Monday, December 31, 2018

கௌசல்யா -சக்தி இதற்கு விளக்கம் கொடுக்காதது ஏன்?
இவையெல்லாம் சட்டப்படி நியாயமில்லாதது , ஏன் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையமோ நீதிமன்றதையோ நாடவில்லை என்பது வியப்பாக உள்ளது...

கொளத்தூர் மணி அவர்களும் தியாகு அவர்களும் செய்திருப்பது பச்சையான கட்ட பஞ்சாயத்து...

முன்னதாக வந்த செய்தி..

தியாகு -- கொளத்தூர் மணி அறிக்கை

சக்தி- கவுசல்யா தொடர்பாக…

1)   சக்தி-கௌசல்யா திருமணத்துக்குப் பின் சக்தி மீது எழுந்த
குற்றச்சாற்றுகளும் அவை குறித்து சமூக ஊடகங்களில் இடம் பெற்ற கருத்துகள்,
எதிர்க் கருத்துகளும் கவலைக்குரிய முறையில் வளர்ந்து சென்று கொண்டிருந்த நிலையில், அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசித் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் பாரதி மற்ற நண்பர்களையும் இணைத்துக் கொண்டு முன்முயற்சி செய்தார். அவர்கள் இந்தச்
சிக்கலில் முதன்மைத் தொடர்புள்ள இருதரப்பினரிடமும் ஒப்புதல் பெற்று,
ததேவிஇ தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் -விடுதலைக் கழகத்
தலைவர், கொளத்துர் தா.செ. மணி ஆகிய எங்கள் இருவரிடமும் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தனர். நாங்கள் இருவரும் 27/12/2018 காலை 10 முதல் இரவு 9 மணி வரை திவிக அலுவலகத்தில் அமர்ந்து, சக்தி-கௌசல்யாவையும், சக்தி மீது
குற்றச்சாட்டு கூறியவர்கள், சான்றளிக்க முன்வந்தவர்கள், சக்தி-கௌசல்யா
திருமணத்தில் தொடர்புள்ளவர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் விசாரித்தோம்.

முதன்மைத் துயரர் ஒரு பெண், பெயர் வெளியிட இயலாத நிலையில் அவரை ’அந்தப்
பெண்’ என்று மட்டும் குறிப்பிடுவோம்.

2)   அந்தப் பெண்ணைக் காதலித்து வந்த சக்தி அவரைக் கைவிட்டுப் போய்க்
கௌசல்யாவை மணந்து கொண்டார் என்பது முதல் குற்றச்சாட்டு. காதலை மாற்றிக் கொள்ள அவருக்கு உரிமை உண்டென்றாலும், இந்தக் குறிப்பிட்ட நேர்வில் சக்தி அவரைக் கைவிடுவதும் வேறு பெண்ணிடம் செல்வதும் பிறகு மீண்டும் வந்து நம்ப வைத்து ஒன்றுசேர்வதும், மீண்டும் திரும்பிப் போவதுமாக ஒரு முறைக்கு மேல்
நடந்திருப்பதும், இந்த வகையில் அந்தப் பெண்ணுக்கு உடல் வகையிலும் உள்ள
வகையிலும் கடுமையான மன உளைச்சல் தந்திருப்பதும் குற்றம் என்று கருதுகிறோம்.

3)சொந்த வாழ்வில் ஆணவக் கொலையால் பாதிப்புற்ற கௌசல்யா நீதிக்காக
நடத்திய போராட்டத்தையும், ஆணவக் கொலைகளுக்கு எதிரான இயக்கத்தில் அவர் வகித்த பங்கையும் சமூக நீதி ஆற்றல்களோடு சேர்ந்து நாமும் வரவேற்றோம். சங்கர் மீதான காதலையே நினைத்துக்கொண்டு கௌசல்யா காலமெல்லாம்
கைம்பெண்ணாகவே வாழ வேண்டும் என்ற பத்தாம்பசலி நிலைப்பாட்டிலும் எமக்கு உடன்பாடில்லை. அவர் மீண்டும் காதல் மணம் புரிவது வரவேற்கத்தக்கது என்ற கருத்திலும் மாறுபாடில்லை. ஆனால் சக்தி மீது கொண்ட காதலும், அவரை மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் கருதி சக்தியின் செயலைக் கண்டிக்கத் தவறியது கௌசல்யாவின் பிழையாகும்.

