Sunday, April 28, 2019

பேரன்பு பெருங்காதல் ...




நேசக் கதவுகளாக என் விரல் பற்றி என்னுள் வார்த்தைகளாகிப் போன பெரும் வெற்றிடத்தை மழை கொட்டும் வனமாக பசுமையை நிரப்பி புதிதாய் விதையொன்றாக துளிர்விட செய்கிறவள்(ன்)
நீ ...

சொட்டும் நீரிதழ் ததும்பும்
முத்த ஏக்கங்களை குழைத்து
என் மேல் பூசும் வாஞ்சையுடன்
உதித்துவிடும் " இச் "
சப்தங்களின் ஊடே
நீரிதழை ஆழ் மனதிற்குள் ஒளித்து வைக்கிறாய் ...

நீ என்னை நேசிப்பதும்
நானுன்னை நேசிப்பதும் தயக்கமின்றி இலகுவாக அடையாளங் கண்டு நயத்தோடு நெளியும் அழகியலின் ஊற்றாக கட்டிப்பிடித்து
கொண்டும் உரசிக்கொண்டும்
உள்ளம் நனைய ஒரு யுகம் கடந்து நீளும் கடற்கரையோர நுரை ததும்பலில் குழைத்து செதுக்கி காதலென்கிறோம் ...

வாழ்வு புசிக்கும் நரைமுடி கண்டு தளர்ந்த நிலையில்
முதிர் பருவ தவிப்புகள்
நமக்கில்லை ...

கடந்து வந்த பாதைகளின் நினைவுகளினூடே
என் கரம் பற்றி நீயும்
உன் கரம் பற்றி நானும்
மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்கிறோம் ...

எப்பொழும் அசாத்தியமானது
பேரன்பென பிதற்றுபவர்களை
ஆகாயத்தை காட்டி
மிதந்து வரும் மேகங்களில் நம் முகங்களை காட்சி படுத்துகிறோம் ...

வாழ்தலும் பேரன்பின்பால்
என விளங்கிக்கொள்ளும்
எல்லா திசைகளிலும்
நாம் உயிர்வாழ்கிறோம்
என் பேரன்பு கொண்ட ராட்சஷியே ...

Wednesday, April 17, 2019

நிர்வாணம்




அர்த்தமற்ற வார்த்தைகளாகும்
வாழ்வின் பெருங் கூச்சலிடையே
உனக்கு நானும் எனக்கு நீயும்
ஆறுதல் மொழிகளினூடே
ஆழ்மனதில் தேக்கி வைக்கிறோம்
இப்பெருங் காதலை ...

ஊடறுக்கும் இவ்வேளையில்
நிர்வாணம் பூசி
கண்ணீரில் கலந்திருக்கும்
உப்பு நீரால்
ஆழியில் மிதந்திருப்போம் ...

Sunday, April 14, 2019

சலனமற்ற கதவுகள் ...





சிதைந்து விழும்
சிறு சிறு கனவுகளின் வழியே
மணல் திட்டுகளில்
அடுக்கி வைத்து காத்திருக்கும்
நீள் சாமத்தில் சிதலமடைந்த ஓர் இறப்பின் அழுகையில் கொட்டித்தீர்த்திடும்
கண்ணீர் பெருவெளி வழியாகவும் அலசி , ஆராய்ந்து பார்க்கிறேன் ...

சிறு சிறு கனவுகளை கோர்த்து சேகரித்து மடியில் கட்டி திரியும்
சிலுவைகளிடம் மடிந்து கிடக்கும்
இப் பெருங்கனவை தின்றவர்கள் யாரென ...

ஞானம் கொண்டேன்
தினம் நான் சந்திக்கும்
மனிதர்கள் அவர்களென
அடித்துச் சொன்னது
யாருமற்ற அறையில்
சலனமற்ற கதவுகள் ...

Wednesday, April 10, 2019

பிதற்றல்





அவதியுற்ற வலிகளில்
புண் போன்று
ஒட்டிக் கிடக்கும்
வார்த்தைகளை மட்டுமே
கோர்த்து ...

கொன்றழித்த பிறகேனும் விடாமல்
வதை செய்திடும்  அரை சான் வயிற்று பசிதனில்
படிந்து கிடக்கிறது பாசிசங்களின் சூழ்ச்சிகள் ...

பசிக்கு தண்ணீர் தீர்த்தமென ஒவ்வொரு இரவாக கடந்து போகின்ற பொழுதுகளில்
பார்வையில் விழும் யாவும் பற்றியெறிந்து வெடித்துச் சிதறும் தீப்பிழம்பாகி விழுகிறது உணவுக்காக ஏங்கும் கரங்களில் ...

