Thursday, June 16, 2016

"தேசியம்" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்

"தேசியத்தை" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து
வருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக
உத்தேசித்துள்ளார்கள்­? மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு
நிலம் கொடுக்கப் போகிறார்களா? வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்
போகிறார்கள்? இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா? அல்லது
இவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா? விளை
பொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்
திட்டமெதேனும் சிந்தித்திருக்கிறார்­களா? இதை கவனிக்காதவர்களுக்கு
அரசியலில் பொறுப்பு கொடுத்தாலென்ன? கொடுக்காட்டியென்ன? அவர்கள் கதைகளான
பாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்
"தேசியம்" இருந்து பயனென்ன? தேசியம் என்றால் என்ன? தேசத்தாரை நேசித்தில்
என்று பொருள். அரசியல் வேண்டுமென்னும் வகுப்பார் , மூன்று வேளையும்
உணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்
சௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு
மற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 பேரை அன்றாடம் சீவிக்கும் வேளையில்
இருக்கவிட்டு விடுவதற்கா தேசியம் வேண்டும்? வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
வந்தால் தேசியம் பாழாய்ப்போகுமென்று கூச்சலிடும் காங்கிரஸ்காரர்கள்,
இந்து சேனாக்கள், இவர்களை போல பாமர மக்களை போல உண்டு,உடுத்தி , இனிது வாழ
என்ன செய்யப் போவதாகச் சொல்கிறார்கள்? "அரசியல்" தங்களிடம் வந்தால்
போர்ச் செலவை குறைப்பார்களாம்,,நூல­் நூற்று கதராடைச் செய்யச்
சொல்வார்களாம் ,, வெளிநாடுகளுக்குப் போகும் செல்வத்தை தடுத்து
நிறுத்துவார்களாம்,, உத்யோக செலவை குறைப்பார்களாம்,, வரி
குறைப்பார்களாம்,, உப்பு இலவசமாக்குவார்களாம்,­, தேசியத்தை அபிவிருத்திச்
செய்வார்களாம்,, இதையெல்லாம் செய்து தேசியத்தை வளர்ப்பதாகவே
வைத்துக்கொள்வோம், இவைகளை எந்த பிரதேசங்கள் செய்யாதிருக்கிறது?
சுயராஜ்யம் எனும் வல்லாதிக்க அரசுகள் இவைகளை செய்யாதிருக்கின்றனவா­?
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், அமெரிக்கா, முதலிய சுயாட்சி வல்லாதிக்க
தேசங்களில் எவை மேற்குறிய "தேசியத்தை" வளர்க்காதிருக்கின்றன­? எல்லாத்
தேசங்களும் தேசியத்தை தெய்வத்திற்கு மேல் வளர்த்து வருகிறார்கள்.
தேசியத்தை தாண்டி அவர்கள் ஊரில் வாழும் கோடான கோடி உழைக்கும்
தொழிலாளர்களின் நிலமையென்ன? அவர்கள் நித்ய வாழ்வு எவ்விதம் நடந்தேறி
வருகிறது? அவர்கள் உண்ணும் உணவு போதுமா? அவர்களுக்கு உடுத்த ஆடு
இருக்கிறதா? அவர்கள் வசிக்கும் வீடுகள் எந்த மாதிரி? அவர்கள் சந்ததியினர்
நிலை என்ன? பெண்கள்,குழந்தைகள், எந்த அந்தஸ்தில் இருந்து வருகின்றனர்?
அவர்களின் சுகாதாரம் எந்நிலையில் உள்ளது? இவைகளனைத்திற்கும் தீர்வாகாத
செயலற்ற "தேசியம்" எதற்கு? சில வருஷத்திற்கு முந்தி "சால்வேயன் ஆர்மி"
க்கு அதிபதியாகிய பூத் லண்டனில் வாழும் ஏழைகளைப் பற்றி எழுதியுள்ளதையும்
, பீலாட்ச்போர்ட் என்பவர் இங்கிலாந்து தேசத்திலுள்ள தொழிலாளர்கள் நிலமையை
