Monday, June 08, 2015

(தடை நீங்கியது)அம்பேத்கர் , பெரியார் வாசிப்பு மாணவர் அமைப்பின் மீதான தடை நீக்கலும், இந்துத்துவ தொடர் பரப்புரை நிகழ்வுகளும்,,,



அம்பேத்கர் , பெரியார் வாசிப்பு மாணவர் அமைப்பின் மீதான தடையை சென்னை ஐஐடி நிர்வாகம் விலக்கியுள்ளதென்பது வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. சமத்துவம், சகோதரத்துவம் இம்மண்ணிற்கு மிக அவசியமான ஒன்றென்று உணர்ந்து பிளவுபட்டுக் கிடந்த முற்போக்காளர்கள் ஒற்றுமையுடன் கைகோர்த்து தோழமையை நிறுபித்து இந்துத்துவத்திற்கு எதிராக ஓரணியில் செயல்பட்டதால் "அம்பேத்கர்,பெரியார் வாசிப்பு மாணவ அமைப்பு" மீதான தடை உடைத்தெறியப்பட்டிருக­­்கிறது எனலாம், இந்த ஒற்றுமையின் பலத்தை கண்டு பார்ப்பானியம் நடுங்கியிருக்கிறது என்றாலும் , நம் முற்போக்குச் சிந்தனைகளுக்கு எதிராக இந்துத்துவம் ஒரு விதத்தில் வளர்ச்சியின் பாதையில் சில அடிகளை எடுத்து வைத்துள்ளதென்றுச் சொன்னால் அது மிகையாகாது.தமிழ்ச் செய்தி ஊடகங்களின் வியாபார விவாத காணொளிகளே இதற்கு சாட்சியாக அமைகின்றது , மத்திய பிஜெபியின் இந்துத்துவ தீவிர பற்றுதல் காரணமாக அதே இந்துத்துவ பார்ப்பானிய ஐஐடி நிர்வாகம் விதித்த அம்பேத்கர் பெரியார் வாசிப்பு அமைப்பின் சாரம்ஸங்களை அப்படியே உள்வாங்கி வியாபார ரீதியலான தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திய விவாதங்களில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பிஜெபி ராகவன்,போன்றோர்கள் சில விஷத்தன்மையான சூழ்ச்சிகளை தூவிவிட்டு இந்துத்துவத்தை வளர்த்தெடுக்க அரும்பாடுபட்டார்கள் என்பது தெளிவு.விஷம் கலந்த மூன்று விதைகளை தமிழ்மண்ணில் அவர்கள் விதைக்கிறார்கள்.
1. அம்பேத்கர் இந்துக்களுக்கு எதிரானவரல்ல,
2.பெரியார் தலித்துகளுக்கு எதிரானவர்,
3.சொந்த நாட்டிலேயே
முதல்தர இந்துக்கள்
மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்.
முதல் பொய்பரப்புரையை எடுத்துக்கொண்டோமானால் அம்பேத்கரை வாசிக்காத வயோதிகள் இவர்களென்றுத் தெளிவாகத் தெரிகிறது . ஏனென்றால் முழுக்கமுழுக்க பெரியாரை விட அம்பேத்கரே இந்துத்துவ எதிர்ப்பினை கையாண்டவர் என்பதை அம்பேத்கரின் எழுத்துக்களும், உரைகளும் நமக்கு தெளிவுபடுத்துகிறது. இதனை பெரியாரே விடுதலை நாளேட்டில் எடுத்துரைத்திருக்கிறார். இன்றைய பிஜெபி ராகவனும், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தும் இடைவிடாது "இந்துக்களுக்கு எதிராவனர் அம்பேத்கர் இல்லை" என்கிற புரட்டு இதற்கு முன்னரே அதே இந்துத்துவ ஆதிக்கர்களான மத்தியில் ஆர்எஸ்எஸில் தொடங்கி நம் தமிழ் சமூகத்து இந்துத்துவ சங்கராச்சாரியார் வரையில் பரப்புரையில் ஈடுபட்டவர்களாகவே
