Friday, March 22, 2019

ஈரோட்டு கிழவன் கலகக்காரன் ...
இந்திய சமூக சாஸ்திரங்கள் மற்றும் பழக்க வழக்கங்களில் தமிழ் சமூகம் சில காரணிகளில் தனித்து நிற்கும் , அது எவ்வித சமரசமுமின்றி இந்தியாவில் நிலவும் எல்லா மதங்களையும் பகுத்தறிவின்பால் தீவிரமாக எதிர்க்கும் தன்மையை (குறிப்பாக இந்து மத சாதிய அடுக்குமுறைகளை) பெரியார் இங்கு நிறுவியிருக்கிறார் . நானே கூறினாலும் கேட்டறிந்து பகுத்துப்பார்த்து அதன்பின் பின்தொடர்ந்திடு ... என்று இதுவரை யாரும் பெரியாரை போல உரைத்தவரில்லை , பெரும்பான்மையாக நிலவும் சாதிய சமூகத்தில் அதனோடு கூடவே சம்பிரதாயங்கள் , மூடப்பழக்க  வழக்கங்கள் , மத சடங்குகள் , சாதிய சடங்குகள் என எல்லாவற்றையும் பகுத்தறிவின்பால் "அழித்தொழித்தல்" என்பதே ஈரோட்டு கிழவனின் செயல்முறையாக இருந்தது , மதங்கள் எவையெல்லாம் தீட்டு, புனிதம்  என்கிற இரண்டு வரைடறைக்குள் மக்களிடம் திணிக்கிறதோ அவற்றையெல்லாம் வெறும் வெங்காயம் என நசுக்கி "கல்வி" தான் உனது ஆகச்சிறந்த ஆயுதம் என அறச்சீற்றத்தோடு பெரியார் உரைத்தார் . இன்றும் இந்துத்துவ சக்திகள் மட்டுமல்லாது ஏனைய மதங்களும் உள்ளிழுக்க முடியாத பெரியாரின் சுயமரியாதை சித்தாந்தங்களை வெறும் கறப்பு நிற அடையாளங்களுக்குள் அடக்ககவிட விட முடியாது , பெரியாரின் பகுத்தறிவு சித்தாங்கள் நீலம் , கறுப்பு , சிவப்பு என்கிற சமத்துவ சுயமரியாதை நிறங்கள் மூன்றிலும் பயணிக்கக் கூடியது .
தன்னை எதிர்த்து கேள்வி கேட்கப்பட்டால் உடனே அவர்களை சமூக விரோதி , தேச விரோதி , மதத்திற்கு எதிரானவர்கள் , சாதியத்திற்கு எதிரானவர்கள் , அமெரிக்க கைக்கூலி , பாகிஸ்தான் உளவாளி என அடுக்கடுக்காக இன்றளவும் பழிகளை சுமத்தி அவர்கள் போன்றவர்களை வேட்டையாடத் துடித்து , கொன்றும் அழித்துக் கொண்டிருக்கும் சாதிய மதவாத சக்திகளிடமிருந்து , அவ்வாறு எதிர்த்து கேள்வி கேட்பர்களை பாதுகாக்கும் அரணாக பெரியாரிய சித்தாந்தங்கள் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது ... எதையும் பகுத்தறிவின் கீழ் கொண்டுவந்து அதிலிருக்கும் தீட்டை , புனிதத்தை உடைத்தெறிய ஓர் ஆயுதம் எதுவென்றால் அது ஈரோட்டு கிழவன் பெரியார் மட்டுமே என்பது தமிழகம் இன்று வரையிலும்  பார்த்துக்கொண்டுதானிருக்கிறது . பெரியார் கலகக்காரன் தான் ...

Thursday, March 21, 2019

ராட்சஷியவள்
வார்த்தைகளின் இடையிடையே
பெருங் காதலை ஒளித்துவைத்து
பார்வைகளில் இயல்பாய்
புதிர்கள் பல கண்டு
தவழும்  துரிகை சிதறல்களை
உரையாடல் என்பாய் ...

உணர்வுகளின் வெளிச்சத்தில்
கண்டு திளைப்பேன்
கிளையிலாடும் இலைபோல
காற்றில் காதலை சுமந்தவனாய்
நான் என ...