4) நிமிர்வு கலையகத்தின் தலைமை ஆசான் என்ற இடத்தைப் பயன்படுத்தி சக்தி தன்னிடம் பயிற்சி பெற வந்த பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. இப்படி ஒரு குற்றச்சாட்டின் பேரில் ஒரு முறை நிமிர்வு கலையகத்திலிருந்து நீக்கப்பட்டுச் சிறிது காலம் கழித்து
மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு
திருநங்கையும் சக்தி மீது பாலியல் சீண்டல் குற்றம் சுமத்தியுள்ளார்.
சக்தி தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்புவதற்காக வேறு பெண்களைப் பற்றி அவதூறு செய்தார் என்ற குற்றச்சாட்டும்
முன்வைக்கப்பட்டது.

5)எம்மிடம் புலனாய்வுப் பொறிமுறையோ நீதி உசாவலுக்குரிய பொறிமுறையோ
முடிவுகளைச் செயலாக்குவதற்கான சட்ட வலிமையோ இல்லாத நிலையிலும், தமிழ்க் குமுகம் தந்திருப்பதாக நாங்கள் நம்பும் அற வலிமையையும் அனைத்துத்
தரப்பினரும் கொண்ட நம்பிக்கையையும்  துணைக்கொண்டு இயன்ற வரை எமது
கடமையைச் செய்து முடித்துள்ளோம். தொடர்புடைய அனைவரும் இடம்பெற்ற பொது அவையிலும் கலந்தாய்வு செய்தோம். சான்றியமளிக்க வேண்டிய சிலரிடம் தொலைப்பேசி வழியாகவும் உண்மையறிய முயன்றோம். முடிவுகளை அடைவதிலும் தீர்ப்பை வரைவதிலும் மனிதி செல்வி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத் தோழர் வளர்மதி, ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கத் தோழர் பார்த்திபன் ஆகியோரும்
எங்களுக்கு உதவினர். முடிவுகளைப் பொது அவையில் அறிவிக்குமுன் ’அந்தப்
பெண்’ணிடமும் கருத்தறிந்தோம். இந்த விசாரணையில் அடைந்த முடிவுகளையும் தீர்ப்பையும் பொது வெளியில் பணிந்தளிக்கிறோம்.

முடிவுகள்:

1) அந்தப் பெண்ணுக்கு மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அநீதிக்குப்
பொறுப்புக்கூற வேண்டியவர் சக்தி, அந்தப் பெண்ணும் சரி, சக்தி-கௌசல்யாவும் சரி, எங்களிடம் தந்த விளக்கங்களில் அடிப்படையான முரண்பாடு ஏதுமில்லை. பொது அவையிலும் அந்தப் பெண் தொடர்பாகத் தன் மீதான குற்றச்சாற்றினை சக்தி
ஒப்புக்கொண்டார். கௌசல்யாவும் தன் பிழையைப் புரிந்து ஒப்புக்கொண்டார்.

2)சக்தி தன் மீதான மற்றப் பொதுவான குற்றச்சாற்றுகளை மறுத்து
விளக்கமளித்தார். எதிர்த்தரப்பினரும் குற்றச்சாற்றுகளை வலியுறுத்தி
விளக்கமளித்தனர். நீண்ட காலக்கழிவு, வதந்திகளின் ஊர்வலம், தனிமனித
விருப்புவெறுப்புகள் ஆகிய காரணிகளின் மூட்டத்தில் எந்த ஒன்றையும் மெய்ப்பிக்கவோ பொய்ப்பிக்கவோ அறுதியான இறுதிச் சான்று இல்லாத நிலையில்
நாங்கள் இவ்வாறு முடிவெடுக்கிறோம்: தனது ஆற்றலை வியப்புடன் மதிப்போரை அதனைக் கொண்டே மடக்கும் போக்கு சக்தியிடம் இருந்து வந்துள்ளதை ஊகிக்க
முடிகிறது.