இருக்கிறார்கள். சாதி இந்துக்களின் சூதனமான அனுகுமுறையில் அம்பேத்கரை இழிவுபடுத்துதல் தொடர்ந்தே அரங்கேற்றப்படுகிறது அதற்காக சாதி இந்துக்கள் அம்பேத்கருக்கு விழாவும் எடுத்து சிறப்பித்து தங்களின் மனுதர்ம வர்ணாசிரமத்தை வளர்த்தெடுக்கிறார்கள் என்பதே இங்கே சுட்டிக்காட்டுதல் வேண்டும். திடீரென்று சாதி இந்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் "அம்பேத்கர் பற்று" என்பது குறிப்பிட்டு தலித் மக்களை ஒடுக்கி அவர்களின் மீது தங்களின் ஆதிக்கத்தை செலுத்துவதன் மூலம் தலித்துகளை இந்துக்களாகவே கடைசி வரையில் வைத்திருந்தால் மனுதர்ம சாதியத்தை அழிவிலிருந்து சூதனமாக அவர்கள் காப்பாற்றிவிடுகிறார்கள். சாதியத்தை உயர்த்திப் பிடித்து தலித்துகளை கவர்ந்திழுப்பதில் சாதி இந்துக்களுக்கு எவ்வித காரணகருவிகளும் அவசியப்படவில்லை, ஏனெனில் ஒன்றைமட்டும் நன்றாக அவர்கள் அறிந்திருக்கிறார்கள் அது "தலித்துகள் இந்துக்களாக இருக்கிறார்கள்" ஆகவே இந்துத்துவ பார்ப்பானியத்திற்கு அம்பேத்கர் தேவைப்படுகிறார். "சாதியற்ற இந்துக்களென்று இங்கே யாருமில்லை" என்கிற அம்பேத்கரின் கூற்று மெய்ப்படுகிறது .
இரண்டாவதாக "பெரியார் தலித்துகளுக்கான எதிரி"
என்கிற இந்துத்துவ பார்ப்பானியத்தின் பரப்புரையின் மூலம் "தலித்துகளை இந்துக்களாகவே" வைத்திருக்கும் உள்நோக்கம் இருக்கிறதென்பதை வெட்டவெளிச்சமாக்கியு­­ள்ளது. இந்துத்துவத்தின் தலித்துகள் மீதான தாக்குதல்களையும் , அடிமைதனத்தையும் அம்பேத்கர் எந்தளவிற்கு எடுத்துச்சென்றாரோ அதேஅளவிற்கு பெரியாரும் முன்னெடுத்துச் சென்றார் என்பதே திராவிடத்தின் அம்பேத்கர் பற்றாக இருக்கிறது. ஒருவேளை "நான் அடிப்பதுபோல நடிக்கிறேன் நீ அழுவதுபோல நடி" என்கிற காந்தியத்தின் "ஹரிஜன" இழிவுச்சொல் யுக்தியினை அப்படியே திராவிடத்தின் பெரியார்
கையாண்டால் தலித்தின விரோதியாக எடுத்துக் கொள்ளலாம் ஆனால் பெரியார் இந்துத்துவ பார்ப்பானிய சாதி வருணத்தின் கடைசி படிநிலையான "சூத்திரன், பஞ்சமன்" என்பதையே சாதி இந்துக்களுக்கு எதிராக வைக்கிறார். பெரியாரின் எழுத்துக்களும், உரைகளும் கண்டு பார்ப்பானியம் அச்சமடைந்து அதற்கெதிர் விளைவாக தலித்துகளை பெரியாருக்கு எதிராக வலைபின்னுகிறார்கள். இதில் சில தலித் இயக்கங்களும் சிக்கிக்கொண்டு பார்ப்பானியத்தின் துணையோடு இந்துத்துத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் பெரியார் தலித்துகளுக்கான விரோதியென்று தமிழ் சமூகத்தில் பரப்பி விட்டு அவர்களும் தலித்துகளை இந்துக்களாகவே மாற்றும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.ஆக சாதி இந்துக்கள் திராவிடத்தை ஒட்டுமொத்தமாக அழித்து இந்துத்துவத்தையும்,இ­­ந்துத்துவ வருண சாதி பேதங்களை வளர்த்தெடுக்கவும் பெரும்பாலும் தலித்துகளையே பலியிடுகிறார்கள் என்பது தெள்ளந்தெளிவாகத்
