Saturday, May 21, 2016

அக்பர்- ராணாபிரதாப் பெயர் மாற்றம்தான் பாஜகவின் வளர்ச்சித் திட்டமா?





பதிவை வாசிப்பதற்கு முன்னால் ஏற்கனவே 17 நவம்பர் 2015 அன்று எழுதிய
இப்பதிவை   அவுரங்கசீப் சாலை, அப்துல் கலாம் சாலையான,,, "பதிவு" ஒரு கருத்தை மாற்றுமா?         வாசிப்பது நன்று, இந்துத்துவ பார்ப்பானிய ஆர்எஸ்எஸ்
தாய்பிறப்பான பாஜகவின் தொடர் இசுலாமிய சிறுபான்மையின மக்களின்
அடையாளங்களை அழித்துக்கொண்டிருக்கிறது.

இந்திய தேசம் பல பிரச்சனைகளில் சிக்கி திணறிக்கொண்டுள்ளது. தொழில்
மற்றும் விவசாயத்தின் வீழ்ச்சி கவலை தருகிறது. விலைவாசியும் வேலையில்லாத்
திண்டாட்டமும் மக்களை வாட்டி வருகின்றன. 10 மாநிலங்களில் 284 மாவட்டங்கள்
வறட்சியில் சிக்கி தவிக்கின்றன. வரலாறு காணாத வறட்சி மக்களை துன்பத்தின்
எல்லைக்கே துரத்திவிட்டது. வெயில் காரணமாக 400க்கும் அதிகமானோர்
மாண்டுவிட்டனர். இவையெல்லாம் பாஜக அமைச்சர்களுக்கு முக்கிய பிரச்சனைகளாக
தெரியவில்லை.

ஹரியானா பாஜக முதல்வர் திரு.கட்டார் அக்பர் சாலையை உடனடியாக மகாராணா
பிரதாப் சாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் இது மிக அவசர
பிரச்சனை எனவும் வி.கே.சிங்கிற்கு கடிதம் எழுதினார்.

உடனே திரு. சிங் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் திரு. வெங்கையா நாயுடுக்கு
இதே பிரச்சனையை வலியுறுத்தி கடிதம் எழுதுகிறார்.  இவர்களின் திட்டம்
தெளிவானது! தமது கையாலாகத்தனத்தால் துன்பங்களில் துடிக்கும் மக்களின்
கவனத்தை திசைதிருப்புவதே உடனடி நோக்கம்! எனினும் இந்தியாவின் வரலாற்றை
மாற்றி எழுதுவதும் இந்துத்துவா வரலாறுதான் இந்தியாவின் வரலாறு என
நிலைநாட்டுவதும் இவர்களின் நீண்டகால நோக்கம் ஆகும்.

அக்பர்- ராணாபிரதாப் வரலாற்றின் இரு வெளிப்பாடுகள் :-

அக்பர் மற்றும் மகாராணா பிரதாப் இருவருமே இந்திய வரலாற்றின் குறிப்பிட்ட
காலகட்டத்தில் தமது முத்திரையை பதித்த இரு மன்னர்கள். இந்து மதம் உட்பட
அனைத்து மதங்களையும் அரவணைத்த முகலாய மன்னன் அக்பர் என்பது வரலாற்று
உண்மை! இசுலாத்தில் சுஃபி பிரிவை வலுவாக ஆதரித்த மன்னன் அக்பர். சுஃபி
பிரிவு இந்து மதம் உட்பட அனைத்து மதங்களையும் அரவணைக்கும் தன்மை உடையது.
சுஃபி பிரிவு முகலாய மன்னர்கள் காலத்தில் கிட்டத்தட்ட அரச மதமாகவே
இருந்தது என சில வரலாற்று அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். ஐ.எஸ்.,
அல்கொய்தா உட்பட பல இசுலாமிய தீவிரவாத அமைப்புகள் சுஃபி பிரிவின் அனைத்து
அடையாளங்களையும் அழிப்பது மட்டுமல்ல சுஃபி பிரிவினரை கொல்கின்றனர்
என்பதும் கவனிக்கத்தக்கது.

அக்பர் தமது படையின் வலிமையாலும் சுஃபி பிரிவின் கருத்து அடிப்படையிலும்
பல இந்து மன்னர்களை குறிப்பாக வீரத்திற்கு பெயர் போன இராஜபுத்திர
மன்னர்களை தனக்கு ஆதரவாளர்களாக மாற்றினான். இதன் அடிப்படை நோக்கம் தனது
சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவது என்பதாகும். அக்பரின் அணுகுமுறைக்கு
இறுதிவரை இடம் தராத மன்னன்மகாராணா பிரதாப் என்பதில் ஐயமில்லை. இருவருக்கு
இடையே பல போர்கள் நடந்தன. சில போர்களில் அக்பர் வென்றான் எனில்
சிலவற்றில் ராணா பிரதாப் வென்றான்.

