Sunday, September 01, 2019

டாக்டர் அனிதா நினைவலைகள்


பெருங்கடல்களுக்கு நடுவே
நசுங்கிப்போன பல குரல்களின்
"நீட்"சிகளாக தொடர்ந்து
ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ...
அசையாத மரக்கட்டைகள் கண்ணீரை
நாவில் தொட்டு பார்த்து
வெறும் கடலின் உப்பு நீரென
கண்டு கொள்ளாமலும் ஊழியின்
சாபங்கள் எனவும்
கடந்துபோகும் மனுசப் பயல்கள் நாம்...
#டாக்டர்_அனிதா

Saturday, July 20, 2019

அட பைத்தியக்காரா !!!
பைத்தியமானதின் உன்னதம்
தளர்ந்து போன மனங்களின்
தூசி படிந்த இரவுகளை
தட்டி சீர்படுத்தும் ஒரு பேரன்பு
இல்லாது தவிக்கும்
பெரும்பசி கொண்டவனின் கால்களில் விலங்கிட்டு ...

தேற்றுதல் மொழி அல்லாத பார்வையில் சில எச்சில்களை உமிழ்ந்து கடந்துவிட்டு போகிறது இப்பெரு வாழ்வு ...

ஆசைகள் பேராசைகளாகி அதுவே
நிராசைகளாக
எத்துணை எத்துணை பைத்தியங்கள் இங்கு  வீதியுலா கொள்கிறது ...

உணர்தல் விளக்கங்களாக
உயிர்கள் அனைத்தும்
பைத்தியங்களே !!!

சாட்சிகளற்ற சந்தர்ப்பங்கள் அமையாத எல்லாம் பைத்திங்களாகி போன
ஒரு பெருங்கூட்டம்

ஒற்றை மனிதனை சுற்றி சுற்றி
அவன் பைத்தியமென  கூச்சலிடுவது நகைமுரண் கொண்ட வேடிக்கைதான் ...

அட பைத்தியக்காரா  ...

என்றவன் உன்னை சொல்லும்
முன் ஒரு பேரன்பையாவது
விதைத்துவிட்டு போ ...

வாழ்வான் அவனெனும் உலகில்
சூழ்ந்திருக்கும் ஏதோவொரு
பைத்தியம் ...

மனிதர்களின் அழிச்சாட்டியங்கள் !
காட்டு மரங்களின்
கூந்தல் கிளைகளில்
உணவை தேடும் பறவைகளுக்கு ஒய்யாரமாக கதைகள் சொல்லி கடத்தி போகிறது பூக்களின் மகரந்தம் ...

எங்கோ தொலைவில் அதிரும் பெரும் சர்ச்சைகளின் இரைச்சலை கேட்டு கூச்சலிடும் பறவைகளின் நினைவுகளில் சில அதிர்வலைகள் வந்துவிட்டு போகலாம்

காணாமல் போன ஒரு மரத்தில் பல்வேறு சிலுவைகளை செய்து வைத்துள்ளார்கள்
யாருக்கானது அச் சிலுவைகளென
ஆழ்ந்த யோசித்தலில்
ஆயுளை கடக்கும்
பல முகங்கள் அப்படியே நிரந்தரமாக தங்கிவிடுகிறது இந்த
பிரபஞ்சத்தில் ...

நெருப்பின் ஆதி சிக்கி முக்கி கற்களில்
ஒளிந்து கொள்கிறது அனைத்தும் இரகசியங்களாய்...

வாழ்தல் என்பதே பெருங்கனவாக போய்விட்ட காட்டு மரங்களின் கூக்குரல்களில்
மனிதர்களின் அழிச்சாட்டியங்கள்
இயற்கையின் மீதான போர்கள் என
தொடர்ந்தே போகிறது இரக்கமற்ற இரவுகள் ...