தெரிகிறது. தமிழ்மண்ணில் இதுவரை காலூண்றாத சங்பரிவா,ஆர்எஸ்எஸ்,பிஜெபி போன்ற இந்துத்துவ வெறியர்களுக்கு தற்போதுள்ள சூழலில் தடம்பதிக்க வேண்டுமெனில் நிச்சயம் தலித்துகள் தேவைப்படுகிறார்கள் . இதன் விளைவாக மட்டுமே பெரியாரை தலித்தின விரோதியெனும் போலி பிரசாரத்தை இவர்களால் செய்ய முடிகிறது. மூன்றாவதான "சொந்த நாட்டிலேயே முதல்தர இந்துக்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்" என்பதின் உள்ளார்ந்த அர்த்தங்கள் அப்படியே வெளிப்படையாக தெரிகிறது. இந்தியாவில் "பார்ப்பனர்கள்" மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை சாதி இந்துக்கள் முன்வைக்கிறார்கள். கவலை தோய்ந்த விஷயம் என்னவெனில் பார்ப்பானிய ஆதிக்கத்தின் நரபலிகளானவர்களே சாதி இந்துக்கள்தான் என்கிற உண்மை இங்கே மறைக்கப்படுகிறது. அந்த நரபலிகளிலிருந்து சாதி இந்துக்களை மீட்டு சாதியற்ற சமூகமாக மாற்ற முன்வராத எழுத்துக்களும், உரைகளும் இங்கே ஏகபோகத்திற்கு பரப்பி விடும் பத்ரி,ஜெயமோகன்,போன்றோர்கள் சாதியத்தால் மிகக் கேவலப்படுத்தப்பட்ட அம்பேத்கரின் சுய அனுபவங்களையும், மனித மலத்தாலேயே அடிவாங்கிய பெரியாரின் சுய அனுபவங்களையும் அனுபவித்துள்ளார்களா ? என்றால் இல்லவேயில்லை, இவ்வாறிருக்க பார்ப்பானிய பற்று இவர்களுக்கு இருப்பதென்பது ஆச்சர்யப்பட வைக்கவில்லை, இது சாதி இந்துக்களின் அவ்வப்போதெழும் அழியா இந்துத்துவ வெறியின் உட்கூறாகவே நேரடியாக புலப்படுகிறது.இவ்வகை­யிலான பொய் பரப்புகளையெல்லாம் வெறுங் கனவாக்கி வேண்டும் இங்கே மக்களுக்கான விடுதலை என்று இந்துத்துவ பார்ப்பானிய ஆதிக்கச் சாதியத்தின் சுயரூபச் சிந்தனைகளை மண்ணோடு மண்ணாக புதைத்திட அரும்பாடுபட்டு தமிழ் மண்ணில் விதிக்கப்பட்ட அம்பேத்கர்,பெரியார் வாசிப்பு அமைப்புத் தடையினை எதிர்த்து முற்போக்குச் சிந்தனைகளால் பார்ப்பானியத்தை முறியடித்த அத்துணை இயக்கங்களுக்கும் "அம்பேத்கர் , பெரியார் வாசிப்பு அமைப்பு" எனும் மாணவ அமைப்பிற்கான தடையினை உடைத்தல் என்பதொரு மாபெரும் வெற்றி என்றுச் சொன்னால் அது மிகையாகாது. கரம்கோர்த்து நின்ற கம்யூனிஸ்ட்,திராவிடம்,தலித் இயக்கங்கள் இன்ன பிற முற்போக்குச் சிந்தனை இயக்கங்கள் இத்தமிழ் மண்ணை வளர்ச்சியின் பாதைக்கு இட்டுச்செல்லும் , இது விரையில் நடக்கும், என்பதற்கான சான்றாகவே இவ்வெற்றி கண்களுக்குப் புலனாகிறது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...