எப்போது நாமாவோம்
விடை சொல்வாய் என்
ராட்சஷி ...

#கவிதை_தினம்

Thursday, March 14, 2019

பொள்ளாச்சியில் நிகழ்த்தப்பட்ட பெண்கள் மீதான வன்கொடுமை குறித்து ...


சமூக வலைத்தளங்களில் இரண்டு நபர்களை ஒரு நான்கு,  ஐந்து பேர் சூழ்ந்து கொண்டு தாக்குவதும் குடும்பப் பெண்களை இப்படி சீரழிக்கிறாயடா பாவி என்று கல்லை எடுத்து அவர்கள் காலை உடைப்பது போன்ற ஒரு தாக்குதல் காணொளிக் காட்சியை பார்த்து இருப்பீர்கள்...

நாமெல்லாம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளியை காவல்துறை தாக்குகிறது என்று புரிந்து வைத்திருந்தோம்...

ஆனால் அந்த குற்றவாளிகளை தாக்குவது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் என்பதை காவல்துறை மறைத்துவிட்டார்கள்...

ஆம் இப்பொழுது மாட்டியுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தனது நெருங்கிய நண்பனின் தங்கையை வஞ்சகமாக பேசி வரவழைத்து  பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியது மட்டுமல்லாமல்
அதை அப்படியே படமாக பிடித்திருக்கிறான்.

சிறிது காலம் கழித்து எதர்ச்சையாக திருநாவுக்கரசின் போன் ஏதோ ஒரு சூழலில்  அவனின் நண்பர் கையில் கிடைக்கிறது, அவர் இதில் உள்ள வீடியோக்களை பார்க்கும்போது இது நமது நண்பனின் தங்கை ஆயிற்றே என்று அந்த வீடியோவை தனது போன் போனிற்க்கு மாற்றுகிறார்.

அதை தன் நண்பனிடம் அந்த வீடியோவை காட்டி தனது தங்கையிடம் விசாரிக்கிறார்..! அழுது கொண்டே நடந்த சம்பவங்களை சொல்லுகிறார் அந்தப் பெண், 

நன்பனின்  தங்கை என்றும் பாராமல் சீரளித்த திருநாவுக்கரசுவை தூக்கிக்கொண்டு வந்து அடித்து துவைத்து எடுக்கிறார்கள்...
(இந்த வீடியோதான் வளை தளங்களில் வருகிறது)

இந்த செய்தி பஞ்சாயத்தாக அந்தப் பகுதியைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரிடம் செல்கிறது,  அவரும் நண்பனின் தங்கையை இப்படி செய்கிறாயே என்று கண்டித்து தற்காலிகமாக சமரசம் செய்கிறார்.

மனம் ஆறாத அந்தப் பெண்ணின் அண்ணன் இவனை விட கூடாது என்று கூறி அந்த முக்கிய பிரமுகரிடம் மீன்டும் செல்கிறார்... அவரும் வேறு வழியில்லாமல் பேசாமல் நீ காவல்துறையில் புகாராக கொடு என்று வழிகாட்டுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனும் திருநாவுக்கரசு மற்றும் திருநாவுக்கரசு நண்பர்கள் போன்களை காவல்துறையிடம் ஒப்படைத்து புகாராக கொடுக்கிறார்.

அந்த மொபைல் போன்களை ஆராய்ந்த காவல்துறையினருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது ஏராளமான வீடியோக்கள், கற்பழிப்பு காட்சிகள்,  விதவிதமான பெண்கள் என அந்த மாவட்ட காவல் துறையே உறைந்து போய் நின்றது.

அதிர்ந்து போன காவல்துறை இந்த பிரச்சினையை எப்படி தொடங்குவது இதில் சம்பந்தப்பட்டவர்கள் அத்தனை பேருமே முக்கிய அரசியல் கட்சியைச்  சேர்ந்த பொறுப்பாளர்கள்...

