Wednesday, February 18, 2015

முண்டச்சி முறையிடல்

தேங்கி கிடந்த
சருகிலைகள்
அதன்மேல்
மிதந்து மீண்டுவர முற்படுகிறது
மீந்துபோன
பனித்துளிகள்

அனிச்சை
வார்த்தைகளில்
ஆங்காங்கே
வழிந்தோடும்
வாழ்க்கை
கோடுகளை
கண்டும் கானாது சேகரிப்பில்
இறங்கிய
சேற்றுப் புழுதிகள்

வாழ்வினிது
வையகம்பெரிது
வசனங்கள்
அறியுமா
வரிக்குதிரை
வடுக்களை
தாங்கிய
உதிர்ந்துபோன
அச்சருகிலைகள்

மெஞ்ஞானம்
விஞ்ஞானம்
இரண்டும்
ஆராய இறுதிபக்கம்
முடிந்த தாளில் முற்றுப்புள்ளியாக
மூழ்கி கிடக்கிறது அச்சருகிலைகள்

குனிந்த தலையுடனே குளத்தங்கரையில் முண்டச்சி

முடிவளர்ந்தது போல் மீண்டெழுந்தது
மரங்களில் புதுக்கொழுந்துகள்

முழுதாய் பாரமில்லை ஆனாலும்
வலிக்கிறது
மகரந்தம் பரப்பும் பறவைகளே
பட்டாம்பூச்சிகளே இம்முண்டச்சி
மீண்டெழும்
மீட்சிக்கான வழிச்சொல்லுங்களேன்

வெ­ட்டுண்டும் துளிர்க்குமாம்
முருங்கை மரம்
வீட்டருகே
நட்டுவைத்தும் வெற்றிடங்களே
வாழ்வுதனை
நிரப்பியது

எந்தன் வெள்ளை நிறத்திற்கு எப்போது விடுதலை
குறிகேட்க வந்திருக்கிறேன் கூறிவிடுங்கள்
சருகிலைகளே

குற்றமேதும்
செய்யவில்லை
கத்திவிட்டு கிழிக்கிறார்கள்

வீதியெங்கும்
இவ்வுடலை
வேடிக்கை பார்த்தே நடக்கிறார்கள்

நானுமொரு
வெண்ணிற
பூனைதான்

பொறு,,
முண்டச்சி
குறுக்கே
போகிறாள்
மூழ்கிப்போகும்
முக்கிய
காரியமென்று
மூக்கைச் சிந்தும் மூர்க்கமான
இவ்வுலகில்

எழிலழகு
எல்லாம்
பெண்னென
போற்றப்பட்டது என்னைத்தவிற

எந்தன் வெள்ளை நிறத்திற்கு எப்போது விடுதலை
குறிகேட்டு வந்திருக்கிறேன் கூறிவிடுங்கள் சருகிலைகளே,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...