Monday, May 11, 2015

பம்பரமும் நடை பழகும்

விடுமுறையா இன்று! விட்டால்
போதுமென்று வீட்டில் முடங்கி
தொலைகாட்சி பொத்தானிடம் மட்டுமே
கொஞ்சும் கைவிரல் கண்கட்டி
வித்தைகளிலிருந்து சற்றே மாறுபட்டது
எங்களின் ஞாயிறு, கூட்டம் சேர்ந்து உலக
நிகழ்வுகளில் தொடங்கி உள்ளூர்
நிகழ்வுகள் வரையிலும் அதோடிணைந்து
தத்தம் வேலை அனுபவங்களையும்
கிசுகிசுக்களையும் பகிர்ந்து கொள்வோம்.
எவ்வளவு சந்தோஷம் வாரநாட்களில் ஒரு
விடுமுறையானது எங்களுக்கே
அமையப்பெற்ற வரம்போல
அமைகிறதே,இது வழக்கம்தான் ஒவ்வொரு
ஞாயிறும் நாங்கள் இப்படித்தான்.
தெருவீதிகள் எங்களைபார்த்து
மெய்சிலிர்க்கும், பிடிக்காத சிலரின்
பொறாமைகளும் அதிலடங்கியிருக்கும்.­
அப்படியான நேற்றைய ஞாயிறை
நண்பர்களோடு நகைச்சுவையோடும்,
சுகபோகத்தோடும்,அதிர்ச்சித்
தகவல்களோடும் வலம்வந்துக்
கொண்டிருக்கையில்தான் அந்த காட்சி
கண்ணில் பட்டது. தெருவீதியில்
எங்களைப்போலவே அரட்டையில்
ஈடுபடாமல் விளையாட்டில் கவனம்
செலுத்திக் கொண்டிருந்தார்கள்
சிறுவர்கள் . என்ன விளையாட்டது இந்த
விளையாட்டிற்கு இன்னமும்
வரவேற்ப்புண்டா என விழிப்பிதுங்க
வைத்த பம்பரம் விடும் விளையாட்டுதான்
அது. ஆச்சர்யமில்லை கோடைக்கான
குறிப்பிட்ட விளையாட்டில் என்றுமே
பம்பரம் இடம்பெற்றதுமில்லை அது
எப்போதும் சுழன்றுக் கொண்டுதான்
இருக்கும் சாட்டை பிடிக்கும் கைகள்
இருக்கின்ற வரையில்,,,அப்படியே
சுண்டி இழுத்தது சுழலும் பம்பரமும்
சிறவனின் கைகளிலுள்ள சாட்டையும்,
அருகில் சென்று கொஞ்சம் அதட்டலாக
வாங்கினேன் அந்தச் சிறுவனிடம்
சாட்டையையும் பம்பரத்தையும்,
சிறுவனை அதட்டியதில் என்மீது எனக்கே
வெறுப்பென்றாலும் என்ன செய்ய
முடியும் அவர்களுக்கு மிகபிடித்தமான
விளையாட்டுப் பொருளொன்றை
கொஞ்சியும், கெஞ்சியும் கேட்டால்
அடம்பிடித்தே தரமுடியாதென்று
சாதித்துவிடுவார்களே, அதனால் அதட்டல்
தேவைப்படுகிறது தேவைக்கு
மீறவில்லை அந்த அதட்டல்.முற்பொழுது
நினைவுகளை கண்ணுக்குள்
காட்சியாக்கியது பம்பரம்.சுழற்றிப்பார­­
்த்தேன் ஆரம்பச் சருக்கல் சிறுவர்கள்
சிரித்தார்கள். வெட்கத்தில்
மீண்டுமொருமுறை சுழற்றி விட்டேன்
பம்பரத்தை, உலக இயக்கத்தை ஒரே
நொடியில் நிறுத்திவிட்டு அதுமட்டுமே
சுற்றுவதாக மனதில் தோன்றியது,
அவ்வளவு மகிழ்ச்சி என்னிடத்தில்
எட்டிப்பார்த்தது. சுற்றிநின்ற சிறுவர்கள்
பம்பரம் சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்து
ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்தார்கள். நான்
சிறுவனாகிப் போனதிலிருந்து
மீண்டுவந்து பம்பரத்தை உரியவனுக்கு
கொடுத்துவிட்டு மலரும்
நினைவுகளுடனே திரும்பவும்
நண்பர்களுடன் இணைந்து
கொண்டேன்.அரைமணிநேரம் கடந்த
பின்னர் அதே சிறுவர்கள் இருந்த
இடத்தில் மீண்டும் ஆரவாரக் கூச்சல் எழ ,
நாங்கள் அனைவரும் திரும்பிப் பார்த்தோம்
. அதியசயத்தையும் ஆச்சர்யத்தையும்
ஒருசேர திண்றுக்கொண்டிருந்தன எங்கள்
அனைவரின் விழிகளும், கூடவே
சிறுவர்களும்,
ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த
பெரியவர் சிறுவனிடம் பம்பரத்தை
வாங்கி விட்டுக்கொண்டிருந்தார்.