கிளை நிர்வாகிகளில்  இருந்து மாவட்ட பொறுப்பாளர்கள் வரை, வார்டு மெம்பரிலிருந்து நகர மன்ற தலைவர்கள் வரை மிகப்பெரிய செல்வவான்களின் கைகள் இதில்  இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில்...

மனசாட்சியுள்ள சில காவல்துறை நபர்கள் இது மிக மோசமான இதுவரை வெளிவராத அதிர்ச்சிகரமான சம்பவங்கள் உள்ளடக்கிய பிரச்சனை இது...

நிச்சயமாக இதை இவர்கள் விசாரித்து உண்மையை கொண்டு வர மாட்டார்கள்..! வேண்டுமானால் இதில் உள்ள படங்களை காட்டி தொடர்புடைய நபர்களிடமும், பாதிக்கப்பட்ட பெண்களிடமும் பணம் பிடுங்க மட்டுமே பயன்படுத்துவார்கள் என்கின்ற காரணத்தினால் இந்த செய்தியை எப்படியாவது வெளியே கொண்டுவர வேண்டும் என்கின்ற அக்கறையோடு சில காவல்துறையினரே இந்த செய்தியை வெளியே கசிய விட்டார்கள்.

எந்த அரசியல் முக்கிய நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை காவல் நிலையத்தில் புகார் கொடு என்று அனுப்பி வைத்தாரோ அவரின் மகனும் இதில் ஒரு முக்கிய குற்றவாளியாக மாறுவார் என்று பாவம் அவருக்கு தெரியாது.

இந்த பாலியல் வண்கொடுமையில் தொடர்புடையவர்கள் அனைவருமே நெறுங்கிய நன்பர்கள் வட்டத்திலும்
குடும்பரீதியாகவும் நெறுக்கமுள்ளவர்கள்தான்..!

இதில் கல்லூரி மாணவிகள் மட்டும் அல்ல குடும்பப் பெண்கள் 40 வயதைத் தாண்டிய பெண்கள் என்று பலரும் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்,

இது இன்று நேற்று அல்ல ஏறக்குறைய ஏழு அல்லது எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பிரச்சனையாகும்.

கல்லூரிகளிலும், முகநூலிலும் நைச்சியமாகப் பேசி, பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை உடலுறவுக்கு உட்படுத்தி, அதை வீடியோவாக எடுத்து அந்தப் பெண்ணுக்கே அதை காட்டி,  மிரட்டி உன் நண்பர்களையும் அறிமுகப்படுத்து, இல்லை என்றால் இதை நான் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உன் மானத்தை கெடுத்து விடுவேன் என்று மிரட்டி பனிய வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பண்ணைகளும், மிராசுகளும், ஜமீன்களும் அவர்களின் வாரிசுகளான மைனர்கள் என்று அழைக்கப்படுபவர்களும் ஆண்டாண்டு காலமாக பெண்களை தூக்கிக் கொண்டு போய் கேள்வி கேட்பாரில்லாமல் தனது பாலியல் இச்சைக்கு பயண் படுத்திக் கொள்வார்கள், இதை நாம் வரலாறுநெடுகபார்த்ததுதான்

வளர்ச்சியும், தொலைத்தொடர்பு வசதியும் பெருகிய இந்த காலத்தில் அன்றைய மைனர் வாழ்க்கை இன்று வேறு ஒரு பரிணாமத்தில் பயணிக்கிறது.

இன்று ஒருபடி மேலே போய் மிகப்பெரிய செல்வந்தர்கள் என்று சொல்பவர்கள் கூட தன் பாலியல் இச்சைக்கு பெண்களை வன்புணர்ந்தாலும், அதை படமாக எடுத்து பிற நண்பர்களிடம் காட்டி ரசிப்பதும்,  தன் குலப் பெருமை பேசி எவ்வளவுப் பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறோமோ அந்த அளவிற்கு என் பராக்கிரமத்தைப் பார் என்கின்ற வக்கிர புத்தியும் மேட்டுக்குடி மைனர்களிடம் பெருகி இருப்பதையே இந்த பொள்ளாச்சி சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

பெரியார் சொல்வது போல் ஒருவன் எவ்வளவு படித்து இருக்கிறானோ அந்த அளவிற்கு அவன் அயோக்கியனாக இருக்கின்றான் என்பார், அதுமட்டுமல்லாமல் படித்தவன், பணக்காரன் பதவிகாரன் இவர்கள் மூவரும் சமூகத்திற்கு கேடானவர்கள் என்பார், இதைத்தான் இந்த பொள்ளாச்சி சம்பவம் நமக்கு உறுதிப்படுத்துகிறது...

