Wednesday, November 04, 2015

தனிச்சுடுகாடு,

பள்ளிப் பருவமது
பால்ய சினேகிதர்கள்
நாம்

பேசினோம் பழகினோம்
பந்தம் வளர்த்தோம்
சொந்தம்
கொண்டாடினோம்
கொண்டு வந்த உணவை
பகிர்ந்துண்டோம்
பறந்துபோனது எங்கோ
நமக்குள் இருந்த
வேற்றுமைகள்

மற்றவர்களிடம்
உன்னை நான்
விட்டுக்
கொடுக்கவில்லை
நீயென்னையும்
விட்டுக்
கொடுக்கவில்லை

ஒரே ஊரென்ற ஒற்றை
அடையாளமும்
அவ்வப்போது
பெருமைபேசும்
நம்முடைய வாய்களும்

டிங் டிங் டிங்
மணியடிக்கிறது
பள்ளிக்கூடத்து
புளியமரம்
தகர்க்கப்படாத
ஒரே மரம் அதுதான்

காப்பாற்றிக்
கொண்டிருக்கிறது
இன்னமும் அந்த
தண்டவாள சிறு
இரும்புத்துண்டு
புளிய மரத்தை

ஒரு சிறையில்
அடைபட்டிருக்கும்
ஜோடிக் கிளிகள்
சுதந்திரத்திற்கு ஏங்க
எவனோ பரிதாபப்பட்டு
திறந்து விடுகையில்
திரும்பிக்கூடப்
பார்க்காமல் சட்டென
பறந்திடுமே கிளிகள்
அதுபோல புயலாய்
வேகமெடுத்தது
பள்ளியை விட்டு
வெளியே மாலைநேரத்து
மயக்கத்தையும் மறந்து

வீட்டை நோக்கி
நடந்தோம்,ஓடினோம்
ஆங்காங்கே நின்றோம்
எதையோ அடித்தோம்
பறித்தோம் சாலையோர
மணல் புழுதிகளை
எழுப்பி விட்டு விளையாடினோம்

தொடர்ந்தோம்
தொட்டுவிட்டோம்
வீட்டிற்குச் செல்லும்
கடைசிப் பாதையை

வாய்பிளந்து விஷம்
கக்கிக்கொண்டிருக்கும்
ராஜநாக பாம்புவின்
பயத்துணர்வை
காட்டி நிற்கிறது நமக்கந்த
இரட்டைப் பாதைகள்

அதற்கும் சற்று
முன்னரே விலகி
நடக்கத் தொடங்கினோம்
நீ வலதுபக்கம்
நான் இடதுபக்கம்
ஆனாலும்
உன்னைக் கடந்து
நான் செல்ல வேண்டும்

பாதையின் அமைப்பும்
நம்மூரின் அமைப்பும்
அப்படியான வடிவத்தில்

எந்த ராஜநாக பாம்புகள்
போட்டதோ ஒரு
ஊருக்கு இரண்டு பாதைகள்
புலம்பத்தெரியவில்லைஅதன் காரணமும்
விளங்கவில்லை
அப்படியான வயது
நமக்கு

உன்வீட்டை
நீயடைந்தாய்
ஓரக்கண் அசைவுகள்
விடைகொடு தோழா
என்றது
வெளிப்படையானால்
வெளுத்து
வாங்கிவிடுவார்களே
உன்னை

இந்த உலகம் நம்மை
எதற்கு அடிக்கிறதென்றும்
தெரியவில்லை ஆனால்
அதற்குள் வஞ்சம்
தீர்த்துக்கொள்கிறது
நாம் சிறுவர்கள் என்று
அறிந்திருந்தும்

வளர்ந்தோம் கொஞ்சம் கொஞ்சமாக நாமிருவரும் கூடவே
சாதியும் மதமும்

நான் சேரிக்காரனென
நீயறிந்தாய்
நீ ஊர்க்காரனென
நானறிந்தேன்
பிரிவினைகள்
பசுமரத்தாணி போல
பதிந்துவிட்டது
நம்மிதயங்களில்

என்னை அடிமைபடுத்தும்
சாதிமத தாரக
மந்திரத்தை மனதிற்குள்
ஏற்றிவிட்டார்கள்
ஊர் கூடி உன்னையும்
சாதிமதப் பக்கம்
இழுத்து விட்டார்கள்

இப்போதெல்லாம்
பேசுவதில்லை
நீயென்னோடு
அத்தோடும் திரிகிறாய்
நான் உனக்கு கீழானவன்
என்கிற திமிரோடு

பந்தம் சொந்தம் பகிர்வு
பால்யம் அத்தனையும்
பறந்து போனது
பாழாய்ப்போன சாதிமத
பிரிவினைகளால்

