Friday, January 15, 2016

அரசியல் பொருளாதார நெருக்கடியைப் பற்றிய மார்க்சின் கோட்பாடு




("கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை"யின் முதல் அத்தியாயம் மற்றும் "கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்" என்ற நூலினில்
காணப்படும் கருத்துக்களைக் கொண்டு மார்க்சிய பொருளாதார நெருக்கடியின் கோட்பாட்டை எளிய அறிமுகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது)

மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின் உற்பத்தியும், உற்பத்திக்கு அடுத்தபடியாக, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் பரிவர்த்தனையுமே சமூகக் கட்டமைப்பு முழுமைக்குமான அடித்தளம் ஆகும். வரலாற்றில் உருவாகி வந்த ஒவ்வொரு சமுதாயத்திலும், செல்வம் வினியோகிக்கப்படும் முறையும், சமுதாயம் வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் முறையும், அந்தச் சமுதாயத்தில் என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் எவ்வாறு பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பதைச் சார்ந்து உள்ளது.

வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்துரு, இந்த வரையறுப்பிலிருந்தே தொடங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தின்படி, அனைத்து சமூக மாற்றங்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான முடிவான காரணங்களை, உற்பத்தி, வினியோக முறைகளில் ஏற்படும் மாற்றங்களில் கண்டறிய வேண்டும். இதற்கு மாறாக மனிதர்களின் சிந்தனைகளிலோ, நித்தியமான உண்மை, நித்தியமான நீதி குறித்த மனிதனுடைய முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வுகளிலோ அல்ல. அதாவது அத்தகைய காரணங்களை அந்தந்தக் குறிப்பிட்ட சகாப்தத்தின் பொருளாதார அமைப்புமுறையில் கண்டறிய முயல வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கம் உருப்பெற்று எழுவதற்கு தேவைப்படுகிற பொருளுற்பத்தி, பரிவர்த்தனை சாதனங்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையின் உள்ளே தோன்றிதாகும். நிலப்பிரபுத்துவத்தில் குறிப்பிட்ட பொருளுற்பத்தி, பரிவர்த்தனை சாதனங்களது வளர்ச்சி, நிலப்பிரப்புத்துவ சொத்துடைமை உறவுகள், வளர்ச்சியடைந்த உற்பத்திச் சக்திகளுக்கு பொருத்தமற்று போயிற்று. பொருத்தமற்ற உற்பத்தி உறவுகள் பொருளுற்பத்திக்கு பூட்டப்பட்ட விலங்குகளாய் ஆனது. உடைத்தெறிய வேண்டிய விலங்கை உடைத்தெறிந்து முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தேவைப்பட்ட தடையில்லாப் போட்டியும், அதற்கு பொருத்தமான சமூக, அரசியல் ஆதிக்கமும் தோன்றின.

எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்றதோ, அங்கெல்லாம் அது அனைத்து நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், பழைய மரபுவழி உறவுகளுக்கும் முடிவு கட்டியது. இந்த வகையில் முதலாளித்துவ வர்க்கம் வரலாற்றுரீதியாக, மிகவும் புரட்சிகரமான பாத்திரம் வகித்துள்ளது.

முதலாளித்துவவர்க்கம் தமது முதல் நூறாண்டுகள்கூட ஆகாத அதன் ஆட்சிக் காலத்தில், இதற்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமான உற்பத்திச்சக்திகளை உருவாக்கியது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல், எந்திர சாதனங்கள், தொழில்துறைக்கும் விவசாயத்துக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தல், நீராவிக் கப்பல் போக்குவரத்து, ரயில் பாதைகள், மின்சாரத் தந்தி, கண்டங்கள் முழுவதையும் திருத்திச் சாகுபடிக்குத் தகவமைத்தல், கால்வாய்கள் வெட்டி நதிகளைப் பயன்படுத்தல், மனிதனின் காலடிபடாத இடங்களிலும் மாயவித்தைபோல் பெருந்திரளான மக்களைக் குடியேற்றுவித்தல் போன்றவற்றை இதற்கு முன்பு கற்பனையில் காணமுடியாதவை நடைமுறையில் நடத்திக்காட்டிற்று.

ஆனால் வர்க்கப் போராட்டத்தை முதலாளித்துவம் முடிவுக்குக் கொண்டுவரவில்லை. பழையவற்றின் இடத்தில் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும் தோற்றுவித்து, புதிய போராட்ட வடிவங்களை உருவாக்கியது.