- களத்தில் இருந்து தோழரின் பேஸ்புக் பதிவு

        (இன்னும் வெளிவராத அதிர்வுகள் வெளியே)

Saturday, March 09, 2019

தங்கத் தாரகையின் வைரத்தாரகை ஊழல் ஜெயலலிதா
மறைந்த A1 குற்றவாளி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது தங்கத்தாரகை கௌரவத்திலிருந்து தற்போது வைரத்தாரகை ஊழல் ஜெயலலிதா என பரிமாற்றம் பெற்றிருக்கிறார் என்றே இதனை சொல்லலாம் . ஊழலுக்கு பெயர்போன கட்சியாக எப்பொழும் அதிமுக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் இங்கு சத்திய சோதனை...

இந்திய வைரச்சந்தையானது பெரும் சரிவை திடீரென சந்தித்துள்ளது , இதுகுறித்த தகவலின் அடிப்படையில்  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் திடீரென விற்பனைக்கு வந்துள்ளதாக விஷயம் வெளிவந்தது . வைரத்தின் மதிப்பு சரசரவென சரிவை சந்தித்திருக்கும் வேளையில்  கிட்டத்தட்ட 30 சதவிகித விலை சரிவு என கணக்கு காட்டப்படுகிறது .இந்த விலை சரிவு ஹாக்காங் மற்றும் ஏனைய உலக வைர சந்தையிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்க  இதன் காரணம் என்னவென வைர சந்தைகள் ஆய்வு மேற்கொண்டன. திடீரென இவ்வளவு அதிகமான மதிப்புள்ள வைரம் சந்தைக்கு விற்பனைக்கு வந்தது எப்படி என்பதை ஆராய்ந்தால் அது முன்னாள் முதல்வரும் ஊழல் குற்றவாளியென உச்ச நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவரும் தமிழக அதிமுக மறைந்த ஜெயலலிதாவிடம் வந்து முடிகிறது.

இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதா 2 லட்சம் கேரட் வைரத்தை, மும்பை வைரச் சந்தையில் இருந்து வாங்கியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்திய வைரச்சந்தையில் திடீரென விற்பனைக்கு வந்திருக்கும் 1 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்தே வந்துள்ளது எனக் குறிப்பிடும் அந்த செய்தி, அப்போது ஜெயலலிதா வாங்கிய வைரமே தற்போது விற்பனை செய்யப்படுவதாகவும் கூறுகிறது.டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் செய்தி, எவ்வளவு மதிப்புக்கு வைரம் வாங்கப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை, அதேவேளையில் அன்றைய  சந்தையில் அப்போது வாங்கப்பட்டது ' +11 ’ எனப்படும் நகைகளில் பயன்படுத்தப்படும் வைரம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது திடீரென சந்தையில் விற்பனைக்கு வந்திருப்பதும் இந்த வகையைச் சேர்ந்த வைரம்தான். என்பதும் உறுதிபடுத்துகிறது அச்செய்தி நாளிதழ்.

இந்திய வைர தொழிலின் தலைமையகமாக செயல்படுவது குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம். சூரத் வைர கூட்டமைப்பின் (Surat Diamond Association - SDA) தலைவர் பாபு குஜராத்தி இதுபற்றிக் கூறும்போது, ‘’பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபோது இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும் தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை வைரமாக வாங்கி வைத்துக்கொண்டார்கள். இப்படித்தான், தமிழ்நாட்டை சேர்ந்த மிக உயரிய அரசியல்வாதி ஒருவர்  2 லட்சம் கேரட் வைரத்தை வாங்கினார்கள். தற்போது அந்த வைரங்களை மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதால், வைரச் சந்தையும், இதன் வணிகமும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது என்பது உண்மை” என பேட்டி கொடுத்திருக்கிறார். அதன் நம்பகத்தன்மையையும் வெளிகாட்டுகிறார் . எனவே

இந்த வைர கொள்முதல் மற்றும் விற்பனையில் சந்தேகத்துக்கு உரிய பல மர்மங்கள் இருப்பதாக இந்திய வைர சந்தை நிறுவனங்கள் தெரிவித்திருக்கிறது .

