Saturday, January 30, 2016

அரசியல் சுதந்திரம் பற்றி லெனின்

"சமூக ஜனநாயகவாதிகளின்(கம்யூனிஸ்டுகளின்) முதல் கோரிக்கையும் முதன்மையான
கோரிக்கையும் அதுதான். "அரசியல் சுதந்திரம் வேண்டும்" என்று அவர்கள்
எழுப்பும் முதல் கோரிக்கையின் பொருள் இது தான்:-
அரசியல் சுதந்திரம், நாடாளுமன்றத்துக்கு சுதந்திரமான தேர்தல்,
கூட்டம்கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை மட்டும் உழைக்கும்
மக்களை அவர்கள் சந்திக்கும் வறுமையில் இருந்தும், அடங்கு முறையில்
இருந்தும் உடனடியாக விடுவித்து விடாது என்பதை நாம் அறிவோம்.
பணக்காரர்களின் லாபத்துக்காக வேலை செய்ய வேண்டிய சுமையில் இருந்து
நகர்ப்புற ஏழைகளையும், கிராமப்புற ஏழைகளையும் விடுவிக்கக்கூடிய உடனடியான
சாத்தியக் கூறுகள் அவற்றுக்கு இல்லை என்பது உண்மையே. உழைக்கும் மக்கள்
தங்கள் மீதுதான் நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும். வேறு எவரையும்
நம்பியிருக்க முடியாது. உழைப்பாளி தன்னைத் தானே வறுமை நிலையில் இருந்து
விடுவித்துக் கொள்ளவில்லை என்றால் வேறு எவறும் அவனை விடுவிக்க
மாட்டார்கள். அவ்வாறு உழைப்பாளிகள் தங்களைத் தாங்களே விடுவித்துக கொள்ள
வேண்டுமானால் ருஷ்யாவிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களும் ஒரே சங்கமாக ஒரே
கட்சியாக ஒன்றுபட வேண்டும். சர்வாதிகார போலீஸ் ஆட்சி, கூட்டங்களுக்கு தடை
விதித்தது என்றால், உழைப்பாளிகளின் பத்திரிகைகளுக்கு தடை வித்தது
என்றால், உழைப்பாளர்களின்பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்க தடை
விதித்து என்றால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுபட முடியாது.
உழைப்பாளிகள் ஒன்றுபட வேண்டுமானால் அனைத்து விதமான சங்கங்கள் அமைக்கும்
உரிமை அவர்களுக்கு வேண்டும். ஒன்றுபடுவதற்கானஉரிமை வேண்டும். அரசியல்
சுதந்திரத்தை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.
அரசியல் சுதந்திரம் உடனடியாக தொழிலாளர்களை அவர்களின் வறுமை நிலையில்
இருந்து விடுவிக்காது என்பது சரிதான். ஆனால் வறுமையை எதிர்த்துப்
போராடுவதற்கான ஓர் ஆயுதத்தை அரசியல் சுதந்திரம் உழைப்பாளிகளுக்கு
அளிக்கும். வறுமையை எதிர்த்துப் போராட உழைப்பாளிகளின் ஒற்றுமைதான ஒரே
வழி. வேறுவழி எதுவும் இல்லை, இருக்கவும் முடியாது. அரசியல் சுதந்திரம்
இல்லை என்றால் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுபடுதல் சாத்தியமானதாக
இருக்காது."
- பக்கம்21-22

எழுத்து & ஆசிரியர் ;
ஈஸ்வரன் அ.கா.

Wednesday, January 27, 2016

பத்மஸ்ரீ நாப்கின் உற்பத்தியாளன்

வாழ்த்துதலை ஒரு பெட்டகத்தினுள் அடைத்துவிட்டு வெற்றுக் காரிய நிழல்களால்
நம்மையும் சேர்த்து அதனுள் பூட்டிவைக்க மனம் விரும்பவில்லை, அனாலும்
அதற்கான தகுதி அலசலுக்கு எவ்வித அடக்கமும் தேவையில்லை என்றே
உரைக்கப்படுகிறது ஓர் சமூக உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி
என்பதால்,,,
இது நிகழ்ந்திருக்கலாம் அல்லது நிகழ்த்தியிருக்கலாம்­ என்கிற வெற்று
பேச்சிற்கு அப்பால் நிகழ்த்திவிட்ட ஒரு சாதனையாளனுக்கு அதுவும்
சமூகத்தின் தயக்கத்தில் புழுங்கிப்போயிருந்த மற்றும் புழக்கமில்லாத ஒரு
அத்தியாவசிய தேவைப் பொருளை மலவு விலைக்கு தயாரித்து விற்பனை செய்திட்ட
சாதனையாளருக்கு தகுந்த விருதுதான் அது என்றால் தலைவணக்கம் பல தலைமுறைகள்
தெரிவித்தல் வேண்டும்.

இந்த விருது இவருக்கு அவசியமா? அப்படி என்ன செய்தார் மக்களுக்கு எனும்
பத்மவிபூஷன் விருது பெற்றிருக்கும் நடிகர் ரஜினி அவர்களிடத்தில் எதுவும்
வாதிட விரும்பவில்லை, விருப்பமுமில்லை விவாதம் அவசியமற்றது வேண்டாமென
தள்ளி ஒதுக்கி விடலாம் எளிதாக,,,

ஏன் இப்படி செய்தார்? எதற்காக இந்த கவுரவ வீம்பு? இந்த நாடகம்
நிகழ்த்தவும் தனித்திறமை வேண்டுமென "பத்மஸ்ரீ" விருதினை புறக்கணித்த
எழுத்தாளர் ஜெமோவுக்கு அவர் பாணியிலேயே கடிதம் எழுதும் Mr.செல்வத்திடம்
விமர்சனம் எழுதும் பணியை முற்றாக ஒப்படைத்துவிட்டு ஒதுங்கி விடுதல்
அவசியப்படுகிறது. அதற்கான தேவையும் ஆர் எஸ் எஸ் அவ்வப்போது தன்னிலை
விளக்கங்கள் தரலாம்.

இரண்டையும் ஒதுக்கிவிட்டு உண்மையாக தன் உழைப்பை சமூகத்திற்கு தந்த அந்த
மனிதர் மனதில் ஆணித்தரமாய் குடிபுகுகிறார். அதுவும் "அந்த விஷயம்" என்று
இன்றுவரை வெளிப்படையாக பேச மறுத்தும், வாங்கத் தயங்கும் நிலைமையும்
இருக்கும் பெண்களுக்கான அத்தியாவசியப் பொருளான " நாப்கின்"
உற்பத்தியாளருக்கு விருது என்றால் தகுதியான நபருக்கான விருது என்றே
எடுத்துக்கொள்ளலாம். இந்த சமூகத்தில் பல்வேறு முகச் சுளிப்பு
பார்வையுடனும், ஓர் ரகசியத் தன்மை அதுவென்று கட்டமைத்த காரணங்களால்
பெண்களே கூச்சப்பட்டு கடைகளில் செய்தித்தாள் மடித்த நிலையில் வாங்கும்
பொருளை மிக மலிவாகவும்,மிக பாதுகாப்புத் தன்மையுடனும் தானே உற்பத்தி
செய்து பெரு நிறுவனங்களான ஸ்டேஃபிரீ,விஷ்பர் போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு­
சவால்விட்டு ஏழை எளிய பெண்களும் வாங்கி பயன்படுத்தும் மலிவுவிலை விற்பனை
சாதனையாளர்
திரு.அருணாசலம்_முருகானந்தம் அவர்களுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
மகிழ்சி அளிப்பது மட்டுமல்லாது சாதனை படைக்கத் துடிக்கும் பலகோடி
பேருக்கு வழிகாட்டுதலாகவும் இருக்கிறது.
கோவையை சேர்ந்த முருகானந்தம் பெண்களுக்கான சானிடரி நாப்கீன்களை குறைந்த
செலவில் தயாரித்து வழங்கி வருகிறார். இந்தியாவில் 60 % ஏழைப் பெண்கள்
நாப்கின் வாங்க வசதியின்றி பழைய துணிகளை உபயோகிக்கும் அவலம் நிலவுகின்ற
சூழ்நிலையில் இச்சமூக அவலத்தினை போக்கும் முயற்சியின் பலனாக முருகானந்தம்
அவர்களின் பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் குறைந்த செலவில்
சுகாதாரமான நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தி வடிவமைத்தார்.
உறுவாக்கப்பட்ட இயந்தியத்தின் மூலம் நாப்கின் தயாரிக்க முடியுமென்று
நிரூபணப்படுத்தி இரண்டிற்கும் ஆன காப்புரிமை பெற்று தனியார் மற்றும் பெரு
நிறுவனங்களுக்கு இயந்திரத்தை விற்பனை செய்யாமல் ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ்
என்ற நிறுவனத்தை தொடங்கி மகளிர் அமைப்புகள் , பள்ளிகள் போன்றவற்றிற்கு
லாபமின்றி இயந்திரம் , மற்றும் மூலப்பொருட்கள் வழங்கி பயிற்சி
அளிக்கிறார் . இன்றைய நிலவரப்படி 21 நாடுகளில் சுமார் 10000 இயந்திரங்கள்
மூலம் , சுமார் ஒரு கோடி பெண்கள் இவரின் சுகாதாரமான நாப்கின்களை குறைந்த
விலையில் ( 1 பீஸ் 1rs,2rs ) உபயோகிக்கிறார்கள்.
ஏற்கனவே உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை டைம்
பத்திரிக்கை (2014 ) தேர்ந்தெடுத்திருந்ததது குறிப்பிடத்தக்கது.
திரு.அருணாசலம்_முருக­ானந்தம் எனும் தொழிற்புரட்சிக்காரனு­க்கு இந்திய
அரசு "பத்மஸ்ரீ" விருது வழங்கியுள்ளது என்பதை மேற்சொன்ன ஒரு விருது
புறக்கணிப்பும், ஒரு விருது ஏற்பும் ஏற்படுத்தியுள்ள விமர்சனங்கள் மூலம்
மூடிமறைக்கப்படுகிறது­. வெளிச்சத்தில் பல சாதனையாளர்களை கொண்டுவருதல்
நமக்கான தேவையாக இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும், பத்மஸ்ரீ விருது
பெற்றமைக்காக பாராட்டுகளும் வாழ்த்துகளும் தொழிற்புரட்சியாளனுக்­கு
சமர்ப்பணம்.

Friday, January 15, 2016

அரசியல் பொருளாதார நெருக்கடியைப் பற்றிய மார்க்சின் கோட்பாடு
("கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை"யின் முதல் அத்தியாயம் மற்றும் "கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்" என்ற நூலினில்
காணப்படும் கருத்துக்களைக் கொண்டு மார்க்சிய பொருளாதார நெருக்கடியின் கோட்பாட்டை எளிய அறிமுகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது)

மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின் உற்பத்தியும், உற்பத்திக்கு அடுத்தபடியாக, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் பரிவர்த்தனையுமே சமூகக் கட்டமைப்பு முழுமைக்குமான அடித்தளம் ஆகும். வரலாற்றில் உருவாகி வந்த ஒவ்வொரு சமுதாயத்திலும், செல்வம் வினியோகிக்கப்படும் முறையும், சமுதாயம் வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் முறையும், அந்தச் சமுதாயத்தில் என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் எவ்வாறு பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பதைச் சார்ந்து உள்ளது.

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்துரு, இந்த வரையறுப்பிலிருந்தே தொடங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தின்படி, அனைத்து சமூக மாற்றங்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான முடிவான காரணங்களை, உற்பத்தி, வினியோக முறைகளில் ஏற்படும் மாற்றங்களில் கண்டறிய வேண்டும். இதற்கு மாறாக மனிதர்களின் சிந்தனைகளிலோ, நித்தியமான உண்மை, நித்தியமான நீதி குறித்த மனிதனுடைய முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வுகளிலோ அல்ல. அதாவது அத்தகைய காரணங்களை அந்தந்தக் குறிப்பிட்ட சகாப்தத்தின் பொருளாதார அமைப்புமுறையில் கண்டறிய முயல வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கம் உருப்பெற்று எழுவதற்கு தேவைப்படுகிற பொருளுற்பத்தி, பரிவர்த்தனை சாதனங்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையின் உள்ளே தோன்றிதாகும். நிலப்பிரபுத்துவத்தில் குறிப்பிட்ட பொருளுற்பத்தி, பரிவர்த்தனை சாதனங்களது வளர்ச்சி, நிலப்பிரப்புத்துவ சொத்துடைமை உறவுகள், வளர்ச்சியடைந்த உற்பத்திச் சக்திகளுக்கு பொருத்தமற்று போயிற்று. பொருத்தமற்ற உற்பத்தி உறவுகள் பொருளுற்பத்திக்கு பூட்டப்பட்ட விலங்குகளாய் ஆனது. உடைத்தெறிய வேண்டிய விலங்கை உடைத்தெறிந்து முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தேவைப்பட்ட தடையில்லாப் போட்டியும், அதற்கு பொருத்தமான சமூக, அரசியல் ஆதிக்கமும் தோன்றின.

எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழைய மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது. இந்த வகையில் முதலாளித்துவ வர்க்கம் வரலாற்றுரீதியாக, மிகவும் புரட்சிகரமான பாத்திரம் வகித்துள்ளது.

முதலாளித்துவவர்க்கம் தமது முதல் நூறாண்டுகள்கூட ஆகாத அதன் ஆட்சிக் காலத்தில், இதற்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமான உற்பத்திச்சக்திகளை உருவாக்கியது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல், எந்திர சாதனங்கள், தொழில்துறைக்கும் விவசாயத்துக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தல், நீராவிக் கப்பல் போக்குவரத்து, ரயில் பாதைகள், மின்சாரத் தந்தி, கண்டங்கள் முழுவதையும் திருத்திச் சாகுபடிக்குத் தகவமைத்தல், கால்வாய்கள் வெட்டி நதிகளைப் பயன்படுத்தல், மனிதனின் காலடிபடாத இடங்களிலும் மாயவித்தைபோல் பெருந்திரளான மக்களைக் குடியேற்றுவித்தல் போன்றவற்றை இதற்கு முன்பு கற்பனையில் காணமுடியாதவை நடைமுறையில் நடத்திக்காட்டிற்று.

ஆனால் வர்க்கப் போராட்டத்தை முதலாளித்துவம் முடிவுக்குக் கொண்டுவரவில்லை. பழையவற்றின் இடத்தில் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும் தோற்றுவித்து, புதிய போராட்ட வடிவங்களை உருவாக்கியது.

முதலாளித்துவ வர்க்கம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே அளவுக்கு நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கமும் வளர்கிறது. இந்த வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமக்கு வேலை கிடைக்கும் வரைதான் வாழ முடியும்; இவர்களின் உழைப்பு மூலதனத்தைப் பெருக்கும் வரைதான் இவர்களுக்கு வேலையும் கிடைக்கும்.

தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள், மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. உடனே தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் தொழிற்சங்கங்களை அமைத்துக்கொள்ளத் தொடங்குகின்றனர். கூலிகள் குறைந்து போகாமல் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவ்வப்போது மூளும் இந்தக் கிளர்ச்சிகளுக்கு முன்னேற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு, நிரந்தரமான சங்கங்களை நிறுவிக்கொள்கின்றனர். சில இடங்களில் இந்தப் போராட்டம் கலகங்களாக வெடிக்கிறது.

தொழிலாளர்கள் அவ்வப்போது வெற்றி பெறுகின்றனர். ஆனாலும் அது தற்காலிக வெற்றியே. அவர்களுடைய போராட்டங்களின் மெய்யான பலன் அவற்றின் உடனடி விளைவில் அடங்கியிருக்கவில்லை. எப்போதும் விரிவடைந்து செல்லும் தொழிலாளர்களின் ஒற்றுமையில் அடங்கியுள்ளது. நவீனத் தொழில்துறை உருவாக்கியுள்ள மேம்பட்ட தகவல் தொடர்புச்சாதனங்கள் இந்த ஒற்றுமைக்குத் துணைபுரிகின்றன. வெவ்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ள இவை உதவுகின்றன. எல்லாம் ஒரே தன்மை கொண்ட, எண்ணற்ற வட்டாரப் போராட்டங்களை வர்க்கங்களுக்கு இடையேயான ஒரே தேசியப் போராட்டமாக மையப்படுத்த இந்தத் தொடர்புதான் தேவையாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே ஆகும்

உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது. மனிதனின் செயல்பாடு என்னவெல்லாம் சாதிக்க வல்லது என்பதை முதன்முதலாக எடுத்துக் காட்டியது முதலாளித்துவவர்க்கம்தான்.

பெரிய தொழில்கூடங்களிலும் பட்டறைகளிலும், உற்பத்திச் சாதனங்களின் ஒன்றுகுவிப்பும், உற்பத்தியாளர்களின் ஒன்றுகுவிப்பும், அவை உண்மையான சமூகமயமான உற்பத்திச் சாதனங்களாகவும், சமூகமயமான உற்பத்தியாளர்களாகவும் ஆகிப்போன தன்மையை பெறுகின்றன. ஆனால், சமூகமயமான இந்த உற்பத்தியாளர்களும், உற்பத்திச் சாதனங்களும், அவற்றின் உற்பத்திப் பொருள்களும் இந்த மாற்றத்துக்குப் பின்பும், அவை முன்பு பாவிக்கப்பட்டது போன்றே, அதாவது, தனிநபர்களுக்குச் சொந்தமான உற்பத்திச் சாதனங்களாகவும் உற்பத்திப் பொருள்களாகவுமே பாவிக்கப்பட்டன.

புதிய உற்பத்தி முறைக்கு அதன் முதலாளித்துவத் தன்மையை அளித்திடும் இந்த முரண்பாடு, இன்றைய சமூகப் பகைமைகள் அனைத்தின் கருவைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. புதிய உற்பத்தி முறையானது, அனைத்து முக்கிய உற்பத்தித் துறைகளிலும், அனைத்துத் தொழில் உற்பத்தி நாடுகளிலும், எவ்வளவு பெரிய அளவில் ஆதிக்கம் பெற்றதோ, அந்த அளவுக்குத் தனிநபர் உற்பத்தியை சுருங்கச் செய்து, அற்ப சொற்பமாய் ஆக்கியது. அந்த அளவுக்குத் தெளிவாக, சமூகமயமாகிவிட்ட உற்பத்திக்கும் முதலாளித்துவக் கையகப்படுத்தலுக்குமான ஒத்திசைவின்மையைப் புலப்படுத்திக் காட்டியது.

உற்பத்தியாளர்கள் தங்களுடைய சமூகரீதியான பரஸ்பர உறவுகளின் மீதே கட்டுப்பாடு இழந்துவிடுகின்றனர். ஒவ்வொரு மனிதரும், தான் வைத்திருக்க நேர்ந்த உற்பத்திச் சாதனங்களைக் கொண்டு தனக்காகவும், தன்னுடைய ஏனைய பிற தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வகைசெய்யும் பரிவர்த்தனைக்காகவும் உற்பத்தி செய்கிறார். தன்னுடைய குறிப்பிட்ட சரக்குவகை எந்த அளவு சந்தைக்கு வரும், அந்தவகைப் சரக்குக்கு எந்த அளவு தேவை இருக்கும் என்றெல்லாம் எவருக்கும் தெரியாது. தன்னுடைய தனிப்பட்ட பண்டம் உள்ளபடியான தேவையைச் சரிக்கட்டுமா, தன்னுடைய உற்பத்திச் செலவை ஈடுகட்ட இயலுமா, தன் பண்டத்தை விற்க முடியுமா என்பதேகூட எவருக்கும் தெரியாது. சமூகமயமாகிவிட்ட உற்பத்தியில் அராஜகம் ஆட்சி புரிகிறது.

இப்படி வளர்ச்சியடைந்த நவீன முதலாளித்துவ சமுதாயம், பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துவிடுகின்றன. தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையை அடைகிறது. பத்தாண்டுக்கு ஒருமுறை வணகநெருக்கடியை சந்தித்து வருகிறது. வளர்ச்சியுள்ள நவீன உற்பத்தி சக்திகள் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் சொத்துடைமை உறவுகளுக்கும் எதிராக நடத்தும் கலவரத்தின் வரலாறேயாகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் வணிக நெருக்கடிகள் ஒட்டுமொத்த முதலாளித்துவ சமுதாயத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன.

இருப்பதுதான். சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள், முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இனிமேலும் உதவப் போவதில்லை. மாறாக, அந்த உறவுகளை மீறி உற்பத்தி சக்திகள் வலிமை மிக்கவை ஆகிவிட்டன. முதலாளித்துவ உடைமை உறவுகள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தடைகளாகிவிட்டன. உற்பத்தி சக்திகள் இந்தத் தடைகளைக் தகர்த்தெறியத் தொடங்கியதுமே அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் விளைவிக்கின்றன; முதலாளித்துவச் சொத்துடைமை நிலவுதற்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன. தாம் உற்பத்தி செய்யும் செல்வத்தைத் தம்முள் இருத்தி வைக்க இடம் போதாத அளவுக்கு, முதலாளித்துவ சமுதாய உறவுகள் மிகவும் குறுகலாகிப் போயின.

முதலாளித்துவ வர்க்கம் இந்த நெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்கிறது? ஒருபுறம், உற்பத்தி சக்திகளில் பெரும்பகுதியை வலிந்து அழிப்பதன் மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளை வென்றெடுப்பதன் மூலமும், பழைய சந்தைகளை இன்னும் ஒட்டச் சுரண்டுவதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது. அதாவது மேலும் விரிவான, மேலும் நாசகரமான நெருக்கடிகளுக்கு வழி வகுப்பதன் மூலமும், நெருக்கடிகளை முன்தடுப்பதற்கான வழிமுறைகளைக் குறைப்பதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது.

ஒரு சுற்றை முடித்து, மீண்டும் புதிய வணிக நெருக்கடியை சந்திக்கிறது, ஒவ்வொரு முறையும் நெருக்கடிகள் தொழிலாளர்களுடைய கூலிகளை எப்போதும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின் முடிவுறாத மேம்பாடு, அவர்களுடைய பிழைப்பை மேலும் மேலும் நிலையற்றதாக்குகிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள், மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன.

நிலப்பிரப்புத்துவ உற்பத்திமுறை எவ்வாறு வளர்ச்சியுள்ள உற்பத்தின் சக்தியின் காரணமாக வீழ்ந்ததோ, அதே நிலை முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் நேரும் என்பதே உண்மை.

இந்த நெருக்கடிகளில், சமூகமயமான உற்பத்திக்கும், முதலாளித்துவக் கையகப்படுத்தலுக்கும் இடையேயான முரண்பாடு ஒரு மூர்க்கமான எழுச்சியில் முடிகிறது. பண்டங்களின் புழக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. புழக்கத்துக்குரிய சாதனமாகிய பணம், புழக்கத்துக்கு இடையூறாய் ஆகிவிடுகிறது. உற்பத்தி, பண்டங்களின் புழக்கம் தொடர்பான அனைத்து விதிகளும் தலைகீழாய் மாறிவிடுகின்றன. பொருளாதார மோதல் அதன் உச்சநிலையை எட்டிவிட்டது. உற்பத்தி முறை, பரிவர்த்தனை முறைக்கு எதிராகக் கலகம் புரிகிறது.

நவீன உற்பத்திச்சக்திகளைத் தொடர்ந்து நிர்வகிப்பதற்கு முதலாளித்துவம் ஆற்றலற்றதாகிவிட்டது என்பதை நெருக்கடிகள் கண்கூடாகக்குகின்றன என்றால், பொருளுற்பத்திக்கும் வினியோகத்துக்குமான மாபெரும் ஏற்பாடுகள் கூட்டுப் பங்குக் கம்பெனிகளாகவும் டிரஸ்டுகளாகவும் அரசு உடைமைகளாகவும் மாற்றப்பட்டிருப்பது முதுலாளித்துவ வர்க்கத்தினர் இந்தக் காரியத்துக்கு எவ்வளவு தேவையற்றவர்களாகி விட்டனர் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. முதலாளி செய்து வந்த எல்லாச் சமூக வேலைகளையும் இன்று சம்பளச் சிப்பந்திகள் செய்து விடுகின்றனர்.

நவீன உற்பத்தி சக்திகளுடைய சமூகத் தன்மையை நடைமுறையில் அங்கீகரித்தலும் ஆகவே பொருற்பத்தி, சுவீகரிப்பு, பரிவர்த்தனை முறைகளை உற்பத்திச் சாதனங்க்ளுடைய சமூகத் தன்மைக்கு இசைவாக்குதலும் தான் இம்மோதலுக்குத் தீர்வாக முடியும். சமுதாயம் அனைத்தாலும் ஆகிய கட்டுப்பாட்டை அன்றி வேறு எந்தக் கட்டுப்பாட்டுக்கும் ஒவ்வாதனவாய் விஞ்சி வளர்ந்துவிட்ட உற்பத்தி சக்திகளைப் பகிரங்கமாகவும் நேரடியாகவும் சமுதாயமே உடைமையாக்கிக் கொள்வதன் மூலமே இந்த இசைவு ஏற்பட முடியும்.

இன்று உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திப் பொருட்கள் இவற்றின் சமூகத் தன்மை உற்பத்தியாளர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது, பொருளுற்பத்தி, பரிவர்த்தனை அனைத்தையும் கால அலை வட்ட முறையில் குலைத்திடுகிறது, கண்மூடித்தனமாக, பலாத்காரமாக, நாசகரமாக இயங்கும் இயற்கை விதியைப் போல் செயல்படுகிறது. ஆனால் சமுதாயம் இந்த உற்பத்திச்சக்திகளைத் தானே எடுத்துக் கொண்டதும் உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திப் பொருட்கள் இவற்றின் சமூகத் தன்மையை உற்பத்தியாளர்கள் சரிவர உணர்ந்து பயன்படுத்திக் கொள்வார்கள். குழப்படியும் காலவாரியான சீர்குலைவும் உண்டாக்கும், மூலகாரணமாக இருப்பதற்குப் பதில் பொருளுற்பத்திக்கு மிகவும் சக்தி வாய்ந்த நெம்புகோலாகிவிடும்.


பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதே முதலாளித்துவ உற்பத்திமுறை சந்தித்த முரண்பாடுகளுக்குத் தீர்வாகும். முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூக மயமான உற்பத்திச் சாதனங்கள் இவ்விதம் அது பொதுச் சொத்தாக மாற்றுகின்றது. இந்தச் செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம் உற்பத்திச் சாதனங்களை அவை இதுகாறும் தாங்கியிருந்த மூலதன இயல்பிலிருந்து விடுவித்து அவற்றின் சமூக இயல்பு செயல்படுவதற்கு முழுச் சுதந்திரம் அளிக்கின்றது. முடிவில் வர்க்கம் அற்ற சமூகத்தை நிலைநாட்டுகிறது.


எழுத்து (ம) ஆசிரியர் :

அ.கா. ஈஸ்வரன்

முதலாளித்துவ சமூக உற்பத்தி முறை
முதலாளித்துவத்தில் உழைப்புச் சக்திகள்

நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியிலிருந்து தோன்றிய, புதிய உற்பத்தி முறையே முதலாளித்துவமாகும். நிலப்பிரபுத்துவத்தின் ஊடே தோன்றிய சிறுபண்ட உற்பத்தியாளர்கள், மற்றும் நிலப்பிரபுத்துவத்தால் தூக்கி எறியப்பட்ட, அதவாது நகரத்தை நோக்கி துரத்தப்பட்ட வேலையற்ற பட்டாளம் ஆகியவற்றில் முதலாளித்துவத்தின் தொடக்கம் அடங்கியிருக்கிறது. அதாவது முதலாளித்துவம் தோன்றுவதற்கு முக்கியமான இரண்டு நிபந்தனைகள் இருந்தன.

ஒன்று சிலரது கைகளில் செல்வம் குவிதல், மற்றொன்று தனக்கென பிழைப்புச் சாதனம் ஏதுமற்ற மக்கள் கூட்டம் , இதனை நிலப்பிரபுத்துவம் தனது அழிவின் போது உண்டாக்கியவையாகும். சிறு பண்ட உற்பத்தியாளர்களிடையே தோன்றிய கடுமையான போட்டாபோட்டி அவர்களில் சிலருக்கும் செல்வத்தையும், மற்றவருக்கு அழிவையும் தந்து அவர்களில் பலரை நகரத்தை நோக்கி ஏதுமற்றவராய் துரத்தியது. இவர்களுடன் நிலப்பிரபுத்துவத்தில் உழைத்துவந்த பலருக்கு சொந்த ஊர்களில் வேலை ஏதுமில்லாது, உயிர் வாழ்வதற்கு தேவையான சாதனங்கள் ஏதுமற்றவராய் நகர்புறங்களை நோக்கி துரத்தியது.

இவையே முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கு முதன்மையான காரணமாகும்

முதலாளி உற்பத்தி தொடங்குவதற்கு முன், தன்னிடமுள்ள பணத்தைக் கொண்டு தொழிற்சாலைக் கட்டிடங்களைக் கட்டுகிறார், அடுத்து தேவைப்படும் இயந்திரங்களை வாங்கி நிறுவுகிறார், உற்பத்திக்கான மூலப்பொருட்களையும், தொழிற்சாலைக்கு தேவைப்படும் எரிப்பொருட்களையும் சேகரித்துக்கொள்கிறார். இவ்வகையான பொருட்களை மட்டும் வைத்துக் கொண்டு உற்பத்தியை, முதலாளியால் நிகழ்த்திவிட முடியாது. உற்பத்திச் சாதனங்கள் ஏதுமற்றவராய், தனது உழைப்புச் சக்தியை மட்டுமே விற்கக்கூடிய நிலையிலேயுள்ள தொழிலாளியை, முதலாளி தன்னிடம் உள்ள உற்பத்திச் சாதனங்களுடன் இணைத்து சரக்கை உற்பத்தி செய்கிறார்.

