Showing posts with label Poem. Show all posts
Showing posts with label Poem. Show all posts

Friday, December 13, 2024

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை
வருமானமோ !
வயிற்றுப்பசியோ !
வறுமையோ !
வாழ்வாதாரத்தையோ !
வீட்டுக் கடனையோ !
பிள்ளைகளின் பசி பரிதவிப்போ
இவையெல்லாம் கடந்து ...
பூச்சந்தையில் வந்திறங்கியும்
கேட்பாரற்று பெருமழையில்
வாடியும் , கசங்கியும்
சகதியில் கிடக்குமே
நமக்கு சோறிடும் "பூக்கள்"
என்றே சோர்ந்து நொந்து 
போனாள் பூக்காரி ...
பூ கட்டும் நாரொன்றை
தன் கையில் ஏந்தியபடியே !!!

Sunday, July 19, 2020

ஓர் 1000 பார்வையிலே


மின்னல் பொழுதில் விழிகளை சுழற்றி சட்டென மறையும்
உன் கண்ணிமைதனில் எனை கண்டுவிட்டேன் ...

போதும் ...  என நினைக்காத மனதிலெழும் பரிதவிப்புகளினூடே
வேண்டும் வேண்டும்
மீண்டும் மீண்டும் என்றே 
நின் பார்வையில் நான் சிறகு முளைத்து பறந்துவிட
துடிக்கிறேன் ....

சாரளமோ , கதவிடுக்கோ
மதில் சுவரோ , மாடியோ
 வண்ணங்கள் இல்லா  சித்திரம் என
வாடி உருகும் பனித்துளிபோல
நீயற்ற இரவுகளை கடக்கிறேன் ...

பூக்களின் மகரந்தம் 
மென் காற்றில் மிதந்து மிதந்து
புதியதாய் மண்ணில்
துளிர்விடும் அழகினை கண்டு
துள்ளல் எழ ... 

உனக்குள் நானும் துளிர் விடவே
தினம் நீ பார்க்கும்
ஓராயிரம் பார்வையிலே 
ஒவ்வொன்றாய் காற்றில் மிதக்க விடுகிறேன் ....

ஒரு கோப்பை தேநீர்





சிறு தூறலில் தொடங்கி அடைமழைக்கு வெளியே
இடியும் மின்னலுமாக
வெட்டுண்டு கிடக்கும் வான்வெளியில் மையல் கொண்டு ...

கார்மேகம் ஆடையினை துறக்க
மழைக்கு பிறகான சிறு சிறு மழைத்துளிகள் மண்வாசத்தில்
உள்நுழைவது போல....

எல்லா பூக்களும் சாயம் போகாது
தன் இருப்பை தக்க வைக்கும்
ஒரு அழகிய பிரபஞ்சத்தின் தோற்றம்
இந்த  இயந்திர வாழ்வுதனை விழுங்குதல் கண்டு ....

கண்களில் வானவில் நிறங்களை பூசிக்கொண்டு 
இறுக்கி பிடித்திருந்த ஆன்மாவின்
அயர்ச்சி விரட்டி
தன் இயல்புக்குள் நுழைந்து
ஆத்மார்த்தமான மனம் போல 
மலர்ந்து மணம் வீசும்
நீல வானம் பார்த்தபடி
சாளரத்தில் எழுதிவைத்த அத்துணை கவிதைகளையும் நுகர முடியுமெனில்
அவசியமாய் கையில் ஏந்தி பிடிக்க
வேண்டியிருக்கிறது

ஒரு கோப்பை தேநீரை ...

Monday, June 15, 2020

வேட்டை நாய்கள்


எந்தன் கண்கள் முன்னே
தினம் வகையான வேட்டை நாய்களை காண்கிறேன் ...

பார்வைகளில் கூட கொலை
செய்தும் , ஆடையினில் ஒளிந்தும் கூர்முனை கத்தியாய்
இறங்கும் அந்த வேட்டை நாய்களின்
பார்வைகள் ...

எல்லாம் கடந்து கூச்சங்கள் சூழ
கூடு அடையும் பொழுதுகளில் கூட
என் வீட்டிலும்  சூழ்ந்து கொண்டு தானிருக்கிறது வேட்டை நாய்களின் பார்வைகள் ...

தனிமையில் ஆழ்ந்து அழுது
தலையணையால் தேகம் மறைத்து
மடக்கி , சுருண்டு கிடந்தும்
நினைவுகளின் வழியே எனை வேட்டையாடித்தான் போகிறது வெறி நாய்கள் ...

இப்பொழுதெல்லாம் ஆடைகள் விலகினாலும் கூசுவதில்லை 
எனக்கு ...

