Saturday, September 26, 2015

நான் தோற்றுப் போகிறேன்

ஏன் தோன்றியது இந்த சிந்தனை என்று அலசி ஆராயும் அளவுக்குச் செல்லவில்லை,
இருந்தும் ஏதோ ஒன்றை இழந்துக் கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும்
உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதுவும் இவ்வுள்ளுணர்வு என்
பிறந்த நாளிலா குத்திக் கிழிக்க வேண்டும் , ஆமாம் நான் தோற்றுப் போகிறேன்
இந்த சமூகத்தில்,இருபத்தெட­்டு ஆண்டுகளை எப்படி கடந்தேன் என்று என்
அன்னையிடம் கூட கேட்க கூச்சமாக இருக்கிறது. தாயாக இருக்கிறாளே தன்நலம்
கருதி சுயநலத்தோடு இச்சமூகத்தை விட்டு வெளியேறு என்று சொல்லிவிட்டால் அதை
விட வலி வேறென்ன இருக்கப்போகிறது. மவுனமாய் கடந்து போகும் வேடிக்கை
மனிதர்கள் என் கண் முன்னே அநீதிகளின் கூடாரங்களை அமைத்து அதில்
சாதிவெறியையும், மத வெறியையும் குடியிருக்கச் செய்துவிட்டு சமூகத்தில்
அந்தஸ்த்து மனிதர்களென்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு , நடைபோடுகையில்
நான் சிறுவண்டாகவே உணர்கிறேன் எனில் நான் தோற்றுப்போய்விட்டேன்­ என்பதில்
தெளிவு பிறக்கத்தான் செய்கிறது. என்ன செய்தேன் இச்சமூகத்திற்கு? இனி என்ன
செய்ய வேண்டும் இச்சமூகத்திற்கு? என்கிற தெளிவு யாரால் எனக்கு
உணர்த்தப்படுமென்று தேடியே தொலைத்து விட்டேன் என் தோல்வியை என்னால்
ஏற்றுக்கொள்ள முடிகிறது. கல்வியும், அக்கல்வியின் மூலமாக பெற்ற அறிவையும்
எவருக்கோ விற்றுவிட்டு இயந்திர மாணவர்களை இயக்கிக் கொண்டிருக்கும்
அரசிற்கு அது தேவையாக இருக்கிறது. எதுவென்று யாரும் கேட்காத அளவிற்கு
அவர்களுக்கே அது தெளிவாகத் தெரியும். அவர்களிடத்தில் நான் தோற்றுப்
போய்விட்டேன் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தினந்தினம் நடக்கும்
சா(தீய) வன்கொடுமைகளை சகித்துக் கொண்டே எவ்வளவு தூரம் நான் செல்ல
வேண்டும் என தீர்மானிக்கும் எந்த புத்தகமும் என்னிடத்தில் இல்லை,
இருப்பது வெறும் மார்க்ஸிய,லெனினிய,அம­்பேத்கரிய, பெரியாரியம் மட்டுமே ,
அனைத்தும் என்னிடத்தில் வலியுறுத்துவது "அடிமையை உடைத்தெறி" என்பதாகவே
இருக்கையில் எனக்கு அப்பால் வளர்ந்துக் கொண்டேச் செல்கிறதே இந்த
மதவெறியும்,சாதிவெறிய­ும் அப்படி இருக்கையில் நானெப்படி வெற்றி பெற்றவனாக
முடியும். இந்த சமூகத்தின் மீது அதீத பற்று வைத்துக்கொண்டு வாழ்ந்திட
இயலாத காலச்சூழலை உறுவாக்கித் தந்தவர்கள் இங்கே ஏகபோகமாக, சுகபோகமாக
வாழ்ந்திடுகையில் ஏன் நீ மட்டும் இப்படி சினுங்குகிறாய் என்று ஏதோ ஒரு
