Tuesday, April 26, 2016

அலைகளுக்கு பயந்தால் மீனவர் மீன் பிடிக்க முடியாது - லெனின்

1918 ஆகஸ்ட் 30 பெத்ரோ கிராத் நகர் கூட்டத்தில் லெனின் பேசவேண்டும்.
தோழர்கள், வரவேண்டாம்; இங்கே நம் தோழரை எதிர்ப்புரட்சியாளர்கள் கொன்று
விட்டார்கள் என்ற எச்சரித்த பின்பும், சிரித்தபடியே 'அலைகளுக்கு பயந்தால்
மீனவர் மீன் பிடிக்க முடியாது எனவும், மிருகத்திற்கு பயந்தால் வேடன்
வேட்டையாட முடியாது எனவும் கூறிவிட்டு, புரட்சியாளர்கள் சமூக
மாற்றத்திற்காக போராடுபவர்கள்; உயிருக்கு பயந்தால் துணிச்சலாக செயல்பட
முடியாது என கூறிவிட்டு கூட்டத்திற்கு செல்ல லெனின் தயாரானார்.
கூட்டத்தில் பேசவேண்டிய, அமைச்சரவை கூட்டத்தில் பேசவேண்டியது பற்றி
சிந்தித்த படியே காரில் பயணித்தார். திட்டமிட்டபடி கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்தில் லெனின் உரையாற்றினார். கூட்டம் முடிந்து தொழிலாளர்களுடன்
திரும்பும்போது திடீரென்று துப்பாக்கி சத்தம், ஆம்; ஒரு குண்டு லெனின்
இடது கையில், இரண்டாவது குண்டு கழுத்தில், மூன்றாவது குண்டு முதுகில்;
லெனின் கீழே சாய்ந்தார். தொழிலாளர்கள் பதறினர். லெனின், வீட்டுக்கு
வண்டியை ஓட்டச் சொன்னார். மூன்று குண்டுகள் பாய்ந்த போதும் தங்கள்
இருப்பிடம் மூன்றாவது மாடியில் இருப்பதால் லெனினிடம் மூன்றாவது மாடிக்கு
தொழிலாளர்கள் தூக்கிச் சொல்வோம் என்று கூறியபோது மறுத்த லெனின், நான்
நன்றாகத்தானே இருக்கிறேன் என்று துணிச்சலாகக் கூறி தொழிலாளர்களின்
தோள்களை பிடித்துக் கொண்டே மூன்றாவது மாடிக்குச் சென்றார். தங்கை
கதறியபோது "நீ கதறாதே; சின்னக்காயம்தான் உன் அலறல் குருப்ஸ் கயாவை
(மனைவியை) கலவரப்படுத்தும்" என்று கூறினார். மூன்று குண்டுகள்
தாக்கியபோதும் பதறாமல் மக்கள் பணியில் தொடர்ச்சியாக முன்னேறினார்.
மீண்டுவந்தார். சோசலிச அரசுக்கு தலைமையேற்று நடத்தினார். விடாமுயற்சி,
வைராக்கியம், ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதி, தன்னடக்கம் போன்ற பல்வேறு
நல்ல பண்புகளைக் கொண்டவர் லெனின். ஜார் மன்னனையும், முதலாளிகளையும்,
நிலப் பிரபுக்களின் கூட்டணியையும், போலிப் புரட்சிவாதிகளையும் வென்றவர்
கம்யூனிஸ புரட்சியாளர் லெனின்.

நான் அனாதையாக்கப்பட்டுள்ளேன்

என் உயிர்வலி
மரணத்தால்
இருந்திருந்தால்
வேதனைகளை
வாடைக் காற்றோடு
உலவ விட்டிருப்பேன்
ஏன் ஏமாற்றப்பட்டேன்
நான்
நட்பெனும் ஆக்ஸிஜனில்
நயவஞ்சகமாய்
விஷமேற்றி
கொல்லத்துடிக்கும்
நண்பன் அவனென
தெரிந்த நாளொன்றில்
இறந்துவிட்ட
என்னை நோக்கி
வீசப்பட்ட ஆயுதங்களில்
உயிரற்ற
உடம்புச் சதைகளை
உண்டு வாழ்கிறது
அந்த ஆயுதமேந்திய
கைகள்
பகலிலும் இருள்சூழ்ந்து
பதற்றமாகி
நீலக்கடலும் கறுப்பென
காணும் எனது
கண்களுக்கு நட்பென்பது
நஞ்சு விஷமென
மூளைக்கு தகவலனுப்ப
என்னை நானே
சந்தையில்
தொலைத்து விட்டேன்
விழுந்து கிடக்கவில்லை
நான்
வீழ்த்தப்பட்டிருக்கிறேன்
ஒரு போலியான
நட்பெனும் சதியால்
சரி போகட்டும்!
சமாளிப்புகளே இங்கே சமாதான
பேச்சுவார்த்தைகளாக
இருக்கையில்
சகஜமாகிப்
போனதெனக்கு அந்த
துரோகத்தின்
வலைப்பின்னல்
வாழ்க்கையில்
நீந்தும் போது
வலையில் சிக்குவது
இயல்புதானே
உணர்ந்த பொழுதில்
வந்து சேர்ந்தது
மற்றுமொரு
நட்பெனும்
மீன்வலைகள்
உறங்கி கிடந்த
ஆழ்மனம்
உயிர் பெற்றெழுந்து
எனக்குள் சுருண்டு
விழுகிறது அடுத்தடுத்த
நட்பு
ஏமாற்றங்களால்

ஆமாம் நான்
அனாதையாக்கப்பட்டுள்ளேன்
வேண்டுமென்றே,
ஆனாலும் மிகபிடிக்கிறது
அதுவெனக்கு,,,

Friday, April 22, 2016

மெழுகுவர்த்தியும் நானும்

தீ சுடும்
தொடாதே! என
தூண்டிவிடும்
மனத் துரோகத்தின்
இடையில்

தொடு!
சுகமாய் இருப்பேன்
என் அனல்
உனக்காகவே தவம்
கிடக்கிறதென
அரவணைப்புக்கு
அழைப்பு கொடுத்து
தன்னில் ஆரத்தழுவ
இடம் கொடுத்து

