் காசில்ல அப்புரம் வாங்கிலாம்னு சொல்லிட்டாரு !, அப்பா சொன்னாலும் எங்கிட்ட ஒரு வார்த்த கேட்டிருக்கலாம்ணே எவ்ளோ பெரிய தவற செஞ்சிட்டுங்க இந்தாங்கண்ணே நான் மூடிய வாங்கிட்டு வந்துட்டேன் மொறப்படி பொருத்துங்கண்னே! சரிங்க தம்பி! எந்த பாதிப்பும் இல்லாம எல்லாம் சரியா செஞ்சிடுரேன் தம்பி! இப்படியாக உரையாடல் முடிந்தது , ஆழ்துளைக்கிணற்றில் அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு பார்வையிட முத்தையன் வந்தார் , இப்போது தன் அண்ணனின் பேரம் பேத்திகளுடன் கழனிக்கு வந்தார் , அனைத்தையும் பார்வையிட்டு விட்டு குமுதனிடமும் சுந்தரத்திடமும் உரையாடிக் கொண்டிருந்த வேளையில் சற்றும் எதிர்ப்பாராமல், ஆழ்துளை கிணற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்­த பேரக்குழந்தைகளில் ஒரு குழந்தை கல் தடுக்கி ஆழ்துளைக் கிணற்றின் வாய்மூடியில் தலைமோதி கீழே மண்தரையில் குப்புற விழுந்தது. இந்த திடீர் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்­த மூவரும் பதறிப் போய் ஆழ்துளைக் கிணற்றருகே ஓடினார்கள் . முதலில் ஓடிய குமுதன் குழந்தையை வாரியணைத்து மடியில் கிடத்திக் கொண்டான் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பதட்டம் நீங்காத குரலிலே என்னச்சி புள்ளைக்கு என்னாச்சி புள்ளைக்கு என்று நடுங்கிக் கொண்டே கேட்டார்கள் ,குழந்தையை தாங்கி பற்றிக்கொண்டிருந்த குமுதன் ஆபத்தொன்றும் இல்லை என்பதை உணர்ந்து ஒன்னுமில்லப்பா நெத்தியில மூடி பட்டதால வீங்கியிருக்கு பயப்பட்ர மாதிரி ஒன்னுமில்ல ஆழ்துளைக்கு மூடி போட்டதால குழந்த தப்பிச்சிடுச்சு இல்லனா,,,,, என்று இழுத்தான் தன் தவறை உணர்ந்த முத்தையனும் சுந்தரமும் இப்போது குழந்தையை சேர்த்து குமுதனையும் வாரியணைத்தார்கள் ,இனி எந்த காரியம் செஞ்சாலும் ஒன்ன கேட்காம செய்யமாட்டேன் குமுதா என்று கண்ணீரில் நனைந்த படியே உச்சி முகர்ந்து முத்தமிட்டார் முத்தையன்.

தற்கொலை தீர்வாகுமா?

அச்சத்தில் அகிலமே இருளாகி!
அணையா கோபத்தில்
விழிப்பிதுங்கி!
நீ எடுத்த முடிவாலே உன்கூடு சவக் குழியில்!
வீதியிலே நின்ற பிள்ளை
விதி அறியுமா!
விளையும் போதே அப்பிஞ்சு முகம்
புதைகுழியின் பூட்டறியுமா!
கண்ணீரில் கரைந்தோடும்
இளம்பிஞ்சின் எதிர்காலம் என்னவாகுமோ!
ஐயகோ!!!
குடும்பபெயர்
இனி இல்லை
இச்சமூகம்
கூப்பிடுமே
அப்பிள்ளை
அனாதையென்று!
பிச்சைக்கு
கையேந்திப் போனாலும் கைபிடித்து
இழுக்குமே!
பசியுடலில்
கீரலுடனே பல சீண்டலும் இங்கே
நடக்குமே!
நீ வரைந்த ஓவியும்
கிழிந்து கிடக்கும் விதியிலே!
அரளி விதை
அரைத்த
அம்மி கூட
அடிவாங்கி தான் அவ்வடிவம்
பெற்றதென!
உளிபட்ட
பாறை கூட
உனை பார்த்து நகைக்குதடா!
தற்கொலைக்கு
நீ! எடுக்கும் ஆயுதமெல்லாம்
ஆயிரம் வலிகளை பொறுத்துதான்
பூமியில் முளைக்குடா!
எடுக்காதே
எவ்முடிவும்
விபரீதமாகுடா!
உன்னுயிரை கொல்ல! உனக்கு உரிமை இல்லையடா!
வாழ்வுக்கு தற்கொலை தான்
தீர்வாகுமா? வந்துபார்
இங்கனைவரும்
வலிகளை கடந்தவர்கள்
இனி
வாழ்ந்து விடடா!
மனிதா,,,
இனி
வாழ்ந்து விடடா!

Sunday, December 07, 2014

மறந்து விடு!