Saturday, June 29, 2019

மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவப் படுகொலை          சாதிதான் சமூகமென்றால்
          வீசும் காற்றில் விசம்
          பரவட்டும் - தோழர் பழனி பாரதி


கோவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். கனகராஜூம், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். ஆனால், கனகராஜ் காதலித்து வந்த பெண் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் காதலுக்கு கனகராஜ் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, கனகராஜின் சகோதரர் வினோத், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளார்.


இதனிடையே, திருமணம் செய்துகொள்வதற்காக கனகராஜ் மற்றும் அந்தப் பெண் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி, அவர்கள்  தங்கியிருந்த இடத்துக்கு வினோத் மதுபோதையில் சென்றுள்ளார். `அந்த சாதிப் பொண்ணை நீ திருமணம் செய்யக் கூடாது' என்று சொல்லி, கனகராஜிடம் வினோத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வாக்குவாதம் முற்றி, வினோத் அரிவாளால் கனகராஜையும் அவர் காதலித்த பெண்ணையும் வெட்டி வீழ்த்தியிருக்கிறான்.

இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அந்தப் பெண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் பிழைப்பதற்கு 10 சதவிகிதம்தான் வாய்ப்பு உள்ளது என்று கூறி, அவருக்கு செயற்கை சுவாசம் மூலமாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், கடுமையான காயங்களால் அந்தப் பெண்ணின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.


சாதி வெறிகள் தமிழக மண்ணில் மிகவும் வேகமாக வளர்வதை இந்த ஆணவப் படுகொலை காட்டுகிறது , சுயசாதி வெறியில் கொலைகளை நிகழ்த்தும் மிருகங்கள் உண்மையில் இம்மண்ணில் வாழத் தகுதியற்றவர்களே ... சாதியம் இருக்க வேண்டும் ஆனால் சாதிவெறி இருக்க கூடாது என்கிற போலியான பிம்பங்களை முதலில் அழித்தொழித்தல் வேண்டும் "சாதியே வெறி தான் " என்பதை தயவுசெய்து அடித்தள மக்களிடம் உணர்த்தப்பட வேண்டும் , சாதி ஒழிப்பு என்பது மிகத்தீவிரமாக எடுத்துச்செல்ல சாதி மறுப்பு காதல் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் ...

ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பது மோடியே ...ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை குறித்து ஏற்கனவே திருமுருகன் காந்தி அவர்கள் எச்சரித்ததுதான் ... அடிப்படையில் பாஜகவின் எல்லா திட்டங்களும் மேல்குடி மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து அதையும் அவர்கள் ஆஹா ஓஹோ என வரவேற்பார்கள் , கிட்டத்தட்ட எல்லா படிநிலைகளிலும் மோடியின் திட்டங்களை அப்படித்தான் இங்கு பரவலாக்கப்படுகிறது , மக்களையும் பழக்கப்படுத்த வைத்துவிடுகிறார்கள் , தனக்கென ஓர் ரசிக பட்டாளம் வைத்துக்கொண்டு அதன் மூலம் ஏழை எளிய மக்களை சுரண்டுவதுதான் மோடிக்களின் அரசியல் உளவியல் , இதனை அப்படியே ஏற்றுக்கொண்டு பார்ப்பன அஜென்டாவை திணிக்கும் பிற்போக்குகளை கடந்து வந்திருப்போம் , ஜோடி குரூஸ் , ஜெமோ , மாலன் , பானு கோம்ஸ் , சாரு , என இதன் பட்டியல்கள் நீளும் ... போலவே மாநில அடிமை அரசும்  மோடிக்களின் காவி மயமாதலை எவ்வாறு அமல்படுத்துகிறார்கள் என்பதை நாமும் கண்கூடாக பார்த்துக்கொண்டு வருகிறோம் , அரசு பள்ளிக்கு துரோணன் பெயர் , பாரதிக்கு காவி முண்டாசு (பாரதியே காவிதான் என்றாலும் அடையாளப்படுத்துதல் எதற்கு? ) வகுப்பறை மேசைகளில் காவி நிறம் அடிப்பது , பாட புத்தகங்களில் காவியை திணிப்பது , என அடுக்கடுக்குகளாய் சொல்லிக்கொண்டே போகலாம் ... இப்போது ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பதை எடுத்துக்கொண்டோமானால் அது முழுக்க முழுக்க மாநில சுயாட்சிக்கு எதிரானது , கிட்டத்தட்ட இந்தி மொழியை ஒரே தேசம் ஒரே மொழியென இவர்கள் மாற்றத் துணிந்ததிலிருந்து இதனை புரிந்து கொள்ளலாம் , ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் என்ன பொருள் வழங்கலாம் , அதன் விலை நிர்ணயம் , விநியோகத்தின் தன்மை , பொருட்களின் தரம் , என்பன எல்லாவற்றையும் இனி கார்ப்பரேட்டுகளே தீர்மாணிக்கும் , ஏற்கனவே ரேஷன் கடைகளில்  எவனோ எந்த போலி நிறுவனமோ  மட்டமாக  தயாரிக்கும் உதிரி பொருட்களை வாங்கினால்தான் மற்ற ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்கிற கார்ப்பரேட் மூளை வியாபார யுக்தி இங்கு எப்போதோ வந்துவிட்டது , மிகவும் மலிவான தரம் கொண்ட சோப்பு , தேங்காய் எண்ணெய் , டீதூள் , என அத்தியாவசிய பொருட்களை பயன்படுத்த தகுதியற்றதாகவே தூக்கி வீசப்படுகிறது , ஆனால் அதனை ரேஷன் கடைகளில் விற்கும் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் அடைகிறது , இது இப்படி இருக்க ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எந்தளவுக்கு கொள்ளையடிக்க போகிறது என்பதை  தயவுசெய்து ஏழை எளிய மக்கள் உணர வேண்டும் .

