Sunday, November 29, 2015

நடிகர்களை "கூத்தாடிகள்" என இழிவுபடுத்துவது சரிதானா?

திரையுலக கலைத்துறையினரை
விமர்சிக்கவும்,அவர்களை கீழ்த்தரமாக
வசைபாடவும் பெரும்பாலான
தமிழ்ச்சமூக மக்களால்
பயன்படுத்தப்படும் வார்த்தை
"கூத்தாடிகள்" என்பதாக இருக்கிறது.
எழுத்துலக விமர்கர்களும் , அறிவுலக
முற்போக்காளர்களும் இதற்கு
விதிவிலக்கல்ல,அவர்களும்
திரையுலக விமர்சனத்திற்கு
"கூத்தாடிகள்" என்றே
பயன்படுத்துகின்றனர். இது பொதுவாக
இழிவுபடுத்தவே
பயன்படுத்தப்படுகிறது என்பதை
அனைவரும் அறிவார்கள்,
கலைத்துறை சார்ந்தோரை
"கூத்தாடிகள்" என இழிபடுத்துவது
சரியா? என்கிற கேள்வி எழுகிறது,
இதற்கு எவ்வித தமிழ் ஆராய்ச்சிக்கும்
செல்ல விரும்பவில்லை, அதன்
நடையிலேயே "கூத்தாடிகள்" எனும்
கலையை நேரடியாகவே
இழிபடுத்துகிறார்கள் என்பது
உள்ளங்கை நெல்லிக்கனி போல
தெளிவாகிறது. இது சரியான
நடவடிக்கை தானா? சரியான புரிதல்
தானா? எனும் கேள்விப்பதம்தான்
தற்போதெழும் அவசியத் தேவையாக
இருக்கிறது.
நம் தாய்த்தமிழில் இயல் ,இசை,
நாடகம் எனும் முத்தமிழ் போற்றியே
தமிழை வளர்த்திருக்கின்றோம். சங்க
இலக்கியத்தை தாயாக இருந்து
வளர்த்தவைகளாக "முத்தமிழ்"
இருந்திருக்கிறது. இம்மூன்றும் ஒரு
சேர ஒரே அரங்கில் பண்டைய
காலத்திலேயே ஏற்றியிருக்கிறார்கள்.
பண்டைய காலத்தில் சிறப்புற்று
விளங்கிய "கூத்தாடிகள்" எனும் சொல்
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான
இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது. "ஊர்
ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு
கொண்டாட்டம்" என்பது அப்போதுதான்
பரவலாக்கப்பட்டிருக்கி
றது.முதன்முதலாக "கூத்தாடிகள்"
எனும் சொல் இதிலிருந்தே
இழிபடுத்தப்பட்டிருக்கக் கூடும், ஓர்
ஊரானது இரண்டாக பிரிந்து இரண்டு
இனக்குழுக்களும் ஒருவரையொருவர்
தாக்கிக்கொண்டால் அவர்களை
சமாதானம் செய்து சமரச உடன்பாடு
செய்ய வேண்டிய தன்
கடமையிலிருந்து "கூத்தாடிகள்"
நழுவி தங்கள் வியாபாரப்
பணவரவையே நோக்கமாக
கொண்டிருக்கிறார்கள் என்பதாக
மேற்கண்ட வழக்க சொலவடை
இருப்பதாக நமக்குத் தெரிகிறது. இதன்
மூலம் கூத்தாடிகள் முதன்முதலாக
இழிபடுத்தப்படுகிறார்கள் என்பதாக
உணர்த்தப்படுகிறது. இந்தச் சொலவடை
பண்டையக்காலங்களில் இருந்ததாக
தெரியவில்லை இரண்டாம்
தலைமுறைகள் உறுவாக்கம் பெற்ற
பின்னர்தான் வழக்கத்திற்கு
வந்திருக்கிறது அதாவது மேடை
நாடகங்கள் புகழுறும் காலத்தில்
வந்திருக்கிறது. மேடை நாடகங்கள்