பொதுவாழ்வில் பாலின பேதமற்று செயல்படும் ஆர்வத்தோடு வரும் பெண்களுக்கு இவ்வகைப் போக்கு பெரும் தடையாகும் என்பதும் -  பொதுவாழ்வில் இயங்கும்
பெண்கள் மீதான பொதுப்புத்தியில் உள்ள அவநம்பிக்கையை அது மேலும்
அதிகப்படுத்தும் என்பதும் – பல்வகைத்  தடைகளைத் தாண்டி சமூகப் பணியாற்ற
வரும் பெண்களுக்கு குடும்பத்தில் நிலவும் கட்டுப்பாடுகள் மேலும் மேலும்
இறுகும் என்பதுமே மெய்ந்நிலையாகும்.

தீர்ப்பு:

1) சக்தி தன் குற்றங்களுக்காகப் பொது அவையில் மன்னிப்புக் கோர வேண்டும். கௌசல்யாவும் பொது அவையில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.*

(*இது அப்போதே நடந்து முடிந்தது.)

2)சக்தி நிமிர்வு கலையகத்திலிருந்து வெளியேற வேண்டும்.

3)இன்றிலிருந்து ஆறு மாதகாலம் சக்தி எந்தப் பொதுநிகழ்ச்சியிலும்
பறையிசைக்கக் கூடாது.

4)தண்டம் (இழப்பீடு) என்ற வகையில் சக்தி ஆறு மாத காலத்துக்குள் மூன்று
இலட்சம் உருவாய் செலுத்த வேண்டும்.

5)இந்தத் தீர்ப்பில் எந்தப் பகுதி குறித்தும் மேல்முறையீடு செய்ய
விரும்பினால் மூன்று மாதத்துக்குப் பின் அவ்வாறு செய்யலாம்.

தொடர்புடைய அனைவரும் இந்தத் தீர்ப்பை செயலாக்குவதில் உளமார ஒத்துழைப்பது அறத்தின் கட்டளை. முடிவுகளை அறிவித்த பின்னரும் தேவையற்ற செயல்களில்
ஈடுபடுவது --- தேவையற்ற விமர்சனங்களைப் பொதுவெளியில் வைப்பது அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவது --– போன்ற செயல்பாடுகள் முடிவை
மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதைத் தெளிவாக
அறிவிக்க விரும்புகிறோம்.

                                   தோழமையுடன்,

                     தியாகு /கொளத்தூர் மணி

                                             சென்னை
                                              29/12/18

Saturday, December 29, 2018

உலா வரும் தேனீக்கள்
தேனீக்கள் உலாவும் இடத்தில்
பூக்களின் நாடித் துடிப்புளை தொட்டு பார்க்கும் மழைச்சாரல்

இலைகளின் அசைவுகளில் இனம்புரியாத ஒரு
பாடல் ...
யாரை கேட்டு இசைக்கிறது இந்த காற்று...
யாரை கேட்க வேண்டும் நான் இசைக்க மறு பேச்சு....

சில்லிட்டு... துள்ளல் கொண்டு... துடித்து... ஆர்ப்பரிக்கும்
பருவ மோகனத்தில்
இன்னும் இன்னும்
தேனை தந்துவிட்டு தாய் மண்ணை முத்தமிடுகிறது அதே  பூஞ்செடியின் வேர்கள்...

Friday, December 28, 2018

மழைக் குருவி
மானுடத்தை கொஞ்சும்
ஒரு மழைக்குருவியின்
கண்களில் கசியும் மௌனம் காணாது

திடீரென முளைத்திடும்
மின்னலொளி பிசுபிசுப்பில்
கீச்சிடும்
குரல்களினூடே
வெளியேறும் பதற்றத்தை போலொரு காதல்
உனக்கும் எனக்கும்....