இதுவரை சமூகம் கண்ட உற்பத்தி முறைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, மிகக் குறைவான வரலாற்று கட்டத்திலேயே முதலாளித்துவம் வலுவான உற்பத்திச் சக்திகளைப் படைத்தளித்துள்ளது.

முதலாளித்துவத்தில் உற்பத்தி உறவுகள்

இயற்கை பொருளாதாரத்தில் ஒருவர் தனக்கு தேவை என்று கருதுவதையே உற்பத்தி செய்கிறார். பிறருக்காக என ஒரு பொருளை செய்யும் போது, வேண்டுபவரின் விருப்பத்தை அறிந்த பின்பே உற்பத்தியில் ஈடுபடுகிறார். முதலாளித்துவ சரக்கு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள முதலாளியோ தான் விரும்பும் எந்த சரக்கையும் உற்பத்தி செய்ய முனையலாம். இதனால் இவருக்கு எதோ ஒருவித சுதந்திரம் இருப்பது போல் தோன்றும். ஆனால் அவர் சமூக உழைப்புப் பிரிவினையால் கட்டப்பட்டவராவார். தான் விரும்பும் பொருளை உற்பத்திசெய்ய அவருக்கு மூலபொருள், இயந்திரம் போன்ற பொருட்கள் தேவையாய் இருக்கிறது. இதனை அவர் உற்பத்தி செய்திடுவதில்லை. பிற உற்பத்தியாளர் உண்டாக்கிய பொருளை பெற்றே தனது உற்பத்தியைத் தொடங்குகிறார். அதாவது அவர் மற்ற தனிப்பட்ட உழைப்பாளரின் பொருட்களைச் சார்ந்தே இருக்க வேண்டியவராகிறார். ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பும், சமூக உழைப்பின் பகுதியாகவே இருக்கிறது.

எளிய பண்ட பரிவர்த்தனையில் உழைப்பதற்கு தேவைப்படும் சாதனங்களும், உழைப்பும் உற்பத்தியாளரைச் சார்ந்தே நடைபெற்றது. ஆனால் முதலாளித்துவத்தில் உற்பத்தி சாதனங்கள் முதலாளிக்குச் சொந்தமானவையாகவும், உழைப்பதற்கு என்று தனியே தொழிலாளர்களை, வைத்து உற்பத்தி நிகழ்த்தப்படுகிறது. எளிய பண்ட உற்பத்தியின் இறுதி நோக்கம் உற்பத்தியாளரின் சொந்த தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதாகும், முதலாளித்துவத்தில் ஆதாயத்தை அடைய வேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் உற்பத்தி நடத்தப்படுகிறது. எனவே இயற்கை பொருளாதாரத்தில் பரிவர்தனையாக செய்யபப்பட்ட பண்டத்திற்கு, சாதாரணமாக பொருள் என்ற வகையிலேயே நிகழ்த்தப்படுகிறது, முதலாளித்துவத்தில் அப்பொருளுக்கு சரக்கு என்று பெயர்பெறுகிறது.

சரக்கு உற்பத்தி என்பது சமூக வேலைப் பிரிவினையிலும், இதனோடு்கூட உற்பத்தி சாதனங்கள், தனிநபர்களிடம் தனியுடைமையாய் ஒன்றுகுவிவதன் மூலமும் தோன்றுகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களும், வாங்கப்பட்ட உழைப்புச் சக்தியும், முதலாளிக்குச் சொந்தமானவையாகும், அதனால் எதை உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு, எப்படி செய்யவேண்டும் என்பதை, முதலாளியே முடிவு செய்கிறார். இத்தகைய முதலாளியின் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளி வேலை செய்கிறார். தொழிலாளியால் உற்பத்தி செய்யப்பட்ட சரக்கை விற்று பணமாக்கி அதனை முதலாளி் சொந்தமாக்கிக் கொள்கிறார்.

முதலாளி, தொழிலாளிக்கு அவரது உழைப்புச் சக்தியின் மதிப்பிற்கு மட்டுமே சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதாவது சரக்கு என்ற முறையில் உழைப்புச் சக்திக்கு மட்டுமே இங்கு சம்பளம் தரப்படுகிறது. தொழிலாளி தமது அவசியத் தேவைகளை நிறைவு செய்யப்பட்டால் தான் அவரால் தொடர்ந்து உழைக்க முடியும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவு சாப்பட்டிற்கு செலவு செய்கிறார். அவரது ஆடைகள், காலணி போன்ற தேவையான பொருட்கள் தேய்மானம் அடைகிறது. வீட்டு வாடகைக்கு என குறிப்பிட்ட பணத்தை கொடுக்கிறார். முதலாளிக்கான புதிய உயிருள்ள சரக்கான வளர்ந்து வரும் குடும்பத்தையும் கவனிக்கிறார். இந்த செலவிற்கான பணத்தை மட்டுமே தொழிலாளிக்கு சம்பளமாக தரப்படுகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழிலாளி செலுத்தும் உழைப்பு இரு பகுதியாக செயல்படுகிறது. அதாவது தொழிலாளி வேலை நாளின் ஒரு பகுதியில் தமது உழைப்புச் சக்தியின் மதிப்புக்குச் சமமான மதிப்பை உற்பத்தி செய்கிறார். இதற்கு அவசிய உழைப்பு என்றழைக்கப்படுகிறது. உற்பத்தி செய்த மற்றொரு பகுதிக்கான மதிப்பை தொழிலாளிக்கு பணம் கொடுக்காமல், முதலாளி தனதாக்கிக் கொள்கிறார். இதற்கு உபரி உழைப்பு என்றழைக்கப்படுகிறது. இந்த உபரி உழைப்பே, உபரி மதிப்பை தோற்றுவிக்கிறது. அவசிய உழைப்பிற்கு மட்டுமே தொழிலாளி சம்பளம் வாங்குகிறார். உபரி உழைப்பிற்கு என்று எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தொழிற்சாலை முதலாளிக்குச் சொந்தமானவை, அங்கு உற்பத்திசெய்யப்பட் சரக்கு அனைத்தும் முதலாளிக்குச் சொந்தமானதாகிறது, ஆகவே இந்த உபரி மதிப்பு முதலாளிக்கு எவ்வித செலவுமில்லாமல் சென்றுவிடுகிறது.

அதிகமான ஆதாயத்தைத் தேடி அலையும் முதலாளிகள், உற்பத்தி செலவைக் குறைக்க இரு முறைகளைக் கையாளுகிறார்கள்.

முதலாவதாக, உழைக்கும் நேரத்தை நீட்டிப்பதின் மூலம் நடத்தப்படுவது. இது உபரி உழைப்பின் அளவை அதிகப்படுத்துவதால் கிடைக்கிறது. இதுபோன்ற நேரங்களில் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் பகைமையும், எதிர்ப்புகளும் அதிகமாகிறது. இதனை தவிர்ப்பதற்காக இரண்டாம் வழிமுறையை கடைபிடிப்பதிலியே முதலாளி அதிகம் கவனம் செலுத்துகிறார். அதாவது மேம்பாடு அடைந்துள்ள இயந்திரங்களை பயன்படுத்த விளைகிறார். புதிய தொழில்நுட்பத்தில் மேம்பாடு அடைந்த இயந்திரத்தை உற்பத்தியில் ஈடுபடுத்துகிறார்.

இயந்திரங்கள் அதிகம் புகுத்தப்பட்ட தொடக்க காலத்தில் தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, அதனை அடித்து, உடைத்து துடைத்தெறிய முனைந்தனர். தங்களது வேலையை இயந்திரம் பறித்துவிடுகிறது என்று நினைத்தனர். பிற்காலத்தில் இயந்திரங்கள் தமக்கு எதிரானதல்ல, இவைகளை பயன்படுத்திவரும் முதலாளித்துவ அமைப்பு முறையே பகைமையானது என்பதை கண்டுகொண்டனர்.

முதலாளித்துவத்தின் முரண்பாடும் வீழ்ச்சியும்

தொழிற்சாலையில் புதிய இயந்திரம் புகுத்தப்படும் போது தொழிலாளர்களின் பணிகள் எளியதாக்கப்பட வேண்டும், ஆனால் முதலாளித்துவ உடைமை அமைப்பு, இதற்கு இடம் கொடுக்காமல் உழைப்பின் கடுமையை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

உழைப்பின் உற்பத்தித் திறன், உயர்வதின் மூலம் இயந்திரங்கள் சமூகச் செல்வத்தை அதிகரிக்க செய்கிறது. ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் தனிச்சொத்துடைமை நிலவுவதால், கிடைத்திடும் பலன்கள் முழுமையையும் முதலாளிகள் தம்முடையதாக்கிக் கொள்கிறார்கள். இதனால் உருவான முரண்பாடு, முதலாளித்துவ அமைப்பு நெடுகிலும் தீர்க்கப்படாமல் தொடர்கிறது.

குறிப்பிட்ட பொருளுக்கு, சந்தையில் பொதுவாய் காணும் தேவையின் அடிப்படையில், அனைத்து முதலாளிகளும் சரக்கை உற்பத்தி செய்கின்றனர். தனது பொருளை சந்தையில் அதிகயாய் விற்கவேண்டும் என்கிற போட்டி முதலாளிகளுக்கிடையே நிலவுகிறது. இதன் விளையாய் அதிக ஆதாயத்தை அடைவதற்கும், சந்தையில் தமது பொருட்கள் மிகுந்த அளவு விற்பதற்கும், பொருளின் விலை, போட்டி உற்பத்தியாளர்களின் சரக்குகளின் விலையைவிட குறைவாக இருக்க வேண்டியது அவசியமாகிறது, தங்களது சரக்கின் உற்பத்திச் செலவை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதனால் முதலாளிகள் புதிதுபுதிதான தொழில்நுட்பத்தையும், புதுமையான இயந்திரத்தையும், தமது தொழிற்கூடத்தில் புகுத்துகின்றனர்.

சந்தையின் தேவையை நோக்கி பல்வேறு உற்பத்தியாளர்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்த திட்டம் ஏதுமில்லாமல் சரக்கை உற்பத்தி செய்திடுகிறார்கள். இதனால் உற்பத்தியில் அராஜகம் (Anarchy of Production) ஏற்படுகின்றது. குறிப்பிட்ட சரக்கின் தேவை சந்தையில் உருவாவதைக் காணும் போது, பல்வேறு முதலாளிகள் அப்பொருளையே உற்பத்தி செய்திட முனைகின்றனர். கால ஓட்டத்தில் அப்பொருளின் தேவைவிட அதிகமாக உற்பத்தியாகிவிடுகிறது, அதனால் உற்பத்தியான சரக்கு சந்தையில் விற்பனையாகமல் தேங்கிவிடுகின்றன. இது போன்ற நேரங்களில் விலையில் கடுமையாக இறக்கம் காண்கிறது. அதானல் உற்பத்தியாளர், அச்சரக்கின் உற்பத்தியை குறைத்துக்கொள்கிறார், அல்லது முழுவதுமாக நிறுதிவிட்டு, வேறொரு சரக்கை உற்பத்தி செய்ய முயல்கிறார்.

ஆதாயம் பெருகுவதையே நோக்கமாக கொண்ட முதலாளிகளுக்கிடையே உள்ள போட்டா போட்டியின் விளைவாக மிகுதியான சரக்குகள் உற்பத்தி செய்து விடுகின்றனர், அதற்கான சந்தையின் தேவையைப் பற்றி கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இவ்வாறு மிகுஉற்பத்தி (overproduction) என்னும் சிக்கலில் வீழ்கிறது முதலாளித்துவச் சமூகம்.

முதலாளித்துவ அமைப்புத் தோன்றுவதற்கு முன்பு பல நெருக்கடிகளை சமூகம் கண்டிருக்கின்றன. அது வறட்சி, சுனாமி, பெருவெள்ளம் போன்றவற்றால் ஏற்பட்டவை, அதாவது இவை இயற்கையின் சீற்றத்தால் உருவானவை. மிகு உற்பத்தி என்ற இந்த நெருக்கடியை முதலாளித்துவ அமைப்பில் மட்டும் தோன்றக் கூடியதாக காணப்படுகிறது.

மிகு உற்பத்தியால் வாணிபம் சுருங்குகின்றன, சந்தையில் பொருட்கள் விற்பனையாகாமல் குவிகின்றன, இதனைத் தொடர்ந்து தொழிற்சாலையில் உற்பத்தி குறைத்தல், உற்பத்தியை நிறுத்துதல், தொழிற்சாலை மூடுதல் போன்றவை ஏற்படுகிறது. தொழிலாளிகளின் வேலையிழப்பு தொடர்கிறது.

இந்த மிகை உற்பத்தி என்பது, ஒருவகையில் சார்பானதாகும். அதாவது உண்மையில் சமூகத்திற்குத் தேவையானது போக மீதமுள்ளதை, இந்த மிகைஉற்பத்தி குறிப்பிடவில்லை, இந்த முதலாளித்துவ உற்பத்தி முறை, தொழிலாளர் மற்றும் பல வேலையாளர்களை வேலையிழக்கச் செய்து, அவர்களிடம் வாங்கும் சக்தியிழக்க செய்துவிட்டது. முதலாளித்துவம், தனியுடைமை முறையில் செயல்படுவதால், உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும், பலன்களை கையகப்படுத்தும் தனிவுடைமை பெற்ற முதலாளித்துவ வடிவத்திற்கும் இடையே காணும் முரண்பாடாய் விளங்குகிறது.

முதலாளித்துவ உற்பத்தியில் ஏற்பட்ட அராஜக போக்காலும், மூலதனத்தின் உழைப்பைச் சுரண்டுவதின் விளைவுகளாலும், தொழிலாளிகளிடையே வாங்கும் திறனற்றுப் போயிற்று. முதலாளித்துவத்தில் உற்பத்தியின் நோக்கம், மக்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதல்ல, உழைப்பாளியின் உபரி உழைப்பை சுரண்டி மூலதனத்தை பெருக்குவதே ஆகும்.

முதலாளித்துவத்தின் சரக்கு உற்பத்தியானது, நுகர்வுடன் தொடர்புடையதாகும். நுகராமல் சந்தையில் சரக்கு குவிந்து கிடக்கும் காலகட்டத்தில் உழைப்பாளியும். மக்களும் நுகரமுடியாமல், வேலையிழந்து, பட்டினியில் கிடந்து அவதிபடுகின்றனர்.