பற்றி எழுதியுள்ள விஷயங்களையும் கவனித்தவர்கள் " இந்த நிலமையிலேயேனும்
தேசியமாவென" ஆச்சர்ப்படத்தக்கதாக இருக்கும். இந்த வகுப்பாரைச் சேர்த்து
நமது காங்கிரஸ் வகுப்பாரும் அதிகாரம் வந்தபோது பாமர ஜனங்களை எப்படி மேலாக
நடத்துவார்கள்? பூரண சுயாட்சி பெற்றுள்ள உலக முழுமையும் முதலாளி
செல்வாக்கில் பாமர ஜனங்களின் கதி அதோகதியாக இருக்க,,, இந்தியாவில்
மாத்திரம் காங்கிரஸ் மற்றும் இந்து சேனாக்கள் நமது பாமர மக்களை
விடுதலைக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதற்கு என்ன சாட்சி? கராச்சியில்
சென்ற வருஷம் காங்கிரசில் செய்துள்ள அரசியல் திட்டத்தை காட்டுவார்கள்.
ஆனால் அந்த திட்டத்தின் ஆபாசத்தை முன்பே விளக்கியுள்ளோம். இது உண்மையான
திட்டமென்று நம்புவதற்கு இடமில்லையென நிர்ச்சனமாக கூறுவோம். இந்த
ஆதாரமொன்றுமில்ல திட்டத்தைக் கொண்டு உலகை ஏமாற்ற முடியாதென அறிக.
ஜாதிப்பற்றையும்,மதப்­பற்றையும் , தேசியத்தையும் நீக்கி நடப்பது
சமுதாயத்தில் கடினமாகத்தானிருக்கும­் ஆனால் அப்பற்றுகளை முழுதாக நீக்கும்
தருவாயில் மட்டுமே சமுதாயம் செழித்தோங்கும். அப்பற்றுகளோடு வாழவே
காங்கிரஸ் விரும்புகிறது. தொழிலாளர் தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் இவ்வித பற்று கொண்டு ஒரே
விதமாகவே நடக்கிறார்கள். இவர்கள் கூற்று ஒன்றாகவே இருக்கக் காண்கிறோம்.
நேற்று நடந்த வட்டமேசை மாநாட்டில் தொழிலாளர் தலைவர்கள் தொழில் வகுப்பு
பிரநிதித்துவம் வேண்டியதில்லையென்றும­்,பொருளாளிகளுக்கு உள்ளதே
தங்களுக்கும் போதுமெனத் தலைவர் சிவராவ் கூறியதாக தெரிகிறது. இதுயென்ன
விபரீத புத்தி? தொழிலாளுக்குத் தங்கள் புராதன நேரெதிர் விரோதிகளாகிய
முதலாளிகளை ராஜ சபைகளில் பாதுகாப்புக்கு வைக்கப்பட வேண்டுமாம், இது
எதற்காக? தேசியத்தை பெருக்க வைக்கவாம், தொழிலாளிகளுக்குத் தனி
பிரதிநிதித்துவம் கொடுத்தால் தங்களை காப்பாற்றிக் கொள்ள சக்தி
அற்றவர்களாம், இந்த காரணங்களை கொண்டு தொழிலாளிகளை முதலாளிகளிடத்தில்
அடமானம் வைத்து அவர்கள் காப்பில் இருந்துவர வேண்டுமாம், உலக முழுமையும்
எங்கே முதலாளி ஆட்சி பெருகியுள்ளதோ அங்கே தலைவர் சிவராவின் நியாந்தான்
தலைவிரித்தாடுகிறது. உலக வாழ்வுக்கு வேண்டிய சகல பொருட்களைத் தங்கள்
கைகளால் உண்டாக்கும் தொழிலாளிகள், சட்ட சபைகளில் தங்கள் உரிமைகளை ஏன்
காப்பதற்கு கொள்ள மாட்டார்கள்? அது விந்தையில் விந்தையே,,, "நீந்தக்
கற்றுக் கொள்ள வேண்டுமானால் தண்ணீரில் இறங்க வேண்டுமென்பது" தலைவர்
சிவராவுக்கும் அவர் சகாக்களுக்கும் தெரியாது போலும்,,, சட்டசபை
தொழிலாளர்களை பற்றிய ஆணவ மனப்பான்மையைத்தான் "தேசியம்" பிடித்துத்
தொங்குகிறது என்பதை இப்போதாவது உணர்வீர்களா? தேசியமென்பதெல்லாம் பொய்.
உலகில் தோன்றிய கொடுமைகளில் அதுவுமொன்று. தேசியத்தால் விளைந்த கெடுதிகளை
கூற நாவெழா! ஜெர்மன் தேசியம், பிரென்ச் தேசியத்தோடு போர் முடிந்த விஷயம்
சரித்திர விஷயம். தேசியம் எதார்த்தப் பொருளல்ல அதுவோர் கற்பனை உணர்ச்சி.
இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல் அது,, என் தேசம் , உன்
தேசம், அவன் தேசம், தமிழ்த்தேசம், என்பனவெல்லாம் கற்பித வார்த்தைகள்.