01. 2016 நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட வைரம் ஜெயலலிதாவால் வாங்கப்பட்டிருக்கிறது என்றால், பண மதிப்பு நீக்கம் குறித்து ஜெயலலிதா முன்கூட்டியே அறிந்திருந்தது எப்படி?

02. ஜெயலலிதாவால் இந்த வைரம் வாங்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்குப் பயன்படுத்தப்பட்ட தொகை முழுவதும் கறுப்புப் பணம் என்பது உறுதியாகிறது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

03. 2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியில் வரவே இல்லை. அப்படியானால், 2016 நவம்பர் 8-ல் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு முன்னால் ஜெயலலிதா, இத்தனை பிரமாண்ட மதிப்பில் வைரம் வாங்கியது எப்படி?

04. ஜெயலலிதா படுத்தப் படுக்கையாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது அவர் 2 லட்சம் கேரட் வைரம் வாங்கியதாக சொல்வது நம்பும்படியாக இருக்கிறதா?

05. அப்படியானால், ஜெயலலிதாவின் பெயரால் வாங்கப்பட்டுள்ள இந்த வைரத்தை உண்மையில் வாங்கியது யார்? யாருக்காக அந்த வைரம் வாங்கப்பட்டது?

06. ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த காலத்தில் அவர்தான் முதலமைச்சராக இருந்தார். ஒரு முதலமைச்சர் இத்தனை பிரமாண்டமான மதிப்பில் வைரம் வாங்கியிருக்கிறார் என்றால், அதற்கான கணக்கு என்ன? எங்கிருந்து வந்தது அந்தப் பணம்?

07. ஜெயலலிதாவுக்கே தெரியாமல் அவரிடம் கையெழுத்து பெற்று அல்லது அவருடைய கையெழுத்தை வேறு யாரேனும் போட்டு, இந்த வைரம் வாங்கப்பட்டுள்ளது என்றால், ஒரு முதலமைச்சரின் கையெழுத்தை போலியாக இட்டது மாபெரும் குற்றம் அல்லவா?

08. ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட அந்த வைரத்தின் தற்போதைய உரிமையாளர் அல்லது பாதுகாவலர் யார்? தற்போது அந்த வைரத்தை விற்பனை செய்பவர்கள் யார்?

09. அப்போது ஜெயலலிதாவின் பாதுகாவலராக உடன் இருந்த சசிகலா மற்றும் அவருடைய உறவினர் வலைப்பின்னலுக்கு இந்த வைரம் வாங்குவது குறித்து தெரியுமா? அவர்களின் பங்கு என்ன?

10. அப்போது செல்வாக்கு மிக்க அமைச்சர்களாக இருந்தவர்களும், நாள்தோறும் அப்பல்லோ சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிந்து ஊடகங்களிடம் பேசியவர்களுமான எடப்பாடி பழனிச்சாமி, ஓ,பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு இதில் உள்ள பங்கு என்ன?
11 . ஜெயலலிதா அவர்கள் இறந்துவிட்ட நிலையில் தற்போது அந்த வைரங்களை சந்தைபடுத்தியது யார்?
12. இன்றளவும் ஜெயாவின் சொத்துகளை பராமரிப்பதில் யாரென வெளிப்படையான தன்மை ஏன் அறிவிக்கப்படவில்லை .
13. ஜெயலலிதா ஏற்கனவே ஊழல் குற்றவாளி என்று தண்டனை பெற்ற பிறகும் அவருக்கு ஆட்சியதிகாரம் அளித்த மக்களின் நிலை என்ன?
14 . டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட இந்த வைர சந்தை ஊழலுக்கு தற்போது ஆட்சி செய்யும் அதே ஆளும் அதிமுக அரசு பெறுப்பேற்குமா? இது திரும்பவும் ஊழல் அரசு என்றுதானே நிரூபணம் ஆகியுள்ளது ?