முதலாளித்துவ அமைப்பில் மிகுஉற்பத்தி, நெருக்கடி, தேக்கம், ஏற்றம், செழுமை என்ற சுற்று மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. வீழ்ந்து போகாமல் தாக்குப்பிடித்த, தொழில் நிலையங்கள் புதிய ஏற்றம் பெற்று, புத்துயிர் உற்று வளர்கிறது. மீண்டும் முதலாளித்துவத்தில் திறனுடைய தேவையை கணக்கில் எடுக்காமல், மிகுஉற்பத்தி என்ற நிலையை நோக்கிச் செல்கிறது. மீண்டும் சந்தை சுருங்குதல், சரக்குகள் சந்தையில் குவிதல், உற்பத்தியில் வீழ்ச்சி, உற்பத்தி நிறுத்தம், தொழிற்கூடம் மூடுதல் என்ற பழைய நிலைமைகளை விட, கடுமையான நிலைமைகள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது.

இந்த உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயுள்ள மோதல், சோஷலிசப் புரட்சிக்கான அடித்தளத்தை, இந்த பொருளாதார சூழல் அமைத்துத் தருகிறது. உற்பத்திச் சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும், இடையே ஏற்படும் முரண்பாடு தான், புதிய சமூக உற்பத்தி முறைக்கான மாற்றத்திற்கு இட்டுச்செல்கிறது. இதைத் தொடர்ந்து சோஷலிச உற்பத்திமுறை தோற்றம் பெறுகிறது.

எழுத்து (ம) ஆசிரியர்

அ.கா. ஈஸ்வரன்

சல்லிக்கட்டு மூடி மறைக்கிறது சாதி ஆதிக்கத்தை
#சல்லிக்கட்டு

தமிழக அரசியல் பார்வைகள் கொஞ்சம் வித்தியாசமானது. 2016 தேர்தலை
சந்திக்கின்ற வேளையில் ஆளும் அதிமுக அதிகார வர்க்கத்தின் ஊழல், நீர்வாகச்
சீர்கேடுகளை பற்றியும் மதுவிலக்கு போராட்டங்களை பற்றியும் , வெள்ளத்தால்
பாதிப்படைந்த மக்களின் உரிமைக்காக இயற்கையை பேணிகாப்பது பற்றியும்
எழுகின்ற அல்லது எழுப்பப்படுகின்ற பல்வேறு போராட்டங்களை
திசைதிருப்புகின்றன மற்றவைகளான சம்பவங்களென்று புலம்புவதுண்டு. கடந்த
நவம்பர் மாத இறுதியில் தொடங்கி டிசம்பர் முதல் வாரம் வரைக்கும் மக்களின்
இயல்பு வாழ்க்கையை புரட்டிபோட்டி மழைவெள்ள பாதிப்புகளை அரசுக்கெதிராக
கையில் எடுத்த வேளையில் அப்போதப்போது முளைத்த நடிகர் சிம்புவின் "பீப்"
பாடல் சர்ச்சைகள் அதனை தொடர்ந்து இளையராஜா பேட்டி சர்ச்சைகள், தேமுதிக
தலைவர் விஜயகாந்தின் ஊடக அவமதிப்பு "த்தூ" சர்ச்சைகள் என அனைத்தும்
செம்பரபாக்கம் ஏரி திறக்கப்பட்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பையும் அதற்கு
பொறுப்பான அதிமுக அரசையும் மூடிமறைக்க மேற்கொள்ளப்படுவதாக பல்வேறு
தரப்பினர்களும்,சமூக ஆர்வலர்களும், முற்போக்காளர்களும் வருத்தம்
தெரிவித்தார்கள். ஆனால் அதே வேளையில் மக்கள் அனைவராலும் பேசப்படாத எழுவர்
விடுதலை வழக்கு அதே மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது.
வெகுசனங்களுக்கு அவ்வழக்கு விசாரணை நடந்ததா? என்றே தெரியாது. சாந்தன்,
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை செய்வது குறித்தான தமிழக அரசின்
முயற்சிக்கு எதிராக உச்சநீதிமன்றம் டிசம்பர் 2 ம் தேதி அதிர்ச்சி
தீர்ப்பு வழங்கியது, தமிழக அரசிற்கு எழுவரை விடுதலை செய்யும் அதிகாரம்
இல்லையென்று தனது தீர்ப்பில் எழுதிவைத்து விட்டு கடமை ஆற்றியதாக
சொல்லிவிட்ட நிலையில் , வெள்ளத்தோடு எழுவர் விடுதலையும் கரைந்து காணாமல்
போனது. மக்களுக்கும் அறியாமை என்னும் வளையத்திற்குள்
மாட்டிக்கொண்டார்கள்.­ எதனை முதன்மை படுத்த வேண்டுமென்பதை முதலாளித்துவமே
தீர்மானிக்கிறது. இதனைப்போன்றே தற்போது எழுந்துள்ள சல்லிக்கட்டு
பிரச்சனையும் நிகழ்த்தப்படுகிறது. தமிழ் பண்பாடு? என்று சொல்லப்படும்
சல்லிக்கட்டுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு நீடித்திருக்கும் நிலையில்
பாஜக இவ்வாண்டு சல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க மீண்டும் உச்சநீதிமன்றம்
தடை விதிக்க ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளிக்கிறது. தமிழர் பண்பாடு
மீட்டெடுப்பு என்கிற முறையில் அதன் வீரியம் வெகு வேகமாக செல்கிற அதே
வேளையில் இன்னொரு தமிழர் பண்பாடு அதே தமிழகத்தில் கட்டி
காப்பாற்றப்பட்டுள்ளத­ு என்பது பெருமையல்லவா! அந்த பெருமையை விழா எடுத்து
கொண்டாட வெகுசன மக்கள் தவறிவிட்டார்கள். அந்த நிகழ்வையும் எழுவர் விடுதலை
தீர்ப்பு போன்றே மூடி மறைப்பது முறையல்ல என்றே பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட வர்ணாசிரம மனுதர்மத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியென்ற ஒருவேளை
எப்போதாவது மக்கள் அதற்கு விழா எடுக்கலாம். அன்று எழுப்பப்படும் "தமிழர்
பண்பாடு" எனும் வளையத்திற்கான கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டிய
கட்டாயமும் அன்றெழலாம். சல்லிக்கட்டு நடத்துவது குறித்தான தமிழக
எழுச்சிப் போராட்டங்கள் நடைமுறையில் இருக்கின்ற அதே தருணத்தில் நாகையில்
ஒரு தலித்பிணம் பொதுபதையில் பயணிக்க தகுந்த அனுமதியை உயர்நீதி மன்றம்
வழங்கிய போதும் அதை நிறைவேற்ற வக்கில்லாமல் வர்ணாசிரம மனுதர்மத்தை
கட்டிகாத்த சாதியாதிக்க மனோத்துவ சூழல் உண்மையில் ஒரு தமிழர் பண்பாடு?
எனில் அப்படிப்பட்ட தமிழர் பண்பாடு தேவையா? என்கிற கேள்வி எழுகிறது.
அச்சம்பவம் குறித்து விளக்கமாக தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்கள்
அளிக்கிறார்.

நாகப்பட்டிணம் மாவட்டம், மயிலாடுதுறை
அருகிலுள்ள வழுவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் திருநாள்கொண்டசேரி.
இக்கிராமத்தில் வசித்து வரும் தலித் மக்களுக்கு சுடுகாடு என்று எதுவும்
இல்லை. குடியிருப்பிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மதிமலை என்கிற ஆற்றங்கரை
வரப்பில் தான் சடலத்தை புதைக்க வேண்டும்.
ஆனால் இக்கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்துக்கள் தலித் சடலத்தை பொதுப்பாதையில்
எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து
வருகின்றனர். ஆகவே வயல்வெளியில் ஒற்றையடி பாதையில் தான் சடலத்தை எடுத்துச்
செல்லக்கூடிய பரிதாப நிலையில் தலித்துகள் உள்ளனர். தங்களுக்கென்று தனி
சுடுகாடு வேண்டுமென்று 40 வருடங்களாக
அரசிடம் புகார் கொடுத்தும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு
முன்பு அரசு சுடுகாட்டு பாதையை
ஒதுக்கியிருந்தும் அந்த பாதையை கூட தலித்துகள் பயன்படுத்த முடியாத நிலையில்
உள்ளனர். வயல்வெளியில் பிணத்தை தூக்கிச்
செல்கிறபோதெல்லாம் எப்படி எங்கள் நிலத்தின் வழியாக பிணத்தை தூக்கிச் செல்லலாம்? என்று
கூறி அப்பகுதி சாதி இந்துக்கள் தலித்துகளை தாக்கியிருக்கின்றனர்.
பெரியசாமி என்கிற முதியவரை செருப்பால்
அடித்துள்ளனர். அய்யாசாமி என்கிற 65 வயது முதியவரை ஆடைகளை கழட்டி கடுமையாக
தாக்கியிருக்கின்றனர். திருநாள்கொண்டசேரி கிராமத்தில்
வீரடேஸ்வரர் என்கிற பொதுக் கோவில் உள்ளது. இக்கோவிலிலிருந்து தண்ணீர் எடுத்து
தலித்துகள் தங்கள் கோவில்களுக்கு
பயன்படுத்தி வந்தனர். தலித் தெருக்களில் மாரியம்மன், காளியம்மான், கருமாரியம்மன்
என்று மூன்று கோவில்கள் உள்ளன. கடந்த 20
ஆண்டு காலமாக கோவில்கள் சிதிலமடைந்ததனால் கடந்த 2012ம் ஆண்டு
தலித் இளைஞர்கள் வரி வசூல் செய்து
மாரியம்மன் கோவிலை கட்டியுள்ளனர். கடந்த 06.09.2012 அன்று இந்த கோவிலுக்கு
கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் பொதுக் கோவிலான வீரடேஸ்வரர்
கோவிலிருந்து தங்கள் கோவிலுக்கு தண்ணீர் எடுத்து வர தலித்துகள் முயற்சி செய்ததனால்
சாதி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தண்ணீர் எடுத்தால் நீங்கள் உயிரோடு இருக்க
முடியாது என்று தலித்துகள் மிரட்டப்பட்டுள்ளனர். வேறுவழியில்லாமல்
தங்களுடைய வழிபாட்டு உரிமைக்காக மயிலாடுதுறை தாசில்தார், கோட்டாட்சியர்,
நாகப்பட்டிணம் ஆட்சியர் ஆகியோருக்கு புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில்
29.10.2015 அன்று தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை
நடந்திருக்கிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது இந்து அறநிலையத்துறையை சேர்ந்த
அதிகாரிகள், தலித் தரப்பினர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பொதுக் கோவிலில்
தண்ணீர் எடுத்ததாக ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கின்றனர். தண்ணீர்
எடுத்ததற்கு எப்படி ஆதாரம் இருக்க முடியும். இதையெல்லாம் ஒரு பிரச்சனையாக
எப்படி இந்து அறநிலையத்துறை கேள்வி எழுப்புகிறது என்று தலித் தரப்பினர்
கேட்க, தாசில்தார் பிரச்சனை பெரிதாகி விடக்கூடாது என்பதனால் இரு தரப்பினரும்
சாமி கும்பிடலாம் ஆனால் சடங்குகள் செய்யக்கூடாது என்று முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில் குஞ்சம்மாள் என்கிற 85 வயது தலித் மூதாட்டி கடந்த 26.11.2015 அன்று
இறந்து போகிறார். கடுமையான மழைக்காலம். வயல்வெளி முழுவதும் தண்ணீர்
நிரம்பியிருந்தது. இந்த நிலையில் வயல்வெளியில் பிணத்தை எடுத்து செல்ல
முடியாது. பொதுப்பாதையில் பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதி கொடுக்க வேண்டும்
என்று மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், பெரம்பூர் காவல்நிலைய
ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு குஞ்சம்மாளின் பேரன் கார்த்திக் புகார் அளித்துள்ளார்.
ஆனால் சாதி இந்துக்கள் பொதுப்பாதையில் பிணத்தை எடுத்துச் செல்லக்கூடாது என்று
மிரட்டல் விடுக்க அரசு தரப்பினர் குறிப்பாக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட
சாதி இந்துக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து இருந்துள்ளனர்.
பிணத்தை புதைக்க வேண்டுமென்பதால் அரசு தரப்பினரிடம், அப்பகுதி தலித்துகள் இது
மழைக்காலம் இந்த நேரத்தில் மட்டுமாவது எங்களுக்கு அனுமதி வாங்கிக் கொடுங்கள்
என்று கெஞ்சி கேட்டுள்ளனர். சடலத்தை பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல அனுமதி
மறுப்பது என்பது வன்கொடுமை. அப்படி மறுப்பவர்களை கைது செய்து சிறையில்
அடைக்காமல் போலீசாரும் சாதி இந்துக்களிடம் குஞ்சம்மாள் சடலத்தை பொது பாதையில்
எடுத்து செல்ல அனுமதி கொடுங்கள் என்று
கெஞ்சியிருக்கின்றனர்.
சாதி இந்துக்கள் உறுதியாக இருக்கவே, போலீசார் தலித்துகளை மிரட்டியுள்ளனர்.
மரியாதையாக பிணத்தை அடக்கம் செய்யுங்கள் இல்லையென்றால் உங்கள் மீது வழக்கு பதிவு
செய்து உள்ளே தள்ளிவிடுவோம் என்று எச்சரித்துள்ளனர். நாங்கள் பிணமாக போனாலும்
போவோமே தவிர வயல்வெளி வழியாக பிணத்தை எடுத்துச் செல்ல முடியாது என்று
தலித்துகள் கூறியிருக்கின்றனர். குஞ்சம்மாளின் சடலம் அழுகிக்
கொண்டிருப்பதாக மருத்துவர்கள் கூற, போலீசார் நீங்கள் சடலத்தை எடுக்கவில்லை
என்றால் நாங்களே எடுப்போம் என்று தலித்துகளை மறுபடியும் அச்சுறுத்தியுள்
ளனர். பிணத்தை அரசு ஊழியரே அடக்கம் செய்வோம் என்கிற சம்மனை தலித்
குடியிருப்பில் போலீசார் ஒட்டியுள்ளனர். அதன்பிறகு வேறுவழியில்லாமல்
29.11.2015 அன்று நகராட்சி ஊழியர்கள்
சடலத்தை எடுத்துச் செல்ல போலீஸ் பாதுகாப்புடன் குஞ்சம்மாளின் சடலம் அடக்கம்
செய்யப்பட்டுள்ளது. அப்போது வட்டாட்சியரிடமும் கோட்டாட்சியரிடமும்
பெரம்பூர் காவல் ஆய்வாளரிடம் குஞ்சம்மாளின் பேரன் கார்த்திக், குஞ்சம்மாளின் கணவரும் என்
தாத்தாவுமான செல்லமுத்து 100 வயதினை கடந்துள்ளார். மிக விரைவில் அவர்
இறப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஒரு நல்ல முடிவு எடுங்கள் என்று
கூறியிருக்கிறார். அதற்கு அதிகாரிகள் செல்லமுத்து இறந்தபிறகு பார்த்துக்
கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் 03.01.2016 அன்று தலித்
முதியவர் செல்லமுத்து இறந்து போகிறார். உடனடியாக வட்டாட்சியர், கோட்டாட்சியர்,
மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு செல்லமுத்துவின் பேரன் கார்த்திக், எங்கள்
தாத்தாவின் சடலத்தை பொதுப்பாதையில்
எடுத்துச் செல்ல புகார் கொடுத்துள்ளார்.
அதிகாரிகள் தரப்பில் முறையான பதில் இல்லை. ஆகவே உடனடியாக இரவோடு இரவாக
சென்னை சென்று உயர்நீதிமன்றத்தில், என் தாத்தா செல்லமுத்துவின் சடலத்தை
பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல அனுமதி கொடுக்க வேண்டுமென்று வழக்கு தாக்கல்
செய்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றம் 04.01.2016 அன்று செல்லமுத்துவின் சடலத்தை பொதுப்பாதையில்
எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்றும் அதுகுறித்த அறிக்கையை 05.01.2016
அன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியருக்கும்,
காவல்துறை கண்காணிப்பாளருக்கும், ஆதிதிராவிட நல அலுவலருக்கும், காவல்
ஆய்வாளருக்கும், தாசில்தாருக்கும்
உத்தரவிட்டது.
இந்நிலையில் 06.01.2016 அன்று அரசு அதிகாரிகள் எவ்வித முடிவும் எடுக்காமல்
இருந்ததனால் அப்பகுதியைச் சேர்ந்த 40 தலித்துகள் செல்லமுத்துவின் சடலத்தோடு
சிதிலமடைந்த ஒரு வீட்டிற்குள் ஒன்றுகூடி கதவை பூட்டிக் கொண்டனர். பொதுப்பாதையில்
அனுமதிக்கும் வரை நாங்கள் எவரும் இந்த வீட்டைவிட்டு வெளியே வரமாட்டோம் என்று
உறுதியுடன் இருந்துள்ளனர். அந்த பகுதியில்
300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். செல்லமுத்துவின் சடலம்
குளிரூட்டப்பட்ட பெட்டியில் இருந்ததனால்
போலீசார் மின்சாரத்தை துண்டித்துள்ளனர். ஆயினும் தலித்துகள் உறுதியுடன் இருக்கவே
டிஎஸ்பி வெங்கடேசன் , தலித்துகளிடம்
பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கிறோம் வாருங்கள் என்று
கூறியுள்ளார்.
கடந்த 06.01.2016 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சடலத்தை பொதுப்பாதையில்
எடுத்து வருவதற்காக தலித் குடியிருப்பிலிருந்து வெளியே
வரும்போது, அங்கே 1000க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் ஆயுதங்களுடன்
கூடியிருக்கின்றனர். உடனடியாக திருவாரூர் எஸ்பி, தலித்துகளிடம்
பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூற, அதற்கு
தலித்துகள் நீங்கள் நீதிமன்றத்தை அவமதிப்பு
செய்கிறீர்கள் என்று கூறியுள்ளனர். போலீசாருக்கும் தலித்துகளுக்குமிடையே
வாக்குவாதம் ஏற்படுகிறபோது திருவாரூர் எஸ்பி தடியடி நடத்த உத்தரவிட்டுள்ளார்.
அங்கிருந்த மக்களை போலீசார் தடியால் அடித்து விரட்டியுள்ளனர். ஆபாசமாக
பேசியிருக்கின்றனர். பெண்களின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்த
ியுள்ளனர். கால் காசு கூட கிடையாது, நீதிமன்றம் போவதற்கு மட்டும் எப்படி
துணிச்சல் வந்தது? என்று கூறி அடித்துள்ளனர். போலீசார் தடியடியால் மக்கள்
சிதறி ஓட ஒவ்வொரு ஆளாக பிடித்துக் கொண்டு மூன்று நான்கு போலீசார் சுற்றி
நின்று தடியால் முகம், கை, கால் என்று உடலின் பல்வேறு பகுதிகளில்
தாக்கியுள்ளனர். செல்லமுத்துவின் மருமகள் மல்லிகா என்கிற பெண்ணை போலீசார் கீழே தள்ளி
அவரது நெஞ்சில் பூட்ஸ் காலால் எட்டி உதைத்துள்ளனர். இந்த தாக்குதலில் 37
ஆண்களுக்கும், 5 குழந்தைகளுக்கும், 11 பெண்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்த தலித்துகளை கைது செய்து அதன்பிறகு செல்லமுத்துவின் சடலத்தை
எடுத்துச் சென்று போலீசாரே அடக்கம்
செய்துள்ளனர்.
வெறும் 40 குடும்பங்கள் உள்ள தலித்துகளை தாக்குவதற்கு 300 போலீசார் 5 அடி கொண்ட
கம்புகளுடன் துப்பாக்கியுடனும் குடியிருப்பிற்குள் புகுந்து கொடூரமாக
தாக்கிய செயலை எமது எவிடன்ஸ் அமைப்பு கடுமையாக கண்டிக்கிறது. அறவழியில்
போராடிய மக்களை குறிப்பாக நீதிமன்றம் உத்தரவை கடைபிடிக்காமல் அப்பகுதி சாதி
இந்துக்களுக்கு பயந்து கொண்டு தலித்துகள் மீது இத்தகைய தாக்குதல் நடத்தியிருப்பது
அரசு எந்திரத்தின் கோழைத்தனமான செயல் என்பதை சிவில் சமூகத்திற்கு கூற
விரும்புகிறோம்.
தலித் பெண்களை அருவருக்கத்தக்க வகையில் பேசியது மட்டுமல்லாமல் இளவயது
பெண்களிடம் போலீசார் தகாத முறையில் நடந்துள்ளனர். உங்களுக்கு குடிக்கக்கூட
கஞ்சி கிடையாது. ஆனால் போராட மட்டும் தெம்பு இருக்கிறதா? என்று போலீசார்
இழிவுபடுத்தியுள்ளனர். போலீஸ் தடியடி நடத்தியவுடன் சாதி இந்துக்கள்
குடியிருப்பில் பட்டாசு கொளுத்தப்பட்டுள்ளன. வானவேடிக்கைகளும் நடத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற ஒரு அருவருப்பான செயலை நாகரிகமடைந்த மனிதர்கள் செய்வார்களா
என்று தெரியவில்லை.
தற்போது கூட அப்பகுதியில் 70க்கும் மேற்பட்ட போலீசார் வெவ்வேறு இடங்களில்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்கூடத்திற்கு சென்று திரும்புகிற
தலித் குழந்தைகளை வழிமறித்து அவர்களது புத்தக பையில் ஆயுதம் இருக்கிறதா என்று
உதறி பரிசோதனை செய்கின்றனர். இதைவிட ஒரு கேவலமான செயல் ஏதேனும் இருக்குமா
என்று தெரியவில்லை.
அப்பகுதி சேர்ந்த 40 தலித் குடும்பங்களும் சாதி இந்துக்களின் நிலங்களில் விவசாயக்
கூலியாக உள்ளனர். சிறிய அளவு மழை பெய்தாலே குடியிருப்பிற்குள் தண்ணீர்
புகுந்து விடும். திருநாள்கொண்டசேரி கிராமத்தின் கடைசி பகுதியான வயல்வெளி
ஓடை பகுதியில் தான் ஆண்டாண்டு காலமாக தலித்துகள் குடியிருந்து வருகின்றனர்.
வரைபடத்தில் கூட அந்த மக்களின் இடத்தை
கண்டுபிடிக்க முடியாத நிலை இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள்
ஆகப்போகிற நிலையில் பிணத்தை புதைப்பதற்கு வயல்வெளியில் 6 கி.மீ.
எடுத்துச் சென்று வருகிற நிலையில் நமது நாடு இருக்கிறது என்று சொன்னால் இதைவிட
பெரிய அவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. எவ்வித உரிமைகளும் இல்லாமல்
அனாதைகளாக கிடக்கிறோம் என்று அப்பகுதியைச் சேர்ந்த தலித்துகள்
கூறுகிறபோது, நம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கத் தோன்றுகிறது.