கனவுகளில்
நீயிருந்தால்!
என் காட்சிகளும்
பிழையாகும்!
கண்மணியே
கலைந்துவிடு!
இக்காதலனை
மறந்து விடு!
தீவிழுந்த பூமிதனில்
புழுவாகி துடிக்கிறதென்
மனது!
கண்மணியே கலைந்துவிடு!
இக்காதலனை
மறந்துவிடு!
கானும் வனமெல்லாம்
கால்பதிந்தோம்
என்றுமே சுமையானதில்லை
சுற்றுலா பறவைபோலே
சுதந்திர காற்றின் சுகத்தினையும் நாமடைந்தோம்! கடற்கரை மணல்
நம்மை சுட்டதில்லை!
கடலலை காதலை போற்றிற்று!
அதன் காதல் கதையையும் நாம் கேட்டதில்லை!
வசந்த காலத்தில் அளவிட முடியா அக்காதலின் எல்லையில்
அவ்வப்போது பெருக்கெடுத்த அருவியை போலவே
நம் சின்னஞ்சிறு
கோபம்
வினாடிகளில்
வீண்போன
என்னிளமைக்
கோலம்!
இனிமையும் ,
இம்சையும்
சேர்ந்தே அணைக்கும்
சேராமல் விட்டது
நம் அவசரக்காலம்!
விடுதலை
கேட்டாயோ
என் விரல்நகம்
நசுங்குதடி!
அடுத்தக்கட்ட
வாழ்வுனை
அழைக்கிறது அவனிடமும் அவசரப்படாதே! அழகியல்
அமைதியினை
என்றுமே இழந்து விடாதே! அவன்
கைதொடும் போது கனவிலும் எனை
நினைக்காதே! இனியுனக்கு
கணவனும் அவனே! அழகுக் காதலனும் அவனே!
கண்மணியே கலைந்துவிடு!
இக்காதலனை
மறந்துவிடு!

Friday, December 05, 2014

கார்த்திகை தீபத்திருநாள்

இனியவள்
பௌர்ணமி
நிலவு அவள்!
நிதர்சனமாய்
பூமிதனை
எட்டிப்பார்த்தாள்!
என்ன வியப்பு!!!
இரவு பகலானதா?
தடம்மாறி, தடுமாறி வந்தோமோ தத்தளிக்கிறதே மனது!
ஜோதியில் சோகத்தை
புதைக்கிறதே
இப்பூமி!
ஆழ்ந்து சிந்தித்தாள்!
திங்களவனை
கூப்பிட்டாள்! சிரித்தபடியே
சிந்தனையினை
சிதறடித்தான்
திங்களவன்!
அடியே!!!
என்னுள்
எழிலாகி
சுடரொளி பாதி
சுமப்பவளே!
இன்று,
தீபமடி
திருவிளக்கு
திகட்டாதடி
கார்த்திகை தீபமடி!
கானக்குயில் கனவுகளின்
காட்சிதனை
கானுதடி!
கண்கொண்டு
பாராயோ
தீபத்தினழகை!
பிம்பத்தை
உடைத்து
வா!
பூமித்தாய்
நமையழைக்கிறாள்!
சுடர்விடும்
இல்லங்களில்
இறங்கிவிடு!
தீபத்தாய் வயிற்றில்
கலந்துவிடு!
நீயும் , நானும்
ஒன்றினைவோம்!
தீபவொளியில்
துயில் கொள்வோம்!
தீச்சுடரேந்தி
தீமைகளை
விரட்டிடும்
பொன்மகள்
அதோ!!!
பூமிக்கு விருந்து படைக்கிறாள்!
அவள்!!!
கார்த்திகை மலரை
காதலுக்கு பரிசளிக்கிறாள்!
தீபத்திருநாளில்
நாமினைவது தானே
முறை!
கோலங்களில்
குளித்தாடுவது தானே முறை!
வா!! நிலவே வா!!
நாமும்
தீபங்களில்
திருவிளையாடலாம்!
வா!! நிலவே வா!!
நாமும்
தீபங்களில் திருவிளையாடலாம்!

Thursday, December 04, 2014

இயற்கையின் பிள்ளைகள்

உள்ளம்
ஊசிமுனையில்
ஊசலாட!
உடலெப்படி
ஓய்வை
விரும்பும்!
அருகிலேயே இரு!
"ஆன்மா" மேலெழும்ப
எத்தனிக்கிறது
என்றாயே!
கைகளை பற்றிக்கொண்டு
கண்ணீரில்
நான் மிதக்க!
கடைசி காலத்தை
நீயெப்படி
தாங்குவாய்!
நானெப்படி
நடிக்கப்
போகிறேன்!
ஏ!!!
நட்சத்திரங்களே!
நடைபழக துணையொன்று
தேடினீர்களோ!
தூரமாய் எனை
துயரத்தால்
துரத்தினீர்களோ!
துக்கம் தாளாமல்,,
புத்தனுக்கு
புதுக்கடிதம்
எழுதினேன்!
இழவில்லா
வீட்டில்
இனிப்பை
படையலிடு
என்றான்!
படையலுக்கு
எங்கும்
பாதையில்லை
என்றுணர்ந்தேன்!
பார்முழுதும்
பாரத்தை
தாங்கியே! பாற்கடல் பூமியை கடைந்துக் கொண்டிருந்தது!
நியதி,, இதுதானோ!
நிழலுலகம்
மெய்தானோ!
கண்களின் கடைசி
முத்தையும்
கார்முகில்
பறித்துக்கொண்டது!
சென்றுவா!
நண்பா,,
சென்றுவா!
எப்போதும்,
எங்கேயும்
நாமனைவரும்
இயற்கையின்
பிள்ளைகளே!
சென்றுவா!
நண்பா,,
சென்றுவா!

