Tuesday, June 09, 2015

சாதி இந்துக்களை எதிர்க்க "தேவை ஒற்றுமை"



மிக அவசரத்தின் முன்னேற்பாடாக தமிழகத்தில் "இந்துத்துவம்" வளர்த்தெடுக்கப் படுவதாக மட்டுமே நமது சிந்தனைகள் திசைமாறிச் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். இன்று நேற்றல்ல தமிழகத்தில் பல நூற்றாண்டு காலமாகவே இந்துத்துவம் கால்பதித்துள்ளது. அதுவரையில் திராவிடத்தால் முறியடிக்கப்பட்ட நிலையில் இன்றிருக்கும் திராவிடமானது மெல்ல மெல்ல பார்ப்பானியம் பக்கம் தங்களை ஈடுபடுத்திக் கொண்டமையால்,இந்துத்துவமானது தன் மக்கள் விரோத போக்கினை வெளிப்படையாகவே அரங்கேற்றுவது நம் பார்வைக்கு வருகிறது அவ்வளவே, அதையும் தாண்டி எவ்வித காரணகாரியங்களும் இடம்பெற்றிடவில்லை.தமிழகத்தில் இந்துத்துவத்தின் இன்றைய எழுச்சியை முதல்நிலை பார்ப்பானியத்தை விட இடைநிலை சாதி இந்துக்களே அதிதீவிரமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள்.சாதிய அடிப்படையில் மட்டுமே இந்துத்துவத்தை மீட்டெடுக்க முடியும் என்பதை கண்டறிந்தமையாமல் அவர்களின் சிந்தனைகள் ஒரே நேர்கோட்டில் செல்கிறது எனலாம்.ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் சாதிய ரீதியலான இயக்கங்கள் மிகக்குறைவாகவே இருந்திருக்கிறது, நேரடியாக சாதி இந்துக்கள் தங்களின் இயக்கங்களுக்கு சாதி ஒட்டு இடாமல் "தமிழ்" மொழியை ஒட்டிக்கொண்டு இயக்கத்தினை வளர்த்திருக்கிறார்கள், 19ம் நூற்றாண்டுகளில் தமிழ் பண்பாட்டு இயக்கம்,தமிழ் வளர்ச்சி இயக்கம்,தமிழ் கிளர்ச்சி இயக்கம் போன்ற இயக்கங்கள் சாதி இந்துக்களின் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த இயக்கங்களாகும், சிறு கூட்டங்களாக அவ்வப்போது பிளவுபட்டு மீண்டும் இணையும் கூட்டங்களாக இவர்கள் இருந்திருக்கிறார்கள். (தமிழக அரசியல் ஓர் அலசல்-கண்ணுபிள்ளை) ஒருவிதத்தில் திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் சாதி இந்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கிறார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்டலாம்,இருந்தும் "தமிழை ஏன் பயன்படுத்தினார்கள்?" என்கிற கேள்வி எழுகிறது. ஏனெனில் ஆரிய வடமொழி கலப்பை தமிழானது உள்வாங்கிக்கொண்டு அதேநடையில் பல்வேறு கலை,இலக்கியங்கள் இத்தமிழ்ச் சமூகத்தில் வலம் வந்தமையால் எளிதாக சாதி இந்துக்கள் தமிழை ஓர் கேடயமாக பயன்படுத்திக் கொண்டார்கள் . தமிழகத்தில் இன்றைய பிஜெபி அன்றைய காலத்தில் "ஜனசங்கமாக" இயங்கிக்கொண்டிருக்கும் போது அதனோடு சேர்ந்த பல்வேறு இயக்கங்களும் சாதி இந்துக்களின் இயக்கங்களாக இருந்திருக்கிறது. குறிப்பாக தமிழை ஒட்டு வைத்த சாதி இந்துக்களின் இயக்கங்கள்.தமிழகத்தில் குலக்கல்விமுறையை மீண்டும் செயல்படுத்த படாதபாடுபட்ட ராஜாஜி அவர்கள்தான் ஜனசங்கத்திற்கு பக்கபலமாக நின்று பாதுகாத்தார் என்பது வரலாற்று உண்மையாகும், அடிப்படையில் மனுதர்ம வருணாசிரமத்தின் சாதியத்தை ஆதரிப்பவராகவும் அதற்காக உறுவாக்கப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பவராகவும் ராஜாஜி அவர்கள் இருந்திருக்கிறார். இடைகாலத்தில் திராவிட இயக்கங்களும் அதனிடமிருந்து அரசியல் அதிகாரம் பிடிக்க வந்த திமுக, அரசியல் கட்சிகளும் காங்ரஸை