இப்படி ஏராளமான கேள்விகள் எழுகின்றன. ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருந்தபோது அவருடைய பெயரை பயன்படுத்தி, பெரும் தொகையிலான கறுப்புப் பணம், வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மாபெரும் கறுப்புப் பண ஊழல் இதன்பின்னே மறைந்திருக்கிறது. பா.ஜ.க.வுக்கு  வியாபம் , ரஃபேல் ஊழல் என்றால், அ.தி.மு.க.வுக்கு வைர ஊழல் , இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் இருவரும் தான் தேர்தல் கூட்டணி அமைத்து 40 ம் நமதே என மக்களை குறிவைக்கிறார்கள் .
வேண்டுமானால் ஜெயாவின் இந்த " மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதை அவர்களின் அடிமைகள் ..
" வைர ஊழலால் நாங்கள் வைர சந்தை பண முதலாளிகளால் நாங்கள் என்று வேண்டுமானால் மாற்றி பிரச்சாரம் செய்தாலும் செய்வார்கள் ... ஏனெனில்  இங்கு வாழ்வது அப்பாவி தமிழ் மக்கள்தானே ...

ஆழிசை
ஆகையால் ...

கடற்கரை  காற்றில் விட்டுச்சென்ற
உன் அன்பை தேடி சுடும் மணலில்
என் காயங்களை மறந்து
ஆற்றும் மருந்தாய்
நின் கால்தடம் என்னில் பூசி
அழையா விருந்தில்
அரிதாக முளைக்கும் அதே ‌... கண்ணசைவுகளினூடே
பிரம்படி பட்டு நெளியும்
புழுபோல  சுருண்டு
எங்கோ யாருமற்ற கடற்கரையில் கண்ணயர்ந்து நின் நினைவுகளை செதுக்கிக் கொண்டிருக்கிறேன் ...

இதோ ... இந்த ... ஆழிசை ...
அவ்வப்போது என் சுயத்தை மீட்கிறது
நீ ... விட்டுச்சென்ற எச்சங்களை ...
எனக்குள் தத்தெடுத்துக்கொண்டே ...

Friday, March 08, 2019

வெயில்
பூரண சரணாகதி அடைகிறேன்

என் மேல் பூசி மெழுகும் வியர்த்தல் வேண்டி வெயிலிடம் ...பெருந் தழலில் காய்ந்து

வியர்வையில் நனைந்து

எனது ஆடையில் படிந்து போகும்  உப்பின் படிமங்களில்

முத்தங்களிட்டு உன்னை

எனக்குள் வரைந்து உதடுகளில் சரணடையும் ஆதி கனவுகளுக்குள்

பேரன்போடு உள்நுழைந்து

அழைப்பாய் ...வா .... ஒரு குளியலில்

கூடலாமென சினுங்கும்

அந்த மொழிக்காகவே

தினம் என்னில் வதைக்கும் சூரியனில்

வேண்டி தருகிறேன் என்னையே ...வதைத்தாலும் வெயில்

அழகென

எனக்கு மட்டுமே தெரியும் ...வியர்த்திடும் எல்லா பொழுதுகளிலும் விசிறி ஆடை போர்த்திவிடுகிறாய் ..உச்சி வெயிலில்

நீ ... தரும் உச்சந்தலை

முத்தத்தில் குளிர்ந்து விடுகிறது இந்த வெயில் ...சொல்கிறேன் ...

வெயில் பேரழகு ...

மழையை விடவும் ...

Wednesday, March 06, 2019

அம்பேத்கர் பெயர் பார்ப்பன ஆசிரியருடையதா ?