Wednesday, December 03, 2014

சிறுகதை "செல்வத்தின் முகவரி"

காலையிலேயே கரண்ட் கட்டாகிடுச்சே, ஏம்மா!! இந்த பழசெயெல்லாம் உனக்கு
பழக்கமிருக்காது கொடு நான்செய்யரேன்!
சமையலை கவனித்த கண்மனியிடம் அரைக்க வேண்டிய பொருளை வாங்கிக்கொண்டு அம்மி
பக்கம் நகர்ந்தாள் லட்சுமியம்மா. நெசந்தான் அத்தே எல்லத்தையும் கரண்ட்டால
செஞ்சதால கைப்பழக்கம் வரமாட்டேங்குது என்று சொல்லிபடியே அடுத்த
வேலைபார்க்க நகர்ந்தாள் கண்மணி. அதற்குள் அலுவலக அவசத்தை முடுக்கி
விட்டான் செல்வம். ஏம்பா!! செல்வம் இன்னைக்கு தான் கல்யாண நாளாச்சே லீவு
போட்டு புள்ள குட்டிகளை கூட்டிணு வெளிய போயிருக்கலாமே இன்னைக்கு கூடவா
ஆபீஸூக்கு போகனும் கொஞ்சமாய் அதட்டல் குரலிலேயே லட்சுமியம்மா செல்வத்தின்
செவியில் போட்டாள்.
இல்லம்மா இன்னைக்கு ஆடிட்டிங் ஒர்க் போயே ஆகனும் என்று பரபரப்புடனே
கிளம்பினான் செல்வம்.
என்ன ஒர்க்கோ? என்ன ஆபிசோ? கடைசியாக முடித்தாள் லட்சிமியம்மாள். இதற்குள்
பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பினார்கள். கடைசியாக வீட்டில் கண்மணியும்
லட்சுமியம்மாளும் செல்வத்தின் அப்பாவும் அவரவர்க்கு துணையாக
இருந்தார்கள்.
மதிய வேளை உச்சி வெயில் வீட்டுத் தரையையை கூட விட்டுவைக்க வில்லை அத்தே
கோயிலுக்கு போவனும்,, அவர் பேருக்கு அர்ச்சனை பண்ண நான் கெளம்பிட்டு உடனே
வந்திடுரேன் அனுமதி கேட்டாள் கல்யாணி.
அதுக்கென்னம்மா போய்ட்டு பொறுமையாவே வா! என்று லட்சுமியம்மா அன்பாய்
வாசல் வரையில் வழியனுப்பினாள்.
இந்த உறவு உபசரிப்பு தற்போது தான் ஆரம்பித்தது இதற்கு முன் இவர்களிடம்
பகையே முட்டியிருந்தது. எப்படி இது சாத்தியமாயிற்று? இதில் யாரின்
தவறிருந்தது? கொஞ்சம் இந்நல்லுறவிற்கான காரணத்தை அலசிவிடுவது
அவசியந்தானே!
செல்வத்துக்கு லட்சுமியம்மா தான் பெண்பார்த்தார். வசதிகுடும்பமாதலால்
கண்மணியே குடும்பத்திற்கேற்றவள­ானாள். ஆனால் வித்தியாசங்கள் மாமியார்
மருமகளை விலகியே வைத்தது. அவளுக்கு பிடித்தது இவளுக்கு பிடிக்காது,
இவளுக்கு பிடித்தது அவளுக்கு பிடிக்காது ,இதுவே இருவரையும் விலக்கியே
வைத்திருந்தது. இதற்கிடையே சம்மந்தி உறவில் பெருத்த விரிசலும் ஏற்பட்டு
விட்டது தொடர்பும் அறுந்து போனது. தாய்வீடல்லவா கண்மணியும் துயருற்றாள்.
இப்படியே நகர்ந்து ஐந்தாண்டுகள் ஓடிற்று. இதற்கிடையே இரண்டு குழந்தைகள்
நகர்ந்தது வாழ்வு.
அன்று ஞாயிற்றுக் கிழமை வழக்கம் போலே அனைவரும் வீட்டிலிருந்தார்கள்.
கூடியிருந்த வீட்டுக்குள் எப்போதும் போலே உறவில் விவகார வாய்ச்சண்டை.
இதற்கு என்ன தான் தீர்வென்று சிந்தித்தபடியே சினங்கொண்டு எழுந்து போனான்
செல்வம்.
மருநாள் திங்கட்கிழமை வழக்கம் போலே அல்லாமல் சற்று மாருதலாக புன்சிரிப்பு
முகத்துடன் அலுவகத்திற்கு கிளம்பனானான் செல்வம். அன்று மதியவேளையில்!
செல்வம் வீட்டிற்கு இரு தபால் கடிதங்களை கொண்டுவந்தான் தபால் காரன்.
ஒன்று கண்மணி பெயரில் மற்றொன்று செல்வம் தகப்பன் பெயரில், இரண்டையும்
வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்த கண்மணி, தனக்கானதை பற்றிக்கொண்டு மற்றொன்றை
அவர்கள் எதிரே மேசையில் வைத்துவிட்டு தன் அறைக்கு சென்றாள். அவசரமாக
பிரித்து படிக்கத் தொடங்கினாள்.
அதில் "அக்கா நான் நம் பெற்றோரை முதியோரில்லத்தில் விட்டுள்ளேன் பார்க்க
விரும்பினாள் இம்முகவரிக்கு செல்லுங்கள் என்று ஒரு முகவரியிட்டு
எழுதியிருந்தான் தம்பி"
இப்போது மேசையில் கிடந்த கடிதமும் படிக்கப்பட்டது "அப்பா அம்மா நான்
உங்களை ஒரு முதியோரில்லத்தில் சேர்வதற்காக முடிவெடுத்து விட்டேன் இந்த
முகவரியில் சென்று உங்களுக்கு ஏற்ற இடமா என்று பார்த்து விட்டு வாருங்கள்
" என்று அதிலும் ஒரு முகவரியிட்டு எழுதியிருந்து.
இரு கடிதச் சொந்தங்களும் பதட்டமானார்கள். ஒருவரையொருவர் பதறிக்கொண்டு
கடிதம் காட்டிய முகவரிக்கு பறந்தார்கள். மாலை இளஞ்சூரியன் தன் முகத்தை
மூடிக்கொண்டிருந்து. முகவரிக்கான இடமும் வந்துவிட்டது. இறங்க மனமில்லை
'பதற்றம்' பற்றிக்கொண்டது "இதயம் இல்லம்" என்ற முகவரிப் பலகையே
பார்த்துக்கொண்டிருந்தார்கள் . கடைசியாக மனதை தேற்றிக்கொண்டு வண்டியை
விட்டு அவர்கள் இறங்க! அதே நேரத்தில் கண்மணியும் இறங்க மூன்று
முகங்களிலும் இனம்புரியாத ஓர் மவுனமொழி பேசிற்று! கண்களில் கண்ணீர்
,உடலில் நடுக்கும், பேச்செழவில்லை, இனிதாங்காது இதயம் என்றென்னி ,அத்தே!
என்று அவளும், கண்மணி! என்று இவளும், கரம் பிடித்த காட்சி வருணிக்க
முடியா இதயப்பிணைப்பின் பிறப்பிடமாக இருந்தது. இருவரையும் ஆரத்தழுவியது
மாமனாரின் கைகள். மூவரும் இப்போது ஒரே வண்டியில் வீட்டினை அடைந்தார்கள்.
இனி இவர்களுக்குள் விரிசல் விழாது. விலகி போன சம்மந்தி உறவும் விரைவிலேயே
கிட்டியது.
கல்யாண நாளில் அலுவலகத்திற்கு அவசரமாய்ச் சென்ற செல்வம். அவரவர் அறையில்
அறிவிப்பு மடலை விட்டுச்சென்றான். அன்று வந்த கடிதம் அவனெழுயதென்றும்,
இன்று இருப்பது போல் என்றுமிருப்பதில் தான் அவனாசைப் படுவதாகவும்,
எழுதிவிட்டு கடைசியாக நம் கிராமத்து நிலத்தினை மீட்டுவிட்டேன் என்று
அவர்களுக்கும், நம் பிள்ளைகளுக்கு புதுப்பாலிசி போட்டுவிட்டேன், என்று
அவளுக்கும் எழுதி முடித்திருந்தான். இனி இன்பக்கடலில் மூழ்கியிருக்கும்
அந்த கூட்டுக்குடும்பம் .