இப்போர்களின் நோக்கம் என்ன? தனது அரசியல் அதிகாரத்தை விரிவுபடுத்துவது
என்பது அக்பரின் நோக்கம்! தனது ஆட்சியின் அரசியல் அதிகாரத்தை அக்பரிடம்
இழக்கக்கூடாது என்பது ராணாவின் நோக்கம். அக்பர் இசுலாமியத்தை
நிலைநாட்டவும் ராணா இந்து மதத்தை பாதுகாக்கவும் போரிடவில்லை. ஏனெனில்
ராணாவுக்கு எதிராக போரில் தளபதிகளாக செயல்பட்டது பல இராஜபுத்திர
மன்னர்கள்தான்! இப்போரின் அடிப்படை முரண்பாடு மதம் எனில் இந்து மதத்தைச்
சார்ந்த தளபதிகள் ராணாவுக்கு எதிராக போரிட்டிருக்கமாட்டார்கள்! அரசியல்
அதிகாரம்தொடர்பான முரண்பாடுகள்தான் அடிப்படை பிரச்சனை. எனினும்
அக்பருக்கு இறுதிவரை சிம்மசொப்பனமாக இருந்த ஒரு மன்னன் ராணா பிரதாப்
என்பது வரலாற்று உண்மை! அந்த வகையில் ராணா பிரதாப்பின் உறுதியையும்
வீரத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.

இந்திய வரலாற்றின் இரு வெளிப்பாடுகளாக அக்பரும் ராணா பிரதாப்பும்
விளங்குகின்றனர். எனவே மகாராணா பிரதாப்பின் பெயரை முக்கிய சாலைக்கு
வைப்பதில் எவரும் முரண்பட இயலாது! ஆனால் இதற்காக அக்பர் பெயரை
நீக்கிவிட்டு ராணா பிரதாப் பெயரை சூட்டவேண்டுமா என்பதுதான் கேள்வி!
புதியதாக உருவாக்கப்படும் சாலைக்கோ அல்லது நகருக்கோ ராணாபிரதாப் பெயரை
சூட்டுவதில் எவருக்கு ஆட்சேபணை இருக்க முடியும்! இதைவிடுத்து அக்பர்
பெயரை நீக்குவது என்பதில் இந்துத்துவா பின்னணி உள்ளது என்பது மறுக்க
முடியாது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு :-

இதனை அனுமதிக்கக் கூடாது எனவும் இதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு
தெரிவிக்குமாறும் நீதியரசர் சச்சார் அவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு
கடிதம் எழுதியுள்ளார். தில்லி சாலைகளுக்கு பெயர் வைப்பது என்பது
புதுதில்லி முனிசிபல் கவுன்சில் எனும் அமைப்பின் அதிகார வரம்புக்கு
உட்பட்டதாகும். இதன் தலைவர்அரவிந்த் கெஜ்ரிவால். ஏற்கனவே 
அவுரங்கசீப் சாலை, அப்துல் கலாம் சாலை     என
பெயரிடப்பட்டது. இதற்கு அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆதரவு அளித்தார்.
அப்பொழுதும் பலத்த விவாதம் நடைபெற்றது.
எனினும் சில காரணங்களால் எதிர்ப்பு பலமாக உருவாகவில்லை. அவுரங்கசீப் ஒரு
ஆழமான மதவெறியன் எனும் கருத்து பரவலாக உள்ளது. (இதுமுழு உண்மை அல்ல
என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து) அப்துல் கலாம் இறந்த சில நாட்களில்
இப்பெயர் மாற்றம் நடைபெற்றது. இதனை எதிர்ப்பது என்பது பொருத்தமானது அல்ல
எனும் சூழலும் இருந்தது. இக்காரணங்களால் எதிர்ப்பு வலுவாக இல்லை. எனினும்
சங்பரிவாரம் மிகவும் நயவஞ்சகத்துடன் இந்த பெயர் மாற்றத்தை
அமல்படுத்தியது. இந்த வஞ்சகமான நோக்கத்தை அரவிந்த் கெஜ்ரிவால்
உணர்ந்திருந்தால் அப்பொழுதே இதனை தடுத்திருக்கலாம். அதன் தொடர்ச்சியாக
இப்பொழுது அக்பரின் பெயரை அழிக்க முயல்கின்றனர்.


ஒரு சாலையை பெயர் மாற்றம் செய்வதால் போக்குவரத்து நெருக்கடி குறைவது
இல்லை. அவுரங்கசீப் சாலை அப்துல்கலாம் சாலை ஆன பிறகும் விபத்துகள் நடந்த
வண்ணம்தான் உள்ளன. தில்லியில் ஒரு முக்கிய பகுதிக்கு கோப்பர் நிகஸ்
மார்க் என பெயர் உள்ளது. கோப்பர்நிகஸ் ஒரு மிகப்பெரிய கணித மற்றும்
வானியியல் மேதை. ஆனால் இந்தியர் அல்ல. நாளை கோப்பர் நிகஸ் மார்க் என்பதை
மாற்ற வேண்டும் என கோரிக்கை உருவானாலும் ஆச்சரியம் அடைய வேண்டியதில்லை!

மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் பெரும் தோல்வி கண்ட ஆட்சியாளர்கள்
இத்தகைய திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். திசை திருப்புவது
என்பது உடனடி நோக்கம்தான்! இந்திய வரலாற்றை மாற்றி எழுதுவது என்பது
நீண்டகால நோக்கம். இதற்கு இன்று அக்பரின் பெயரையும் மகாராணா பிரதாப்பின்
பெயரையும் பயன்படுத்துகின்றனர். இதனை அனுமதிப்பது ஆபத்தான ஒன்று! மகாராணா
பிரதாப்பின் பெயரை புதிய சாலைக்கு சூட்டுவதை ஆதரிக்கும் அதே வேளையில்
அக்பரின் பெயரை அகற்றி மகாராணா பிரதாப்பின் பெயரைசூட்டுவது வலுவாக
எதிர்க்கப்பட வேண்டும்.
 பகிர்வு- தீக்கதிர்


2 comments:

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...