Thursday, June 27, 2019

அழுது உடையும் கண்ணீர்
நிதானிப்பதற்குள்
நிராகரித்து விடுகிறது
காதலும் வாழ்வும்
மடிந்து மண்ணில் துளிர்விடும்
புதிய சிறகுகளின்
வார்த்தைகளில் சிறு சிறு
சாரல் தெளிக்கவும்
வானம் பார்த்து மீண்டும்
தரைக்கு திரும்புகிறது
எதனுடனும் ஒட்டாத அவளி(னி)ன்
அழுது உடையும் கண்ணீர்

Friday, May 10, 2019

ஒருதலைக் காதல் , மறுத்தால் படுகொலைதான் தீர்வா ?
தலித்திய ஆதரவுகள் , தலித்திய ஒடுக்குமுறைக்கான எதிர்வினைகள் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகின்ற போதெல்லாம் அதே தலித்தியத்தினுள் இருக்கும் காட்டுமிராண்டிகள் முந்தைய எல்லா நியாயமான வழிகளையும் மூடி தலித்துகள் மீதே சேற்றை வீசிவிட்டு போகின்ற தலித் காட்டுமிராண்டிகளை என்னவென்று அழைப்பது? கடலூர் கோரச்சம்பவம் போல நிறைய இங்கு நடந்துகொண்டுதானிருக்கிறது ... அருந்ததியர் குடியிருப்பில் ஒரு பெண் பருவத்திற்கு வந்தால் போதும் அங்கு சிதைத்து சீரழிக்கப்பட்ட பெண்களின் நிலமை சொல்லி மாளாது, போலவே  மாற்று சாதியினரை திருமணம் செய்து இல்லரம் நடத்தாமல் அவர்களை கொடுமை படுத்துவதும் நடந்துகொண்டிருக்கிறது .... நான் எப்பொழுதும் சொல்வேன் ... ஏதாவது சமூக அநீதி நிகழ்துவிட்டால் நான் பறைச்சி, பறையன் என  துணிச்சலாக பதிவிடும் அந்த துணிச்சலை இன்னமும் பறையர்கள் சக்கிலியர்களுக்கு விடுதலை கொடுக்கப்படவில்லை , என்னதான் தலித்துகள் நிகழ்த்தும் படுகொலைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்த்தப்படுகிறது என்று விவாதம் வைத்தாலும் அதுவும் படுகொலைதானே , என்னை பொறுத்தவரையில் சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு நிகரானது இம்மாதிரியான படுகொலைகளும் , ஏனெனில்  காதலை ஏற்கவோ , நிராகரிக்கவோ ஒரு பெண்ணிற்கு முழு சுதந்திரம் உண்டு , அது பெண்ணின் உரிமையும் கூட , அதில் தலையிட வற்புறுத்த எந்த ஆணுக்கும் உரிமை இல்லை , அது சமூக அநீதியும்கூட , எல்லாரும்  இயக்குநர் பாலாவை சிகரத்தில்  வைத்து கொண்டாடுகின்றபோது  எனது பெயரில் வெளியான முதல் படம் " சேது" வில் அந்த கதாபாத்திர காதல் வற்புறுத்தல் அவ்வளவு வன்மம் சூழ்ந்தது என்று பதிவிட்டது ஏனே நியாபகத்திற்கு இப்போது வந்தது . தனது பெற்றோரின் மீதான பயத்தை அச்சத்தை விட "என்னை காதலி இல்லைனா கொன்னுடுவேன்னு" மிரட்டுகிறவனோடு வாழ்நாள் முழுதும் வாழ்ந்தாக வேண்டுமே ... அது எவ்வளவு கொடுமையானது என்று உணர்ந்தால் சக மனுஷியை சம நீதியில் வைத்து பார்க்க முடியும் , காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசுவது , கொலை செய்வது , தனது உடலை வருத்தி அந்த பெண்ணை பயமுறுத்துவது , அப்பெண் சார்ந்தோரை கொலை செய்து விடுவதாக மிரட்டுவது என்று ஏக போகத்திற்கு பெண்கள் மீது கொடுமைகளை அழுத்தமாக திணிப்பது தமிழ்ச் சமூக சீரழிவிற்கு வித்திடுவதாகவே பொருள் . தொட்டால் தீட்டென்றால் தொடாமல் விடாதே என தலித்தியம் கூறும் சமூக நீதி கருத்துகள் வெகுசன மக்களிடத்தில் கடினப்பட்டு கொண்டு சேர்த்தால் , இந்த காட்டுமிராண்டிகள் , என்னை காதலி ... இல்லையேல் கத்தி வெட்டு என சொல்லி அத்துணை சமூகநீதியையும் சுக்குநூறாக உடைத்திடுகிறார்கள் . ஒன்று மட்டுப் தெளிவாக தெரிகிறது , எல்லா சமூக அநீதிகளும் , சமூக படுகொலைகளும் பெண்களை சுற்றியே இங்கு கட்டமைக்கப்படுகிறுது , அதையும் இவர்களை கற்பிதமும் செய்கிறார்கள் என்பது மிக வேதனையான விஷயம் .

Wednesday, May 01, 2019

தொழிலாளர் தினம் இந்தியாவில் ...                   உலகத் தொழிலாளர்களே
                    ஒன்று சேருங்கள் - மாவோ