இவர்கள் புனிதர்கள்

மேடைக்கு மேடை
உன்மீது
நான் கல்லெறிய!
என்மீது
நீ கல்லெறிய!
கூட்டத்தை சேர்க்க
கற்றுக்கொண்டோம்!
கரவொலி மட்டும்
குறையவேயில்லை!
எங்கும், எதிலும்
முரணானோம்!
முக்காடு போட்டுக்கொண்டு
ரகசியமாய் உறவாடி! கடைசிவரை
மக்கள்
சிந்தனையில் சீர்படாது சீரழிந்து போக! நாமிருவரும்
சிந்திக்க
வேண்டுமென
சிறு ஒப்பந்தமும் போட்டுக்
கொண்டோம்!
கரூவூலம்
காலிசெய்து
கல்லாப்பெட்டியில்
அடைத்தோம்!
அரசியல் வியாபாரம்
அமோக வெற்றிதான்!
அதிகார
நாற்காலிக்கு
நாமிருவரும்
செல்லப்
பிள்ளைகள்!
அறியாமை
மக்களால் ஆசிபெற்ற
நாம்!
புனிதர்கள் தானே!
இனி மண்ணைச் சுரண்டிடலாமே!
இமயமலையும்
வாங்கிடலாமே! இமைகளை
மூடும் போதும்
கவலை
நமக்கில்லை!
எதிரெதிரே சிலையாகி கழுத்தில்
மாலையுடனே!
ஆம்மண்ணை
ஆண்டிடுவோம்! இம்மக்களை பார்த்து சிலையாகியும்
சிரிப்போம்!
சிலந்தி
வலையையும் கிழிப்போம்!
நாமிருவர்
மட்டுமே
இம்மண்ணின்
புனிதர்கள்!

"காதலில் கண்கள்"