அடுத்தக்கட்ட நகர்வான சினிமா எனும்
திரைத்துறையில் கால்பதிக்கும்
காலத்தில் யாராலும் மறக்கமுடியாத
மனதில் அழியாத புகழுடையோர்களாக
தியாகராஜ பாகவதர் ,
சிவாஜிகணேசன்,எம் ஜி ஆர்,
போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.
கலைத்துரையினர்கள் மத்தியில்
பல்வேறு போட்டிகள் நிலவிய
காரணத்தினால் மக்கள் அவர்களுக்கு
பிடித்தமான நடிகர்களை
விட்டுக்கொடுக்காத விவாதங்களில்
வெகு தீவிரமாக மேற்கண்ட சொலவடை
பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது .
ஆனாலும் அதனை வெளிப்படையாக
விமர்சனம் என்கிற கட்டத்துக்குள்
மக்கள் எடுத்துச் செல்லவில்லை
காரணம் மேடை நாடகங்கள் மற்றும்
சினிமா கலைத்துறை மூலம்
வெகுசன மக்களுக்கு அதிதீவிரமான
சமூக மாற்ற விழிப்புணர்வு
கொள்கைகளை பரப்பினார்கள். மேலும்
சமூகத்தில் ஏற்பட்டுள்ள
பிளவுகளையும்,சமூக
அவலங்களையும் கண்டித்து பல்வேறு
மேடை நாடகங்களையும்,திரைப்
படங்களையும் கொடுத்திருக்கிறார்கள்
கூத்தாடிகள் எனும்
கலைத்துறையினர். குலக்கல்வி
முறையை கண்டித்து மேடை
நாடகங்களை அரங்கேற்றயதற்காக
அன்றைய ராஜாஜி அரசு நடிகவேள் எம்
ஆர் ராதா அவர்களை கைது செய்து
சிறையடைத்து சட்டமன்றத்தில்
தீர்மானம் நிறைவேற்றியதாக
வரலாறு, தியாராஜ பாகவதர் அப்போதே
விதவை மறுமணம் குறித்தான
விழிப்புணர்வினை
ஏற்படுத்தியிருக்கிறார், சுதந்திர
போராட்டத் தியாகிகளை நம்
கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்
சிவாஜிகணேசன், என அன்றை
சினிமாவின் சமூக அக்கரைப் பணிகள்
நீண்டுக்கொண்டே செல்கின்றன,
அப்போதும் கூத்தாடிகள் என
இழிபடுத்தப்பட்டிருந்தாலும் அதன்
தன்மை அவ்வளவாக
பாதிப்பாகவில்லை , ஆனால் இன்றைய
காலக்கட்டத்தில் மிகத்தீவிரமாக
"கூத்தாடிகள்" இழிபடுத்தப்பட்டு
வருகிறது. கிட்டத்தட்ட அதன்
எல்லையைத் தாண்டி அடுத்தவரை
திட்டுவதற்கு கூட ஆங்காங்கே
பயன்படுத்தப்படுகிறது . உண்மையில்
நடிப்புத் தொழிலை செய்பவர்களின்
குறியீட்டு கலைச் சொல்லான
"கூத்தாடிகள்" என்பதை
இழிபடுத்துவது நாகரீகமானதா என்று
சிந்திக்க வேண்டும். அன்றைய
நடிப்புத் தொழில் புரிந்தோரின் சமூக
அக்கரையினை துளிகூட இன்றைய
நடிப்புத் தொழிலாளர்கள் பெற்றிருக்கா
விட்டாலும் அவர்களின் தொழிலை
கேவலப்படுத்தி "கூத்தாடிகள்" என
குறிப்பிடுவது அபத்தமாக இருக்கிறது.
ஏனெனில் இங்கே தொழிலின்
அடிப்படையினான பல்வேறு
கலைச்சொற்களை
கேவலப்படுத்துவதை நாம் அன்றாடம்
பார்க்கின்றோம்.இது சரியான
அணுகுமுறைதானா என்று பரிசீலனை