பரிந்துரைகள்

• பிணத்தை அடக்கம் செய்ய அனுமதி மறுத்த
அப்பகுதி சாதி இந்துக்கள் மீதும், நீதிமன்ற
உத்தரவினை கடைபிடிக்க மறுத்து சாதி
இந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்
கண்காணிப்பாளர், கோட்டாட்சியர், வட்டாட்சியர்,
சம்பந்தப்பட்ட போலீசார் மீதும் பட்டியல்
சாதியினர் பட்டியல் பழங்குடியினர்
வன்கொடுமை தடுப்பு திருத்த அவசரச் சட்டம்
2014ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட
வேண்டும்.

• தலித் பெண்களை ஆபாசமாக பேசி
இழிவுபடுத்திய சம்பந்தப்பட்ட போலீசார் மீது
பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்,
பட்டியல் சாதியினர் பட்டியல்
பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு
திருத்த அவசரச் சட்டம் 2014ன் கீழ் வழக்கு
பதிவு செய்யப்பட வேண்டும்.

• வேண்டுமென்றே கடமையை புறக்கணித்த
போலீசார் மீதும், மாவட்ட நிர்வாக துறையினர்
மீதும் பட்டியல் சாதியினர் பட்டியல்
பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு
திருத்த அவசரச் சட்டம் 2014 பிரிவு 4ன்
கீழ் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட
வேண்டும்.

• ஒவ்வொரு தலித் குடும்பத்தினருக்கும் தலா
ரூ.5 இலட்சம் நிவாரணம் என்று 40
குடும்பத்தினருக்கு ரூ.2 கோடி நிவாரணம்
வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.

• இப்பகுதியில் கடுமையான தீண்டாமை
நிலவுவதற்கு தலித்துகள் பொருளாதார
ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில்
உள்ளனர். ஆகவே ஒவ்வொரு தலித்
குடும்பத்தினருக்கும் தலா 5 ஏக்கர் வேளான்
நிலம் வழங்கப்பட வேண்டும்.

• தலித்துகளுக்கு குடியிருப்பு,
சுடுகாடு, குடிநீர், சாலை வசதி போன்ற
பல்வேறு வசதிகள் ஏற்படுத்த தனியான நிதி
ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
(A.கதிர்)
செயல் இயக்குனர்

தோழர் எவிடென்ஸ் கதிர் அவர்களின் பரிந்துரைகளை இந்த தமிழர் பண்பாடு?
கலாச்சாரம் எளிதாக புறக்கணித்துவிடும் என்பதை தெரிந்த ஒன்றேயாகும்.
தமிழ்ச்சமூக பண்பாடு மீட்பர்கள் கேட்கலாம் சல்லிக்கட்டுக்கும்
சாதியத்துக்கும் ஏதேனும் தொடர்புண்டா? அப்படி தொடர்பிருந்தாலும் அது
தமிழர் இத்தருணத்தில் ஒப்பிட்டுப் பேச வேண்டிய தேவை என்ன இருக்கின்றது .
என கேட்கலாம், கேட்படுதலில் கூட ஆதிக்கமிருப்பதாகவே தோன்றுகையில் வேறென்ன
செய்துவிட முடியும் கட்டமைத்திருக்கும் ஆதிக்கம் அப்படியான செயல்களில்
தம்மை ஈடுபடுத்தி வைத்திருக்கிறதே,

முதலில் விவசாயப் பெருமக்களின்
இயற்கைக்கும், இயற்கையோடு இணைந்த வீட்டுத்தோழனான விலங்குகளுக்கும் நன்றி
தெரிவிக்கின்ற வகையில் அனுசரிக்கப்பட்ட தைப் பொங்கல் திருவிழா எப்படி
இந்துத்துவ விழாவாகிப்போனது? தமிழ்சமூகத்தில் ஆதி இந்துமதமென்று எந்த
வரலாற்று பதிவுகளுமில்லை, இடையில் வந்த இந்துமதம் எப்படி பொங்கல்
திருவிழாவை பறித்துக்கொண்டது.

அதனை தொடர்ந்து தைப் பொங்கலன்று அரங்கேற்றப்படும் ஜல்லிக்கட்டு
(சல்லிக்கட்டு ஜல்லிகட்டாக மாறிய வடமொழி நுழைவை எதிர்க்க தமிழ்த்தேசியம்
முனைப்பு காட்டுவதாக இதுவரை அறியப்படவில்லை, ஆனாலும் அதே தமிழ்த்தேசயம்
ஜாதியை சாதியென்று மாற்றினால் சாதி உடனே அழிக்கப்பட்டுவிடுமென­்று
வேடிக்கை காட்டுகிறார்கள்) நிகழ்வில் ஒரு குறிப்பிட்ட சாதியினங்கள்
மட்டும் பங்கேற்கின்றன அதுவும் தமிழ்நாடென்பதை பிரித்து தென்மாவட்ட
தமிழகம் என்கிற பெருமையோடு,,,

அப்படியிருக்க சல்லிக்கட்டு தமிழர்
பண்பாடென்று விளிப்பதால் சல்லிக்கட்டில் சாதியப்பதிவு தேவையாயிருக்கிறது.
ஒருவேளை தமிழர் பண்பாடென்று சல்லிக்கட்டை விளிக்கும் முற்போக்காளர்களும்
இதனை ஏற்றுதான் ஆகவேண்டும். ஆதித்தமிழர் மக்களிடத்தில் சாதிய வேற்றுமைகள்
இருந்ததாக இல்லை என்கிறபோது வரலாற்றை கடந்து வருகையில் எவ்வாறு
சல்லிக்கட்டு ஒரு இனக்குழு மக்களுக்கு மட்டும் உரிமையாகிப்போனது. அப்படி
உரிமையாகிப் போனாலும் தமிழர் பண்பாடென்று வருகையில் பகிர்ந்து
அளிக்கப்பட்டு அனைத்து சாதியினருக்கும், அனைத்து மதத்தாருக்கும் ,
அனைத்து தமிழகத்துக்கும்(வட,த­ென் என்கிற பிரிவினை தவிர்த்து)
பொதுவானதாக்கி பெருவிழா எடுப்பின் முனைப்புக்கு மட்டும் தடையாக
இருக்குமானால் சல்லிக்கட்டில் சாதியாதிக்கமும் , மத ஆதிக்கமும் ஏகபோகமாய்
சர்வ சுதந்திரமாய் சுற்றித் திரியும் போது, ஏதுமற்ற வெகுளித்தனமான
சல்லிக்கட்டு காளைகளை விடவும் மனதயினம் கொடூரமானதாகவே கண்ணுக்குப்
புலனாகிறது. முரட்டுக்காளைகள் சாதியம் பார்த்து பழகுவதில்லை என்பதே
தற்போதைக்கு ஆறுதலான ஒன்றாக இருக்கிறது. மழைவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட
எழுவரின் விடுதலை போன்றே சாதியாதிக்கம் பொதுத்தெருவில் பிணம் போக அனுமதி
மறுக்கப்படுவதை எதிர்த்து போராடும் போராட்டக்களமும் சல்லிக்கட்டால்
மூழ்கடிக்கப்படுகிறது முடிவில்லா தனது ஆதிக்க பயணத்தை அதுவும் தொடர்ந்து
செயல்படுத்திக்கொண்டே தமிழர் பண்பாடென்று வேடமிட்டு வெற்று கோசங்களாகி
மனுவை வளர்த்து மனிதத்தை புதைத்து விடுகிறது என்பதே ஆதங்கமாக இருக்கிறது.