பழகிப்போன வேட்டை நாய்கள்
பவ்வியமாக இரையை (என்னை)
கவ்வுகின்றன ...

பதிலுக்கு சில துண்டுகள் என
பழகிவிடுதாலோ , என்னவோ !
வேட்டை நாய்கள் குதறி இழுத்த
சதையின் மிச்சம் நான் எனும் பெருவலியோடு ...

Friday, January 24, 2020

ஸ்பரிசம்




உனக்குள் இருக்கும் உன்னை
எதன் மீதும் பற்றுதல் இன்றி
எனக்குள் இருக்கும் என்னிடம்
சிறகடித்து பறத்தல் நிமித்தம் போல
பெரு வாழ்வு வாழ்ந்துவிட்டதாக
சிலாகித்து சினுங்கும்
பேரன்பு பூசிக்கொண்டலையும்
நின் மௌன முகத் தோற்றத்தை
என் நெஞ்சம் முழுதும் பூசிக்கொள்கிறேன்

தெரியுமா !!!

ஒரு பட்டாம்பூச்சி
என் தேகம் முழுக்க
வந்து வந்து அமரும்போது
மெல்லிய சிலிர்த்தல்
நிகழ்ந்த அதே பேருணர்வு
நீ என் நெஞ்சத்தில் சாய்ந்திடுகையில்
சில்லிட்டு உணர்கிறேன்

பெருங்காதலை இத்துணை வேகமாக
உனக்குள்ளும் எனக்குள்ளும்
ரசாயன கலவை செய்தது
எதுவோ?...

Monday, November 11, 2019

மழை


மழை வானம் காணாதொன்றை
மடியில் தாங்கி கொள்கிறேன்
மழலையே ! மறு பிறப்பே !
நின் துயில் நடையில் எழுத
தூவானம் வந்திறங்கியது...

துளித்துளியாய் சேர்த்து வைத்த
கைபிடி மழைத்துளிகள்
நின் ரேகைகளினூடே
தவழ்ந்து விளையாடுகிறது ...

சேர்ந்து ரசித்திடுகிறோம்
வானம் பார்த்து கண்கள் சிமிட்டி
இப்பெரு மழையை நீயும் நானும்...

Tuesday, October 22, 2019

மடியில் சாயும் போது



தாய்ப்பால் அருந்தியபடியே
தன்னை மறந்து அப்படியே உறங்கும்
குழந்தையின் உதட்டில்
ஒட்டியிருக்கும் பால் வாசம்
தீர்வதற்குள்  ...
உச்சி முகர்ந்து
முத்தங்கள் இடும் தாயின் பேரன்பை 
போலாகிறாய்
நீயும் மழலையாக
என் மடியில் தலை சாயும்போது ...

நீரிதழ்



ஆகையால்
தோய்ந்து ஓய்ந்து போன
கூழாங்கற்கள் குவியலில்
தேகம் சூடேற கவிழ்ந்து
கிடக்கும் ஏதோ ஒரு
ஜீவனின் விழியோரம்
கசிந்திருக்கும் நீரிதழில்
இவ்வுலகம் சாபத்தை
தொழுகிறது ...

Sunday, September 01, 2019

டாக்டர் அனிதா நினைவலைகள்


பெருங்கடல்களுக்கு நடுவே
நசுங்கிப்போன பல குரல்களின்
"நீட்"சிகளாக தொடர்ந்து
ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ...
அசையாத மரக்கட்டைகள் கண்ணீரை
நாவில் தொட்டு பார்த்து
வெறும் கடலின் உப்பு நீரென
கண்டு கொள்ளாமலும் ஊழியின்
சாபங்கள் எனவும்
கடந்துபோகும் மனுசப் பயல்கள் நாம்...
#டாக்டர்_அனிதா

Saturday, July 20, 2019

அட பைத்தியக்காரா !!!




பைத்தியமானதின் உன்னதம்
தளர்ந்து போன மனங்களின்
தூசி படிந்த இரவுகளை
தட்டி சீர்படுத்தும் ஒரு பேரன்பு
இல்லாது தவிக்கும்
பெரும்பசி கொண்டவனின் கால்களில் விலங்கிட்டு ...

தேற்றுதல் மொழி அல்லாத பார்வையில் சில எச்சில்களை உமிழ்ந்து கடந்துவிட்டு போகிறது இப்பெரு வாழ்வு ...

ஆசைகள் பேராசைகளாகி அதுவே
நிராசைகளாக
எத்துணை எத்துணை பைத்தியங்கள் இங்கு  வீதியுலா கொள்கிறது ...