இந்தியாவில் எந்தவொரு  அறிவாளியும் ,  பகுத்தறிவாளரும் , மேதையும் , புரட்சியாளரும் பார்ப்பனரின் துணையின்றி அடையாளப்படுத்தவோ உறுவாகிடவோ முடியாது என்கிற மிக மோசமான மாய தோற்றத்தை உறுவாக்குவதில் பார்ப்பனியம் மெனக்கெடுத்து அதன் வேலைகளை செய்யும் . அப்படியாக உறுவாக்கப்பட்டதே நமது பாட புத்தகங்கள் . இந்திய கல்வி முறைகளை அப்படித்தான் பார்ப்பனியம்  கைப்பற்றி வைத்திருக்கிறது . பல்வேறு கட்டுக் கதைகளை வரலாறாய் திரிப்பதன் மூலம் மக்களை மக்களின் செயல்திறனை மழுங்கடிக்கச்செய்து அதன்மூலம் பார்ப்பனியத்தை வளர்த்தெடுப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது ஹிந்துத்துவம் . அப்படியான இரட்டிப்பு பார்ப்பன மோசடிதான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் "அம்பேத்கர்" என்கிற பெயர் அவரின் ஆசிரியரான பார்ப்பனரின் பெயரென திரித்து காட்டியது . உண்மையில் அம்பேத்கர் பெயர் ஒரு பார்ப்பன ஆசிரியர் பெயர்தானா? என்பதை தகுந்த தரவுகள் மூலம் அலசி அதன் பொய்யான தகவல்களை கட்டுடைத்து  பார்ப்பன புரட்டுகளை தோலுரித்து காட்டுகிறது " கழுவப்படும் பெயரழுக்கு" என்கிற இந்நூல் ... நூலின் ஆசிரியர் யாக்கன் அவர்கள் இதன் மூலம் ஒரு  நீண்டகால பார்ப்பனிய திரிபுவாத வரலாற்றை கழுவிலேற்றி தனது முத்திரையை பதிக்கிறார் ... இவ்வளவு காலமாக  அண்ணல் அம்பேத்கர் வெறும் பீமாராவ் ராம்ஜீ என்கிற பெயரில் மட்டுமே இருந்தார் அதன் பிறகு அவருக்கு முழுமையாக அறிவூட்டிய அவரின் பள்ளி ஆசிரியரான  பார்ப்பனர்  "அம்பேத்கர்"  ஆசிரியரியரின் ப்ரியத்தின்பால் பீமாராவ் ராஜீ பெயருக்கு பின்னால் "அம்பேத்கர்" சேர்த்துக்கொண்டார் என்கிற அப்பட்டமான பொய்யை நாம் தலையில் சுமந்து அல்லது திணிக்கப்பட்டிருக்கிறோம் ...

நூலாசிரியர் யாக்கன் அவர்கள்  அண்ணல் அம்பேத்கர் பெயர் அவருடைய இயற்பெயரே என பல்வேறு சான்றுகளை தனது "கழுவப்படும் பெயரழுக்கு" இல் பதிவு செய்கிறார் அதில் முக்கியமானது அம்பேத்கர் மோடி எழுத்து மொழியில் தனது சொந்த கையெப்பம் பள்ளி பருவத்தில் இட்டதை சுட்டிக்காட்டுகிறார் ... (மோடி மொழி  என்றதும் நம் gobackmodi புகழ் நரேந்திர மோடி என நினைத்துவிட வேண்டாம்) மோடி  என்கிற மொழி நம் தமிழ்நாட்டிலேயே புழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்கது ... அதற்கான
தரவுகள் கீழே சொடுக்கவும் ...

மோடி எழுத்து மொழி


மோடி எழுத்து மொழி 2போலவே இந்நூலுக்கு "கழுவப்படும் பெயரழுக்கு" என்கிற தலைப்பின் மூலம் தனது துணிச்சல் வாதத்தை வெளிகாட்டிய யாக்கன் அவர்களை பாராட்டுதல் நன்று ... இதன் மூலம் புரட்சியாளர் அம்பேத்கர் மீது பூசப்பட்டிருந்த பார்ப்பன அழுக்கு  முற்றிலுமாக துடைத்தெரியப்பட்டிருக்கிறது என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் ... ஹிந்துத்துவ பார்ப்பனியம் தனக்கேற்றார்போல் எப்படியெல்லாம் வரலாற்றுத் திரிபுகளை மேற்கொள்ளும் என்பதற்கு "பெயரழுக்கு நூலும் அதிலுள்ள தரவுகளும் சான்றாக அமைகிறது ..‌..