நீண்ட!!! பொழுதுகளில்
தனிமையில் தத்தளிக்க!
வலுக்கிறது அச்சந்தேகம்!
அரிச்சந்திரன்
அவனது அழகான மனைவியை
கண்டதும்!
காதல் ரசத்தை பொழிவானே! கவிதையை கட்டவிழ்த்து விடுவானே!
இங்கே!
முளைக்கிறதென்
முதன்மைச்
சந்தேகம்!
காதல் காவியத்தில்
காட்டாத
அவன்காதலால்! கண்ணயர்ந்து தூங்கினாலும் கனவிலெழும் அச்சந்தேகம்!
எதுவென்றா கேட்கிறீர்கள்?
எடுத்துச்
சொல்கிறேன்
குறிப்பெடுங்கள்
காதலர்களே!
பொய்யுரைக்க மாட்டானாம் அரிச்சந்திரன்!
அப்படியிருக்க,,,,,
அழகான
மனைவியை
அள்ளியெடுத்து
அரவணைக்க!
அவசியமான
காதலை
கவிதையாய் அவன்புனைய!
அடுத்த நொடியே மலர்ந்திடுமே
அழகான
அப்பொய்கள்!!
'கவிதை என்பதே பொய்ப்
புனைவென்பது'
கவிஞர்கள் கூற்றாயிற்றே!
என் சந்தேகம்
தீர வழி தேடியே!
அமைதியாய் அமர்ந்திருந்து ஆழ்கடலை பார்ந்திருந்தேன்! அருகினில்
அவள் வந்தமர்ந்து!
சிமிட்டாத கண்களுக்கு
சிகரம் போலே சிந்தனையோ! காரணமிதுவென கண்ணா
நீயுரைப்பாயோ?
என்றாள்,,,
கொஞ்சும் தமிழ்
குயிலுக்கும் பொறாமையன்றோ!
கண்சிமிட்டாமல் கண்மணியவளை
காதல் நயத்துடனே பார்த்தேன்!
கண்ணுள்
விளையாடும் கருவிழியில்
நான் தெரிய!
அதனுள் பாய்ந்து அவளிதயத்தை அடைந்தேன்!
அடடா!!!
அடுத்த நொடி
விடை கண்டேனே!
'கண்'
தானா காரணமென்று! காதலியவள் காட்டினாளே!
ஆம்!!! ஆம்!!!
உண்மைதனை உணர்ந்தேன்!
அரிச்சந்திரன் பொய்புனைய
எங்கேயும் வழியில்லை! கருவிழிதான் அதனெல்லை!
காதல் மனைவியை கண்டதும் கண்ணினை கண்டிருப்பான்! கருவிழிக்குள் அவனிருந்திருப்பான்!
அவன் கண்ணில்
அவள் தெரிய!
அவள் கண்ணில்
அவன் தெரிய!
இரு மெய்யுடலும் ஒன்றிணைய!
ஒவ்வாத
பொய்யெப்படி
அவன் கவியில் ஒழுகியிருக்கும்!
உண்மைக் காதலில் உணர்ந்த பொருள் இதுதானோ!
காதல் உலக மொழியென்பதும் மெய்தானோ!
காதலர்களே!!! கேளுங்கள்!
இரு மனதும்
இணைந்து விட்டால் ஈருடலும்
மெய்யாகும்! மெய்க்காதல் அறிய கண்களை
நோக்குங்கள்!
கருவிழிகளில்
காதல்
வாழட்டும்!

Tuesday, December 02, 2014

சிறுகதை "தயாளனுக்கு விஷக்காய்ச்சல்"