உணர்தல் விளக்கங்களாக
உயிர்கள் அனைத்தும்
பைத்தியங்களே !!!

சாட்சிகளற்ற சந்தர்ப்பங்கள் அமையாத எல்லாம் பைத்திங்களாகி போன
ஒரு பெருங்கூட்டம்

ஒற்றை மனிதனை சுற்றி சுற்றி
அவன் பைத்தியமென  கூச்சலிடுவது நகைமுரண் கொண்ட வேடிக்கைதான் ...

அட பைத்தியக்காரா  ...

என்றவன் உன்னை சொல்லும்
முன் ஒரு பேரன்பையாவது
விதைத்துவிட்டு போ ...

வாழ்வான் அவனெனும் உலகில்
சூழ்ந்திருக்கும் ஏதோவொரு
பைத்தியம் ...

மனிதர்களின் அழிச்சாட்டியங்கள் !




காட்டு மரங்களின்
கூந்தல் கிளைகளில்
உணவை தேடும் பறவைகளுக்கு ஒய்யாரமாக கதைகள் சொல்லி கடத்தி போகிறது பூக்களின் மகரந்தம் ...

எங்கோ தொலைவில் அதிரும் பெரும் சர்ச்சைகளின் இரைச்சலை கேட்டு கூச்சலிடும் பறவைகளின் நினைவுகளில் சில அதிர்வலைகள் வந்துவிட்டு போகலாம்

காணாமல் போன ஒரு மரத்தில் பல்வேறு சிலுவைகளை செய்து வைத்துள்ளார்கள்
யாருக்கானது அச் சிலுவைகளென
ஆழ்ந்த யோசித்தலில்
ஆயுளை கடக்கும்
பல முகங்கள் அப்படியே நிரந்தரமாக தங்கிவிடுகிறது இந்த
பிரபஞ்சத்தில் ...

நெருப்பின் ஆதி சிக்கி முக்கி கற்களில்
ஒளிந்து கொள்கிறது அனைத்தும் இரகசியங்களாய்...

வாழ்தல் என்பதே பெருங்கனவாக போய்விட்ட காட்டு மரங்களின் கூக்குரல்களில்
மனிதர்களின் அழிச்சாட்டியங்கள்
இயற்கையின் மீதான போர்கள் என
தொடர்ந்தே போகிறது இரக்கமற்ற இரவுகள் ...

Thursday, June 27, 2019

அழுது உடையும் கண்ணீர்




நிதானிப்பதற்குள்
நிராகரித்து விடுகிறது
காதலும் வாழ்வும்
மடிந்து மண்ணில் துளிர்விடும்
புதிய சிறகுகளின்
வார்த்தைகளில் சிறு சிறு
சாரல் தெளிக்கவும்
வானம் பார்த்து மீண்டும்
தரைக்கு திரும்புகிறது
எதனுடனும் ஒட்டாத அவளி(னி)ன்
அழுது உடையும் கண்ணீர்

Sunday, April 28, 2019

பேரன்பு பெருங்காதல் ...




நேசக் கதவுகளாக என் விரல் பற்றி என்னுள் வார்த்தைகளாகிப் போன பெரும் வெற்றிடத்தை மழை கொட்டும் வனமாக பசுமையை நிரப்பி புதிதாய் விதையொன்றாக துளிர்விட செய்கிறவள்(ன்)
நீ ...

சொட்டும் நீரிதழ் ததும்பும்
முத்த ஏக்கங்களை குழைத்து
என் மேல் பூசும் வாஞ்சையுடன்
உதித்துவிடும் " இச் "
சப்தங்களின் ஊடே
நீரிதழை ஆழ் மனதிற்குள் ஒளித்து வைக்கிறாய் ...

நீ என்னை நேசிப்பதும்
நானுன்னை நேசிப்பதும் தயக்கமின்றி இலகுவாக அடையாளங் கண்டு நயத்தோடு நெளியும் அழகியலின் ஊற்றாக கட்டிப்பிடித்து
கொண்டும் உரசிக்கொண்டும்
உள்ளம் நனைய ஒரு யுகம் கடந்து நீளும் கடற்கரையோர நுரை ததும்பலில் குழைத்து செதுக்கி காதலென்கிறோம் ...

வாழ்வு புசிக்கும் நரைமுடி கண்டு தளர்ந்த நிலையில்
முதிர் பருவ தவிப்புகள்
நமக்கில்லை ...

கடந்து வந்த பாதைகளின் நினைவுகளினூடே
என் கரம் பற்றி நீயும்
உன் கரம் பற்றி நானும்
மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்கிறோம் ...

