Sunday, February 08, 2015

கவிதை -தனிமரம்-

ஒரு தனிமரம்
ஓராயிரம்
பறவைகளை
சுமந்து
நிற்கிறது
தொடுவானம்
தூரமில்லை
அதற்கு,,,

காடெனும் சொந்தங்களை வாளெடுத்து வெட்டியதில்
வேர்களின்
இடையிடையே
கசிந்து
கொண்டிருந்தது
கண்ணீர்,,,

வீணையை மீட்டத் தெரியவில்லை மரத்திற்கு
அதற்காகவே
தினம்நினைத்து வருந்தியதில்லை

விசாலமாய் படர்ந்திருக்கும் கிளையிடையில் முளைத்திருக்கும் இலைகளின்
இசைவெள்ளமே
போதுமானதாய்
இருந்தது,,,

தலைசாய்த்து
தன்நிழலை
பார்த்தது

யாரோ ஒருவன் அமர்ந்திருந்தான் அவனுக்கு
அப்போது தலையணையானது தடித்த வேர்கள்,,,

அப்போதும் பயத்திலேயே
அத்தனிமரம்!

விறகு விற்பவனா?
வீடமைப்பவனா?
வீதிநாறும்
வியாபார
தளத்தினவனா?
விலைபேசும்
தரகனா?
இவனிதில் எதைச்
செய்ய தன்தாய் வேரடியில்
அமர்ந்திருக்கிறான்,,,
எனை வீழ்த்தி
விடுவானோ?

அச்சம்
அமைதியிழந்து ஆற்றலுக்கு
காற்றை அழைத்து இலைகளை
சிறகாக்கி
அபாயவொலி
எழுப்பியது
தனிமரம்,,,

அப்போதும் போகவில்லை அம்மனிதன்

ஆகா!!! அழகான
மரத்தடி நிழலில்
ஆனந்த இளங்காற்று அகமகிழ்ந்து
சிலிர்த்தது உடல் அவனுக்கு,,,

அவன் மனதில்
ஆனந்த தேரோட்டம்
மரத்தின் மனதோ
அதிர்ச்சி பேயாட்டம்,,

கடைசியாக எழுந்திருந்தான் அம்மனிதன்
அலுப்பு கலைந்து
அவனும் போய்சேர்ந்தான்,,,

ருசி கண்ட பூனையல்லவா!

அடுத்தநாளே
அவனும்
வருகையில்
அனாதை மரமும்
மயான வெளியில்,,,

மிருகம்
மென்றெறிந்த
எச்சில்
எலும்புத் துண்டுகளை போல
கோடாரி
மென்றெறிந்த மரத்துண்டுகளை
மடியில்
ஏந்தினான்,,,

அப்போது தெரிந்திருந்தது
நேற்று வீசிய இளங்காற்று
இதயத்தின்
அபாயவொலியென்று,,,

அவன் அழவில்லை
அவனுக்கு பதிலாய்
வானமழுதது
ஒதுங்க இடமில்லை,,,

கடைசியாக
முத்தமிட்டான்
மனித மனபாரத்தை
விட மரத்தின்
மனபாரம்
வலியதல்லவா,,

சிதறிய விதைகளை
சேகரித்து விடைபெற்றான்
உயிரை துறந்த
தனிமரம்
தந்த பாடமிது,,

வீழ்த்துவது எளிது வாழ்ந்தெழுவது
கடினம் ,,,,

2 comments:

  1. பிரமாதமான கவிதை. மரத்தின் மனபாரம் ரசித்தவரிகள்.

    ReplyDelete

கூட்டுத்தொகை

வாழ்தலுக்கும் வயிற்றுக்கும் இடையே வதை செய்யும் பசி பருவத்திற்கும் காதலுக்கும் இடையே கழுத்தறுத்து போடும் சமூகம்  பெருக்கல் வகுத்த...