இந்துமத சாதிகள் அதிர்வுகள்
இந்தியாவில் நிலவும் சாதிய அடுக்குகளில் ஒவ்வொன்றிலும் விஷம் பரவியிருக்கிறது என்பதுதான் உண்மை. இங்கு  ஹிந்து மதம்  மனுசாஸ்த்திர வர்ணாசிரம அடிப்படையில் நால்வர்ணம் கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்திய சாதிய அமைப்பு முறைகளில் எந்தவிதமான மாறுதலுமின்றி மூவாயிரம் (தோராயமாக) ஆண்டுகளுக்கு மேலாக   மக்களை அடிமைபடுத்துவதில் இன்று வரையில் தொடர்ந்துகொண்டே செல்கிறதெனில், அது ஒரேயொரு அழுத்தமான மதக்கொள்கையில் மட்டுமே... அது... "தனக்கு கீழாக ஒரு அடிமை மக்கள் எப்பொழுதுமே இருத்தல் வேண்டும்" என்பதுதான்... ஹிந்துமத மனுதர்ம வர்ணாசிரமத்தின் படி பார்ப்பனர்கள் , வைசியர்கள், ஷத்ரியர்கள், சூத்திரர்கள் என்கிற நால்வர்ணம் படிப்படியாக ஒருத்தரை ஒருத்தர் தங்களுக்கு தேவையான அடிமை மக்களை ஏறி மிதிப்பதுதான் ஹிந்து மதம், இதில் கவனிக்கப்பட வேண்டியது பஞ்சமர்கள் (தாழ்த்தப்பட்டோர்) பட்டியலில் இல்லை ஆனால் ஹிந்துமத  சாதிய அடிமை படுத்துதலில் அவர்கள்  உண்டு... காரணம் பார்ப்பானியத்தை பொறுத்தவரை சூத்திரன் (தேவடியாள் மகன்) பட்டியலிலேயே அவர்களை ஹிந்துமதம் வைத்திருக்கிறது... பெரியார் இதனை எதிர்த்து "பறையர் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது என்கிறார்"
(சமதர்ம அறிக்கை- முன்னுரை ... குடியரசு 1931)
அதைவிட மேலாக அம்பேத்கர் அவர்கள் திரு காந்தியை சாடி (ஹரிஜன்) எங்களை இந்து மதம் அடிமைபடுத்துவதைத்தான் திரு காந்தி விரும்புகிறாரா?  தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜன் (ராமனின் பிள்ளை) என்று திரு காந்தி அழைப்பதையும் அதன் பெயரில் பத்திரிகை வருவதையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்கிறார் ( சாதி ஒழிப்பு நூல் ) ஆக அம்பேத்கரும் பெரியாரும் ஹிந்து சனாதன சாதிய வன்மத்தை போட்டு உடைக்கிறார்கள்... காந்தியின் கூற்றுப்படி ஹரிஜன் என்பது ராமனின் பிள்ளை எனில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெருமைதானே என நினைக்கத் தோன்றும் ஆனால்
அம்பேத்கரும்,  பெரியாரும்  மிகத் தெளிவாக ராம ராஜியத்தை உடைத்தெறிகிறார்கள், ராமாயணத்தில் உள்ள சம்பூகன் வதத்தை  இருவருமே மிக நேர்த்தியாக கையாண்டார்கள் ... ராமனின் ஆட்சியில் ஒரு பார்ப்பனின் கோரிக்கைக்காக எவ்வித விசாரணையுமின்றி கொலையும் செய்யத் துணியும் கேடுகெட்டதுதான் ஹிந்து  சனாதன ராம ராஜ்ஜியம் என அறிவுறுத்துகின்றனர்... இங்கு  ராமாயணத்தில் ஒரு பார்ப்பனன் ராம ராஜ்ஜியத்தை குறை கூறுகிறான் அதற்கு நாரதர் என்பவர் குறையை தீர்க்க வழி சொல்கிறார், என்னவென்றால் கடைகோடியில் எங்கோ பார்ப்பனர் அல்லாத ஒருவன் தவம் இருப்பதாகவும் (பார்ப்பனர் அல்லாதோர் தவம் இருப்பது குற்றமா?) அவன் உயிரை பறித்து விட்டால் தீர்வு வரும் என்கிறார்... ராமனும் அவனை தேடி அலைகிறார் சம்பூகன் அவன் என அடையாளம் காண்கிறார் ... எந்த சாதி என மட்டும் வினவுகிறார் ( வேறு எதுவும் அவனிடத்தில் கேட்கப்படவில்லை) அவன் "சூத்திரன்" என்றதும் தலையை துண்டிக்கிறார்... இதுதான் ராம ராஜ்ஜியம் எனில் எங்களை எப்படி ராமனின் பிள்ளை என அழைப்பீர்கள் என அம்பேத்கரும் பெரியாரும் சாடுகிறார்கள்...ஸ்ரீமத் ராமாயணம் உத்தர காண்டம் 65 – 77
