Sunday, October 18, 2015

புயலென ஒருநாள்

வெட்டுண்டு
கிடக்கிறது எங்களின்
கைகள்
கூலி உயர்வு கேட்டதற்காக

குருடாகி இருட்டில்
தடவுகிறோம்
எங்களின் வாழ்வை தொலைத்து

வரலாற்றுப் பதிவுகளில்
எழுதினார்கள்
எங்களை
"என்ன ஆணவம்
அவர்களுக்கு அதனால் வெட்டப்பட்டது
கைகள்" என்று

ஒருநாள் விடியுமென்று
ஒவ்வொரு நாளும்
தேய்ந்து போகையில் நிலவுக்கு மட்டுமே அன்றைக்கொருநாள் வெளிச்சம் கிட்டியது

பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் நாங்களாம்
எங்கள் பஞ்சமி
நிலங்களை
பறித்தோர்கள்
பழிக்கிறார்கள்

உழுவதற்கு மாடுகள்
இல்லாத பொழுதுகளில்
எங்களையே
பூட்டினார்கள்
கலப்பையில்

பட்ட கஷ்டங்கள்
படியேற துடிக்கையில்
பக்குவமாய் பூட்டப்பட்ட கால்விலங்குகள்
முதுகெலும்பு வரை
ஏற

ஒடிந்து போன
விறகுகளாய் ஆதிக்கமெனும் விதைகளின்
உரங்களாய்

செயலிழந்து
அறிவிழந்து
உணவிழந்து
அழகிழந்து
தூக்கி எறியப்படுகிறோம் கடைசியில் வெறும்
சக்கைகளாய்

ஒருநாள் புயல்காற்றில் ஆடி அடங்கும்
உங்களின் ஆதிக்கம்
அதுவரையில்
குளிர்காயலாம்
எங்களின் மூச்சுக்காற்றில்

இயற்கையும் ஏழையும்
குணத்தால் ஒன்று
குறித்துக்கொள்ளுங்கள்
உங்களின் அழிவை அன்று,,,

2 comments:

  1. முடித்த விதம்
    கவிதைக்கு வீரியம் கூட்டுகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...