என்னமாதிரான உத்வேகமது என்று
எங்களால் கணிக்க முடியவில்லை
அனுபவம் அப்படியே பம்பரத்தில் இறங்கி
சுழன்றுக்கொண்டிருந்தது அவரின்
கைகளில்.
அந்த நிமிடம் ஐம்பது குறைந்து ஐந்து
வயதுச் சிறுவனாக அவர் மாறியிருந்தார்.
ஒரு குழந்தை உள்ளங்கை ஈரம் படிந்து
இன்ப கையசைவால் பறக்கும்
முத்தமொன்று கொடுக்கையில் நாமும்
குழந்தையாவோமே அவ்வுணர்வு அங்குக்
கூடியிருந்த அனைவருக்குள்ளும்
சூழ்ந்துக்கொண்டிருந்தது. என்ன
விந்தையிது
ஒரு விளையாட்டானது
முதியோர்களையும்
குழந்தையாக்கிவிடுமா? ஆச்சர்யம்
வேண்டாம் அதுவே உண்மையென
எதுமறியாத பிள்ளை பருவத்து
விளையாட்டுகளில்தான்
மறைந்திருக்கிறது அவ்வற்புதக் கலை
அறிந்த பின்னால் அழிவிலிருந்து
பம்பரத்தை மீட்க வேண்டியது கடமையாக
பட்டது .ஆனந்தப் பேரலைகளில்
அனிச்சையாய் நமை இழுத்து இது
உனக்கு பிடித்தமான விளையாட்டென்று
சாட்டை உரைக்கையில் பம்பத்தின் கூடவே
நாமும் சுழன்று விடுகிறோம் இதற்கு
வயதுத் தடையில்லை ,மெம்மேலும்
பால்யத்தின் மீதான காதலை நமக்கு
வெளிச்சம்போட்டு காட்டி நம்மையும்
சிறுவனாக்கி பார்த்துவிடுகிறதல்லவா
இப்பம்பரம், பம்பரம் மட்டுமல்ல எத்தனை
எத்தனையோ விளையாட்டுகள் நாம்
வளர்ந்தாலும் நம்மை சிறுவர்களாகவே
வைத்திருக்கிறது. வாழும்போதே
அனுபவித்தல் இவைகளைத்தானன்றி
வேறெதுவுமில்லையென மனம்
சொல்லுகிறது. மீண்டும்
சிறுவனாகிப்போன என்னைப்போலவே
அந்தப் பெரியவரும் உணர்ந்திருப்பார்
என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது.
விளையாடும் சிறுவர்களை எப்போதும்
தடுத்துநிறுத்தி விடாதீர்கள். உங்களின்
சிறுவயது நினைவுகளும் அதனால்
சிதைந்துபோகும் . விளையாட விடுங்கள்
ஏனெனில் அவர்களோடு நாமும் சிறுவர்கள்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...