Thursday, June 25, 2015

இரு தோழர்கள்!

வாடைக்காற்றில் வயிற்றுப்பசியோடு சுற்றித் திரிந்த பறவையொன்று
எச்சில் இலையை
ஏக்கமாய் பார்த்துவிட

எனக்கே போதாதிது
நீ வேறு
வந்துவிட்டாயாவென
விரட்ட மனமில்லாமல் விரலசைத்து
அழைக்கிறது
பிஞ்சு மனசு

அருகில் வந்தமர்ந்த உடலோடு
இறக்கைகளும்
ஒட்டிப்போன பறவையினடத்தில்

பாசம் வைத்து
பந்தியில் இடம் பகிர்ந்தளிக்கிறானே
அவன் யார்?

விடைத்
தேடியலையும்
எச்சில் இலைகளுக்கு விவரம் போதவில்லை வீசப்பட்ட இலைகளோ விருந்துண்ணும்
பக்குவமாயிங்கே

மாயவித்தைகளை
மடியில் சுமந்தவனில்லையவன் மழைநீர் அவனது
விக்கலை விரட்டும்

என்றோ பிறந்தவன்
இன்னமும் தேடுகிறான் குப்பைத் தொட்டியில்
உணவை

பரிவுகாட்டிய பறவையினடத்தில் பட்டகதையை
விவரிக்கிறான்
அத்தனையும் சோகக்கதைகளே,,,

நொந்துபோகாமல்
செவிசாய்த்து
கேட்கிறது
அந்தப் பறவையும்

இறுதி உரையாடல்
இடியினை
விழுங்க
பறவையே கேள்!!!

ஏழையாய் பிறந்தது தவறில்லை
ஏழையாய் வாழ்ந்து
மடிவது தவறென்று யாரோவொருவன்
சொன்னானாம்
சிரிப்புதான் வருகிறதெனக்கு

பிறந்தபொழுதே புதைக்கப்பட்டுவிட்டா­ல் பூமிக்கு ஒரு சுமையிருக்காது

வாழ்ந்தே விடுகிறேன் பூமியெனை திட்டுகிறது ஏனடா
சாகவில்லையென்று

காத்திரு பூமியே
கடைசிவரை
சமூகமென்னை
திரும்பி பார்க்குமா? திருந்தி வாழுமா?
தேடியலையும் வரை
துறக்க மாட்டேன் இவ்வுயிரையென்றேன்

தேடு! தேடு!
நன்றாகத் தேடு!
அதுவரையில்
நீயெனக்கு சுமையில்லையென சுருண்டு விழுந்தது பூமியென்
காலடியில்

நமது கதை
சிரிப்பாய் சிரிக்கிறது
பார்த்தாயா பறவையே சிறுவனும் சிரித்தான்,
பறவையும் சிரித்தது

எச்சில் இலை
பந்தி
இனியாரேனும்
வீசுவார்களா?

எதிர்பார்ப்பில்
இருவருமே
தோழர்களானார்கள்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...