இரவை கழுவிலேற்றி
இதழோரம்
சிரித்தழைக்கிறது
மெழுகுவர்த்தி
ஒன்று

என்னை நான்
மறந்து
நானே ஏற்றிவைத்த
ஒற்றை
மெழுகுவர்த்தியில்

என் ஆள்காட்டி
விரலை கொண்டு
விளையாடத்
தொடங்கினேன்

கவலைகள் மறந்து
காதல் மலர்ந்தது
எனக்குள்

இனி இரவுகள்
இப்படியே கடப்பதை
விரும்பி
ஏற்றுக்கொள்கிறேன்

என் விரல்களுக்கு
அப்பால் துரோகங்கள்
தூசியாகிவிடுகின்றன
நானிழுத்த திசைகளில்
ஒளிச்சிதறல்
ஒய்யாரமாய் நடனமாட

நன்றியோடு
விசுவாசத்தையும்
மெழுகுவர்த்திக்கு
மனதார தருகிறேன்

முதன் முதலாக
என்னையும்
ரசிகனாக்கியதற்கும்
என் ஆறுதலுக்காக
தன்னையே
இழந்தமைக்கும்
காலம் முழுக்க
ஏற்றி வைத்திருப்பேன்
என் இதயத்தினுள்
மெழுவர்த்தியின்
தீப ஒளி சிற்பத்தை,,,

Thursday, April 21, 2016

நான் அடையாளமற்று இருக்கலாம்

அவள் உடலசைவிலும்
புதுமொழி பேசும்
பார்வையிலும்
ஆயிரம் அர்த்தங்கள்
இருந்தும்
விடையேதும்
தேட முடியாமல்
விக்கித்து
நிற்கிறேன் நான்

தேன் சிந்தும்
நிலவிடம் நான்
மாணவனாய் அவளின்
அசைவு மொழிகளின்
புதிர்களை கற்க சேர்ந்து
விடுகிறேன்

யாருக்கும் தெரியாமல்
மனம் கவர்ந்தவர்களை
தன் மோகன
மௌனமொழியால்
விதைகளை
முளைக்க வைப்பதுதான்
பெண்களின் இயல்பாம்

முதல் பாடம்
நிலவெனக்கு
கற்றுக்கொடுக்க
படிப்படியாய் பாடம்
படித்தாலும்
பரிச்சையில் மட்டும்
தேறுவதில்லை நான்

இரவு பகலாக
எத்தனையோ யுகங்களை
கடந்து வந்தாலும்
தாயின்
கருவறையில் இருந்து
வெளிவரத் துடிக்கும்
பச்சிளம் சிசுபோல

அவள் பார்வையின்
புதிர்களை உடைத்து
வெளியேற வேண்டும்
நான்

வெளிச்சத்திற்கு
ஒருநாள் வரத்தான்
போகிறது எப்பொழுதும்
ரகசியங்களாய் இருக்கும்
என்னவளை போல
எத்தனையோ
பெண்மயில்களின்
குறியீட்டு குறிப்புகளின்
இனிய அசைவு
ஜாலங்கள் அத்தனையும்
கவிதைகளாக

அப்பொழுது
வாசிப்பதற்கு
ஒருவேளை
நான் அடையாளமற்று
போகலாம்

அதற்குள் சேமித்து
வைத்து விடுகிறேன்
என் இதயத்தினுள்
அவளின்
புதுமொழிகளை,,,

Friday, April 08, 2016

இரண்டே வர்க்கங்கள் மட்டுமே என்பது வறட்டுத் தத்துவமே - அம்பேத்கர்

பொதுப் பள்ளிகள், பொதுக் கிணறுகள், பொதுக் கழிப்பிடங்கள், பொது
மருந்தகங்கள் ஆகியவை சிவில் உரிமைகள் தொடர்புடையவை. பொதுமக்களுக்காக,
பொது மக்கள் நிதியின் மூலம் நிர்வகிக்கப்படும் எல்லாமே ஒவ்வொரு
குடிமகனுக்கும் உரியவை. ஆனால், இத்தகைய சிவில் உரிமைகள், லட்சக்கணக்கான
மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. இது, பார்ப்பனியத்தின் விளைவு அல்ல என்று
யாராவது சொல்ல முடியுமா? பார்ப்பனியத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
அவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அடக்குமுறை, இன்றும் உயிரோட்ட முள்ள ஒரு
மின்கம்பியாக ஓடிக்கொண்டிருக்கவில்லையா? பொருளாதார வாய்ப்புகளைக் கூட
பாதிக்கும் அளவுக்கு, அத்தனை சர்வ வல்லமை கொண்டதாக பார்ப்பனியம்
விளங்குகிறது.

ஒரு தாழ்த்தப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்பு வசதிகளை, பிற தொழிலாளியின்
வாய்ப்பு வசதிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பணிப் பாதுகாப்பு, பணி
முன்னேற்றம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்புகள்
என்ன? தீண்டத்தகாதவன் என்பதால், அவனுக்கு எத்தனையோ வேலைவாய்ப்புகள்
மூடப்பட்டு விடுகின்றன. இதற்கு பருத்தித் தொழில் மிகச் சிறந்த
எடுத்துக்காட்டு. இந்தியாவில் பிற பகுதிகளில் உள்ள நிலவரம் எனக்குத்
தெரியாது. ஆனால், பம்பாயிலும் சரி, அகமதாபாத்திலும் சரி, தாழ்த்தப்பட்ட
வகுப்பினர் நூற்புத் துறையில் மட்டுமே பணிபுரிய முடியும். நூற்புத்
துறையில் ஊதியம் மிக மிகக் குறைவு. நெசவுத் துறையில் அவர்களுக்கு
வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்குக் காரணம், அவர்கள் தீண்டத்தகாதவர்கள்
என்பதுதான். ஒரு சாதி இந்து, முஸ்லிம்களோடு பணிபுரிவதில் எந்தச்
சுணக்கமும் காட்டுவதில்லை. இருப்பினும் தீண்டத்தகாதோர் என்றால், அவன்
எதிர்ப்புத் தெரிவிக்கிறான்.

