Tuesday, March 31, 2015

நுங்கு வண்டி

மாற்றமில்லை
மாற்றமென்றே
மனதேற்றமில்லை
வற்றிய நீரில்
வழிந்தோடும்
கழிவுகளைபோலே
மனிதனை
நுகர்கிறது
சாலைகள்

வழிவிடுங்களேன்
வருகிறதோர்
நுங்கு வண்டி

இவனொரு
கிராமத்துவாசிதான்
தொலைந்து
போனதே
கிராமத்தோடு
கிழக்கு வாசலும்

கோடையில்
எரியும் உடம்புக்கு
எதற்கிந்த உடை

தேவையில்லை
நுங்கு வண்டியோடு
நாங்களும்
கருத்திருப்பது
அழகுதான்

வழிவிடுங்களேன்
வருகிறதோர்
நுங்கு வண்டி

சிறைபட்டு
பெற்றோரால்
அடிபட்டு
அவர்களெழுதும்
அதிகாரத்தில்
அடைபட்டு
வளரும்
தளிர்களை விட

ஆலமர விழுதுகளில்
ஊஞ்சல் கட்டி
ஊமைக் கனவுகளை
சாக்கில் மூட்டைகட்டி
கூட்டாஞ்சோருக்கு
கூடி நிற்கும்
எம் இளம்பிஞ்சு
குஞ்சுகளுக்கோர்
கூடு கட்டி
வாழும் பருவமேண்டும்
வழிமறித்தல்
நியாயம் தானோ

பனையோரும்
பொழுதுகளில்
பசியறியாத
வயிற்றினையும்
வந்துதைப்பது
நியாயம் தானோ
எம் பால்யத்தை
பறிப்பதில்
தானா பட்டாசு
வெடித்து
கொண்டாடுகிறீர்

வேண்டாம்
விட்டுவிடுங்கள்
இன்றைய
நுங்குவண்டி
நாளைய விமானமாகலாம்

வழிவிடுங்களேன்
வருகிறதோர்
நுங்கு வண்டி

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...