தேசம் ஒருவனுடையதல்ல, ஒரு இனத்தாருடையதுமல்ல, உலகில்
வாழ்கிறவர்க்கெல்லாம்­ தேசம் பொது. சந்திரன், சூரியன், காற்று , மழை,
யாருக்குச் சொந்தம்? அதுபோலவே நாடும்,நகரமும், எனது நாடு, எனது இனம்,
எனதீ ஜாதி, எனது அடையாளம் என்பெதெல்லாம் முதலாளிகள் செய்த பலே சூழ்ச்சி .
தொழிலாளுக்கு எந்த நாடும் தங்களுக்குச் சொந்தமில்லை, அவர்கள் உழைத்து
வாழ்பவர்கள் தேசமுழுமைக்கும் உரிமையானவர்கள்.உலகம்­ வாழ்பவர்களுக்கு வாழ
இடமேயொழிய சொந்தமாக பாவிக்க முடியாது. கோடான கோடி வருஷங்களாக உலகில்
உயிர் தோன்றியது. முதல் உலகம் வாழ இடமாயிருந்ததேயொழிய சொந்தமாக்கிக்
கொண்டு தேசியம் என்று வம்பாடுவதற்காக இல்லை. மனிதன் தோன்றிய பிறகு, முதல்
குகைகளை சொந்தமாக்கிக் கொண்டு பிறகு கிராம, நகரங்கள், நாடென சொந்தமாக்கி
அவைகளுக்கு சண்டையும் போட்டுக் கொண்டிருந்து வருகிறான். பாண்டவர்களுக்கு
5 கிராமமாகினும் கொடேன் என்ற துரியோதன மனப்பான்மையே தற்போது
தேசியத்திற்கும்,,, உன் தேசம் என்ற கற்பனை மனித எண்ணத்திலிருந்து நீங்க
வேண்டும். மனிதர் இந்த நோக்கத்தை அடைய வேண்டுமெனில் தேசியத்தை துரத்தி
அடித்து பொதுவுடைமை கூட்டத்தில் இந்த பாடத்தை படித்தும்,கற்றும் பயனுற
வேண்டும். தற்காலம் செய்து வரும் ஆயுதக் குறைவு,சமாதான முயற்சியாவும்
முதலாளி திட்டத்தில் பயன்படாது. பொதுவுடைமை மட்டுமே நமக்கு ஒரே வழி.
"தேசியத்தை கைவிட முடியாதென்பார்கள்" இதுவும் பொய். தற்போது உலகில் 16
கோடி ஜனங்கள் இந்த தேசியத்தை ஒழித்து அகிலதேச கூட்டுறவையும், அகிலதேச
தேசத்தையும் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். இந்த பாழும் தேசியத்தாலே
சென்ற உலக சண்டையில் கோடான கோடி மனிதர்கள் உயிர் துறந்தனர்,பல கோடி
மக்கள் காயம்பட்டார்கள். தேசிய கற்பிதத்தால் உண்டான கேடுகளை கண்ணாரப்
பார்த்து வந்தும் இன்னும் அதனை மக்கள் நாடுவதா? கூடிவாழும் ஜந்துக்களில்
உனது,எனது என்ற பாவணை அதிகமில்லை. யானை , மான்,காக்கை, எறும்பு முதலிய
பிராணிகள் ஒன்றுக்கொன்று சண்டை கொள்வது அரிது. தனித்து (தேசியத்தில்)
வாழும் பிராணிகளிடையே ஒன்றுக்கொன்று சண்டை இருக்கும். புலி,கரடி,
சிங்கம், முதலிய கொடூர ஜந்துக்களிடம் போர் அதிகம். ஆனால் மனிதர்கள்
கூடிவாழுங்கலையில் சகலமும் பொதுவெனப் பாவிக்கும் பண்புடையவர்கள். எந்த
காலத்தில் நிலத்தையும்,நீரையும்­ தனதென்றும் உனதென்றும் எண்ண ஆரம்பித்து
தேசியம் பயின்றானோ அப்போதிலிருந்து முதல் சண்டை தொடங்கியிருக்கிறது. இந்த
தேசியமெனும் காட்டுமிராண்டித் தன்மையைத்தான் நமது இந்திய காங்கிரஸ்,இந்து
சேனாக்கள் போற்றி வருகின்றன. இந்த தேசியத்து மனப்பான்மையை சரித்திர
மூலமாக ஆராய்ச்சி செய்தால் இதுவும் புராதன காட்டுமிராண்டி
மனப்பான்மையென்றே காட்டும். ஏன் இந்தக் குறுகிய மனப்பான்மையை
விட்டுவிட்டு எல்லாத் தேசத்தவர்களும் ஓன்றே! அவர்களும் வாழ வேண்டும்,
நாமும் வாழ வேண்டுமென சமதர்ம பொதுவுடைமை வாழ்வை வளர்க்கக் கூடாது?
- குடியரசு 07.02.1932

No comments:

Post a Comment

ஈரோட்டு கிழவன் கலகக்காரன் ...

இந்திய சமூக சாஸ்திரங்கள் மற்றும் பழக்க வழக்கங்களில் தமிழ் சமூகம் சில காரணிகளில் தனித்து நிற்கும் , அது எவ்வித சமரசமுமின்றி இந்தியாவில்...