ரயில்வேயை எடுத்துக் கொள்ளுங்கள். ரயில்வேயில் தாழ்த்தப்பட்ட மக்களின்
நிலை என்ன? தாழ்த்தப்பட்டவன் ஒரு 'கேங்க் மேனா'கத்தான் பணிபுரிய வேண்டும்
என்று விதிக்கப்பட்டுள்ளது. பதவிக் காலம் முழுவதும் எந்தவித உயர்வும்
இல்லாமல் 'கேங்க் மேனா'கவே பணிபுரியும் நிலை உள்ளது. அவனுக்கு வேறு பதவி
உயர்வும் தரப்படு வதில்லை. போர்ட்டராகக்கூட அவன் வர முடியாது. போர்ட்டராக
வர வேண்டுமானால், ஸ்டேஷன் மாஸ்டரின் வீட்டு வேலைகளையும் அவன் செய்தாக
வேண்டும். ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு சாதி இந்துவாக இருப்பார். ஆகவே,
தாழ்த்தப்பட்ட தொழிலாளி போர்ட்டராக அவர் வீட்டுக்குள் நுழைவதை அவர்
விரும்பமாட்டார். எனவே, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போர்ட்டராக
நியமிக்கப்படுவதில்லை.

ரயில்வே எழுத்தர் பணிக்குத் தேர்வு நடத்துவதில்லை. மெட்ரிக் தேர்ச்சி
அடையாதவர்களே பெரும்பாலும் இந்த இடங்களுக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
இந்திய கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், சாதி இந்துக்கள் ஆகிய
சமூகத்தினர் மெட்ரிக் தேறாத பட்சத்திலும் நூற்றுக்கணக்கில் ரயில்வேயில்
எழுத்தர்களாக இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நூற்றுக்கணக்கில்
மெட்ரிக் தேறியவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எழுத்தர் பணி வாய்ப்பு
வேண்டுமென்றே மறுக்கப்படுகிறது. ரயில்வே பணிமனைகளிலும் இதே நிலைதான்.
தாழ்த்தப்பட்டோர் மெக்கானிக் துறையில் நுழையவே முடியாது. அவன் மேஸ்திரி
ஆகவும் முடியாது. பணிமனையில் போர்மென், சார்ஜ்மென் ஆகிய பணிகளில் அமர
அவனுக்குத் தகுதியில்லை. அவன் வெறும் கூலிதான். இறுதிவரை அவன் கூலியாகவே
இருந்துவிடுகிறான். ரயில்வேயில் தாழ்த்தப்பட்ட தொழிலாளியின் நிலை
இதுதான்…

எனக்கும் உங்களுக்கும் தீய நோக்கத்தைக் கற்பிப்பவர்களிடம் இரண்டு
கேள்விகளைக் கேட்கிறேன். இந்தக் கேள்விகள் நேரடியான கேள்விகள். மேலே
சொன்னவையெல்லாம் உண்மையான குறைபாடுகள்தானே? உண்மையான குறைபாடுகள்
என்றால், அவற்றை நீக்க முனைவதும் அதற்காகத் திரள்வதும் சரிதானே? இந்தக்
கேள்விகளுக்கு நேர்மையான எந்த மனிதனும், எதிர்மறையாக பதிலளிக்க முடியாது.
எனவே, நமது முயற்சிகள் நியாயமானவை. நம்மீது குற்றம் சாட்டும் தொழிலாளர்
தலைவர்கள், ஏதோ ஒரு வித மாயையில் இருக்கிறார்கள். அவர்கள் கார்ல்
மார்க்சைப் படித்தவர்கள்; உடைமை வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரண்டு
வர்க்கங்கள் மட்டுமே உள்ளன என்பவர்கள். எனவே இந்தியாவிலும் இரண்டே
வர்க்கங்கள்தான் உள்ளன; ஆகவே நமது கடமை முதலாளித்துவத்தை ஒழிப்பதே என்று
கருதுபவர்கள், இதே விஷயத்தில் இரண்டு தவறுகளைச் செய்கிறார்கள்.

மார்க்ஸ் சொன்னதை ஒரு கருத்து நிலையாகக் கொள்ளாமல், மெய்ம்மை என்று
நினைப்பது அவர்கள் செய்யும் முதல் தவறு. சமுதாயத்தில் இரண்டு வர்க்கங்களே
உள்ளன என்பது கருத்துநிலை. அதை வறட்டுத் தத்துவமாகத் தொழிலாளர் தலைவர்கள்
பிடித்துக் கொண்டு விட்டார்கள். இரு வர்க்கங்கள் என்பதை அடிப்படையாகக்
கொண்டு பிரச்சாரம் நடத்தினால், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லா
வகுப்பிலும் ஒரு பொருளாதார மனிதன், ஒரு பகுத்தறிவுள்ள மனிதன், ஒரு தர்க்க
நியாயத்திற்கு உட்பட்ட மனிதன் இருப்பதாக நம்புவது எத்தனை பொய்மையானதோ,
அத்தனை பொய்மையானது இவர்கள் சிந்தனையும் செயலும்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:177)

இந்திய தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடன் போராட வேண்டும் - அம்பேத்கர்

நண்பர்களே! தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை
நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை
நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான்
பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது.
இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை
சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள்
பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில்
நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. நமது மனிதமே
நசுங்குமளவுக்குப் பெரும் சுமைகளை சுமந்தோம் என்னும் குறைபாடு, நமக்கு
இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நமது போராட்டத்தால் எந்தப் பயனும்
விளையவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. அதே நோக்கில் தீண்டாமையை
ஒழிப்பதில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதும் உண்மையில்லை.

மனிதர்களுக்குத் தேவையான சில அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் நாம்
இன்னும் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். அரசியல் அதிகாரத்தைப்
போராட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறோம் என்பதும் உண்மை. அதிகாரம்
இருக்குமானால், விடுதலையும் இருக்கும் என்னும் கூற்றில் உண்மை
இருக்கிறது. அதிகாரம் ஒன்றின் மூலம் மட்டுமே விடுதலை பெற முடியும்.
தடைகளைக் கடந்து தளையிலிருந்து விடுபட முடியும். அரசியல் அதிகாரம்
அத்தகைய வீரியம் கொண்டது. மத, பொருளாதார அதிகாரத்தைப் போல் அத்தனை வலிமை
அரசியல் அதிகாரத்திற்கு இல்லையென்றாலும், அரசியல் அதிகாரமும் உண்மையில்
பலன் தரக் கூடியதாகும்.

புதிய அரசமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வென்றெடுத்த அரசியல்
அதிகாரம், சிலரால் பறிக்கப்படுவதும் உண்டு, வீணாகப் போவதும் உண்டு.
இதற்கு பøகவர்களின் சூழ்ச்சி, நம்முடன் உள்ள சில தான்தோன்றிகளின்,
சுயநலப் பேராசைக்காரர்களின் சீர்குலைப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணம்.
பின்னணியில் ஓர் அமைப்பு இல்லாத அதிகாரமும், பின்னணியில் ஓர்
மனசாட்சியில்லாத அதிகாரமும் அதிகாரமே அல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பினர்
அமைப்பு ரீதியாகத் திரளும் நாள், தங்கள் அதிகாரத்தை உணரும் நாள், அதை
அறிவார்ந்த முறையிலும் திறன் வாய்ந்த முறையிலும் பயன்படுத்தி, சமூக
விடுதலையை வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!