அத்தியாயம் 76 ( 613) சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்)ஹிந்து மதம் எந்த விதத்திலும் , எக்காலத்திலும் சாதியத்தை வைத்தே பிழைப்பு நடத்துவதைத்தான் நோக்கமாககொண்டிருக்கிறது அதிலும் குறிப்பாக பார்ப்பனியத்தை.... இடைநிலை சாதிகளான ஏனைய அனைத்து "சுமார் 3000 க்கும் மேலான சாதிகள்) சாதிகளுமே பார்ப்பனனை பொறுத்தவரையில் "சூத்திரன் (தேவடியாள் மகன்) மட்டுமே.... ஆனால் இந்திய சாதிய அமைப்புகள் தங்களை சூத்திரன் என்றழைக்கும் பார்ப்பனியத்தை எதிர்க்காமல் தங்களுக்கு கீழான  அடிமை சாதிகளை உறுவாக்கி அவர்களை ஒடுக்குதலையே முதன்மையாக கொண்டிருக்கிறார்கள்.... இவர்களுக்கு தேவை எதிர்ப்பு அல்ல ஏனைய அடிமைகள் அவ்வளவே....
தங்களை ஆண்ட சாதி , படியளந்த சாதி, அரசாண்ட ஷத்ரியர்கள் என பெருமை பிதற்றிக்கொடண்டாலும் ஹிந்துமத பார்பனனை கேட்டுப்பாருங்கள் "அவாள்ளாம் சூத்திரா" என்பார்கள்... இதுதான் ஹிந்துமதம்...
இந்த இடைநிலை சாதிகளானாலும் , அதன் கீழான தாழ்த்தப்பட்டவர்களானாலும் ஹிந்து மதத்தின் மிக நுணுக்கமான அடிமை படுத்துதலையே கடைபிடிக்கிறார்கள்... தங்களை வைசியர்களாக , ஷத்ரியர்களாக , அடையாளப்படுத்தும் சாதிகள் சூத்திரர்களை ஒடுக்குவது, சூத்திரர்கள் தங்களை ஒடுக்கும் இடைநிலை சாதிகளை எதிர்க்காமல்  தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குவது , தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களையே ஒடுக்குவது... அதன் வழி ஹிந்து மதத்தை விடாப்பிடியாக இறுக்கமாக கட்டமைப்பது என்பதைத்தான் காலங்காலமாக பின்பற்றப்படுகிறது...ஒரு சாதிகள் சூழ்ந்து இன்னொரு சாதிகளை அனுசரிக்கும் வழக்கம் ஹிந்து மதத்திற்கோ, அதன் பார்ப்பனியத்திற்கோ  அறவே இருக்காது.... ஏனென்னால் அப்பொழுது ஹிந்துமதம் அழிந்து போகும்... இதன் காரணமாகவே பெருந்தலைவர்களையெல்லாம் ஹிந்துமதம் சாதிய வட்டத்திற்குள் அடக்கி வைக்கும் , அம்பேத்கரை  தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமான தலைவராக ஹிந்து மதம்  வைத்தது இதன் மூலமேயாகம், நடைமுறையில் காமராஜரை கூட சாதித்தலைவராக மாற்றியதும் குறிப்பிடப்பட வேண்டும், மக்களின் உணர்வுகளில் , அவர்களின் பலவீனங்களில் ஒவ்வொன்றிலும் ஹிந்து மதத்தின் அனுகூலங்களை புகுத்தி அவர்களின் சாதிய உணர்வுகளை எப்பொழுதுமே ஹிந்து மதம் கிளரிக்கொண்டே இருக்கும்...
என்ன சாதித்தது ஹிந்து மத சாதிகள் , தாழ்த்தப்பவர்கள் கல்வி யை செவி வழியில் கேட்டால்கூட பொசுக்கி விடு என்றதும்(கீதை) , பெண்களுக்கு (பார்ப்பன பெண்களும்) கல்வி அறவேக்கூடாது அவர்கள் ஆண்களுக்கு அடிமையாளர்கள் என்றும்தான் ஹிந்துமத பார்ப்பனிய சாதனையா? இப்போதெல்லாம் இப்படி நடப்பதில்லையே என்கிறீர்களா?   "நான் உன்னை கல்யாணம் பன்னிட்டேன்டி இனிமேல் எனக்கு நீ அடிமை" என எத்தனை உதடுகள் சொல்லியிருக்கும் என்று மனதை திறந்து வைத்து உங்களை நீங்களே உணருங்கள், சாதியின் பெயரால் ஆணவக்கொலைகளை நிகழ்த்துவதில் , தீண்டாமை கடைபிடிக்கப்படுவதில்  ஹிந்து மத சனாதனம் மிகப் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது என்பது இந்த நாட்டின் மிகப் பெரிய சாபம் என்றால் அது மிகையாகாது.