காலனியின் கடைசித் தெருவில் தேவாலையம் ஒன்றின் ஒலிப்பெருக்கியில் பைபளின்
வாசனங்கள் வாசிக்கப்பட்டன. விடிந்தது காலை கடிகாரமில்லாமலே அவ்வசனங்கள்
ஐந்து மணியென்று உணர்த்திற்று.வசனங்களை கேட்டவாரே சோம்பலை முறித்தபடி
எழுந்தாள் சரளாம்மாள். வீட்டுவேளைகளை நினைவுகூர்ந்தபடியே வாசற்கதவினை
திறந்தாள் காலை முழிப்புடன் பெட்டைக் கோழிகள் ரேஷன் அரசிக்கு வரிசையில்
நின்று கொக்கறித்தன. இதுகளுக்கு எப்படித்தான் விடிஞ்சது தெரிஞ்சதோ என்று
முனுமுனுத்தபடி அரசியை எடுத்து வந்து போட்டுவிட்டு தன் பிள்ளை தயாளனுக்கு
சுடுகஞ்சி செய்ய அடுப்பங்கரைக்குப் போனாள். இருக்கின்ற வேலைகளில்
மணியானதே தெரியவில்லை அவளுக்கு. எப்போதும் விடிந்ததும் எழுந்திருப்பானே
தயாளன் இன்று ஏன் தாமதிக்கிறான் என்ற நினைப்பு அப்போது தான் வந்தது. அவசர
அவசரமாக பிள்ளையை எழுப்புவதற்கு ஓடினாள் உடல் வெப்பத்தால் கொதிகொதிக்க
சுருண்டு படுத்திருந்தான் தாயாளன். உடலை தொட்டதும் பதட்டமான சரளாம்மாள்
மகன் ஜூரத்தில் புலம்புவதை கேட்டாள் " அம்மா இனிமே ஸ்கூல் வேண்டாம்மா "
என்று தொடர்ந்து புலம்பியது தயாளன் குரல். லேசாக தட்டியெழுப்பி
தன்மடியில் தயாளனின் தலையை புதைத்து தலைகோதி விட்டபடியே எண்ணா கண்ணு
இப்படி ஜூரமடிக்குது ஹாஸ்பித்திருக்கு போலாம் எழுந்திரு என்றாள்
சரளாம்மாள். லேசாக கண்விழித்துப் பார்த்த தயாளன் திரும்பவும் தூக்கத்தில்
புலம்பியதையே தாயிடம் சொன்னான்.
ஏண்டா கண்ணு ஸ்கூல் பிடிக்கலையா! நீ படிச்சி பெரியாளா ஆனாதானே
அம்மாவுக்கும் சந்தோஷம் நம்ம சமூவத்துக்கும் பெரும! அப்பா உன்ன
படிக்கவைனு சொல்லிபுட்டு பாதியிலே போய் சேர்ந்துட்டார் அப்பா கனவ
நெறவேத்தனுமா இல்லையா! ஏண்டா கண்ணு ஸ்கூல் வேணாங்குரே! என்று கொஞ்சிய
குரலிலேயே தலைமுடியை தடவிக்கொடுத்தவாரே அன்பாய் கேட்டாள் சரளாம்மாள்.
ஜூரத்தில் நடுங்கியபடியே வாய் உதறலில் தயாளன் கொஞ்சம் கொஞ்சமாய் பேச ஆரம்பித்தான்.
அம்மா!! போன வாரம் ஸ்கூலுக்கு போனேனா வாத்தியாரு உள்ளே நுழைஞ்சதும்,
இந்தா! இங்க காலனிலேருந்து வர்ரவங்கள்லாம் எழுந்து நில்லுங்கன்னு
சொன்னாரு. நானும் எங்கூட எட்டு பேரும் எழுந்திருச்சாங்க வாத்தியாரு எங்கள
முன்னாடி கூப்டாரா நாங்களும் போனும் ஒடனே வாத்தியாரு இந்தா இனிமே ஸ்கூல்
கக்கூச நீங்க தான் கழுவனும். போங்க நீங்க அந்த வேலைய செஞ்சிட்டுதான்
படிக்க வரணும்னு சொல்லிட்டாரு. நாங்களும் போய் சுத்தம் செஞ்சிட்டு
வந்தோம். வந்ததும் எங்கள மட்டும் ஓரமா ஒக்கார வச்சிட்டாரு. எப்போ கோபம்
வருதோ அப்பல்லாம் அடிக்கராரும்மா தெனமும் நாங்கதான் கக்கூஸ் கழுவுரோம்
படிக்கவே முடிலம்மா ஒடம்பெல்லாம் வலிக்குது. இனிமே நான் ஸ்கூலுக்கு போக
மாட்டேன்மா என்று சொல்லி முடித்தான் தயாளன். சரளாம்மா சொல்ல முடியா
அழுகையால் மடியில் படித்திருந்த தயாளன் தலையை கண்ணீரில் நனைத்தாள்.
சரி இந்த விஷயத்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் முதல் வேலையா பிள்ளையை
ஆஸ்பித்திரிக்கு அழைச்சிட்டு போகனும் என்று முடிவெடுத்து, தயாளனனை
கிழிசல் போர்வையால் மூடி இடுப்பில் தூக்கிக்கொண்டு வீதியில் நடக்கத்
தொடங்கினாள்.
சிறிது தூரம் சென்றதும் அரசு ஆஸ்பித்திரி கண்ணுக்குத் தெரிய வேகம்
கூட்டியபடியே உள்ளே நுழைந்தாள். அம்மா! டாக்டரு இருக்காராம்மா புள்ளைக்கு
உடம்பு அனலா கொதிக்குது எதிரில் வந்தவளிடம் கேட்டாள். ஓ! இருக்காரு
இப்டியே போய் சோத்தாங்கை பக்கம் திரும்பு மொத ரூம்ல டாக்டரு இருப்பாரு
என்றாள் எதிரில் வந்தவள். சிறு பதட்டத்தோடே டாக்டரை பார்க்கனும் என்றாள்.
உள்ளே போ என்றான் காப்பாளன்.
டாக்டரிடம் தம்பிள்ளையை காட்டி டாக்டர்!! புள்ளைக்கு உடம்பெல்லாம் அனலா
கொதிக்குது என்றாள்.
தயாளனை முழுதாய் பரிசோதித்த டாக்டர் விஷக்காய்ச்சல்மா! புள்ள எங்கையாவது
எதையாவது வாங்கி சாப்டிச்சா சாப்டதுல பாதிப்பாயிடுச்சு. மருந்து எழுதி
தரேன் வேலாவேளைக்கு போடு ஒரு வாரத்துல சரியாகிடும் என்றார் டாக்டர் .
மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து தயாளனை
படுக்கவைத்து விட்டு சுடுகஞ்சி செய்து மருந்துண்ணபின் ஊட்டிவிட்டு படுக்க
வைத்துவிட்டு, கீற்றுக் கொட்டகையில் கட்டியிருந்த ஆடுமாடுகளுடனே அவளும்
அமர்ந்து தனியே அழுதுக் கொண்டிருந்தாள். அவளுக்கு தெரிந்து விட்டது.
பிள்ளை எதையும் சாப்பிட வில்லை, கக்கூசை கழுவும் போது சிதறிய மலங்கள்
முகத்திலும் வாயிலும் சென்றுள்ளதால் தான் ஜூரம் வந்துள்ளதென்று அவளுக்கு
தெரிந்திருந்தது.

சிறுகதை "அவன் எனும் மனிதன்"