நம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக
இல்லை. சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப்
பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம்
என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே, தீண்டத்தகாதோர் என்பதைக் காட்டிலும்,
தொழிலாளர்கள் என்னும் அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம்
இன்று திரண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு புதிய
திருப்பம். ஆனால், சிலர் இந்தத் திருப்பத்திற்கு ஒரு தீய உள்ளர்த்தம்
கற்பிக்கிறார்கள். இதில் நான் பங்கேற்பதற்காக என் மீது எதிர்மறை
விமர்சனம் செய்தார்கள். தொழிலாளர் தலைவர்கள் அல்லாமல் வேறு இடத்தில்
இருந்து இந்த விமர்சனம் வந்திருந்தால், நான் அதை லட்சியம் செய்திருக்க
மாட்டேன். இத்தகைய மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் நாம் தொழிலாளர்களைப்
பிளவுபடுத்துகிறோம் என்று தொழிலாளர் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும்
போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம்.
தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட
வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால்,
இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம்
சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக்
கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம்,
உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று
சொல்லவில்லை. அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப்
பயன்படுத்தவில்லை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான்
பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா
வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை.
பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா
வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும்
பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது
மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை
மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற
வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம்
சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று
விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக்
கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம்
பார்க்கிறது.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175)

முதலாளித்துவ அமைப்புகளில் கம்யூனிச தொழிற்சங்கங்கள் ? - அம்பேத்கர்

அடுத்ததொரு பிரிவு தொழிற்சங்கங்களைக் கட்டுவதே – தம்மைச் செயலாளர்கள்,
தலைவர்கள் என்று முன்னிறுத்திக் கொள்வதற்காகவும்; சொந்தப் பதவிகளுக்காகத்
தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காகவும்தான். சொந்தப் பதவிகளுக்காகத்
தங்களுக்கென்று தனித்தனி சங்கங்கள் வைத்துக் கொண்டு, போட்டி அரசியல்
நடத்துபவர்கள் அவர்கள். இத்தகைய விந்தையான, வெட்கப்படத்தக்க நிகழ்வுகள்
இந்தியாவில் புகழ் பெற்றுள்ளன. தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும்
இடையே நடைபெறும் போராட்டத்தைவிட, கடுமையான போராட்டம் -போட்டிச்
சங்கங்களிடையே நடைபெறுவது விந்தையிலும் விந்தை!

இத்தனையும் எதற்காக? தமது தலைமைப் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக!
இதில் கம்யூனிஸ்டுகள் இன்னொரு வகை. அவர்கள் அர்த்தமுள்ளவர்கள்தான்.
ஆனால், தவறான வழிகாட்டுதலில் இயங்குபவர்கள். அவர்களைவிட தொழிலாளி
வர்க்கத்திற்குப் பேரழிவைக் கொண்டு வந்தவர்கள் வேறு எவரும் இல்லை. இன்று
தொழிலாளி வர்க்கத்தின் முதுகெலும்பு உடைக்கப்படுகிறது; முதலாளிகளின் கை
மேலோங்கியிருக்கிறது; பொது மக்களுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும்
நெருங்கிய நட்பும் இல்லை. இவற்றுக்கெல்லாம் காரணம், இந்தக் கம்யூனிஸ்ட்
தலைவர்கள்தான். தாங்கள் ஒரு காலத்தில் வென்றெடுத்த அதிகாரத்தை, இவர்கள்
தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இவர்களுடைய வேலையே தொழிலாளர்களிடையே அதிருப்தியை வளர்ப்பதுதான்.
அதிருப்திதான் புரட்சியைத் தூண்டும் என்றும், புரட்சியின் மூலம்
பாட்டாளிகளின் ஆட்சியை நிறுவ முடியும் என்றெல்லாம் இவர்கள்
நம்புகிறார்கள். இதற்காகவே இந்த அதிருப்தி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு,
பிளவு -சிதறல் இவற்றையே ஓர் அமைப்பு அலையாக தொடர்ந்து விளைவித்து
வருகிறார்கள். இவர்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் தொடர் வேலை
நிறுத்தங்களுக்கு என்ன அர்த்தம்? இது, சிதறுதலைத் திட்டமிட்டு
செயல்படுத்தும் ஒரு முயற்சிதானே? வெற்றிகரமான புரட்சிக்கு அதிருப்தி
மட்டுமே போதாது. அரசியல், சமூக உரிமைகளுக்கான நியாயம், தேவை,
முக்கியத்துவம் ஆகியவை பற்றிய உண்மையான நம்பிக்கை இருந்தால் மட்டுமே
வெற்றிகரமான புரட்சி சாத்தியமாகும்.

ஒரு புரட்சிகர மார்க்சிஸ்ட், வேலை நிறுத்தம் செய்வதையே ஒரு வேலை என்று
அலைய மாட்டான். புரட்சிகர சிண்டிகலிஸ்டுகளின் காலங்களில் அப்படித்தான்
நடந்தது. வேலை நிறுத்தத்தை மார்க்சிஸ்டுகள் ஒரு புரட்சிகர நடவடிக்கையாக
எப்போதுமே தீர்மானித்துக் கொண்டதில்லை. எல்லா வழிகளுமே அடைக்கப்பட்ட
பிறகுதான் இறுதிப் புகலிடமாக வேலை நிறுத்தம் கையாளப்பட வேண்டும் என்பதே
மார்க்சியம். இந்த உண்மைகளை கம்யூனிஸ்டுகள் காற்றில் பறக்க விட்டு
விட்டார்கள். தொழிலாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கத் தங்களுக்கு
கிடைத்த வேலை நிறுத்தங்களை, ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் திணித்தார்கள்.