முதலாளித்துவ வர்க்கம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே அளவுக்கு நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கமும் வளர்கிறது. இந்த வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமக்கு வேலை கிடைக்கும் வரைதான் வாழ முடியும்; இவர்களின் உழைப்பு மூலதனத்தைப் பெருக்கும் வரைதான் இவர்களுக்கு வேலையும் கிடைக்கும்.

தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள், மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. உடனே தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் தொழிற்சங்கங்களை அமைத்துக்கொள்ளத் தொடங்குகின்றனர். கூலிகள் குறைந்து போகாமல் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவ்வப்போது மூளும் இந்தக் கிளர்ச்சிகளுக்கு முன்னேற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு, நிரந்தரமான சங்கங்களை நிறுவிக்கொள்கின்றனர். சில இடங்களில் இந்தப் போராட்டம் கலகங்களாக வெடிக்கிறது.

தொழிலாளர்கள் அவ்வப்போது வெற்றி பெறுகின்றனர். ஆனாலும் அது தற்காலிக வெற்றியே. அவர்களுடைய போராட்டங்களின் மெய்யான பலன் அவற்றின் உடனடி விளைவில் அடங்கியிருக்கவில்லை. எப்போதும் விரிவடைந்து செல்லும் தொழிலாளர்களின் ஒற்றுமையில் அடங்கியுள்ளது. நவீனத் தொழில்துறை உருவாக்கியுள்ள மேம்பட்ட தகவல் தொடர்புச்சாதனங்கள் இந்த ஒற்றுமைக்குத் துணைபுரிகின்றன. வெவ்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ள இவை உதவுகின்றன. எல்லாம் ஒரே தன்மை கொண்ட, எண்ணற்ற வட்டாரப் போராட்டங்களை வர்க்கங்களுக்கு இடையேயான ஒரே தேசியப் போராட்டமாக மையப்படுத்த இந்தத் தொடர்புதான் தேவையாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே ஆகும்

உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது. மனிதனின் செயல்பாடு என்னவெல்லாம் சாதிக்க வல்லது என்பதை முதன்முதலாக எடுத்துக் காட்டியது முதலாளித்துவவர்க்கம்தான்.

பெரிய தொழில்கூடங்களிலும் பட்டறைகளிலும், உற்பத்திச் சாதனங்களின் ஒன்றுகுவிப்பும், உற்பத்தியாளர்களின் ஒன்றுகுவிப்பும், அவை உண்மையான சமூகமயமான உற்பத்திச் சாதனங்களாகவும், சமூகமயமான உற்பத்தியாளர்களாகவும் ஆகிப்போன தன்மையை பெறுகின்றன. ஆனால், சமூகமயமான இந்த உற்பத்தியாளர்களும், உற்பத்திச் சாதனங்களும், அவற்றின் உற்பத்திப் பொருள்களும் இந்த மாற்றத்துக்குப் பின்பும், அவை முன்பு பாவிக்கப்பட்டது போன்றே, அதாவது, தனிநபர்களுக்குச் சொந்தமான உற்பத்திச் சாதனங்களாகவும் உற்பத்திப் பொருள்களாகவுமே பாவிக்கப்பட்டன.

புதிய உற்பத்தி முறைக்கு அதன் முதலாளித்துவத் தன்மையை அளித்திடும் இந்த முரண்பாடு, இன்றைய சமூகப் பகைமைகள் அனைத்தின் கருவைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. புதிய உற்பத்தி முறையானது, அனைத்து முக்கிய உற்பத்தித் துறைகளிலும், அனைத்துத் தொழில் உற்பத்தி நாடுகளிலும், எவ்வளவு பெரிய அளவில் ஆதிக்கம் பெற்றதோ, அந்த அளவுக்குத் தனிநபர் உற்பத்தியை சுருங்கச் செய்து, அற்ப சொற்பமாய் ஆக்கியது. அந்த அளவுக்குத் தெளிவாக, சமூகமயமாகிவிட்ட உற்பத்திக்கும் முதலாளித்துவக் கையகப்படுத்தலுக்குமான ஒத்திசைவின்மையைப் புலப்படுத்திக் காட்டியது.