எப்பொழும் அசாத்தியமானது
பேரன்பென பிதற்றுபவர்களை
ஆகாயத்தை காட்டி
மிதந்து வரும் மேகங்களில் நம் முகங்களை காட்சி படுத்துகிறோம் ...

வாழ்தலும் பேரன்பின்பால்
என விளங்கிக்கொள்ளும்
எல்லா திசைகளிலும்
நாம் உயிர்வாழ்கிறோம்
என் பேரன்பு கொண்ட ராட்சஷியே ...

Wednesday, April 17, 2019

நிர்வாணம்




அர்த்தமற்ற வார்த்தைகளாகும்
வாழ்வின் பெருங் கூச்சலிடையே
உனக்கு நானும் எனக்கு நீயும்
ஆறுதல் மொழிகளினூடே
ஆழ்மனதில் தேக்கி வைக்கிறோம்
இப்பெருங் காதலை ...

ஊடறுக்கும் இவ்வேளையில்
நிர்வாணம் பூசி
கண்ணீரில் கலந்திருக்கும்
உப்பு நீரால்
ஆழியில் மிதந்திருப்போம் ...

Sunday, April 14, 2019

சலனமற்ற கதவுகள் ...





சிதைந்து விழும்
சிறு சிறு கனவுகளின் வழியே
மணல் திட்டுகளில்
அடுக்கி வைத்து காத்திருக்கும்
நீள் சாமத்தில் சிதலமடைந்த ஓர் இறப்பின் அழுகையில் கொட்டித்தீர்த்திடும்
கண்ணீர் பெருவெளி வழியாகவும் அலசி , ஆராய்ந்து பார்க்கிறேன் ...

சிறு சிறு கனவுகளை கோர்த்து சேகரித்து மடியில் கட்டி திரியும்
சிலுவைகளிடம் மடிந்து கிடக்கும்
இப் பெருங்கனவை தின்றவர்கள் யாரென ...

ஞானம் கொண்டேன்
தினம் நான் சந்திக்கும்
மனிதர்கள் அவர்களென
அடித்துச் சொன்னது
யாருமற்ற அறையில்
சலனமற்ற கதவுகள் ...

Wednesday, April 10, 2019

பிதற்றல்





அவதியுற்ற வலிகளில்
புண் போன்று
ஒட்டிக் கிடக்கும்
வார்த்தைகளை மட்டுமே
கோர்த்து ...

கொன்றழித்த பிறகேனும் விடாமல்
வதை செய்திடும்  அரை சான் வயிற்று பசிதனில்
படிந்து கிடக்கிறது பாசிசங்களின் சூழ்ச்சிகள் ...

பசிக்கு தண்ணீர் தீர்த்தமென ஒவ்வொரு இரவாக கடந்து போகின்ற பொழுதுகளில்
பார்வையில் விழும் யாவும் பற்றியெறிந்து வெடித்துச் சிதறும் தீப்பிழம்பாகி விழுகிறது உணவுக்காக ஏங்கும் கரங்களில் ...

அவர்களை  போல
மாடி வீட்டு பால்கனியில் மிதந்து
பசியாற உண்டு விலையுயர்ந்த
பளிங்கு பேனாவால்
ஐஐஐ ... நிலா நிலா !!!

எனவெழுத ஆசைதான் ...

என்ன செய்ய ...

சாதியென்றும் மதமென்றும்
ஊறிப்போன சமூத்தில் ஆண்டாண்டுகால அடிமையிவன்(ள்) ...

பிதற்றல் வார்த்தைகளை கோர்த்து மூக்கு சிந்தும்
பேனாவால் முள்ளாய்
தேய்கிறேன் ...

விடிந்தால் கொஞ்சம் அசைத்தாவது பாருங்கள் எனதுடலை
பசியின் கொடுமையில்
அன்றுகூட செத்திருக்கிலாம்
நான் ...

Monday, April 08, 2019

கருநீலசிவப்பு




ஒரு அறைதலில் வெளிபடும்
வீரயத்தில் சிவந்திடும்
கன்னங்களில்
பதிந்துவிட்ட அச்சுகளில்
இன்னும் ஒட்டியிருக்கிறது
தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை ...

காய்ச்சி எடுத்த வெப்பச் சலனத்தில் எங்கும் புண்கள் முளைத்து 
வடுவென மாறிப்போன
அந்த தொழிலாளிகளின் கரங்களில் தங்கியிருக்கும் வலிகளில்தான்
அதிர்வுகளை காண்கிறது அதிகார வர்க்கம் ...