இதனால் அதிருப்தி வளர்ந்ததோ இல்லையோ, அவர்களுக்கு ஆற்றலும் அதிகாரமும்
தந்த தொழிற்சங்க இயக்கமே உருத்தெரியாமல் சிதைந்து வருகிறது. இன்றைய தினம்
அவர்கள் தெருவுக்கு வந்து விட்டார்கள். முதலாளித்துவ அமைப்புகளில்
புகலிடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பொருளற்ற செயல்கள் அப்படித்தானே
முடிய வேண்டும்? இன்றைய கம்யூனிஸ்டு எப்படி இருக்கிறான்?
சுற்றுவட்டாரத்தில் மாபெரும் தீ விபத்தை உண்டாக்குவதற்கான வெடிகுண்டை
எறிந்த ஒருவன், தன் சொந்த வீட்டையும்கூட காப்பாற்ற இயலாத நிலையில்
இருக்கிறான்.

விளைவு, இன்று தொழிலாளிகள் குறை தீர்க்கும் சங்கங்களே இல்லை. பம்பாய்
நூற்பாலைத் தொழிலாளர் மத்தியில் நிலவும் அவலங்களைப் பற்றி நான் பேசப்
போவதில்லை. அவற்றைப் பற்றிப் பேசாமல் இருப்பதே நல்லது. ஜி.அய்.பி.
ரயில்வே தொழிலாளர் நிலையை எடுத்துக் கொள்வோம். அவர்களுடைய தொழிற்சங்கம்
1920 இல் தொடங்கப்பட்டது. அதன் பெயர் ஜி.அய்.பி. ரயில்வே ஸ்டாப் யூனியன்.
1922-24 கட்டத்தில் அது முடங்கிப் போனது. 1925 இல் அது மீண்டும்
புதுப்பிக்கப்பட்டது. 1927இல் ஒரு போட்டிச் சங்கம் உருவானது. அதன் பெயர்
ஜி.அய்.பி. மேன்ஸ் ரயில்வே யூனியன், 1931 இல் இரண்டும் இணைந்தன.

ரயில்வே ஒர்க்கர்ஸ் யூனியன் என்று பெயர் மாற்றம் ஏற்பட்டது. 1932 இல்
மீண்டும் பிளவு. புதிய சங்கத்திற்கு ரயில்வே லேபர் யூனியன் என்று பெயர்.
1935இல் பழைய ஜி.அய்.பி. ஸ்டாப் யூனியன் புத்துயிர் பெற்று செயல்படத்
தொடங்கியது. இன்று மோதல்கள். இத்தனைக்கும் எல்லாமே ரயில்வே
தொழிலாளர்களின் நலன் காப்பதற்காக நிறுவப்பட்டவைதாம். இந்த முரண்பாடு
-மோதல்களுக்கு காரணம், கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத
குழுக்களுக்கிடையிலான போட்டி. இப்பகைமை மத்திய அமைப்பிலும் பிளவைக்
கொண்டு வந்தது.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:182)

தொழிற்சங்கங்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? - அம்பேத்கர்

பார்ப்பனியம் உயிர்ப்புடன் இருக்கும் வரை, மக்கள் அதை விடாப்பிடியாகக்
கொண்டிருக்கும் வரை – ஒரு பிரிவினருக்கு உரிமைகளையும், இன்னொரு
பிரிவினருக்கு இடையூறுகளையும் அது விளைவிப்பதால் – பாதிப்புக்குள்ளாகக்
கூடியவர்கள் அமைப்பு ரீதியாகத் திரள்வது அவசியம். அவர்கள் அப்படித்
திரள்வதால் என்ன தீங்கு நேர்ந்துவிடப் போகிறது? இவ்வாறு பாதிக்கப்பட்ட
தொழிலாளர் அமைப்புகள் உருவாவது, முதலாளிகளுடைய முயற்சியின் காரணமாக
நேர்கிறது என்று வைத்துக் கொண்டால், அதைப் பற்றிப் புகார் சொல்வதை
என்னால் புரிந்து கொள்ள முடியும்… ஆனால், நாம் இப்படி அமைப்பு ரீதியாகத்
திரள்வதற்கு முதலாளிகள் பின்புலமாக அமைந்திருக்கிறார்கள் என்று யாராவது
சொல்ல முடியுமா? அப்படிச் சொல்ல எந்த விமர்சகராவது இருக்கிறாரா என்று
நான் சவால் விட்டுக் கேட்கிறேன்.

எனவே, இப்படி ஒரு மாநாட்டைக் கூட்டியதற்காக வெட்கப்படத் தேவையில்லை;
அதற்காக மன்னிப்புக் கோர வேண்டிய அவசியமுமில்லை. மாநாடு கூட்டப்படுவதை
நியாயப்படுத்துவதற்கு உரிய காரணங்களும், நோக்கங்களும் இருக்கின்றன.
ஒடுக்கப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த ஓரிருவர், இந்த மாநாட்டை ஏற்கவில்லை.
அவர்கள் போக்கில் புதுமை எதையும் நான் காணவில்லை. அவர்களில் சிலர்
மற்றவர்களின் கூலிப்படைகள். சிலர் தவறாக வழிகாட்டப்பட்டவர்கள். சங்கம்
என்கிற வார்த்தையே அவர்களுக்கு கவர்ச்சிகரமாகத் தெரிகிறது. செல்வாக்கு
மிக்க பிரச்சாரகர்கள் வாயிலிருந்து அந்த வார்த்தை வெளிவரும்போது அவர்கள்
மயங்கி விடுகிறார்கள். அதனால் ஒருவருக்கொருவர் உணர்வுகளிலும்,
அணுகுமுறையிலும் முரண்பட்டுக் கிடக்கிறார்கள்.

ஒருவன் உரிமை கேட்கிறான். அவனுடைய நலனைப் பாதுகாத்துக் கொள்வதுதான் அதன்
நோக்கம். இதுவே மற்றவர்களுடைய நலன்களுக்கு எதிராகத் தோன்றுகிறது
என்கிறபோது, அவர்களிடையே உண்மையான சங்கம் எப்படி சாத்தியமாகும்?
பலவீனமானோர், துன்புறுவோரைப் பொறுத்தவரை, இந்தச் சங்கம் ஒரு மோசடியே தவிர
வேறு ஒன்றுமில்லை. இந்த மோசடியை தோலுரித்துக் காட்டும் நேர்மையான மனிதன்,
மோசடிப் பேர்வழிகளால் தூற்றப்படுவது இயற்கைதான். அவனைப் பிரிவினைவாதி
என்று அவர்கள் ஏசுவதும் இயற்கைதான். அவன் செய்வது பிளவுபடுத்தும்
வேலைதான். எங்கே உண்மையான வேறுபாடு இருக்கிறதோ – எங்கே முரண்பாடு
இருக்கிறதோ, அதை அவன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறான். இந்த முரண்பாடும்
மோதலும் ஏன் தோன்றுகின்றன? தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் ஒடுக்கப்பட்ட
வகுப்பினர். அவர்கள் மீது மற்ற பிரிவினர் ஆதிக்க உரிமைகளைக்
கோருகின்றனர். அதனால் பிளவும் முரண்பாடுகளும் தோன்றுகின்றன. வேண்டுமென்றே
யாரும் வேறுபாடுகளை உருவாக்கவில்லை. நம்மிடையே உள்ள வேறுபாடுகளைப்
புரிந்து கொள்ளுங்கள். இந்த வேறுபாடுகள் மூலம் நமக்கு அநீதி இழைத்து
விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் நான் சொல்லுகிறேன்.