Thursday, December 06, 2018

அம்பேத்கர் நினைவு தினம்


யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்...

அமைதி மதமென
அஹிம்சை  கொண்டவனை
அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்....

ஆண்டாண்டு கால அடிமை சமூகத்தை
நீ அடிமையென அவர்களுக்கே உணரச் செய்தவன்‌...

முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி எனும் புனைவுகளுக்கு
மத்தியில்,
அரசமைப்புச் சட்டமெனும் பெருந் தேரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாய் தன்னையே தேராக்கியவன்....

விடவில்லை , வீழ்ந்துவிடவுமில்லை
மதவாதமோ, சாதியவாதமோ...
என் தேரை இழுத்து தெருவில் விடுமானால்
அதை தீயிலிட தயங்க மாட்டேன் என்றான்...

எரிந்து கொண்டிருக்கிறது திரும்ப திரும்ப
அழியாத சாதியால்
நுழையாத தேரினை
தலித் தொட்டால் தீட்டென்று கோவில் தேர்களை...
இன்னமும்... இன்னமும்...

பசி, தாகம், பட்டினி , வறுமையென அனைத்தும் ஒற்றை ராந்தல் விளக்கில் அமிழ்த்து இந்திய தேசத்தில் ஒளியாய்
நின்றவன்....

வருத்தங்கள் வந்து போகாதா மனமே...
சேரிக்கு மட்டுமா
சிலை அவனுக்கு?
ஊருக்கு எப்போது போகுமோ ஏக்கத்தில்
வெடிக்கிறது நெஞ்சம்...

ஒரு பேனாவின் கூர்முனை கிழித்து
தைக்கும் பல்லாயிரம்
பதிலடிகளுக்கு சொந்தக்காரனவன்...

கேட்டாயோ காவிகளின் அதிகார திமிரை...
அவனின் நினைவு தினத்தை அடியோடு ஒழித்திடவே...
அழித்து தரைமட்டமாக்கினார்கள் பாபர் மசூதியை...

அவன்... அதிகாரத்தை அனைவருக்குமாய் பகிர்ந்து கொடுத்தான்...

அவன்... உன்னையும் என்னையும் சமமாக்கினான்...

அவன்... பெண்ணடிமையை
தகர்த்திட துடித்தவன்...

அவன்.... கல்வியை பொதுவில் வைத்தான்...

அவன்... முழக்கமிடுகிறான்

கற்பி!!!!
ஒன்று சேர்!!!
புரட்சி செய்!!!

அவன்.... சத்தமின்றி
யுத்தமின்றி...
புரட்சி செய்கிறான்...
சமத்துவம், சகோதரத்துவம், வார்த்தைகளோடு....

ஆமாம் இன்னமும்...
அவன்... பட்டினியோடுதான் இருக்கிறான்...
எப்போது மடியும் இந்த அடிமைத்தனமென்று...

ஜெய்பீம்!!!!
நீலம் வெல்லும் !!!
புத்தம் சரணம் கச்சாமி!!!
பாபா சாகேப் அம்பேத்கர் என்பவன் அவனே!!!!

Featured post

டாக்டர் அனிதா நினைவலைகள்

பெருங்கடல்களுக்கு நடுவே நசுங்கிப்போன பல குரல்களின் "நீட்"சிகளாக தொடர்ந்து ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ... அசையாத ம...