அதுவொரு இளங்காலை பொழுது இன்னும் பிரசவிக்காத கடல்தாய்
தம்பிள்ளையான சூரியனை ஈன்றெடுக்க
வலியால் துடித்துக்கொண்டிருந்­த
நேரம். அதற்கு முன்பே அவசர அவசரமாக வானமது வெண்சேலையை இழுத்து மூடியது மேகம்.
கொட்டிய மழை மருத்துவச்சியாக மாறிற்று. அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமே!
என்று அவசர அவசரவமாக எழுந்து எப்போதும் போலே தமிழக தலைமையிடத்தையும்
இந்தியாவின் இறுதிமூலையையும் இணைக்கின்ற அந்நெடுஞ்சாலை வழியே தனது
நடைப்பயிற்சியை தொடங்கினான் அவன். வலப்புறம் குடியிருப்புகள் இடப்புறம்
விளைநிலங்கள் இவனுக்கு இடப்புறமே இன்பமாய் இருந்தது இயற்கையை ரசித்தவாரே
இவனும் நடந்தான். ஐநூறு மீட்டர் தாண்டியிருக்க மாட்டான் சாலையின் கீழே
சகதியில் கிடந்தது ஓர் மஞ்சலாடை மூடியிருந்த ஒரு முதிர்ச்சி உடல்
குளிரால் நடுங்கி கிடப்பதை பார்க்கிறான் அவன். பதற்றம் பற்றிக்கொண்டது
அவனுக்கு, இங்கே எப்படி மூதாட்டி உறவினர் யாரேனும் ஊருக்குள்
இருக்கின்றார்களா? ஆம் படுத்திருந்த மூதாட்டியின் பக்கத்திலேயே ஊரொன்று
உள்ளது. நடைபயிற்சியை கைவிட்டுவிட்டு கண்ணில் தெரிந்த காட்சிக்கு
நெருக்கத்தில் சென்றான் அவன் பார்வையிலேயே தெரிந்துவிட்டது பணக்கார
மூதாட்டியென்று! பாவம் எத்தனை பிள்ளைகளோ அவளுக்கு.
பாட்டி!!! எப்படி இங்கு வந்தாய்? யார் கொண்டு வந்து விட்டது? எங்கே உன்
வீடு? பக்கத்தில் இருக்கும் ஊரா? வழிதெரியாமல் வந்தாயா? என்று கேள்விகளை
அடுக்கொண்டே போனான் அவன். பதிலொன்றும் வரவில்லை ஒரேயொரு ஒலி மட்டுமே
வந்திற்று
குளிருது!! குளிருது!! என்று அவ்வொலி கூவிற்று. இதற்கு மேல் தாமதிக்காமல்
அடுத்த கட்ட முதலுதவிக்கு அவசரமாக கிளாம்பினான் வீட்டிற்கு அவன். காற்று
திரும்புதல் போல உடனே பாட்டிக்கு பக்கத்தில் வந்து தான் எடுத்துவந்த
கம்பளியை போர்த்திவிட்டு காலை சிற்றுண்டிக்கு அம்மா சமைத்த நாலு
இட்டிலியை நீட்டினான். கைகளை தூக்கக்கூட பலுவில்லை பாட்டிக்கு, அடுத்த
நொடியே ஊட்டத் தொடங்கினான் .சிறிது நேரம் கழித்து திரும்பவும் கேள்விகளை
அடுக்கினான் இப்போது கூடுதலாக சில கேள்விகள் பிள்ளைகள் இருக்கிறார்களா?
எங்கே இருக்கிறார்களென்று
மீண்டும் மூதாட்டி மவுனத்தையே கடைபிடித்தாள். பேச கூட நாவெழவில்லை சரி
இனிமேலும் கேட்பது வீண் என்றுணர்ந்த அவன் , அருகிலேயே ஓர் முட்புதறில்
சிதறிக்கிடந்த சாக்குகளை எடுத்து அம்முட்புதறுக்கு மேலே போட்டு
தற்காலிகமான தங்குமிடத்தை அமைத்துவிட்டு மூதாட்டியின் அருகே எழுந்திரு
மூதாட்டியே! என்றான் அவன். எழுந்திருக்க வில்லை மூதாட்டி பாவம் இயலாத
நிலை. இருதோளையும் தாங்கலாய் தூக்கி பின் வலக்கையை தன்தோள் மீது போட்டு
தாங்கித்தாங்கி நடந்தான் கடினப்பட்டு தற்காலிக குடிலை அடைந்தான்.
மூதாட்டியை இறக்கிவிட்டு பக்கத்தூருக்கு பறந்தான் எவருக்கும் தெரியவில்லை
பாட்டியை பற்றி? உதவவும் வரவில்லை அவ்வூர் உள்ளங்கள் வேருவழியில்லையென
நண்பர்களை நாடினால் பெற்றோருக்கு பயந்து பதுங்குகிறார்கள். கடைசியில்
தன்னால் முடியுமென முயற்சியெடுத்தான் அவன். அவசரமாக தன்னார்வத்
தொண்டிற்கு தகவல் கொடுத்தும் பயனில்லை பாட்டியின் கோலத்தை பார்த்துவிட்டு
அவர்களும் நடைகட்டினார்கள். இப்படியாக ஓரிரவு ஓடியது .அவ்வப்போதே
பாட்டியையும் கவனித்தபடி , இரண்டாம் நாள் தகவலை வீட்டிற்குச் சொல்ல பயம்,
இன்னும் சுயமாக முடிவெடுக்கும் சூழலே அவனுக்கு வந்துசேர வில்லை.
விடியற்காலையிலேயை கழனியை நோக்கி ஓடினான் பாட்டி படுத்திருந்தாள்
மூச்சிருந்தது பாட்டிக்கு
முகத்தில் சிறு புன்னகை அவனுக்கு. இதற்கிடையே கழனிக்கு சென்றவர்கள்
அவனையும் பாட்டியையும் பார்த்தபடியே சென்றார்கள் கிட்டே! நெருங்கவில்லை
முந்நாள் மூன்று வேளையும் அளித்த உணவினைப் போலே இரண்டாம் நாளும்
அளித்திருந்தான் இரவு ஓடியது.
தொடர்ந்தது மூன்றாம் நாள் திரும்பவும் அதே ஓட்டம் இப்போது முகத்தில்
புன்னகையில்லை அவனுக்கு அசைவற்று கிடந்தாள் பாட்டி. தெரிந்துவிட்டது
இறந்துவிட்டாளென்று கண்கலங்கிடவில்லை அவன்! சமூகம் தானே கலங்கி நிற்க
வேண்டும். இறுதியாக கையிலிருந்த காலை சிற்றுண்டியை தூரே எறிந்து விட்டு
பையிலிருந்த ஐம்பது ரூபாயை பாட்டியின் கையில் திணித்துவிட்டு பக்கத்தில்
இருந்தபடியே அரசு மருத்துவமனைக்கு தகவலளித்தான் அவன். அனாதைப் பினமொன்று
கிடக்கிறதென்று! வந்தார்கள் வண்டி எடுத்துக்கொண்டு பார்த்தார்கள் அவனை
தகவல் நீங்களா தந்தீர்கள்? ஆம் அதோ பினம் என்றான் அவன். பொறுமையாகவே
இறங்கினார்கள் நால்வர் பாடையை எடுத்துக்கொண்டு அருகே சென்றதும் அளந்து
பார்த்துவிட்டு கூடியிருந்தோரை விசாரித்து விட்டு (இறந்தபின் கூடி
விட்டது கூட்டம்) இறுதியாக தூக்கப்போகும் முன்னே
ஒருவனின் குரல் கேட்டது பரவாயில்லை கிழவி கண்மூடினாலும் கடைசிக்காக காசு
வைத்துள்ளதென்று பேசியபடியே பறித்தது கைகள். இனி அடக்கம் அமைதியாய்
நடைபெறுமென்ற ஒரே நிம்மதி மட்டுமே மனதின் ஓரத்தில் அவனுக்கு கொடுத்தது.
அங்கே அழமனமில்லாமல் வீட்டில் யாருமில்லா தனியறையில் அவனது அழுகை
ஒலித்தது. நிச்சயமாக அனாதையாக விட்டுச்சென்ற அப்பிள்ளைகளின் ஒருவனாக
நாமிருந்துவிட்டோமோ என்ற குற்றவுணர்ச்சி குத்தியபடியே இன்றும்
மனநிறைவில்லாத மனக்கசப்புடனே பல ஆண்டுகளாக தன் வாழ்நாளை கடந்துச்
செல்கிறான் அவன்.

