Saturday, March 26, 2016

மலம் தின்ன ஆசையா!

ஐந்தாண்டுகள்
கசாப்புக் காரன்
சந்தையில்
விலைபோகும்
வெட்டப்பட்ட ஆடுகளின்
உயிரற்ற தலைகளா
உங்களுடையது

ஐந்தாண்டுகள்
வட்டியும் குட்டிபோட
மீட்கவும் வக்கற்ற
அடகுத் தலைகளா
உங்களுடையது

அதோ!
நாங்கள்தான் விடியலை
தரும் தேவதூதர்களென
கொஞ்சமும் கசங்காத
வெண்ணிற ஆடைகளின்
பின்னால்
ஒளிந்திருக்கும்
அழுக்கு பிண்டங்கள்
ஒவ்வொரு வீடுகளாய்
முற்றுகையிடுகின்றன

ஆம்!
அவைகளேதான்
அரசியல் போர்வையில்
வியாபார கடைவிரிக்கும்
முதலைகள் கூட்டங்கள்

மதுவூற்றி
பணம் திணித்து
மாய வாக்குறுதிகளை
நெய்யொழுக
வாயில்
ஊட்ட வருகின்றன
அவைகள்

தலைக்கொருவிதமாய்
விலையும்
நிர்ணயித்தாகிவிட்டது
உங்களின் ஓட்டுகள்
விலையேற்றம்
அவைகள் பெருமையாக
பேசும்

தன் வயிறு
பெருத்தாக வேண்டுமே
பொய்களை மூட்டையாக
கட்டுகின்றன அவைகள்

நில்! கவனி!
பின்னால்
பெருங்கோடரிகளை
மறைத்து வைத்திருக்கும்
அவைகள் உங்களை

மலம் தின்ன வைக்கும்
ஓட்டுகளை காசாக்கி
ஒழுகும் வீடுகளை
எட்டி உதைக்கும்

அவைகளை
நம்பி! நம்பி!
ஏமாந்தது போதும்

ஓட்டுரிமையாளனே
உழைக்கும் கரங்கள்
உங்களுடையது

உற்றுப்பார்!
உனது கைவிரல்
ரேகைகளில்
காய்த்திருக்கும்
அத்தனை வடுக்களும்
உழைப்பில்
விளைந்தவையே

கிள்ளிப்பார்!
வலிக்காது உனக்கு
ரத்தம் சுண்டிப்போன
தேகமுனக்கு

பார்வையை
அவைகளிடம் திருப்பு
கைகளை ஆராய்ந்துவிடு
ரேகைகளில் ரத்தம்
ஜொலிக்கும்
அவைகளுக்கு

வேற்றுமை
புரிந்ததா உனக்கு?
உழைப்பை சுரண்டும்
கரங்கள்
அவைகளுடையதென
அடுத்த வினாடியே
தெரியவரும்

உணர்ந்து உனது
உழைப்பிடம் பேசு
உனக்கு உணவளிக்கும்
ஆயுதங்களிடம்
ஆலோசனை கேள்

தெளிவாக
எழுதி வை
உன் வீட்டுக் கதவுகளில்
தினமும் கோலமிடு
உன் வீட்டு வாசலில்

"என் ஓட்டு
விற்பனைக்கு இல்லை"
எனும் ஆழமான
வாசகத்தை

அவைகள் படித்துவிட்டு
புத்தி மாறட்டும்
உனது சாக்கடையை
நீயே சுத்தப்படுத்து
அரசியல் ஒரு சாக்கடை
என்போரை செருப்பாலடி

எல்லாம் மறதியாகி
மலம் தின்னத்தான்
ஆசை உங்களுடையது
எனில் துர்நாற்றம்
அவைகளிடத்தில்
இல்லை
விரும்பி வாயில்
விழுங்கி அசைபோடும்
உங்களிடம்தானே
வீசும் விசமாய்,,,

2 comments:

  1. சவுக்கடியான வார்த்தைகள் எனக்கு வலிக்கவில்லை நண்பரே காரணம் நான் இதுவரை மலம் தின்னவில்லை இனிமேலும் அப்படியே.... அவசியம் பலரும் படிக்கவேண்டிய கவிதை நல்லதொரு தருணம்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...