Thursday, November 05, 2015

நாங்கள் விசாரணைக் கைதிகள்,,,


குற்றமும் தண்டனையும்!
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருப்பவர்கள்தான் அதிகம்

தொடர்ந்து அதிர்ச்சிகளைத் தருகிறது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம். இந்தியாவின் சிறைகளில் இருப்பவர்களில் 65 சதவீதம் குற்றவாளிகள் அல்ல, விசாரணைக் கைதிகள். இந்த விசாரணைக் கைதிகளில் கொலை, பாலியல் வன்புணர்ச்சி போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் 5%தான். பெரும்பாலானோர் திருட்டு, சிறு காயம் ஏற்படுத்துதல், தகராறு, மிரட்டல் போன்ற சிறு அளவிலான குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டவர்கள். தமிழகச் சிறைகளில் விசாரணைக் கைதியாக இருப்பவர்களில் 70% பேர் படிக்காத பாமரர்களும் சிறு அளவில் கல்வி கற்றவர்களும்தான் என்கிறது, தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை. அதுவும் சமூகப் பொருளாதார அளவில் கீழே உள்ள அடித்தட்டு மக்கள்தான் அதிகளவு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பின்பற்றப்படாத உத்தரவு

ஒருவர் 7 ஆண்டுகளுக்குக் குறைவாகத் தண்டனை பெறக்கூடிய குற்றங்களில் குற்றம்சாட்டப்பட்டிருந்தால் அவரைக் காவலில் வைக்கக் கூடாது என்று சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு மாறாகப் பெரும்பாலான விசாரணைக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளுக்கு எளிதாகப் பிணை கிடைத்துவிடும். ஆனால், ஜாமீன்தார் கிடைக்க மாட்டார். இதுபோன்று ஜாமீன்தார் கிடைக்காமல் எண்ணற்ற கைதிகள் சிறையில் உள்ளனர். இந்த அவலத்தை, நீதியரசர் கிருஷ்ணய்யர் கண்டித்தார். ‘எளிய மக்கள் ஜாமீன்தாருக்கு எங்கே செல்வார்கள்? அவர்களுக்குத் தனிமனித ஜாமீன் வழங்க வேண்டும்’என்று கூறினார். ஆனால், அதுவும் நடைமுறையில் இல்லை.

விசாரணைக் கைதுகளில் மட்டுமல்ல, குண்டர் தடுப்புச் சட்டத்திலும் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள்தான் கைது செய்யப்படுகின்றனர். குறிப்பாக, அரசியல் உரிமைகளுக்குப் போராடுகிற இயக்கப் பிரதிநிதிகள் கணிசமானோர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்படுகின்றனர். இப்படி அடைக்கப்படுபவர்களில் 97% பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர். பல வழக்குகளில் அரசியல் காரணங்களுக்காகப் பழிவாங்கும் நோக்கோடு குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யக் கூடாது என்று நீதிமன்றம் கண்டித்தும் இருக்கிறது.

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்வதன் பின்னணியில் முக்கியமான விஷயம் இருக்கிறது. பல சமயங்களில், சம்பந்தப்பட்ட நபர்தான் குற்றவாளி என்று தகுந்த ஆதாரத்தோடு நிரூபிக்க முடியாமல் போலீஸார் திணறுவது உண்டு. அதே நேரத்தில் அந்த நபரைச் சிறைக்குள் நீண்ட காலம் வைத்திருக்க வேண்டும் என்று போலீஸார் நினைத்தால், சம்பந்தப்பட்ட நபரை ‘குண்டர் தடுப்புச் சட்ட’த்தின் கீழ் கைதுசெய்துவிடுகிறார்கள். அப்படிச் செய்தால், பல மாதங்கள் அவரைச் சிறையில் அடைக்கலாம் என்பதுதான் இதன் பின்னர் இருக்கும் நோக்கம்!

ஏற்றத்தாழ்வின் இன்னொரு முகம்

ஒரே மாதிரியான குற்றத்தைச் செய்தவர்களில் ஒருவர் சிறையில் அடைபட்டிருப்பதற்கும் மற்றொருவர் கைதுசெய்யப்படாமல் சுதந்திரமாகத் திரிவதற்கும் இடையில் ஒரு புள்ளி இயங்குகிறது எனலாம். சாதி, மத, சமூகரீதியான பாகுபாடுதான் அந்தப் புள்ளி. பிணையில் வர முடியாத அளவுக்குக் குற்றம் செய்திருந்தும், ஒருவருக்குச் சாதிய, அரசியல் சக்திகள் ஆதரவு இருந்தால் சிறைக்குச் செல்லாமல் தப்பித்துக்கொள்ள முடிகிறது.

அதே நேரம், பிணையில் வரக் கூடிய அளவுக்குக் குற்றம் செய்திருந்தும் ஒருவருக்கு எவ்விதப் பின்னணியும் ஆதரவும் இல்லை என்றால், அவர் சிறைக்கு எளிதாக உள்ளே தள்ளப்படுவார். இதை உண்மை என்று நிரூபிக்கிறது தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை. 2012-ல் தமிழகச் சிறைகளில் இருந்த விசாரணைக் கைதிகளில் 54% பேர் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல் 2013-ல் தமிழகச் சிறைகளில் இருந்த விசாரணைக் கைதிகளில் 57% பேர் சிறுபான்மையினர். குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருப்பவர்கள்தான் அதிகம்.