நிறங்களின் கிளைகளில்
படிந்துவிட்ட கரைகளை
சனநாயக சக்தி கொண்டு
மீண்டும் துளிர்விட துடிக்கிறது
எல்லோர் கைகளிலும் பூட்டப்பட்டு
கிடக்கும்  அடிமை விலங்கை
அதிர ... அதிர ...
உடைத்தெறிந்து கிடாசுகிறது
ஆதி மரத்தில் அழியாச் சுடராய் வீற்றிருக்கும் அப்பேராயுதத்தில்
நிறைந்திருக்கும் கருநீலசிவப்பு நிறங்கள் ...

வானுயர்ந்த  ஒற்றை மரக்கிளையில்
நிறங்களின் பூர்வ பகையை அசைப்போட்டுக் கொண்டே இருக்கிறது
எவனோ எழுதிவைத்துவிட்டுப் போன
சாதிமத சட்ங்குளின் வழியே ஒழுகும் மதமெனும் சாதியெனும்
வர்க்க பேதங்கள் சூழ்ந்த விஷ பரிட்சைகள் அப்படியே ...

தொழிலாளர் வர்க்கம் மீண்டெழாதபடிக்கு
அப்படியே ...

என்றேனும் ஒருநாள்
எதையும் அழித்தொழித்தல்
பகுத்தறிவின்பால்
எங்கும் நிறைந்திருக்கும்
எம் கருநீலசிவப்பு ...

Monday, April 01, 2019

பரிதவிப்புகள் ...




பறக்கவோ பரிதவிப்புகளை
விட்டுச் செல்லவோ இயலாத
ஒரு சிறு மரங்கொத்தி பறவை
உடுத்திவிட்டு போன மரக்கிளையிலிருந்து
மெல்ல எட்டிப் பார்க்கும்
அப்பாவி விதைகளின்  தலைகளின்
உச்சியில் கூர் ஆணி
செலுத்தப்படுகிறது

இந்த வாழ்வு எந்த தயக்கமுமின்றி
குருதி வெளியேற்றத்துடனே தன் குடியிருந்த மரப் பொந்தின் உள்ளேயே
சாவின் அடக்கமும் செய்தாகிவிட்டது ...

இனி நீதிகேட்டு அவைகள்
வாய்திறக்கப்  போவதில்லை
வாயடைத்திட்டு மென்மேலும்
நிதி பற்றாக்குறை என வேண்டுமானால் நீதிகள் மிரட்டல் விடுக்கலாம் ...

எது எதுவாகினும் திரும்ப ஒட்டப்படாத உயிர் பிறிந்த ஜீவனது
துர்வாடை வீசிவதை
அந்த மரப் பொந்தினுள்
கண்டுகொள்ள யாருமில்லை ..
ஆதி பெருமரம்
தன்னை ஊன்றி கொண்ட
தடிப்பு வேர்களை தவிர ...

வார்த்தைகளும் தடித்தே வருகிறது
விதைகள் கசியும்
பரிதவிப்புகளிலிருந்து ...

Thursday, March 21, 2019

ராட்சஷியவள்




வார்த்தைகளின் இடையிடையே
பெருங் காதலை ஒளித்துவைத்து
பார்வைகளில் இயல்பாய்
புதிர்கள் பல கண்டு
தவழும்  துரிகை சிதறல்களை
உரையாடல் என்பாய் ...

உணர்வுகளின் வெளிச்சத்தில்
கண்டு திளைப்பேன்
கிளையிலாடும் இலைபோல
காற்றில் காதலை சுமந்தவனாய்
நான் என ...

எப்போது நாமாவோம்
விடை சொல்வாய் என்
ராட்சஷி ...

#கவிதை_தினம்

Saturday, March 09, 2019

ஆழிசை




ஆகையால் ...

கடற்கரை  காற்றில் விட்டுச்சென்ற
உன் அன்பை தேடி சுடும் மணலில்
என் காயங்களை மறந்து
ஆற்றும் மருந்தாய்
நின் கால்தடம் என்னில் பூசி
அழையா விருந்தில்
அரிதாக முளைக்கும் அதே ‌... கண்ணசைவுகளினூடே
பிரம்படி பட்டு நெளியும்
புழுபோல  சுருண்டு
எங்கோ யாருமற்ற கடற்கரையில் கண்ணயர்ந்து நின் நினைவுகளை செதுக்கிக் கொண்டிருக்கிறேன் ...

இதோ ... இந்த ... ஆழிசை ...
அவ்வப்போது என் சுயத்தை மீட்கிறது
நீ ... விட்டுச்சென்ற எச்சங்களை ...
எனக்குள் தத்தெடுத்துக்கொண்டே ...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...