உற்பத்தியாளர்கள் தங்களுடைய சமூகரீதியான பரஸ்பர உறவுகளின் மீதே கட்டுப்பாடு இழந்துவிடுகின்றனர். ஒவ்வொரு மனிதரும், தான் வைத்திருக்க நேர்ந்த உற்பத்திச் சாதனங்களைக் கொண்டு தனக்காகவும், தன்னுடைய ஏனைய பிற தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வகைசெய்யும் பரிவர்த்தனைக்காகவும் உற்பத்தி செய்கிறார். தன்னுடைய குறிப்பிட்ட சரக்குவகை எந்த அளவு சந்தைக்கு வரும், அந்தவகைப் சரக்குக்கு எந்த அளவு தேவை இருக்கும் என்றெல்லாம் எவருக்கும் தெரியாது. தன்னுடைய தனிப்பட்ட பண்டம் உள்ளபடியான தேவையைச் சரிக்கட்டுமா, தன்னுடைய உற்பத்திச் செலவை ஈடுகட்ட இயலுமா, தன் பண்டத்தை விற்க முடியுமா என்பதேகூட எவருக்கும் தெரியாது. சமூகமயமாகிவிட்ட உற்பத்தியில் அராஜகம் ஆட்சி புரிகிறது.

இப்படி வளர்ச்சியடைந்த நவீன முதலாளித்துவ சமுதாயம், பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துவிடுகின்றன. தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையை அடைகிறது. பத்தாண்டுக்கு ஒருமுறை வணகநெருக்கடியை சந்தித்து வருகிறது. வளர்ச்சியுள்ள நவீன உற்பத்தி சக்திகள் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் சொத்துடைமை உறவுகளுக்கும் எதிராக நடத்தும் கலவரத்தின் வரலாறேயாகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் வணிக நெருக்கடிகள் ஒட்டுமொத்த முதலாளித்துவ சமுதாயத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன.

இருப்பதுதான். சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள், முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இனிமேலும் உதவப் போவதில்லை. மாறாக, அந்த உறவுகளை மீறி உற்பத்தி சக்திகள் வலிமை மிக்கவை ஆகிவிட்டன. முதலாளித்துவ உடைமை உறவுகள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தடைகளாகிவிட்டன. உற்பத்தி சக்திகள் இந்தத் தடைகளைக் தகர்த்தெறியத் தொடங்கியதுமே அவை முதலாளித்துவ சமுதாயம் முழுமையிலும் குழப்பம் விளைவிக்கின்றன; முதலாளித்துவச் சொத்துடைமை நிலவுதற்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன. தாம் உற்பத்தி செய்யும் செல்வத்தைத் தம்முள் இருத்தி வைக்க இடம் போதாத அளவுக்கு, முதலாளித்துவ சமுதாய உறவுகள் மிகவும் குறுகலாகிப் போயின.

முதலாளித்துவ வர்க்கம் இந்த நெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்கிறது? ஒருபுறம், உற்பத்தி சக்திகளில் பெரும்பகுதியை வலிந்து அழிப்பதன் மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளை வென்றெடுப்பதன் மூலமும், பழைய சந்தைகளை இன்னும் ஒட்டச் சுரண்டுவதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது. அதாவது மேலும் விரிவான, மேலும் நாசகரமான நெருக்கடிகளுக்கு வழி வகுப்பதன் மூலமும், நெருக்கடிகளை முன்தடுப்பதற்கான வழிமுறைகளைக் குறைப்பதன் மூலமும் இந்த நெருக்கடிகளைச் சமாளிக்கிறது.

ஒரு சுற்றை முடித்து, மீண்டும் புதிய வணிக நெருக்கடியை சந்திக்கிறது, ஒவ்வொரு முறையும் நெருக்கடிகள் தொழிலாளர்களுடைய கூலிகளை எப்போதும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின் முடிவுறாத மேம்பாடு, அவர்களுடைய பிழைப்பை மேலும் மேலும் நிலையற்றதாக்குகிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள், மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன.

நிலப்பிரப்புத்துவ உற்பத்திமுறை எவ்வாறு வளர்ச்சியுள்ள உற்பத்தின் சக்தியின் காரணமாக வீழ்ந்ததோ, அதே நிலை முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் நேரும் என்பதே உண்மை.