கழுவப்படும் பெயரழுக்கு நூலில் யாக்கன் அவர்கள் தரும் தரவுகள் இவை ...

அம்பேத்கர் இயற்பெயர் ;
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்.
அம்பேத்கர் தந்தை பெயர்;
ராம்ஜி மாலோஜி அம்பேத்கர்.

அம்பேத்கர் தபோலியில் உள்ள A.J. உயர்நிலைப்பள்ளியில் முதலில் பயின்றார்.அது இராணுவ வீரர்களின் குழந்தைகள் மட்டும் படிக்கும் பள்ளி.அம்பேத்கரின் தந்தை ஓய்வு பெற்ற சுபேதார் என்பதால் அம்பேத்கருக்கு அப்பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கு அம்பேத்கர் மராத்தி மொழியை மோடி எழுத்து வடிவில் பயின்றுள்ளார்.தானே கையொப்பமிடவும் கற்றுள்ளார். பின்னாலில் மராத்தி மொழி தேவநகரி எழுத்து வடிவத்தில் மாறியுள்ளது.

பணியின் காரணமாக அம்பேத்கரின் குடும்பம் சதாராவிற்கு குடிபெயர்கிறது, அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அம்பேத்கர் திரும்பவும் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார். அங்கு தான் அம்பேத்கர் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்டுள்ளார். அங்குள்ள ஆசிரியர் பெயர் தான் அம்பேத்கர் என்று பொய் கூறப்படுகிறது. அம்பேத்கர் அந்த பள்ளியில் சேர்ந்த அன்றே பள்ளி பதிவேட்டில் பீவா ராம்ஜி அம்பேத்கர் என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் சேர்ந்த அன்றே அம்பேத்கர் பீமா ராம்ஜி அம்பேட்கர் என்று மராத்தி மொழியில் மோடி எழுத்தில் கையெழுத்து இட்டுள்ளார். அந்த பதிவேடு இன்றும் அம்பேத்கர் படித்த பள்ளிக்கு அருகாமையில் உள்ள பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கையெழுத்தில் உள்ள அம்பேத்கர் கையெழுத்தை தமிழக அரசு செயலாளராக பணியாற்றிய மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆட்சியர் அதிகாரி விஷ்வநாத் ஷெகாவ்கர் என்பவர் உறுதி செய்துள்ளார்.

எனவே அம்பேத்கர் என்பது ஆசிரியரின் பெயரல்ல. அது அவரின் இயற்பெயர் என்பது உறுதியாகிறது.

1916 ஆம் ஆண்டு அமெரிக்கா செல்வதற்கு அம்பேத்கர்   பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது தனது இயற்பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றும் தனது தந்தை பெயர் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர் என்றும் தன் கைப்பட எழுதியுள்ளார். அதற்கான ஆதாரமும் உள்ளது.

மேலும் அம்பேத்கரின் தந்தை ஆங்கிலேயருக்கு அனுப்பிய கடிதங்களில் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர் என்று கையெழுத்திட்டுள்ளார். அந்தக் கடிதங்களை தன் தந்தையின் காப்பக பெட்டியில் பழைய காகிதக் கட்டுகளிலிருந்து கண்டெடுத்ததாக பிற்காலத்தில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

ஆகவே அம்பேத்கர் எனும் பெயர் அவரின் தந்தை பெயரிலிருந்தே புரட்சியாளர் அம்பேத்கருக்கு வந்துள்ளதே தவிர அது எந்த  ஒரு ஆசிரியர் பெயரும் அல்ல. இவை யாக்கன் அவர்கள் தனது "கழுவப்படும் பெயரழுக்கு" நூலில் கொடுத்துள்ள தரவுகளாகும் .
ஈரோட்டு கிழவன் கலகக்காரன் ...

இந்திய சமூக சாஸ்திரங்கள் மற்றும் பழக்க வழக்கங்களில் தமிழ் சமூகம் சில காரணிகளில் தனித்து நிற்கும் , அது எவ்வித சமரசமுமின்றி இந்தியாவில்...