ஹைக்கூ "சஞ்சலங்கள்"

வழியெங்கும்
லஞ்சம்
மிஞ்சியிருந்த
சில்லரை
-முதியோர்பணம்

___

ஏணிகளே
வலி தாங்குங்கள்
உயரத்தில்
ஒருவன்
உதைக்கப்போகிறான்!

___

மடைதிறவா
மண்வெட்டி
நீதிமன்றத்தில்
-நிலத்தகராறு

___

பவ்யமாய்
பதுங்கும்
பாவையவள்
வீசிச் சென்றது
புயலாய்
அவளது
பார்வை!

___

சுவற்றில் விழுந்த
நிழல்
நிமிர்ந்து நின்றது
-நிலா

___

மீசை நறைத்ததும்
மீண்டும் எழுந்தேன்!
புதியதொரு உலகம்
பூக்களை தூவி
வரவேற்றது!
முதுமையை முழுதாய்
ஏற்றதன் விளைவிதுவோ!

___

பின்னலாடை
பிறவிபலனை
அடைந்ததோ!
ஏதோ!! திருமண
வரவேற்பில்
வசந்தங்களை
தெளிக்கிறாள்
என்னவள்!

___

Monday, December 01, 2014

மனிதம் மரணிக்கலாமா?

எங்கோ
ஒரு மூலையில்!
எவனோ ஒருவன்
பசிக்கான வேட்கையுடனே
படுத்துறங்குகிறான்!
விழித்துக்கொண்டது
வறுமை!
அவனை பார்த்தவாரே!
அடுத்த வழியில் கடக்கிறான்!
அவனும்
வறுமையின்
பிடியில்!
வந்ததும் , சென்றதுமாய்
வாகனங்கள்
வந்திறங்கவில்லை
யாரும்!
வாழும் பணத்தாசை பேய்கள் தானோ அவர்கள்!
செய்வினையோ,
தெய்வச் செயலோ,
பாவத்தின்
பிரதிபலனோ!
முனுமுனத்த உதடுகளும்
முன்னால் நிற்கிறதே தவிர! முந்திவந்திட வில்லை முயற்சியும் செய்திடவில்லை!
வறுமையின் வலி இதுவென அம்மூளைக்கு எட்டுமா!
வந்ததொரு விடியல்!
வைகரை வெளிச்சத்தில்
துள்ளி குதிக்கும் மழலையது!
தூய்மையின் திருவுருவமது!
பள்ளிக்கு பக்குவம் வந்ததே!
பருவத்து நிலவு பொழிந்ததே!
இதோ!
படுத்துறங்கும் பசிப்பினிக்காரனை
பிஞ்சு விரலால்
தொடுகிறது!
பிழையில்லா பாசப்பிணைப்பிதுவோ!
தன்பசிக்கு தாய்தந்த
உணவை திறக்கிறது!
புத்தன் பூமியில் வந்திறங்கினானோ!
பக்குவமாய் பிசைந்தெடுத்து பசிவுதட்டில்
ஊட்டுகிறது!
"கருணை" இன்னும்
கண்மூடிடவில்லை! சவக்குழியில் அவை வீழ்திடவுமில்லை!
"தெரேசா" தென்றலாய்
வீசிக்கொண்டிருக்கிறாள்!
வீதியினை கவனியுங்கள்!
விரட்டிடுவோம்
வறுமையினை! வாழ்த்திடுவோம் கருணையினை!
வளர்த்தெடுப்போம்
அன்பினை!
இணைந்த கரங்களால்
இனியும் தாமதிக்காது
இப்பூவுலகில் நாமிணைந்து!
மனிதம் படைப்போம்!
வாருங்கள் நாம்
மனிதம் படைப்போம்!

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...