உங்கள் குறைபாடுகளைக் களைய வேண்டுமானால், அவற்றிற்குத் தீர்வு காண
வேண்டுமெனில், நீங்கள் அமைப்பு ரீதியாகத் திரண்டாக வேண்டும். அப்படித்
திரளும்போது அந்த அமைப்பு எந்த நோக்கத்தோடு பணிபுரிய வேண்டும் என்பது
அடுத்த கேள்வி. வணிக மேம்பாடு அதன் நோக்கங்களில் ஒன்றாக இருக்கும்.
சங்கம் ஒன்றில் சேருவதா அல்லது உங்களுக்கென்று தனியாக சங்கம் தொடங்குவதா
என்பது இன்னொரு கேள்வி. உங்கள் திசை வழியைத் தீர்மானிப்பதற்கு முன்னால்,
இந்தக் கேள்வியைப் பற்றி நீங்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும்.

இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் மிகவும் வருந்தத்தக்க நிலையில்
இருக்கிறது. அதன் தலையாய நோக்கம் என்னவென்று யாருக்குமே தெரியவில்லை.
உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் சரிந்துவிடாமல் பாதுகாப்பதே அதன்
தலையாய நோக்கம். அய்ரோப்பாவில் ஒரு சராசரி மனிதன் தன் பிறப்பு, பயிற்சி
ஆகியவற்றிற்கு ஏற்ப வழக்கமான அதே வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க வேண்டும்
என்பதில் குறியாக இருக்கிறான். அதைக் குறைக்க முற்படும் எந்த
முயற்சியையும் அவன் உறுதியாக எதிர்க்கிறான். இந்த உறுதி இந்தியத்
தொழிலாளர்களிடம் இல்லை. இவர்களுக்கு நாட்களை ஓட்டினால் போதும், வேலையில்
நீடித்தால் போதும். தரமுள்ள வாழ்வில் இவர்களுக்கு வேட்கையில்லை. இப்படித்
தரம் தாழ்ந்து போவதை எதிர்க்கும் உறுதி இல்லை என்றால், அந்த நாட்டின் ஏழை
எளிய மக்கள் மேலும் மேலும் கீழ்நிலைக்குதான் போவார்கள்.

என்னைப் பொறுத்தவரை, தொழிற்சங்க இயக்கம் என்பது வேறு எந்த நாட்டையும்விட
இந்தியாவுக்கு மிக மிகத் தேவை. நான் முன்பே சொன்னபடி, இன்றைய இந்தியத்
தொழிற்சங்க இயக்கம் தேங்கிப் போய் நாற்றம் வீசுகின்ற குட்டையாய்க்
கிடக்கிறது. இதற்கான காரணம், இதன் தலைவர்கள் கோழைகள், சுயநலக்காரர்கள்
என்பதும்; தவறாக வழிகாட்டப்பட்டவர்கள் என்பதுமாகும். இன்னும் சில
தலைவர்கள் வெறும் சாய்வு நாற்காலித் தத்துவ ஆசிரியர்களாக அல்லது
அரசியல்வாதிகளாகவே உள்ளனர். அவர்களுடைய கடமை, பத்திரிகைகளுக்கு அறிக்கை
தருவதோடு நின்று விடுகிறது. தொழிலாளர்களைத் திரட்டுவது, அவர்களுக்கு
கல்வி புகட்டுவது, அவர்கள் போராட உதவுவது போன்ற கடமைகள் அவர்களுக்கு
இல்லை. தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு,
அவர்களுக்காகப் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் தயார். ஆனால்,
தொழிலாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்துக் கொள்வதை அவர்கள்
தவிர்க்கிறார்கள்.
-

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:181)

வர்க்கத் திரட்சிக்கு தடையாக இருப்பது எது? – அம்பேத்கர்

பொது உண்மைகளை அலசும்போது, பொருளாதார வல்லுநர்கள் ஓர் எச்சரிக்கையை
மேற்கொள்ளுவர். நாம் ஒரு பொருளாதார மனிதனை அடிப்படை உண்மையாக வைத்துக்
கொண்டால், பிற புறச் சூழல்களும் சரிசமமாக அமைந்திருக்கின்றன என்னும்
கருத்து நிலையிலேயே – அப்படி ஒரு பொருளாதார மனிதனைக் கற்பனை செய்து
கொள்கிறோம் என்றுதான் – அவர்கள் எச்சரிக்கை வரையறையுடன் தமது
ஆய்வுகளையும், முடிவுகளையும் வெளியிடுவர். ஆனால், தொழிலாளர் தலைவர்கள்,
பொருளாதார வல்லுநர்கள் பயன்படுத்தும் பிற புறச்சூழல்களின் சாதக நிலையை
அறவே மறந்து விடுகின்றனர். அய்ரோப்பாவில்கூட, மார்க்ஸ் சொன்னது சரியாக
இருந்தது என்று சொல்வதற்கில்லை.

