Sunday, March 20, 2016

இறக்காத கவிதைகளை!

அன்றெனக்கு
என்ன தோன்றியதோ
அதை எழுத்தில்
வடித்து
என் கவிதையென
எடுத்து வருவேன்
ஆவலாய் உன்னிடத்தில்

அலட்சியமாய்
வாசித்து
இன்னும் ஆழமாய்
எழுதச் சொல்கிறாய்
சிந்தனைகள்
சிதறிவிட்டதாய்
கடிந்தும் கொள்கிறாய்
கவிதையில்
உயிர்ப்பில்லையென
உதடுகளை குவிக்கிறாய்

மூளையை கசக்கி
யோசித்து யோசித்து
எழுதிய கவிதைகள்
மொத்தத்தையும்
குப்பை மேடுகளாய்
மூலையில்
கூட்டிவிடுகிறேன்

கடைசியாய் மீந்துபோன
ஒரு காகிதத்தை
நீயாவது கடந்து போ!
இந்த கைதியின்
அறைகளை விட்டு
வெளியே!

ஒதுக்கப்பட்ட
குப்பைகளின்
அறைகூவல்
என் காதுகளிலும்
விழத்தான் செய்கிறது

ஒருவழியாய்
கையிலேந்தி
காட்ட வருகிறேன் உன்னிடத்தில்
கடைசி காகிதத்தை

ஆர்வமாய்
வாங்கி பார்த்து
பதிலாய்
நீயெழுதுகிறாய்
மௌனப்
புன்னகையோடு
கவிதை அழகென்றும்
காதல் சுகமென்றும்

எழுதப்படாத
வெள்ளை காகிதத்தில் என்மனத் தூய்மையை
சோதிக்கவா
இத்தனை சோதனைகள்

சிரித்து விடுகிறேன்
சந்தம் தேடுகிறேன்
சத்தமிடாமல்
உனை
கட்டியணைக்கிறேன்

எழுதுகிறோம்
இருவருமே சேர்ந்து
இரவின் மடியில்
இறக்காத கவிதைகளை
இன்னமும்,,,

2 comments:

  1. அற்புதம் அற்புதம்
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...