இருந்தும் பத்திரமாய்
வைத்திருந்த பள்ளிக்கால
புகைப்படத்தில்
உன்னை நான்
தொட்டழுதும்
என்னை நீ தொட்டழுதும்
மூடிவைத்து
விடுகிறோம் பழைய
பெட்டிகளில்
நினைவுகளையும்
நிசப்த அலைகளையும்
அதனுள் சேர்த்தே

வண்ணப் பூக்களை
பார்த்ததும்
வந்தமர்ந்து
கட்டித்தழுவுமே
பட்டாம்பூச்சிகள் அதன்
வார்த்தைகளாகிப்
போனது­ நமது
மௌனங்கள்
உடையவேயில்லை
வளர்வதை யாராலும்
தடுக்கவும்
முடியவில்லை

ஓர் இரவில்
இறுதி மூச்சினை
ஒரு நிமிடம்
எனக்குள்ளே
இறுத்திக்கொண்டு
உன்னை நினைத்துக்
கொண்டேன்
என் கடைக்கண்ணீரின்
கடைசித் துளிகளில்
நீதான் கண்ணாடிப்
பிம்பமானாய்

இறந்தேன் நான்
பிரிந்தேன் இவ்வுலகை
இறுதிச் சடங்கும்
முடிந்து விட்டது எனக்கு
உன்னை எதிர்பார்த்த
என்விழிகள்
தொலைந்து நிற்கிறது
தோழமையின் உணர்வுகளை

உயிருடன் இருந்திருந்தால்
உன்முகத்தை தினந்தினம் பார்த்து ரசிப்பேன் பால்ய நினைவுகளுடனே
பார்க்க வழியற்று
நானோ இறந்து
கிடக்கிறேன்

இருந்தும் நீ
வரவேயில்லை
என் சாவுக்கு

சரி போகட்டும்
போகும் வழியிலேனும்
உன்னை பார்த்து
விடுவேன் எனும்
நம்பிக்கையில்
புறப்படுகிறதென் பிணம்
சுடுகாடு நோக்கி

சாதிமதம் பார்த்தாலும்
மனிதன் இறந்தால்
பிணம்தானே என்பெயர்
மறைந்து போனது
மறந்தும் போனது

சேரிப்பாதை முடிந்து
ஊர்ப்பாதையை
தொட்டது என்பிணம்
இறுதி ஊர்வலத்தில்

இறக்கினார்கள்
என்னை கீழே
சேரிக்காரன் பிணம்
ஊர்ப்பாதை
போகக்கூடாதாம்
போட்டார்கள் தடையை

தடுத்தார்கள்
தடியடிநடத்தினார்கள்
தாவிக் குதித்தார்கள்
என் வெற்றுடம்மை
மிதித்தார்கள்

மிதித்த கூட்டத்தில் ஒரு தொடுதல் மட்டும் நெருடலாகிறதே
அது எனக்கு
இதமாக இருக்கிறதே

யாராய் இருக்கும்
ஆகா!
கூட்டத்தில்
நீயுமிருக்கிறாய்
ஆனால் மிதிக்கவில்லை
நீயென்னை

எனக்குத் தெரியும்
என்னுடலை
தொட்டணைத்து
உள்ளுக்குள்
அழுகிறாயென்று
உன் இதயம் புழுங்கித் தவிக்கிறதென்று

இதுபோதும்
இந்தப் பாசம்போதும்
இந்த துடிப்பு போதும்
இந்த அன்பு போதும்
இந்த அரவணைப்பு
போதும்

இனி இந்தக்கட்டை
நிம்மதி பெருமூச்சு விட்டபடி நன்றாக மண்ணில் புதையுண்டு
வாழும்

ஆனால் எனக்காக
ஒன்று செய் என்
பால்ய நண்பனே

என் பிணம் உன்னை
உள்ளுக்குள் அழச்செய்திருக்கலாம்
அதை வெளியே எடு
எனக்காவும்
என்னைப்போல்
வரிசையில்
காத்திருக்கும்
சேரிப்
பிணங்களுக்காவு­ம் மனம் விட்டு அழு

உன் அழுகையின்
வெளிச்சத்தில் சாதிமத இருள் விலகலாம்

என் பிணம் பட்ட
சாதிமத காயங்களை
அடுத்து வரும்
பிணங்களிடத்தில்
பிரயோகப்படுத்துவதை
தடுத்து நிறுத்திவிடு
இதுவே என்
கடைசியாசையாகவும்
கடைசிப் பயணமாகவும்

இனிநான் வரப்போவதில்லை
நிரந்தரமாய்
உறங்கச்செல்கிறேன்
என்சேரிக்கென
ஒதுக்கப்பட்ட
ஒதுக்குப்புற
தனிச் சுடுகாட்டில்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...