அவர்களை  போல
மாடி வீட்டு பால்கனியில் மிதந்து
பசியாற உண்டு விலையுயர்ந்த
பளிங்கு பேனாவால்
ஐஐஐ ... நிலா நிலா !!!

எனவெழுத ஆசைதான் ...

என்ன செய்ய ...

சாதியென்றும் மதமென்றும்
ஊறிப்போன சமூத்தில் ஆண்டாண்டுகால அடிமையிவன்(ள்) ...

பிதற்றல் வார்த்தைகளை கோர்த்து மூக்கு சிந்தும்
பேனாவால் முள்ளாய்
தேய்கிறேன் ...

விடிந்தால் கொஞ்சம் அசைத்தாவது பாருங்கள் எனதுடலை
பசியின் கொடுமையில்
அன்றுகூட செத்திருக்கிலாம்
நான் ...

Monday, April 08, 2019

கருநீலசிவப்பு




ஒரு அறைதலில் வெளிபடும்
வீரயத்தில் சிவந்திடும்
கன்னங்களில்
பதிந்துவிட்ட அச்சுகளில்
இன்னும் ஒட்டியிருக்கிறது
தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை ...

காய்ச்சி எடுத்த வெப்பச் சலனத்தில் எங்கும் புண்கள் முளைத்து 
வடுவென மாறிப்போன
அந்த தொழிலாளிகளின் கரங்களில் தங்கியிருக்கும் வலிகளில்தான்
அதிர்வுகளை காண்கிறது அதிகார வர்க்கம் ...

நிறங்களின் கிளைகளில்
படிந்துவிட்ட கரைகளை
சனநாயக சக்தி கொண்டு
மீண்டும் துளிர்விட துடிக்கிறது
எல்லோர் கைகளிலும் பூட்டப்பட்டு
கிடக்கும்  அடிமை விலங்கை
அதிர ... அதிர ...
உடைத்தெறிந்து கிடாசுகிறது
ஆதி மரத்தில் அழியாச் சுடராய் வீற்றிருக்கும் அப்பேராயுதத்தில்
நிறைந்திருக்கும் கருநீலசிவப்பு நிறங்கள் ...

வானுயர்ந்த  ஒற்றை மரக்கிளையில்
நிறங்களின் பூர்வ பகையை அசைப்போட்டுக் கொண்டே இருக்கிறது
எவனோ எழுதிவைத்துவிட்டுப் போன
சாதிமத சட்ங்குளின் வழியே ஒழுகும் மதமெனும் சாதியெனும்
வர்க்க பேதங்கள் சூழ்ந்த விஷ பரிட்சைகள் அப்படியே ...

தொழிலாளர் வர்க்கம் மீண்டெழாதபடிக்கு
அப்படியே ...

என்றேனும் ஒருநாள்
எதையும் அழித்தொழித்தல்
பகுத்தறிவின்பால்
எங்கும் நிறைந்திருக்கும்
எம் கருநீலசிவப்பு ...

Tuesday, April 02, 2019

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2019





காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2019
PDF வடிவில்

-Download link  -

Monday, April 01, 2019

பரிதவிப்புகள் ...




பறக்கவோ பரிதவிப்புகளை
விட்டுச் செல்லவோ இயலாத
ஒரு சிறு மரங்கொத்தி பறவை
உடுத்திவிட்டு போன மரக்கிளையிலிருந்து
மெல்ல எட்டிப் பார்க்கும்
அப்பாவி விதைகளின்  தலைகளின்
உச்சியில் கூர் ஆணி
செலுத்தப்படுகிறது

இந்த வாழ்வு எந்த தயக்கமுமின்றி
குருதி வெளியேற்றத்துடனே தன் குடியிருந்த மரப் பொந்தின் உள்ளேயே
சாவின் அடக்கமும் செய்தாகிவிட்டது ...

இனி நீதிகேட்டு அவைகள்
வாய்திறக்கப்  போவதில்லை
வாயடைத்திட்டு மென்மேலும்
நிதி பற்றாக்குறை என வேண்டுமானால் நீதிகள் மிரட்டல் விடுக்கலாம் ...

எது எதுவாகினும் திரும்ப ஒட்டப்படாத உயிர் பிறிந்த ஜீவனது
துர்வாடை வீசிவதை
அந்த மரப் பொந்தினுள்
கண்டுகொள்ள யாருமில்லை ..
ஆதி பெருமரம்
தன்னை ஊன்றி கொண்ட
தடிப்பு வேர்களை தவிர ...

வார்த்தைகளும் தடித்தே வருகிறது
விதைகள் கசியும்
பரிதவிப்புகளிலிருந்து ...

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...