Thursday, January 14, 2016

நான் தாத்தா செல்லம்

கெஜிர் காரம்
கமர்கட்டு
தேன்மிட்டாய்
கடலைமிட்டாய்
எல்லாம் வாங்கி
அழுக்கேறிய வேட்டியில்
இறுக்கமாய்
கட்டி எடுத்துவருவார்
எனக்காக தாத்தா

பெயர்சொல்லி
அழைக்கமாட்டார்
பட்டுக்குட்டி எனும்
செல்லப்பெயரெனக்கு

எங்கோ தொலைவில்
வருவார்
இங்கிருந்தே
ஓடத் தொடங்குவேன்
அவ்வளவு பிடிக்கும்
தாத்தாவையும்
வாங்கி வரும்
தீனிகளையும்

தோளில்
எனை சுமந்து கொண்டு
களைப்பேதுமின்றி
திண்ணையில்
தான் வந்தமருவார்

தன்மொழி மறந்து
என்மொழியோடு
கொஞ்சி
அகமகிழ்ந்திடுவார்

இடுப்பில் என்னது
முடுக்காய் தெரிகிறதே
எனக்கா தாத்தா
எனக் கேட்பேன்
அது என்னவென்று
தெரிந்தும்
தெரியாததுபோல்

முன்னை விட
சற்று அதிகமாய்
எழுந்துவிடும்
கொஞ்சல்கள்
அப்போதும்
பாசத்திற்கொன்றும்
பங்கமில்லை
என்னிடத்தில்

கழுத்தோடு
கட்டியணைப்பேன்
கண்ணத்தில்
முத்தம் பதிக்க

சட்டென
விலகிடுவேன்
குத்துகிறது தாத்தா
தாடியும்
மீசையுமென்று

மெல்லியதாய் சிரிப்பார்
சற்று வாய் பிளந்து
பல் விழந்தபடியால்
கண்ணக்குழி அழகு
தாத்தாவுக்கு

வயசாகுதுல்ல
பட்டுக்குட்டி
என்றுரைத்தபடியே
என் பிஞ்சு கைவிரல்
நகத்தை
கடிக்கத்தொடங்குவார்

அடிக்கடி கிள்ளிவிடும்
பழக்கம்
எனக்குண்டென்று
தெரியாமலா
இருக்கும் தாத்தாவுக்கு

கொஞ்சம் நடிக்க
வேண்டியிருந்தது
மடியை
அவிழ்க்கவில்லை
இன்னமும்
தாத்தா

தாடி மீச குத்தினாலும்
பரவாயில்லை
இந்தா தாத்தா முத்தம்
அப்பாடா
நடித்தாகிவிட்டது

முத்தம் வாங்கிய
பின்னர்தான்
எதையும் தருவார்
தாத்தா
அடியும் அவ்வப்போது
விழும்

பத்திரமாய்
பிரித்துக்காட்டுகிறார்
வாங்கி வந்ததை

அடைந்த
சந்தோஷத்தில்
அப்படியே
பிடுங்கினேன்
தின்பதற்கு அவைகளை

அதட்ட மாட்டாரென்று
எப்போதும் தெரியும்
ஆனால் விதைப்பார்
ஒரேயொரு
விதையை மட்டும்
கண்டிப்புடன்

பகிர்ந்துண்னடி
என் பட்டுக்குட்டி
கூப்பிடு கூட
பொறந்தவகள

சற்று எழும்
கோபம் அத்தருணத்தில்
பழகிப்போனதால்
பகிர்ந்து உண்ணுதல்
பிடித்துவிட்டது
தாத்தாவையும்தான்

இப்போதெல்லாம்
பந்தப்
பிரிவினையோ
போலியான பந்தமோ
எங்களை
நெருங்குவதே இல்லை
எல்லாம் தாத்தாவின்
பாசத்தால் தள்ளியே
நிற்கிறது

தவிப்புகள் மட்டும்
தொடர்ந்தபடியே
தாத்தா தற்போது
உயிரோடில்லை
உள்ளத்தில் எப்போதும்
அவருக்கோர்
இடமுண்டு

நான் வாழ்நாள்
முழுவதும்
என் தாத்தா
செல்லமாகவே
இருந்துவிடுகிறேன்,,,

Wednesday, January 13, 2016

மரத்திலோர் தூளி

ஆற்றோர
மரக்கிளையில்
ஆட மறந்து
அழுக்குப் புழுதியால்
அல்லோலப்பட்டு
பிணமாகிப்போன
மரத்து வேருக்கு
மூடும் வெள்ளை
போர்வையானது
என்னை தூக்கிச் சுமந்த
அந்த
வண்ணத் தூளி

பார்த்தவுடனே
மனம் பொங்கி எழ
அழுதுக்கொண்டே
அள்ளி அணைத்திடவே
அருகினில்
செல்கிறேன்

துயரத்திலும்
தூளிக்கு நான்
அடையாளமாய்

அந்நியன் அவனில்லை
ஆளாக்கி பார்த்த
முகம் அது
மறந்தும் போகவில்லை
எப்படி அழைப்பதவனை
என்றே சந்தேகத்துடன்
என் பக்கமே
பார்வை பதிக்கிறது
தூளி

நெருங்க
நெருங்க
தூளியில் வெளிபடுகிறது
தாலாட்டு வாசம்

காற்றோடு தூளியாடும்
அன்னை தாலாட்டில்
தாய்மை வீசும்

என் தாய்
உடுத்திய சேலையது
தந்துவிட்டேன்
மரத்திற்கே
திருப்பியதை

தூளி கட்ட
கிளை ஒதுக்கிய
தங்கத்திற்கு
தருவதற்கென்னிடம்
தூளிச் சேலை
மட்டுமே இருந்தது

ஐயோ!
என்தாய் வந்து
உன் இன்னொரு
தாய் எங்கேயென
கேட்டால்
எப்படிச் சொல்வேன்
இறந்துவிட்டாளென்று

தாங்குவாளா
அவளும் மரத்தோடு தூளி இறந்த
வலியை

அழுது வற்றிய
கண்ணில்
எனக்கு நானே
ஊற்றிக்கொள்கிறேன்
உப்புகள் தேங்கி
நிற்காத வெற்று
தேற்றல்களை

இறுதிச் சடங்கு
செய்யவேண்டும்
என்
மரத் தாய்க்கும்
மரத் தாய்மடி
தூளிக்கும்

எடுத்து வந்து
அடுக்குகிறேன் தகன மேடையில் அதன்
உடற்பாகங்களையே
எரியூட்டுவதற்கு

இப்போது மட்டும்
எனதருகில் கூச்சமின்றி
எப்படி வர முடிகிறது
உங்களால்
எண்ணெய் ஊற்றுவதற்கு
மட்டும்

ஏ!!!
கழுத்தறுத்து
கூறு போட்ட
மனிதனே கொஞ்சம்
செவிகொடுத்து
கேள்
இங்கே நான் மட்டும்
அழவில்லை
மொத்தமாய்
இயற்கையே அழுகிறது

சான்றுக்கு
காட்டுகிறேன் பாருங்கள்
வற்றிய ஆற்றினில்
வெள்ளமென
பெருக்கெடுத்து
ஓடுகிறது பார்!
அழுது
வெளியேற்றப்பட்ட
இயற்கைகளின்
கண்ணீர்த் துளிகள்,,,

Tuesday, January 12, 2016

தோழர் ஜீவா அவர்களின் கம்யூனிச தொடக்கமும், காந்திய எதிர்ப்பும்,

கம்யூனிஸ்ட் மாபெரும் தமிழர் தலைவர் ஜீவா அவர்கள் இளமை காலத்தில்
காந்திய நிர்மாணத் திட்டங்களின் மேல் மிகுந்த பற்று கொண்டமையால் காந்திய இயக்கச் செயல்பாடுகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி, காந்திய வழி பரப்புரை,மற்றும் ஆசிரமங்களை உறுவாக்குதலென இருந்தார்.
1922 ல் எட்டாவது படிக்கின்ற போதே ஜீவா காந்தியின் ஒரு மேடைப் பேச்சைக் கேட்டு, அந்த பேச்சின் தாக்கத்தால் காந்தியத்தை நேசித்தார். அதுவரையில் தீவிர காந்தியவாதியாக இருந்த ஜீவா
1931 ல் ஈரோட்டில் நவஜீவான் மாநாடு நடைபெற, அம்மாநாட்டில் இந்திய இளைஞர்களை தட்டியெழுப்பிய "லாகூர் வழக்கில்" பகத்சிங்கோடு குற்றம் சாட்டப்பட்டு சிறையிலும் 63 நாட்கள் கொடுங்கோலாட்சிக்கெதிராக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவரான ஜதீந்திரதாஸின் சகோதரர் கிரண்ராஜ் மாநாட்டில் தலைமை தாங்க ஜீவா அம்மாநாட்டில் உற்ச்சாகத்துடன் பங்குபெற்ற காரணத்தால் "மீரத் சதி வழக்கு" பற்றி வாசிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதுதான் ஜீவாவின் முதல் கம்யூனிஸ அறிமுகமாக இருந்திருக்கிறது. அதன்பிறகு 1932 இல் "சட்டமறுப்பு இயக்கம்" கொழுந்துவிட்டெரிய தொடங்கிற்று, காரைக்குடியில் ஜீவா தலைமையில் "சண்டமாருதமென" முழக்கமிட்டு போராட்டம் நடத்தினார் . ஜீவா தீவிரமாக இயங்குவதை எதிர்த்த வெள்ளை ஆட்சி 7.1.1932 ல் காரைக்குடி கூட்டத்தில் ஜீவா கலந்துகொண்டு பேசக்கூடாதெனும் "வாய்ப்பூட்டு சட்டம்" உத்தரவை பிறப்பித்தது. அதைமீறி கோட்டையூரில் மேடையேறி முழங்கினார், தடையுத்தரவு மீறியதன் காரணமாக ஜீவா கைது செய்யப்பட்டு சிறையலைடக்கப்பட்டார். "அந்த காலச் சூழலானது கம்யூனிஸ்ட் என்று தன்னை அரசு சந்தேகம் கொள்ளும்படி சொல்லிலோ, எழுத்திலோ, செயலிலோ, ஒருவன் காட்டிவிட்டால் மறுநொடியே அவன் கைது செய்யப்படும் என்கிற பயங்கர நிலை இருந்தது"

சிறையில் ஜீவாவுக்கு மாவீரன் பகத்சிங்கின் தோழர்களான பூதகேஸ்வரதத் , குந்தர்லால் , ஆகியோரோடும் வங்கப்புரட்சியாளர் ஜீவன்லால் , கோஷ் சட்டர்ஜி, போன்றோரின் மூலமாக சோஷியலிஸம், கம்யூனிஸம், போன்ற விடயங்கள் பற்றியும் "சோவியத் யூனியன் அறிமுகம்" பற்றியும் நிறைய கற்றுகொள்ள வாய்ப்பேற்பட்டு கம்யூனிஸ்ட்டாக தம்மை வளர்த்துக்கொண்டார்.
(ஜீவாவும் கம்யூனிஸத்தை சிறையில்தான் கற்றார்)
1932 ஜனவரியிர் தானொரு காங்ரஸ்காரனாக சிறைபுகுந்து, நவம்பரில் கம்யூனிஸ்ட்டாக வெளிவந்ததாக ஜீவாவே குறிப்பிடுகின்றார்.இந்நிலையில் காந்தியத்தை முழுமையாக புறக்கணிக்கிறார் ஜீவா, அதுவரையில் பின்பற்றி வந்த காந்தியத்தை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். காந்தியம் தன்னைத்தானே அறிவு வளர்ச்சிக்கு பயன்படாதென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.
1934 இல் "புரட்சி" ஏட்டில் காந்தியை பகிஷ்கரிக்க ஜீவா அறைகூவல் விடுக்கிறார். காந்தியை நிராகரிப்பதற்குரிய காரணங்களை ஜீவா "புரட்சி" ஏட்டிலேயே கீழ்வருமாறு குறிப்பிட்டு விமர்சிக்கிறார்.
1. காந்தி தன் அந்தராத்மாவின் குரலையே நம்பினார்,பகுத்தறிவை நம்பவில்லை

2. காந்தி வர்ணாசிரம தருமத்தை ஒப்புக்கொள்கிறார்,அதுவே இந்துராம் சாம்ராஜியத்தை உறுவாக்குமென்கிற மதச்சாயத்தோடு சமத்துவத்தை புறக்கணித்து மக்களிடம் இந்துமதத்தை புகுத்துகிறார்.

3. காந்தி ஒரு ஆன்மீகவாதி , அவர் ஒரு பழமைவாதி.

4. காந்தி முதலாளித்துவத்தை அழிக்க விரும்பவில்லை , தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்குமிடையே "சமரசம்" ஏற்படுத்துவதையே விரும்புகிறார்.

5. எந்திர தொழிலின் யுகத்தில் வாழும் காந்தி குடிசை கைத்தொழிலுக்கு முதன்மை அளிக்கிறார் தவறில்லை, ஆனால் தொழிலாளி அதிலும் சுரண்டப்படுகிறான் என்பதை உணர மறுக்கிறார் .

6. தீண்டாமை ஒழிப்பு , சுயதேவை பூர்த்தி ஆகிய காந்தியின் கருத்துகள் சாரமற்றவை.

7. சாதியத்தை உயர்த்தி பிடிக்கும் விதமான தாழ்த்தப்பட்டோரை "ஹரிஜன்" என்று கூறி முத்திரைகுத்தி சகோதரத்துவத்தை இழிவுபடுத்துகிறார்.

8. காந்தி தன் சுயராஜ் பிரச்சாரத்தை ஆங்கில வெள்ளை ஆட்சியின் ஏஜென்சியா மாற்றிக்கொள்ளவே பயன்படுத்துகிறார்.

9. கேந்திரத் தொழில்கள், போக்குவரத்து சாதனங்கள் ஆகியவைகளை முதலாளிகள் கைவசப்படுத்துவதற்காக வெள்ளை ஆட்சிக்கு ஆதரவாக நிற்பதை காந்தி ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.

10. குருட்டு நம்பிக்கை,மற்றும் மத நம்பிக்கைக்கு எதிராகவும் , அர்த்தமற்ற சடங்குகளுக்கு எதிராகவும் மக்களிடம் பெரும் சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்தாமல் வெறும் "ராமன்" எனும் கடவுளை நம்புகிறார். இதுவொரு பிற்போக்குத்தனமாகும்.