"ஜெர்மனியில் ஓர் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மனிதன் இருக்கிறான். அதே போல்
பிரான்சில் சுரண்டப்பட்டு, அழிக்கப்பட்ட ஒரு கைவினைஞன் இருக்கிறான். இரு
நாட்டு ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மனிதர்களும் – ஓர் இனம், ஒரு கொள்கை,
ஒரு கடந்த காலம், ஒரு நிகழ்காலம், ஓர் எதிர்காலம் என்பதற்குச்
சொந்தக்காரர்கள்தான்; அவர்கள் ஒன்று சேர வேண்டும்" என்று மார்க்ஸ்
காலத்தில் அறைகூவல் விடப்பட்டது. ஆனால், உண்மையில் ஜெர்மனியில் உள்ள ஏழை
– ஒடுக்கப்பட்ட மனிதனும், பிரான்சில் சுரண்டப்பட்டு வாழ்வே சிதைந்து போன
கைவினைஞனும் இணைந்து நிற்கிறார்களா? நூறு ஆண்டுகள் கடந்த பிறகும் அவர்கள்
ஒன்றுபடக் கற்றுக் கொள்ளவில்லை. கடந்த உலகப் போரில் கூட, அவர்கள்
எதிரெதிர் அணியில் நின்று மூர்க்கத்துடன் போரிட்டனர். இந்தியாவுக்கும்
அது பொருந்தும். இந்தியாவிலும் அத்தகைய ஒற்றுமை ஏற்படவேயில்லை.

பணக்கார வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற தெளிவான பிரிவினை –
இந்தியாவில் ஏற்படவே இல்லை. எல்லா தொழிலாளர்களும் ஒரே வர்க்கம் என்பது
ஒரு லட்சியம். அது அடையப்பட வேண்டிய லட்சியமே ஒழிய, அதுவே இன்றைய
உண்மையான சூழல் என்று முடிவு செய்து கொள்வது தவறு. இந்நிலையில் தொழிலாளர்
அணிகளை எப்படி திரட்ட முடியும்? தொழிலாளர்களிடையே எப்படி ஒற்றுமையைக்
கொண்டு வர முடியும்? ஒரு பிரிவுத் தொழிலாளர்கள், இன்னொரு பிரிவுத்
தொழிலாளர்களை நசுக்குவதைத் தடுப்பதன் மூலம்தான் – அவர்களிடையே ஒற்றுமையை
உருவாக்க இயலும். ஒடுக்கப்பட்ட பிரிவுகள் அமைப்பு ரீதியாகத் திரள்வதைத்
தடுப்பதன் மூலம் அது முடியாது. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு
எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் பிரிவினரைத் தடுப்பதன் மூலம் அத்தகைய
ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது.

இனம், மதம் ஆகிய பின்னணியில் பகைமை கொள்ளுவதற்கான அடிப்படைக் காரணங்களைக்
கண்டறிந்து களைவதுதான் ஒற்றுமையைக் கொண்டு வருவதற்கான ஒரே வழி. ஒரு
தொழிலாளி மற்ற தொழிலாளர்களுக்குத் தர விரும்பாத உரிமைகளை, அவன் மட்டும்
பெற வேண்டும் என்பது தவறான சிந்தனை என்பது, அவனுக்கு எடுத்துச் சொல்லப்பட
வேண்டும். தொழிலாளர் களிடையே ஒற்றுமையைக் கொண்டு வர சிறந்த வழி –
தங்களுக்கிடையே சமூக வேறுபாடுகளைக் கடைப்பிடிக்கும் போக்கு, தொழிலாளர்
மத்தியில் ஒற்றுமையைச் சிதைத்து விடும் என்பதை அவர்களுக்குப் புரிய
வைப்பதுதான். வேறு வார்த்தைகளில் சொன்னால், சமத்துவமின்மை என்னும்
குணாம்சத்தை அதாவது பார்ப்பனியத்தைத் தொழிலாளர் மத்தியிலிருந்து வேரோடு
களைந்தெறிய வேண்டும். இத்தகைய முயற்சியில் இறங்கிய தொழிலாளர் தலைவர்கள்
யார்? முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர் தலைவர்கள் ஆவேசமாகப்
பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், பார்ப்பனியத்திற்கு எதிராக
தொழிலாளர்களிடையே எவருமே பேசியதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில்
அவர்கள் சாதிக்கும் மவுனம் வெளிப்படையாகத் தெரிகிறது.

ஒரு வேளை தொழிலாளர் அமைப்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றுக்கும் –
பார்ப்பனியத்துக்கும் தொடர்பே இல்லையென்று அவர்கள் நினைக்கிறார்களா?
அல்லது தொழிலாளர்கள் சிதறிக் கிடப்பதற்கு பார்ப்பனியம் பெருமளவு காரணமாக
இருக்கிறது என்பது, இன்னும் அவர்களுக்குத் தெரியவே இல்லையா? ஒருவேளை இந்த
அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தால் தொழிலாளர் உணர்வுகளைப் புண்படுத்தி விடக்
கூடாது; அப்போதுதான் நாம் தலைமைப் பொறுப்பில் நீடிக்க முடியும் என்று
நம்புகிறார்களா? இப்படித் தொழிலாளர் வர்க்கம் சிதறுண்டு கிடப்பதற்கு
அடிப்படைக் காரணம் பார்ப்பனியமே என்பதை ஏற்றுக் கொண்டால், அந்தப்
பார்ப்பனியப் போக்கு தொழிலாளர்களிடையே நிலவுவதையும் விளக்கியே ஆக
வேண்டும். இந்தத் தொற்று நோயை அலட்சியம் செய்வதாலோ, அதைப் பற்றி மவுனம்
சாதிப்பதாலோ – அதை ஒழித்துவிட முடியாது. இந்தப் பார்ப்பனியப் போக்கைத்
தேடிக் கண்டறிந்து, தோண்டித் துருவி ஆராய்ந்து அடியோடு கிள்ளி எறிய
வேண்டும். அப்போதுதான் தொழிலாளர் ஒற்றுமை சாத்தியப்படும்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்: 179)