செய்ய கடமைபட்டுள்ளோம்.
அதுமட்டுமில்லாது அக்கால
கலைத்துறை நடிகர்களை போல சமூக
அக்கரையில் தங்களை அர்பணிக்க
இன்றைய கலைத்துறை நடிகர்கள்
முன்வர வேண்டும். ஒரு பொழுதுபோக்கு
அம்சமாக அல்லாமல் கொஞ்சமேனும்
சமூக அக்கரை விழிப்புணர்வு கொண்ட
காட்சிகளை கலைத்துறையினர்
முன்னெடுக்க வேண்டும்.
அதுமட்டுமே அவர்களின் கலைச்
சொல்லான "கூத்தாடிகள்" என்பதை
இழிவுபடுத்துவதிலிருந்து தடுக்கும்.
சினிமா ரசிகர்கள் உண்மையில்
திரையில் காண்பிக்கப்படும்
செயல்களையே நிஜத்தில் நடிகர்களும்
கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து
வெளியேறி நடிப்பு மட்டுமே அவர்கள்
தொழில் அவர்கள் நடிக்கிறார்கள்
நிஜமென்பது வேறென்று உணர்ந்து
அதீதி பற்றின் காரணமாக எழும்
கோபத்திலிருந்து வெளியேறினால்
நன்றாக இருக்கும். "பயணம்" என்றோரு
படத்தில் கடத்தப்பட்ட ஒரு
விமானத்தில் இக்காட்சியை
அருமையாக வடிவமைத்திருப்பார்கள்.
ஒருவன் தன் தொழிலை
இழிபடுத்துவதை எந்த விதத்திலும்
அனுமதிக்காத பொழுது அந்த ஒருவன்
மற்ற தொழிலை இழிவுபடுத்துவது
தவறென்று உணர மறுப்பதன்
விளைவே இன்று "கூத்தாடிகள்"
எனும் கலைச்சொல்
இழிவுபடுத்தப்படுவதற்கான
காரணமாய் அமைகின்றது.
கூத்தாடிகள் எனும் சினிமா நடிகர்கள்
மீது நமக்கு பல்வேறு விமர்சனங்கள்
இருந்தாலும் கலைக்கான
கலைச்சொல்லை இழிவுபடுத்த
இழுப்பதனால் சினிமா மட்டுமல்லாது
அதையும் தாண்டிய பல்வேறு
கூத்தாடிகள் தொழிலாளர்களையும்
சேர்த்தே நாம் இழிவுபடுத்துகிறோம்
என்பதை உணர்ந்து விமர்சனம்
தவிர்ப்பது நமக்கான நல்லதொரு
பாதையாக அமைகின்றது. இதில் நாம்
கழைக்கூத்தாடிகளையும் சேர்த்தே
இழிபடுத்துகிறோம் என்றுணர
வேண்டும்.

3 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள் சார்... அது ஒரு பேசன்.. அடுத்தவர் சொல்வதை அப்ப்டியே நாமும் சொல்ல வேண்டும்... என்ற எண்ணம்

    ReplyDelete
  2. புதிய பார்வை....ரசித்தேன் ...முடியுமெனில் என் தளத்திற்கும் வாருங்கள் நண்பரே...
    http://naanselva.blogspot.com/

    ReplyDelete
  3. இது கால ஓட்டத்தில் வந்த போக்கு, ஆனால் கூத்து ஒரு தொழில் அதுவும் மனிதனை மகிழ்வித்ததுடன் , நீதியையும் கூறியது.
    "தில்லையுட் கூத்தனே, தென் பாண்டி நாட்டானே! அந்த கூத்தபிரான் சிவனையே குறிக்கும் சொல்"
    நாற்றம் எனும் அழகான தமிழ்ச் சொல் கெட்ட வாசனைகளுகே புழக்கத்தில் உள்ளது போல்! இதுவும் ஆகிவிட்டது.

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...