Sunday, November 22, 2015

என்னுள் நீயாக,,,

நானாக என்னுள்
நீயாக
நம்மில் மெய்யாக
உயிரின் அர்த்தங்களை
உள்ளங்கையில்
சேகரித்திருக்கிறோம்

செங்காந்தள் மலராக
சீமை விளக்காக
ஞானப் பொருளாக
நமக்குள்ளே
காதல் வீதியுலா
வருவதற்கு வாழ்க்கை
கனவுகளை தீர்மானித்து
வைத்திருக்கிறோம்

வந்ததும் சென்றதும்
வரப்போவதுமாக
நிஜங்களை விழுதுகளாக நிழல்களை இரவாக
இமைகளின் இம்சைகளாக
ஒன்றிக் கலந்து
உறவாடும் உன்னத
பரிமாற்ற நிகழ்வுகளை
பக்குவப்படுத்தி
வைத்திருக்கிறோம்

வாழலாம் வாவென
அழைக்கிறாய்
வசந்தமாய்
வருகிறேனென
இசைகிறேன்

மலர்தேடும் தேனீக்கள்
மழைதேடும் மயில்கள்
இசைதேடும் குயில்கள்
நிலவுதேடும்
விண்மீன்கள்
கடல்தேடும் நதிகள்
இரைதேடும் பறவைகள்
இன்பமாய் நமை
வாழ்த்திட வருகின்றன
வரிசையில்

ஊடலும் கூடலும்
உன்னத காமச்சிறு
புனலும் காதலை
புகழ்ந்து பாடுகையில்
கண்ணெதிரே ஆடும்
கரிச்சாங்குருவிகளின்
மேள தாளங்களோடு
நம் திருமண முடிச்சுகள்

நமக்கே நமக்கான
நலின மயமான
வாழ்வியல் வாசலில்
வலதுகால் வேண்டாம்
இஷ்டப்படி உள்ளே வா
நம் உறவும் காதலும்
உண்மையதனால்,,,

பிரளயங்கள்
சடங்குகளின்
சந்ததிகளை அழிக்கும்

அழகே முத்துச்சிமிழே
முல்லை மலரே
வர்ணிக்கிறேன்
உனை நானும்

அழகா ஆண்மைப்
பேரழகா அகிலத்து
வானழகா
என்னிமைகளின்
ஏட்டழகனே
என்னையும் பெண்ணாக
மதித்தவனே மன்னவனே
வர்ணிக்கிறாய்
எனை நீயும்

இப்படியே
கடந்துபோகாதோ
யுகங்கள் பலவென்று
ஏங்கித் தவிக்கிறேன்
எழுதி முடித்த
கவிதையில்
இறுதி மூச்சாக நீ!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...