Thursday, February 18, 2016

பேசும் இதயம் 3

எனக்கு பிடித்தவள்
நீ,,,
தள்ளிப்போகச்
சொல்கிறாய்
வலித்தது தமிழுக்கு
ஆங்கிலத்தில்
உச்சரிக்கிறாய்
அதனை,,,
__________

சிலுவை சுமப்பதாலே
நான் தேவனாகிறேன்
அறைந்த நீங்களோ
அண்ணாந்து
பார்க்கிறீர்கள்
எதுவாக வேண்டும்
நான் உங்களுக்கு
இந்த கவிதையாகவா,,,
__________

குளித்தெழும்போது
கூடவே
ஒட்டிக்கொள்கிறாள்
உடம்பில்
பனித்துளிகளை,,,
__________

ஒட்டு நகம்
கூட இல்லை
விரல்
வைத்து கடிக்கும்
பழக்கத்தில் என்னையே
கடித்துக் கொள்கிறாய்
கடிந்து கொள்ளவில்லை
நான்,,,
__________

என்னைப் பற்றி
ஏதோவொரு
தோழியிடம்
விசாரிக்கிறாய்
உன்னைப் பற்றி
என்னை நானே
பெயர்த்தெடுத்தேன்
என்பதறியாமல்,,,
__________

பணம், பேர், புகழ்
எதுவும் வேண்டாம்
ஒற்றை
தாமரை இலையில்
ஒட்டிக்கொண்டு
நீருக்கு பொறாமை
ஏற்படுத்திட வேண்டும்
என மனமேங்குகிறது,,,
__________

பசிக்கு உணவு தேடும்
குழந்தை முத்தத்தால்
நனைகிறது
அதுவொன்றே
கிடைத்துவிடுகிறது
அப்போதைய
அழுகைக்கு,,,
__________

உனது பெயரை
உச்சரிக்கையில்
அழுத்தத்தால்
அடிபடக் கூடாது
என்பதற்காகத்தானோ
நாவிற்கு
எலும்பில்லாமல்
போனதோ,,,
__________

பூக்கள் கூடி
அழைக்கையில்
முகம் மலர்கிறாய்
கருணை காட்டு
நான்தான் சுமக்கிறேன்
நீயழைத்த பூக்களை,,,
__________

அவன்
வெட்கப்படுகிறான்
என் கைகளில் வைத்த மருதாணி
முளைக்கிறது
மீண்டும் செடியாக
எனது வெட்கத்தை
அவன்
பறிக்கத் தயாராகிறான்,,,
__________

ஏதோ ஒரு காரணத்தால்
பேசக்கூடாதென்கிறாய்
காரணத்தை
திட்டுகின்றேன்
ஏதும் அறியாதவளாய்,,,
__________

வாசலை தொட்டாள்
அவையில் வெளிச்சம்
அவள்
ஒருவளுக்காகவே
வாசித்து விடுகிறேன்
எழுதிய கவிதையை புரிந்திருக்கும்
அவளுக்கு,,,
__________

என்னை கருவில்
சுமந்தவள்
ஊட்டி விடுகிறாள்
"தாய்மண்"
உணர்வை,,,
தவிர எனது மண் எது?
எனும்
யுகக்கேள்வியோடு
புதைந்து விடுகிறதென்
வாழ்வு,,,
__________****__________

6 comments:

  1. வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள்.
    குக்கூ என்பது, ஐக்கூவுக்கு வானம்பாடிக் கவிஞர் மீரா வைத்த பெயர். நீங்கள் அந்த வடிவம் மீறியும் எழுதி அந்தப் பெயரை வைக்க, சிறப்பான காரணம் ஏதும் உண்டா நண்பரே?
    அப்புறம், பின்பற்றாளர் (Follower) பெட்டியை இணைத்தால் என்போலும் கவிதைக் காதலர் தொடர உதவுமல்லவா? நன்றி

    ReplyDelete
  2. ஹைக்கூவிற்கென்று தனியான பக்கங்களை வைத்திருக்கிறேன்
    தோழர்!
    இதுபோல,,,

    http://arumbithazh.blogspot.in/2016/02/blog-post_18.html

    ஐக்கூவுக்கு வானம்பாடிக் கவிஞர் மீரா வைத்த பெயர். நீங்கள் அந்த வடிவம் மீறியும் எழுதி அந்தப் பெயரை வைக்க, சிறப்பான காரணம் ஏதும் உண்டா நண்பரே?
    #குக்கூ திரைப்படம் வருவதற்கு முன்னால்
    கூகுள் தேடுபொறியில்
    "குக்கூ" என தேடினால் கவிஞர் மீராவின் ஐக்கூ கவிதைகளை கொட்டித் தெளிக்கும், ஆனால் தற்போது குக்கூ சம்மந்தப்பட்ட திரைப்படத்தின் பாடல் , காட்சி, அதன் ட்விட்டர் பேஸ்புக் விருப்ப கணக்கென்று மட்டும் காட்டுகிறது, மேற்படி
    "குக்கூ" என்கிற தலைப்பில் கவிதைகள் நிறைய எழுதுவதன் மூலம் கூகுள் தேடுபொறியால் பின்னுக்கு தள்ளப்பட்ட கவிஞர் மீராவின் ஐக்கூக்களை மீண்டும் முதன்மை படுத்தமுடியும் , அந்த முயற்சியினால் குக்கூ தலைப்பிட்டிருக்கிறேன்.
    உதாரணத்திற்கு எனது வலைப்பக்கத்தையே எடுத்துக்கொள்ளலாம் "அரும்பிதழ்" என கூகுளில் தேடினால் எனது சம்மந்தப்பட்ட சுட்டிகளையே காட்டும்.
    இணையத்தில் மிக எளிமையாக கிடைக்கப்பெற்ற கவிஞர் மீராவின் குக்கூ கவிதைகள், நிலா ரசிகன், பனிதுளி சங்கர் போன்றோரின் கவிதைகள் இன்று கிடைக்க கடினமாக இருக்கிறது. அதனை எளிமையாக்குவதற்கான சில யுக்திகள் இவை,
    பின்தொடர் பகுதியை விரைவில் வைத்துவிடுகிறேன்.
    தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete
  3. Arumaiyaana kavithaikal...

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...