இந்த நெருக்கடிகளில், சமூகமயமான உற்பத்திக்கும், முதலாளித்துவக் கையகப்படுத்தலுக்கும் இடையேயான முரண்பாடு ஒரு மூர்க்கமான எழுச்சியில் முடிகிறது. பண்டங்களின் புழக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. புழக்கத்துக்குரிய சாதனமாகிய பணம், புழக்கத்துக்கு இடையூறாய் ஆகிவிடுகிறது. உற்பத்தி, பண்டங்களின் புழக்கம் தொடர்பான அனைத்து விதிகளும் தலைகீழாய் மாறிவிடுகின்றன. பொருளாதார மோதல் அதன் உச்சநிலையை எட்டிவிட்டது. உற்பத்தி முறை, பரிவர்த்தனை முறைக்கு எதிராகக் கலகம் புரிகிறது.

நவீன உற்பத்திச்சக்திகளைத் தொடர்ந்து நிர்வகிப்பதற்கு முதலாளித்துவம் ஆற்றலற்றதாகிவிட்டது என்பதை நெருக்கடிகள் கண்கூடாகக்குகின்றன என்றால், பொருளுற்பத்திக்கும் வினியோகத்துக்குமான மாபெரும் ஏற்பாடுகள் கூட்டுப் பங்குக் கம்பெனிகளாகவும் டிரஸ்டுகளாகவும் அரசு உடைமைகளாகவும் மாற்றப்பட்டிருப்பது முதுலாளித்துவ வர்க்கத்தினர் இந்தக் காரியத்துக்கு எவ்வளவு தேவையற்றவர்களாகி விட்டனர் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. முதலாளி செய்து வந்த எல்லாச் சமூக வேலைகளையும் இன்று சம்பளச் சிப்பந்திகள் செய்து விடுகின்றனர்.

நவீன உற்பத்தி சக்திகளுடைய சமூகத் தன்மையை நடைமுறையில் அங்கீகரித்தலும் ஆகவே பொருற்பத்தி, சுவீகரிப்பு, பரிவர்த்தனை முறைகளை உற்பத்திச் சாதனங்க்ளுடைய சமூகத் தன்மைக்கு இசைவாக்குதலும் தான் இம்மோதலுக்குத் தீர்வாக முடியும். சமுதாயம் அனைத்தாலும் ஆகிய கட்டுப்பாட்டை அன்றி வேறு எந்தக் கட்டுப்பாட்டுக்கும் ஒவ்வாதனவாய் விஞ்சி வளர்ந்துவிட்ட உற்பத்தி சக்திகளைப் பகிரங்கமாகவும் நேரடியாகவும் சமுதாயமே உடைமையாக்கிக் கொள்வதன் மூலமே இந்த இசைவு ஏற்பட முடியும்.

இன்று உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திப் பொருட்கள் இவற்றின் சமூகத் தன்மை உற்பத்தியாளர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது, பொருளுற்பத்தி, பரிவர்த்தனை அனைத்தையும் கால அலை வட்ட முறையில் குலைத்திடுகிறது, கண்மூடித்தனமாக, பலாத்காரமாக, நாசகரமாக இயங்கும் இயற்கை விதியைப் போல் செயல்படுகிறது. ஆனால் சமுதாயம் இந்த உற்பத்திச்சக்திகளைத் தானே எடுத்துக் கொண்டதும் உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திப் பொருட்கள் இவற்றின் சமூகத் தன்மையை உற்பத்தியாளர்கள் சரிவர உணர்ந்து பயன்படுத்திக் கொள்வார்கள். குழப்படியும் காலவாரியான சீர்குலைவும் உண்டாக்கும், மூலகாரணமாக இருப்பதற்குப் பதில் பொருளுற்பத்திக்கு மிகவும் சக்தி வாய்ந்த நெம்புகோலாகிவிடும்.


பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதே முதலாளித்துவ உற்பத்திமுறை சந்தித்த முரண்பாடுகளுக்குத் தீர்வாகும். முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூக மயமான உற்பத்திச் சாதனங்கள் இவ்விதம் அது பொதுச் சொத்தாக மாற்றுகின்றது. இந்தச் செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம் உற்பத்திச் சாதனங்களை அவை இதுகாறும் தாங்கியிருந்த மூலதன இயல்பிலிருந்து விடுவித்து அவற்றின் சமூக இயல்பு செயல்படுவதற்கு முழுச் சுதந்திரம் அளிக்கின்றது. முடிவில் வர்க்கம் அற்ற சமூகத்தை நிலைநாட்டுகிறது.


எழுத்து (ம) ஆசிரியர் :

அ.கா. ஈஸ்வரன்

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...