சேலத்தில் கார் கதவின் கைப்பிடியைத் திருடினார் என்று ஒருவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருந்தனர். அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. இடையில், போலீஸார் வேறொரு வழக்கில் இவர் தேடப்பட்டுவந்த குற்றவாளி என்று கூறி மறுபடியும் அவரைச் சிறையில் அடைத்தனர். அந்த நபர் ஒரு மாத காலம் சிறையில் இருக்க நேரிட்டது. அவர் சிறையில் இருந்த காலத்தில் அப்பகுதியில் பல கார் கதவின் கைப்பிடிகள் திருடப்பட்டிருந்தன. ஆனால், அந்த வழக்குகளிலும் இவரையே குற்றவாளியாகச் சேர்த்திருந்தனர் போலீஸார். இதை நீதிமன்றம் கண்டித்தது. இது ஒரு உதாரணம்தான்!

பிணைகூட எடுக்க வழியில்லாமல் சிறைத் தண்டனையை ஏற்றுக்கொள்கிற ஆயிரக்கணக்கான சாதாரண மக்களின் வலிகளை நம்மில் பலர் உணர்வதில்லை. ரூ. 1,000-க்குக் கூட வழியில்லாமல்தான் இன்றைக்குச் சிறைக்குச் செல்கிற அந்தக் கைதிகள் ஒருவிதத்தில் நீதி நோயாளிகளாகக் காட்சியளிக்கின்றனர். சிறைக்குள் செல்வதற்கும் செல்லாமல் இருப்பதற்கும் சட்டம் காரணமல்ல. சட்டம் அனைவருக்கும் சமம் என்றாலும், இருப்பவர்களுக்கு ஒருவிதமான நிலையும், இல்லாதவர்களுக்கு ஒருவிதமான நிலையும் இருப்பது சூழ்நிலை என்று ஒதுக்க முடியாது. அதைப் பாகுபாடு என்று புரிந்துகொள்ள வேண்டும்.

யார் குற்றவாளி?

சில மாதங்களுக்கு முன்பு மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக் கைதி ஒருவரை போலீஸார் சிறையில் இருந்து அழைத்து வந்திருந்தனர். அவரைப் பார்ப்பதற்காக அவரது மனைவியும், 8 வயது மகனும், 13 வயது மகளும் வந்திருந்தனர். பிணை கிடைக்குமா, கிடைக்காதா என்று நீதிமன்றத்துக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தனர். கணவருக்கு அசைவ உணவு சமைத்துவந்திருந்தார் அவரது மனைவி. அந்த உணவைச் சாப்பிடாமல் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தார் அந்தக் கைதி.

அவரது மகன், தனது சட்டை பாக்கெட்டிலிருந்து கடலை மிட்டாயை எடுத்துச் சாப்பிடக் கொடுத்தபோது அந்தக் கைதி உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார். விசாரித்தபோது, சாதாரண அடிதடி வழக்கில் கைதானவர் என்று தெரியவந்தது. பிணையில் எடுக்க ரூ. 5,000 கேட்டிருக்கிறார் வழக்கறிஞர். பணமில்லை. வேறு வழியில்லாமல் ஒரு பவுன் தங்க நகையை அடமானம் வைத்துத் தம்முடைய கணவரை மீட்க நீதிமன்றம் வந்திருக்கிறார் அவரது மனைவி. “இது சாதாரண வழக்குதானே. அதுவும் நீதிமன்றக் காவல்தானே? இதற்கு போலீஸார் கைதுசெய்ய வேண்டிய அவசியமே இல்லை” என்று கூறினேன்.

அதிர்ச்சியடைந்த அப்பெண், “அப்படியா? என் கணவர் செய்த குற்றத்துக்கு 7 ஆண்டு தண்டனை கிடைக்கும் என்று சொன்னார்கள். இத்தனை ஆண்டுகள் அவரைப் பிரிந்து நாங்கள் எப்படி இருப்போம் என்று கலங்கியிருந்தோம்” என்றார். விசாரணைக் கைதுக்கும் தண்டனைக் கைதுக்குமான வித்தியாசம் தெரியாததால், பலரது வாழ்வை இருள் சூழ்ந்திருப்பதை நினைத்தபோது மனம் வலித்தது. சட்டம் குறித்த விழிப்புணர்வு இன்மை, சமூக ஏற்றத்தாழ்வு போன்றவற்றின் காரணமாகப் பலர் தங்கள் வாழ்க்கையையே தொலைத்துக்கொண்டிருப்பதை எத்தனை நாட்களுக்குப் பார்த்துக்கொண்டிருக்கப்போகிறது நம் சமூகம்?

- எவிடென்ஸ் கதிர்,
Executive Director,EVIDENCE,Madurai
சமூகச் செயல்பாட்டாளர்,
தி இந்து நாளேட்டில்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...