மூலையில் யாரோ சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். என் நிழகலாகவும் அது
இருக்கலாம். என் மூளைக்குச் சென்று நீ மிருகமல்ல மனிதனென்று பதியவைத்த
படிப்பறிவால் பெற்ற பகுத்தறிவு பகலவன்கள் அந்நிழலில் மறைந்திருக்கலாம்,
நான் தோற்றுப்போகிறேன் என்பது பசுமரத்தாணி அல்ல பட்டமரத்தில்
அடிக்கப்பட்ட ஆணி , நிழலில் இருந்து வெளிச்சத்தை நோக்கி புறப்படத்
தயாகிறேன். என்னால் பகுத்தறிவு பகலவன்கள் விடுதலையாகலாம் என்கிற ஒரு
வாய்ப்பினை எனக்கு நானே உறுவாக்கிக் கொண்டதில் ஆத்ம திருப்தி. சாதியற்ற
சமூகம், மதவெறியற்ற மனிதம், படைப்பதில் இருக்கும் சந்தோஷத்தை
விட்டுக்கொடுப்பதாய் இல்லை, என் அடுத்த நகர்வுக்காக எதையும் இழக்கத்
துணிந்துவிட்டேன், இழக்காத ஒன்றினால் இழுத்துக் கட்டி ஊஞ்சலாடுவது
சுலபமான ஒன்றுதான், துணிவு மட்டுமே எனக்கு தாலாட்டாகும். இருந்தும் நான்
தோற்றுப்போகிறேன் எனும் எண்ணம் காற்றில் அலைகிறது. அலையட்டுமே!
தோல்வியில் தானே வெற்றிக்கான பல யுக்திகள் கண்டெடுக்கப்படுகிறது­.
தோல்விக்கும் இடமுண்டு என் மனதில், ஏனெனில் இந்தச் சமூகத்தை இன்னும்
படிக்கத்தூண்டுவதற்கு­ அது காரணமாக இருக்கின்ற ஒரே காரணத்தால் இன்னமும்
சொல்வேன் நான் தோற்றுப் போகிறேன் என்று,,, என்னில் இருந்து அடிமைத்தனம்
ஒழியத் தொடங்க வேண்டும் என்பதில் நான் உறுதியாகவே இருக்கிறேன்.எனக்குள்­
எப்போதும் அது ஒலித்துக்கொண்டே இருக்கும் " பிச்சை எடுப்பது கேவலமல்ல
அவ்வழியிலேனும் பகுத்தறிவு புகுத்தப்படுமேயானால்­" என்பதுதான் அது.
எதற்கும் துணிந்துவிட்டைன் ஏதோ ஒரு விதத்தில் என் போக்கை மாற்றிவிட
என்தாய் முயற்சி செய்யலாம், என் நலன் கருதி, ஒருவேளை நான் மரண வாசலை
முத்தமிட்டால் வருகை தரும் மனிதர்களின் வார்த்தைகளில் உதிக்கும்
வாழ்த்துக்களே என் தாய்க்கு அப்போது போதுமானதாக இருக்க வேண்டும்.
என்பதற்காக இப்போதே தயாராகிக் கொள்கிறேன். முடிந்தளவு முயற்சி செய்கிறேன்
." சாதி வெறி என்பது கலாச்சாரமல்ல அது ஒரு குற்றம்" என்பதையும் " மத வெறி
என்பது மனிதனை கொல்லத்துடிக்கும் மிருகம்" என்பதையும் உணர்த்திக் கொண்டே
இருப்பேன், நான் தோற்றுப் போகிறேன் என்கிற மையம் ஒருநாளேனும் என்னை
விடுவித்துக் கொள்ளும் வரையில் தொடரும் இந்த சமூகப் பயணம்.

2 comments:

  1. சிந்திக்க வைக்கும் தேடல் தோற்காது சகோ.

    ReplyDelete
  2. மன ஆருதலுக்கு நன்றி தோழர்

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...