இவ்வாறாக அடுக்கடுக்காய் ஜீவா தன் கூர்மையான , அதே சமயம் மிகவும் விசாலமான சமூக கண்ணோட்டத்துடன் காந்தியையும் , காந்தியத்தையும் , காந்தியின் காங்ரஸையும் கடுமையாக விமரிசனம் வைத்தார். இக்காந்திய விமரிசனத்தை அப்படியே எடுத்துக் கொண்டு அதன் சாரம்சங்களை ஒப்பீட்டளவில் இணைத்துப் பார்த்தால் அம்பேத்கர் அவர்களின் காந்திய விமரிசனத்தோடு தொடர்புடையதாக இருக்கும். அம்பேத்கர் எந்தளவிற்கு காந்தியின் மீது விமரிசனம் முன்மொழிந்தாரோ அதே அளவிற்கு முன்பிருந்த தன் காந்திய பங்களிப்பு அனுபவத்தின் மூலம் ஜீவா முன்வைத்திருக்கிறார் என்பது தெளிவாக புலப்படுகிறது. ஜீவா தன் நிலையினை படிப்படியாக உயர்த்திக்கொண்டு பகுத்தறிவின் மூலமும் தமிழ் இலக்கிய அறிவின் மூலமாகவும் கம்யூனிஸத்தை வளர்த்தெடுக்க பாடுபட்டார். அதுவே அவரை பெருந்தலைவராக்கியது.

(ஆண்)டவனின் குறி!கள்

உலகம் இயங்குதல்
வேண்டுமெனில்
யோனிகள்
திறந்தே வைத்திருக்க
வேண்டுமாம்

கட்டளை பிறப்பித்தும்
கட்டுகளை இழுத்தும்
இறுக்கியும்
ஏகபோகமாய்
புணர்ந்தனுபவிக்கும்
ஆணென்ற
அரசப் பெருமகனார்கள்
அப்படித்தான்
கற்பிதம்
உரைக்கிறார்கள்
உலகிற்கு
கற்பெனும்
வலையத்திற்குள்
அரளிவிதையரைத்து
பூசியபடியே

பூலான் தேவையை
புணர்ந்தவர்களின்
விரைத்த குறியெனும்
உறுப்புகள்
கயர்லாஞ்சியை
சுற்றிவளைத்து
மணிப்பூரில் எல்லை
விரித்து
டெல்லியை
தலைமையாக்கி
சிவகாசி சிறுமியிடம்
மொத்தமாய்
இறக்குகிறார்கள்
ஆட்சியமைத்து
அத்தனையும்
அதிகாரத்தால்
அழுக்கடைந்த
விந்தணுக்களாய்

ஈழத்தில்
இசைப்பிரியாக்களின்
கிழிக்கப்பட்ட
யோனிகளையும்
அறுக்கப்பட்ட
முலைகளையும்
அவிழ்க்கப்பட்ட
ஆடைகளையும்
தூக்கி எறியப்பட்ட
கருவில்
குழந்தைகளையும்
புதைக்கப்பட்ட
பிணங்களையும்
ரசித்து புசித்து
விடுகின்றன
இந்த விரைத்த
ஆண்குறியெனும்
உறுப்புகள்

இன்னும் தூக்கி
இன்னும் தூக்கி
தீராத தன்
புணர்தல் பசியை
போவோர்
வருவோரிடத்தில்
எல்லாம்
பிரயோகப்படுத்தி
யோனியில் கசிந்து
தொடைகளில்
வழிந்தோடும்
குருதியெடுத்து
ஏடுகளிலும்
எழுதி வைக்கிறார்கள்
தன் பரம்பரை
பெருமையென

அதிலொரு
நகல் சிதைக்கப்பட்ட
உடம்பிலும்
ஒட்டப்பட்டது
இவள்
தீட்டுடையவளென்று

ஆத்திரம் கொள்ளாதீர்
ஆணை பழிக்காதீரென்று
ஆய்வுகளும்
அழுகின்றன
விநாடிக்கு ஐந்து
யோனிகள் ஆணால்
அழிக்கப்படுகிறதெனும்
அதிர்ச்சித்
தகவலைக்கேட்டு

புளித்துபோன
பாலென்று
புறந்தள்ளிவிட்டு

எழுச்சி பெறுகின்றதாம்
அடுத்த புணர்தலுக்காக
விரைத்த
ஆண்குறியெனும்
உறுப்புகள்

அடங்காத
காமவெறியானது
குழந்தையையும்
புணர்ந்து விட்டு
எங்கோ வீசுகிறது

வீசிய இடம்
சாக்டையிலா
குப்பையிலா
நீர்தேக்கத்திலா
நிலத்தின் அடியிலா
கருப்புப் புகையிலா
தேடும் வழக்குகள்
இன்னும்
தேடிக்கொண்டுதான்
இருக்கிறது

முகத்தினில்
(ஆண்)டவனின்
குறி!களை
முத்திரையாக
குத்திக்கொண்டு,,,

Monday, January 11, 2016

தோழர் ஜீவா வை குழந்தைகளிடத்தில் கற்பிக்க வேண்டும்

தமிழ்ச் சமூகத்தில் நமது வருங்கால சந்ததிகள் ஏதுமற்ற ஓர் வெற்றுடம்பாவே
வளர்த்தெடுக்கப்படுகி­றார்கள். சரியான ஊட்டச்சத்து இல்லை, சரியான
உடற்பயிற்சி இல்லை, புத்தக வாசிப்பு பழக்கம் அறவேயில்லை, நமது
குழந்தையைகளை வெறும் இயந்திரபொருளாகவே நாம் மாற்றி வைத்திருக்கிறோம்.
பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் விளையாடுவதை தடை செய்கிறார்கள்.
அதைவிட ஒருபடி மேலே சென்று தொல்லைகள் தருகிறார்கள் குழந்தைகள் எனும்
குற்றசாட்டை அவர்களின் மீதே சுமத்தி அத்தொல்லையிலிருத்து விடுபட
கார்ட்டூன் சேனல்களை பார்க்கவைத்து புத்தக வாசிப்பினை முற்றிலுமாக
மறக்கடிக்கச் செய்து விடுகிறார்கள். இது முறையான குழந்தை வளர்ப்பு
இல்லையென்றாலும் அதையே நடைமுறையில் பின்பற்றுகிறார்கள். இதன் மூலம்
உடற்கூறு நோய்களால் அவதிப்பட்டு குழந்தைகளின் அறிவுத்திறனும்,சீரான­
உடற்கோப்பும் சிதைந்து போகிறது. இதன் பொருட்டு நமக்கு தோழர் ஜீவாவை போல்
குழந்தைகளை வளர்த்தெடுக்கப்படவேண­்டியதன் அவசியம் குறித்து கேள்வி
எழுகிறது. ஏனென்றால் ஓர் குழந்தை எப்படி வளர்த்தெடுக்கப்பட வேண்டும்
என்கிற பார்வைக்கு ஆகச்சிறந்த உதாரணமாக ஜீவா இருக்கிறார் . எத்தனையோ
தலைவர்கள் இருக்கையின் ஏன் ஜீவாவை சுட்டிக்காட்ட வேண்டும் என கேட்கலாம்,
காரணம் ஜீவா என்கிற ஜீவானந்தம் வரலாற்றில் மறைக்கப்பட்ட தலைவர்களுள்
ஒருவர், அவரின் வரலாற்றை நமது குழந்தைகளுக்கு கற்பித்தல் அவசியமாக
இருக்கிறது. அதற்கும் காரணமுண்டு ஜீவா ஒரு பண்முகக் கலைஞர் , அவரை
வாசித்தால் மட்டுமே அது விளங்கும்.

தமிழகத்தின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவரான கம்யூனிஸ்ட் விடிவெள்ளியான
ஜீவா என்கிற ஜீவானந்தம் தனது குழந்தை பருவத்தில் புத்தகங்களை வாசிக்கும்
பழக்கத்தை கொண்டிருந்தார் . அறிவை வளர்ப்பதற்கு ஜீவா எவ்வளவு அக்கறை
காட்டினாரோ , அவ்வளவு அக்கறை உடலை செம்மைபடுத்துவதிலும்­ செலுத்தினார்.
சிலம்பம்,வாள்வீச்சு,­குஸ்தி,ஓட்டம்,தாண்டு­தல்,தாவுதல் முதலிய
விளையாட்டுகளில் இளைஞர்கள் பயிற்சிபெற "அனுமார்களரி" என்ற உடற்பயிற்சி
பள்ளியை பூதப்பாண்டில் அமைத்தார் . மேலும் விளையாட்டின் மீதுள்ள அதீத
ஆர்வம் காரணமாக "விவேகானந்தர் ஃபுட்பால் டீம்" ஒன்றை உறுவாக்கி ஜீவா
சிறப்பாக நடத்தினார். பள்ளியில் நாடகங்கள் நடத்துவது, இலக்கிய மன்ற
கூட்டங்களை நடத்துவது,யோகாசன பயிற்சியளிப்பது போன்றவற்றில் தீவிரமாக
தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்­.ஜீவா இளமையிலேயே சாதி வேற்றுமைகளை தாண்டி
அனைத்து சாதியினரிடம் நட்பாக இருப்பார். அது தீண்டாமை கோலோட்சிய காலம்
ஆலயப் பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட சாதியர்க்கு வழங்கப்பட வில்லை,கோவில்
திருவிழா தொடங்கியதும் ஆதிக்கச்சாதியனர் தெருக்களில் "தெருமறிச்சான்"
தட்டி கட்டி "விழா தொடங்கியது" என்று அறிவிப்பு வைத்து விடுவார்கள் .
அதன் பிறகு , விழா முடியும்வரை அந்த தெருக்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர்
நுழைய முடியாது, ஆனால் ஜீவா தன்னுடைய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த
மண்ணடி மாணிக்கம் என்பவரை "தெருமறிச்சான்" தாண்டி ஊருக்குள்ளும்
கோவிலுக்குள்ளும் அழைத்துச் சென்றார் . ஊராரின் கண்டணத்துக்குள்ளான
போதும் தன் நிலையிலிருந்த ஜீவா பின்வாங்கவில்லை . அந்த வகையில் அவர் இளம்
பருவத்திலேயே சமூக சிந்தனையை வளர்த்துக்கொண்டு நாஞ்சில் நாட்டு ஆலயப்
பிரவேசப் போராட்டத்தின் முன்னொடிகளில் ஒருவராக தம்மை அடையாளப்படுத்திக்
கொண்டார். தோழர் ஜீவாவை போல நம் வருங்கால இளைய தூண்களை வளர்த்தெடுக்க
வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.

போதும்,,,

சுத்தமாய் சுரண்டி
எடுத்துக் கொண்டு
தெருவீதியில் ஏங்கோ
தூக்கி எறிந்துவிட
எச்சங்களாய்
ஒட்டிக்கொண்ட
எலும்புக்கூடுகளிலும்
அரசியல் புரிவதை
நிறுத்துங்களேன்

போதும்,,,
வலி தாங்க
முடியவில்லை

உயிர்த் தோ(ழி)ழன்
என வந்து
ஏதோ மனக்கசப்பில்
பழகுதல் தடைபட
பின்னால்
நின்றுக்கொண்டே
பாவி இவ(ளெ)னென்று
எரிதழலில் நட்பை
பொசுக்குவதை
நிறுத்துங்களேன்

போதும்,,,
வலி தாங்க
முடியவில்லை

காதலின் இறுக்கம்
கழட்டி விடுதல்
எனும் புதுமொழியோடு
இரக்கமற்ற மனசாட்சி
வேண்டும் நமக்கது
இயல்பாகவே
என்கிற விஷமியம்
பரப்புவதை
நிறுத்துங்களேன்

போதும்,,,
வலி தாங்க
முடியவில்லை

வெளியில் தாய்ப்பாசம்
உள்ளே முதியோரில்ல
முடிவென
மனிதமிருகமாய்
இரட்டை வேடமிட்டு
வித்தை காட்டுவதை
நிறுத்துங்களேன்

போதும்,,,
வலி தாங்க
முடியவில்லை

அறுபதை தாண்டினாலே
மரணம் அவனுடையது
இழப்பென்று ஏதுமில்லை
எனும்
வெட்டிப் பேச்சுகளோடு
இழவு விழுந்த
அதே வீட்டில்
துக்கம் ஏதுமின்றி
சாக வேண்டிய
வயசுதான் பெருசுக்கு
எனப் பேசுவதை
நிறுத்துங்களேன்

போதும்,,,
வலி தாங்க
முடியவில்லை

சாதியென்று
மதமென்று
சுடுகாட்டைக்கூட
சூழ்ச்சமத்தின்
இருப்பிடமாக்கி
ஒரேயடியாய்
மனிதத்தை
மண்ணில் புதைத்து
மண்டை ஓடுகளை
கழுத்தணிகலானாக
மாட்டிக்கொண்டு
அகோரமாய் சிரிப்பதை
நிறுத்துங்களேன்

போதும்,,,
வலி தாங்க
முடியவில்லை,,,

Saturday, January 09, 2016

எனக்கு நானே எழுதும் கடிதம்

"நான்" என்பது
எதுவரையில் நீளுமோ
தெரியவில்லை
எனக்கு,,,

ஆனாலும் முடிவென்பது
இருப்பதாலே
அது தோன்ற
எழுதுகிறேன்
கடிதமொன்றை
எனக்கு நானே எழுதும்
கடிதமெனும்
தலைப்பிட்டு,,,

தலைப்பை கண்டு
நிச்சயம் சிரிப்பாய்
சிரித்துவிடு
ஆனாலும் ஒன்று
எப்படி அழைப்பது
உன்னை,,,

நண்பனென்றா
தோழரென்றா
பங்கு என்றா
மச்சி என்றா
மாமா என்றா
பாஸ் என்றா
ஜி என்றா,,,

எதில் நீயிருக்கிறாய்
பதில் சொல்லிவிட்டு
பிறகு சிரித்துவிடேன்,,,

கொஞ்சம் வலிக்கத்தான்
செய்யும்
என் கடிதம் உனக்கு
வலி பொறுத்துக்கொள்
நீ நீயாக அல்லாமல்
"நாமாக" உணர
வேண்டுமல்லவா
அதற்காக,,,

சமீபத்தில் நீயெழுதிய
பல கடிதங்களை
வாசித்தேன்,,,

பெருமழை
வெள்ளத்திற்கு
யார் பொறுப்பு
தமிழகம் ஆளும்
அம்மாவிற்கு
மனம் திறந்த கடிதம்,,,

"பீப்"பாடலுக்கு
நடிகர் சிம்புக்கு
மனம் திறந்த கடிதம்,,,

சேவை மறுத்த
நடிகர் சங்கத்திற்கு
மனம் திறந்த கடிதம்,,,

ஊடக அவமதிப்பு
"த்தூ"
விஜயகாந்திற்கு
மனம் திறந்த கடிதம்,,,

அரசியலுக்கு
வா! தலைவா
சகாயத்திற்கு
மனம் திறந்த கடிதம்,,,

இப்படியே நீளும்
உனது கடிதங்களை
வாசித்து
மெய்சிலிர்த்தேன்
"நான்" என்பதாலே
நரம்புகள் புடைத்து
எழுகிறது புரட்சியென
எனக்குள்ளே
ஆனந்தமாய்
அது மனதிற்கு மட்டுமே
ஆறுதலாக,,,