வீழ்த்திய காலகட்டத்தில் ஜனசங்கம் கானாமல் போனது. இன்றைய சமூகச் சூழலில் வெளியுலகிற்கு வந்திருக்கும் ஜனசங்கம் பெயரை மாற்றிக்கொண்டாலும் இந்துத்துவ கொள்கை கோட்பாடுகளில் எந்தவித மாற்றமுமின்றி பிஜெபியாக வளர்ந்து நிற்கிறது. அதன் பின்னால் அரசியல் ரீதியாக கூட்டணியமைத்த கட்சிகள் பெரும்பாலும் சாதியக்கட்சிகளாகவே இருந்ததை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் நமக்கு வெளிச்சம்போட்டு காட்டிவிட்டுச் சென்றிருக்கிறது.ஏன் இருபெரும் திராவிட கட்சிகளிடத்தில் சாதிய கட்சிகள் இடம்பெறவில்லையா? என கேள்வி எழலாம், இரு திராவிட கட்சிகளும் சாதி இந்துக்களின் இயக்கம்,மற்றும் கட்சிகளுக்கு இடம் கொடுத்து அரசியலை முன்னெடுத்துச் செல்வதனால்தான் பார்ப்பானியத்தின் பிடியில் இன்றைய திராவிடமென எடுத்துரைக்கப்படுகிறது. ஆக முந்தைய காலத்திய மறைமுக சாதி இந்துக்களின் இயக்கங்கள் இன்று அந்தந்த இந்துத்துவ ஆதிக்கச் சாதியின் பெயரோடு வெளிப்படையாகவே இயங்கி அரசியலை பிடிக்க படைதிரட்டுகிறதென்றால் , தமிழ்ச் சமூகத்தில் மண்டிக்கிடந்த "முற்போக்குச் சிந்தனைகள்" வீழ்ந்து செயலற்றுப் போய்விட்டதாகவே எடுத்துக்கொள்ளலாம். முற்போக்களார்கள் அவரவர் கொள்கை கோட்பாடுகளை தனித்தனியாக வகுத்தல் என்பது இயக்கத்தின் உரிமையாகும்,ஒரு இயக்கத்தின் செயல்திட்டம் இன்னொரு இயக்கத்திற்கு பொருந்தாத் தன்மையுடையாதாக இருக்கும் ஆனால் பிற்போக்குச் சிந்தனைகளாகவே முளைத்தெழுந்த இந்துத்துவ பார்ப்பானிய சாதி இந்துக்களை எதிர்க்கின்ற வேளையில் அனைத்து முரண்பாடுகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒற்றுமையாக ஆதிக்கத்தை எதிர்க்க தவறவிட்டதன் விளைவு தமிழகம் இன்று இந்துத்துவத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு சீரழிந்து கொண்டிருக்கிறது.இங்கே தமிழகத்தை பொருத்தமட்டில் மார்க்ஸிய சிந்தனையானாலும்,லெனினிய சிந்தனையானாலும்,அம்பேத்கரிய சிந்தனையானாலும்,திராவிட பெரியாரிய சிந்தனையானாலும் இன்ன பிற முற்போக்குச் சிந்தனையானாலும் இந்துத்துவத்திற்கு எதிராகவும், சாதி இந்துக்களின் இயக்கங்களுக்கு எதிராகவும் ஒரணியில் திரண்டு ஒற்றுமையுடன் சமூகத்தை சீர்படுத்தும் நோக்கோடு திரள வேண்டும், மக்கள் சமூகத்தையும் முற்போக்குச் சிந்தனையின்பால் கவனத்தை ஈர்க்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் அதற்கு முதல் செயல்திட்டமாக முற்போக்காளர்கள் "ஒற்றுமை"கடைபிடிக்க வேண்டும்.

1 comment:

  1. மிக மிக அருமையான ஆழமான புரிதல் உள்ள ஒரு பதிவு. மதச்சார்பின்மையை நேசிக்கும் தமிழர்கள் அனைவருமே ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய காலமிது. மார்க்சியம், லெனினியம், மாவோயியம், பெரியாரியம், அம்பேத்காரியம் என கொள்கை வேறுபாடுகளால் பிரிந்து கிடக்கின்ற தமிழ் கட்சிகள், இயக்கங்கள் அனைவருமே மதவாதம், ஜாதியவாதம், இனவாதம் பேசும் சக்திகளுக்கு எதிராக சில சமயங்களிலாவது ஒன்றிணைந்து செயல்பட முன் வர வேண்டும். தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ் நாட்டின் நலனையும் தனித் தன்மையையும் பாதுகாக்க இதுவே காலத்தின் கட்டாயமும் கூட.

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...