தேர்தல் அறிக்கைகள் வெறும் உறுதி மொழியாக மட்டுமே இருக்கக் கூடாது - அம்பேத்கர்


சில நாட்களுக்கு முன்பு பண்டித நேரு இங்கு வந்திருந்தார். அவர் பேசுவதைக்
கேட்க, ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் கூடியதாக பத்திரிகைகள் செய்தி
வெளியிட்டன. நான் நேற்று ஜலந்தர் சென்றிருந்தபோது, இரண்டு லட்சம் மக்கள்
கூடியிருப்பார்கள். ஆனால், முப்பதாயிரம் மக்கள் மட்டுமே கூடியதாகப்
பத்திரிகைகள் எழுதுகின்றன. காங்கிரஸ் மாநாட்டுக்கு குறைந்தளவே மக்கள்
திரண்டிருந்தாலும், மாநாட்டுக்கு ஏராளமானோர் கலந்து கொண்டதாக
பத்திரிகைகளில் செய்தி வெளியாகும். அய்ந்து பேர் கூடினால் அய்ம்பது பேர்
என்றும், அய்ம்பது பேர் கூடினால் அய்நூறு பேர் என்றும், அய்நூறு பேர்
கூடினால் அய்ந்தாயிரம் பேர் என்றும், அய்ந்தாயிரம் பேர் கூடினால் அய்ந்து
லட்சம் பேர் என்றும் செய்தி வெளியிடுவார்கள். பத்திகையாளர்களின் இத்தகைய
விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதில்லை. மக்கள் அதிகளவில் கூட வேண்டும்
என்று நான் எண்ணியதில்லை. நான் விரும்புவதெல்லாம் சாதி இந்துக்களின்
வன்கொடுமைகளுக்கு எதிராக, நம்முடைய மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்
என்றுதான் விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு பேர் கூடுகிறீர்கள் என்பது
முக்கியமல்ல; நான் சொல்வதை எத்தனை பேர் கேட்கின்றீர்கள் என்பதுதான்
முக்கியம்.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று அவை
உறுதிமொழி அளித்து வருகின்றன. "பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு'ம் ஒரு
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் மிகப் பெரியதொரு
அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால், இதை மக்கள் புரிந்து கொள்வது கடினம்
என்று தெரிந்தவுடன், அதை மாற்றி சிறிய அளவில் வெளியிட்டுள்ளனர்.
அவர்களுடைய தேர்தல் அறிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி, ஒருநாள்
காங்கிரசுக்கென்று தேர்தல் அறிக்கையே இல்லாமல் போய்விடும். நான்
அனைத்துக் கட்சிகளுக்கும் சவால்விட்டுச் சொல்கிறேன். நீங்கள் ஒரு குழுவை
அமைத்து, எந்தத் தேர்தல் அறிக்கை மிகச் சிறப்பாக இருக்கிறது என்று ஆய்வு
செய்யுங்கள். எங்கள் தேர்தல் அறிக்கையே மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும்
என்பதில் எனக்கு எந்த சந்தேகம் இல்லை. அனைத்துக் கட்சிகளும் தங்கள்
தேர்தல் அறிக்கையில் மக்களுக்குப் பலவற்றைச் செய்வதாக உறுதி அளித்துள்ளன.
உறுதிமொழி அளிப்பது எளிது. ஆனால், செய்வது கடினம். தேர்தல் அறிக்கைகள்
வெறும் உறுதிமொழிகளாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. அது பிரச்சினைகளைப்
பற்றிப் பேசுவதாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை
இத்தகைய தன்மையோடு இருக்கின்றதா?…

வரவிருக்கின்ற தேர்தலில், "பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு' மூலம் நாம்
வேட்பாளர்களை நிறுத்த இருக்கிறோம். பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு,
அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானதொரு அமைப்பாகும். ஒவ்வொரு
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்.
யாரும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. "சமார்'களும் "பாங்கி'களும்
சமமானவர்களே. நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்; நமக்கிடையே வேறுபாடுகள்
பார்க்கக்கூடாது. அனைத்து ஆண்களும் பெண்களும் எல்லாவற்றையும் ஒருபுறம்
வைத்துவிட்டு, தேர்தல் அன்று வாக்களிக்கச் செல்ல வேண்டும். ஏற்கனவே
நம்முடைய வாக்குகள் போதிய அளவுக்கு இல்லை; நாம் போதிய அளவில்
வாக்களிக்கவில்லை எனில், அது நமக்கு நல்லதல்ல. நம்மைப்
பிரதிநிதித்துவப்படுத்த யாரும் இல்லாமல் போய்விடுவர். தேர்தல் நாள்
பட்டியல் சாதியினருக்கு வாழ்வா, சாவா என்பதைத் தீர்மானிக்கும் நாளாகும்.

வரவிருக்கும் தேர்தலில், நமது கூட்டமைப்பின் சின்னம் யானை. நம்
மக்களுக்கு எந்தக் குழப்பம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் நான் இதைத்
தேர்ந்தெடுத்தேன்… பல்வேறு கட்சிகளும் கூட்டணிக்காக நம்மை அணுகியுள்ளன.
ஆனால், இதுவரை எதுவும் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.
நாம் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து
ஒரு முறைக்குப் பலமுறை சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால், கூட்டணி
அமைத்தாக வேண்டிய சூழல் நிலவுகிறது.

இறுதியாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால்,
ஆயிரக்கணக்கான மக்கள் டில்லி, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் மற்றும்
பல்வேறு இடங்களில் இருந்து என்னிடம் தங்களின் குறைகளை முறையிடுகிறார்கள்.
சிலர் தாங்கள் பண்ணையார்களால் தாக்கப்படுவதாகவும், இது குறித்து அரசிடம்
முறையிட்டால் அதிகாரத்தில் உள்ள சாதி இந்துக்கள், பாதிக்கப்பட்டவர்கள்
மீதே நடவடிக்கை எடுப்பதாகவும் சொல்கிறார்கள். இதைப்போன்ற எண்ணற்ற
குற்றப்பத்திகைகளைத் தனியொருவனாகத் தீர்க்க முடியாது. இதனால், மக்கள்
அனைவரும் ஏமாற்றத்துடனேயே திரும்புகின்றனர்.

இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் ஓர் அலுவலகத்தை
டில்லியில் நிறுவ இருக்கிறேன். உங்களின் குறைகளைத் தீர்க்கவும், ஆலோசனை
சொல்லவும் ஒருவரை அங்கு நியமிக்க இருக்கிறேன். இதற்கென புது டில்லியில்
ஏற்கனவே ஓர் இடத்தை வாங்கிவிட்டேன். இந்த இடம் கூட்டமைப்பின் தலைமை
அலுவலகமாகவும் செயல்படும். இவ்விடத்தில் கட்டடத்தை எழுப்ப போதிய பணவசதி
இல்லை. எனவே, இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்ற, நீங்கள் உங்களால் இயன்ற
பணத்தை இம்மய்யத்திற்கு அளித்து உதவுங்கள். இதன் மூலம் நம்முடைய நோக்கம்
நிறைவேறும்.

(28.10.1951 அன்று, லூதியானாவில் ஆற்றிய உரை)

Featured post

டாக்டர் அனிதா நினைவலைகள்

பெருங்கடல்களுக்கு நடுவே நசுங்கிப்போன பல குரல்களின் "நீட்"சிகளாக தொடர்ந்து ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ... அசையாத ம...