கடிதங்களை அடுக்கிய
எண்ணங்களும்
எழுதுகோலும்
காகிதமும்
பாவமாய் பார்க்கிறது
என்னை மட்டுமே,,,

வேறெதுவும்
தோன்றவில்லை
எழுதுகிறேன்
எனக்கு நானே கடிதத்தை
மூன்றே மூன்று
விமரிசனம்
அதனுள் புதைத்து,,,

ஈழமோ மீனவ
சிறைவைப்போ
நிதி ஒதுக்கீடோ
நீதி கேட்டோ
பேரிடர் அறிவிப்பு
கோரியோ
அரசெனும்
அதிகாரம் எழுதும்
கடிதம் மட்டும்
கசக்கிறதே எப்படி?
வைக்கிறாயே
விமரிசனமொன்றை
கணினி யுகத்தில்
கடிதமா?
என்றழகாய்,,,

அரசு அதிகாரியாய்
அதே அரசிடம்
மண்டிக்கிடக்கும்
அழுக்குகளை
துடைக்கிறார்
சகாயம்
அவரின் பணி
அதுதானே
ஒப்புக்கொள்கிறாயா,,,

அரசியலில்
அழுக்கு படியாத
கைசுத்தம்
கண்ட நல்லகண்ணு
ஏன் தெரியவில்லை
தெளிவுள்ள
கண்களுக்கு,,,

பார்வைகள்
மழுங்கியும்
வெளிச்சம் படாத
இருட்டில்
நெய் விளக்கு
தேடுகிறாய்
ஆமாம்தானே,,,

ஆளும் அதிகாரம்
அழிந்து போகும்
சமூகத்து
மானுடர்களை
சந்திக்கவில்லை
என்கிறாயே
நீயேன்
நான்கு சுவற்றுக்குள்
வெறும்
கடிதமெழுதுகிறாய்
சுற்றத்தாரின்
முகவரிகள் கூட
தெரியாமல்
கடிதத்தில் மட்டும் ஏதோ
முகவரியிட்டு,,,

இம்மூன்று
விமரிசனமும்
எழுதுகையில்
"நான்" என்பவன்
இறந்திருக்கலாம்,,,

ஆனாலும் எனக்கு
எழுதிவிடு
பதில் கடிதத்தை
எனக்கு நானே எழுதும்
கடிதமெனும்
அதே தலைப்பில்,,,

முகவரி மட்டும்
மாற்றி எழுது
இவன் முகவரி
அற்றவனென்று,,,

மறக்காமல்
வாசித்துவிடுவேன்
"நாம்" எனும்
அடையாளத்தில்
வாழத்
தொடங்கியிருப்பதால்,,,

Friday, January 08, 2016

சின்னதாய் சினுங்கும் காதல்

அனிச்சையாக
பார்த்தேன்
அவளை
என்னையே முறைத்து
பார்க்கிறாள்
நீண்ட நேரம்
ரசித்துவிட்டேனாம்
அவளை,,,

_______


திரும்ப திரும்ப
கழுத்து வலிக்கிறது
திசைகளில்
அவள் முகமென
திரும்பி திரும்பி
பார்க்கிறேன்
பிரமையால்,,,

_______

கானல் நீருக்கு
தூதுபோன
மரங்களை
அழைக்கிறேன்
என் காதலுக்கும்
தூதனுப்ப
அவள் முகம்
நிரம்பிய சாலையில்
என் பயணம்

_______

பூக்களை பறிக்காமல்
அப்படியே
ரசித்துவிடுகிறேன்
அவனிடம் சொன்ன
பறிப்பது பிடிக்காதெனும்
ஒரு பொய்யினால்,,,


_______

நிஜமாக இது
காதலா
நம்பமுடியவில்லை
நிழலாடும்
நிஜங்களில்
எல்லாம்
உனது பெயராகவே
தெரிகிறதே,,,

_______

மீனுக்கு புழு
கோர்க்கையில்
முள்ளாக மறைகிறாய்
தூண்டிலை
பிடித்திழுப்பது
நம் இருவரின்
கைகளும்தான்,,,

_______

மேகச் சிதறலில்
ஒவ்வொன்றும்
வெவ்வேறு
உருவமாய்
எங்கே நீயென
தேடுகையில்
மேகம் கைகாட்டுகிறது
என் இதயத்தை,,,

_______

சினுங்கிய
பூக்களிடத்தில்
காட்டினேன்
உன் புகைப்படத்தை
போதுமா
பார்த்தது என்றால்
பதிலேயில்லை
பூக்களிடத்தில்,,,

_______***_______

Thursday, January 07, 2016

ஆமாம்சாமி அணுகுண்டுகள்

கற்காலம் செதுக்கிய
கல்லறையில்
நிகழ்காலம் வீழ்ந்து
கிடக்க
எதிர்காலம்
காத்திருக்கிறது
மரணத்தின்
வருகைக்காக

கருவை அழிக்கவும்
அணுவை பிரயோகித்து
அவசரமாய் மேலெழும்
புகை மண்டல
யாகத்தீயை
வளர்த்தார்கள்
அணுவிஞ்ஞானி
எனும் பெயரோடு

குழந்தைகளும்
தாய்மார்களும்
தகப்பன்களும்
துடிதுடித்து போனார்கள்
தூது போனது
தவறென்று அறியாமல்

வீசப்பட்ட
அணுகுண்டுகளின்
முகத்தில் தெறிக்கிறது
ஏகபோகமாய்
சிரிப்புகள்
பக்கத்தில் மனிதனை
விழுங்கும் கண்கொத்தி
பாம்புகள்
அலறுகிறது அதன்
தவிப்பிலேயே
மனிதம்

எது அவசரப்படுத்தியது
அவர்களை
எது ஆதரிக்கச் செய்தது
அவர்களை
எது கற்பித்தது
அவர்களுக்கு
அணு என்றுமே ஆபத்தில்லையென்று

மண்தான் நம்மண்தான்
நமக்கானதாக
இல்லை எனும்
அவசர செய்திக்குள்
முடங்கிப் போகும்
மனிதர்களிடத்தில்
மிருகங்களும்
முறையிடுகின்றன
நாங்களென்ன
தவறிழைத்தோமென்று

முடிவை தேடிக்கொண்டு
தண்டனைக்கு
வரிசையாக
இலட்சோபலட்சம்
கும்மிடுகள்
இன்னமும்
போடுகிறார்கள்

அணுதான்
நாம் வாழும்
பூமியின் பிரதான
கண்டுபிடிப்புக்கு
ஆகச் சிறந்த
உதாரணமெனும்

ஆமாம்சாமி!
ஆமாம்சாமி!
ஆமாம்சாமியை,,,

தூக்கம் விற்ற இரவுகள்

தூக்கம் விற்ற இரவுகள்
முழுக்க
எழுதிக்கொண்டுதான்
இருக்கிறேன்
கவிதைகளை

எனது எந்தக்
கவிதைகளும் இரவில்
தூங்கிக் கழித்ததாய்
புலப்படவில்லை

புரண்டு புரண்டு
தேய்ந்து போன
தரைகளில்
பாயும் தலையணையும்
எழுதிய கவிதைகளை
வாசித்துக்
கொண்டிருக்கையில்

வாத்தியங்களை
முழங்கிக்கொண்டு
முன்றாம் பிறையினை
ரசித்து விடுகிறதென்
எழுதுகோல்
கர்வம் கொஞ்சம்
கூடுதலாக

கண்ணிமைகளை
மூடாத முகத்திற்கு
முன்னால்
எழுந்தாடுகிறது
எழுதுகோல்

பரிதாபமாக நான்
அதனிடத்தில்
கேட்கிறேன்

இப்படி குடிக்கிறாயே
என் இரவுகளை
ஆறுதலுக்கேனும்
ஒரு தாலாட்டு
பாடக்கூடாதா?

கவிதை சுமந்த
காகிதமும் காற்றில்
நடனமாட கூடவே
இசையையும்
மீட்டெடுக்க

எழுதுகோல் எனக்காக
தலாட்டு பாடியது
எனது கவிதைகளையே
எடுத்துக்கொண்டு

தூக்கம்
அப்போதுமில்லை
தூங்கிப்போனால்
தடைபடுமே
எனது தாலாட்டு
கவிதைகள்,,,

Wednesday, January 06, 2016

அவள் கட(த்தி)ந்து போகிறாள்இதயமானது இயல்பான
துடிப்பிலிருந்து
சற்றே விலகிவிட

கண் சிமிட்டல்கள்
கடன் வாங்கிக்
கொண்டிருந்தன
அதீத
எண்ணிக்கையிலான
உறுத்தல்களை

இடம் மாறி
பயணிக்கிறது
ரத்த நாளங்கள்
அதிவேகமாய்

நரம்புகள் மட்டும்
இழுத்துக்
கொள்ளவில்லை
இருக்கும்
பச்சைகள் அப்படியே

வியப்பின்
குறியீடுகளாய்
அனல் காற்றிலும்
உதடுகளின்
புரியாத மொழியினை
பற்கள் தட்டச்சு அடிக்க
அதன் வேகம்
குதிரைத்திறனை
பின்னுக்குத்தள்ளி

செவியில் ஏதோ
இசை நுழைய
நாசி துளைத்த
வாசத்தை
உணர்கையில் மட்டுமே
நான் உயிரோடு
இருப்பதை
உறுதிசெய்கிறேன்

மொத்தமாய்
எனை கவர்ந்திழுக்கும்
பொன்மேனி காந்தமவள்
கடந்து போகிறாள்
என்னை

எதுவும் நடக்கலாம்
அவள் என்னை
கடந்து போகையிலும்
அவள் கண் எனை
பார்க்கையிலும்
மெல்லிய
இதழ் சிரிப்பினை
எனக்காகவே
உதிக்கையிலும்
எதுவும் நடக்கலாம்

கடந்து கடந்து
எனை கடத்தியும்
போகிறாள்
காதலை கசிய
விட்டபடியே

அந்த தருணம்
ஒருவேளை என்
எதிராளிகளுக்கும்
உதவலாம்
எனை வீழ்த்துவதற்கு,,,

Tuesday, January 05, 2016

இனியவளே உனக்காக

என்னில் ஆசைகள்
பல உண்டு
இனியவளே
அதை உன்னில்
செலுத்திவிட எண்ணம்
இருந்ததில்லை

நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும்
என் அன்பை மட்டுமே
நீ யாசிக்க வேண்டும்
என் பெயரை மட்டுமே
நீ வாசிக்க வேண்டும்
என் காதலை மட்டுமே
நீ தொழ வேண்டும்
இன்னும்,,, இன்னும்,,,
நீள்கிறதென் ஆசைகள்
முடிவிலா ஒரு
பயணத்தை போல

சுயமாய் சுதந்திரமாய்
வானில் சிறகடித்துப்
பறக்க உனக்கு மட்டும்
ஆசை இருக்காதா
என்ன

எனது ஆசைகள்
முளைத்த இடத்தில் பல
சிலுவைகள் தோன்றி
உரைத்தன

அதுவொன்றும்
ஆசையில்லை
அறிவிழந்தவனே
பேராசை
அதுவும் வெறும்
பேராசை மட்டுமன்று
சுயநலமெனும்
மரணக் காற்று
எச்சரிக்கை
ஒருபோதும் சுவாசித்து
விடாதே

வேடிக்கையாகத்தான்
இருந்தது
மரணம் தரும்
சிலுவையே மரணம்பற்றி
எச்சரிக்கையில்

ஏன் கூடாது
சுயநலக் காதலை
சுட்டிக்காட்டுவதில்
சிலுவையாக இருந்தால்
என்ன
சீனப் பெருஞ்சுவராக
இருந்தால் என்ன

உண்மைதான்
மனக்குரங்கிடம்
காதலெனும்
மலரை கொடுக்கவே
கூடாது

ஒரே அடியாய்
ஆசையை துறக்க
நான் புத்தனுமில்லை
அதையே
பிடித்துக்கொண்டிருக்­கும்
கிறுக்கனுமில்ல

ஆனாலும்
விட்டொழித்தேன் எனது
ஆசைகளை
முழுமையாக
அர்த்தமற்றவை
அவைகளென
அறிந்து
கொண்டமையால்

என் காதல் உண்மை
என் சுவாசத்தில்
நீயிருப்பது உண்மை
என் இதயத்தில்
உன் துடிப்பையும்
உள்ளிழுத்து
வைத்திருக்கிறேன்
உண்மை,,, உண்மை,,,
அத்தனையும் உண்மை,,,

அதனாலே தூக்கி எறிந்து
விடுகிறேன் ஓர்
எரிதழலில்
என் ஆசைகளை

என்னவளே
எனக்கு வேண்டியது
உன்னிடத்தில்
அன்பும் அரவணைப்பும்
அத்தோடு இணைந்து
உறவாடும் இதயத்து
காதல் மட்டுமே,,,

Monday, January 04, 2016

மிருகமாகிய நான்

கடுகின் நுனியில்
வேர் திறக்கும்
ஒற்றைத் தண்டுகளை
ஒவ்வொன்றாக
உடைத்து விடுவேனோ
வேர்த்திருக்கும்
முகத்தில்
விளங்காத ஆத்திரங்கள்

சுதாரித்துக் கொண்டு
சுவற்றோடு
ஒட்டிநிற்கையில்
பல்லிகளும்
அலறுகின்றன

நமக்கான நரக
பாதகன் இவனென்று
பட்டப்பெயரும்
பக்கத்தில் என் பெயரும்

பைத்தியத் தன்மையா?
பிணம் தின்னும்
வெறியா?
பற்றி எரியும் கோபமா?

எனக்கு நானே
அலசிவிடுகிறேன் அவசியமற்றதாகிறது வாழ்க்கை

மிருகமாகிப்போனதில்
மனித பிறவியை
தொலைத்தேன்
வாழ்ந்தும் பயனில்லை
வாழ்க்கையும்
அர்த்தமின்றி

கொன்று விடுங்கள்
என்னை
கொஞ்சமிருக்கும்
மனிதமாவது
வாழட்டும்

இந்த மானுட
மிருக உடலை
கொடுங்கோலன்
என சுட்டிக்காட்ட
ஒரு
கல்லறையை நானே
செதுக்கி விடுகிறேன்

இருந்தேன் நான்
அப்படியே
ஒரு மத வெறியனாக
ஒரு சாதி வெறியனாக
ஒரு சமூக விரோதியாக!
மிருகமாகிய நான்!

Featured post

டாக்டர் அனிதா நினைவலைகள்

பெருங்கடல்களுக்கு நடுவே நசுங்கிப்போன பல குரல்களின் "நீட்"சிகளாக தொடர்ந்து ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ... அசையாத ம...