முதலாளித்துவ வர்க்கம் , தொழிலாளர் வர்க்கம் என இரு வர்க்கங்களின் மூலம் சாதிய மனோநிலையில் இங்கு கொட்டிக்கிடக்கிறது , பெரு முதலாளியர்களின் சுரண்டல்கள் பொருளாதார ரீதியிலான ஆக்கிரமிப்புகள் என அனைத்தும் ஹிந்துத்துவ சாதியத்தினுள் சுழன்றுக்கொண்டே இருக்கும் . முதலாளித்துவத்திற்குள் ஏற்படும் மோதல்களும் இவ்வகையில்தான் கட்டமைக்கப்படுகிறது , சாதியப் படிநிலையில் தனக்கு கீழான‌ஒருவன்  தனக்கு நிகராக முதலாளிய பலம் பெறுவதை அதே முதலாளித்துவ வர்க்கம் ஏற்றுக்கொள்வதில்லை , அதேபோல
தொழிலாளர் வர்க்கம் தனக்கு கீழான சாதிய படிநிலை கொண்ட சக தொழிலாளர்களை நசுக்குவது அல்லது அடிமைபடுத்துவதிலேயே குறியாக இருக்கும் வேளையில் இங்க தொழிலாளர் ஒற்றுமை சிதைக்கப்படுகிறது . இந்தியாவை பொறுத்த வரையில் இரண்டு வர்க்கங்கள் என்பதை தாண்டி மூன்றாம் வர்க்கமாக "சாதிய முரண்" இடம்பெறுவதை    சோஷியலிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டு கொள்வதில்லை என்பதே எதார்த்த நிலை .
ஒரு சமூகம் தன் அடிமை நிலையிலிருந்து மீண்டெழுந்து சோஷியலிஸத்தை விரும்பதாக  தன் நிலையிலிருந்து அது மீண்டெழ முதலில் சாதிய வர்க்கம் பேதங்களிலிருந்து மீண்டெழ வேண்டும் . இந்த நிலையிலிருந்து பார்த்தோமானால் ,
 இந்தியாவில் எந்தவொரு தொழிற்சங்கங்கமும் அதன் பின்னணியில் இயக்கப் பொருளாக இருப்பது சாதிய படிநிலை கொண்ட தொழிற்சங்கங்களாகவே காணப்படுகிறது . போலவே அதன் அடுத்த நிலையிலிருந்து ஆணாதிக்கம் என்கிற பதத்திலும் வந்து ஒட்டிக் கொள்கிறது .  சோஷியலிஸ கம்யூனிஸ்ட் எப்பொழுதும் பெண்ணடிமை தளத்தை உடைத்தெறிந்து விடுதலில் தனக்கான ஓரிடத்தை கொண்டிருக்கிறது என்பது வரலாறு , பெண் சுதந்திரம் , பெண்களுக்கு சம உரிமை , பெண்களுக்கு வாக்குரிமை , ஆணாதிக்க எதிர்ப்பு என எல்லா தளங்களிலும் கம்யூனிஸ சித்தாந்தங்கள் இல்லாமல் பேசிவிட முடியாது , ஆனால் இன்றளவும் நீளும் பெண்ணடிமைத்தனம் தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்கு பெருந்தடையாக இருக்கிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை . எனவே இந்த மே 1 தொழிலாளர் தினத்தில் சாதிய மனோபாவத்திலிருந்தும் , ஆணாதிக்க மனோபாவத்திலிருந்தும் தொழிலாளர் வர்க்கம் விடுதலை பெற்று ஒரு முழுமையான சோஷியலிஸ , சமத்துவ தொழிலாளர் வர்க்கம் உருவாகி முதலாளித்துவ எதிர்ப்புக் களத்தை உறுவாக்கிட நாம் அனைவரும் "தோழன் " என்கிற முறையில் சக மனிதர்களாக களம் அமைத்திட வேண்டும் .
தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக ...
மேதின வாழ்த்துகள் ...

Sunday, April 28, 2019

பேரன்பு பெருங்காதல் ...
நேசக் கதவுகளாக என் விரல் பற்றி என்னுள் வார்த்தைகளாகிப் போன பெரும் வெற்றிடத்தை மழை கொட்டும் வனமாக பசுமையை நிரப்பி புதிதாய் விதையொன்றாக துளிர்விட செய்கிறவள்(ன்)
நீ ...

சொட்டும் நீரிதழ் ததும்பும்
முத்த ஏக்கங்களை குழைத்து
என் மேல் பூசும் வாஞ்சையுடன்
உதித்துவிடும் " இச் "
சப்தங்களின் ஊடே
நீரிதழை ஆழ் மனதிற்குள் ஒளித்து வைக்கிறாய் ...

நீ என்னை நேசிப்பதும்
நானுன்னை நேசிப்பதும் தயக்கமின்றி இலகுவாக அடையாளங் கண்டு நயத்தோடு நெளியும் அழகியலின் ஊற்றாக கட்டிப்பிடித்து
கொண்டும் உரசிக்கொண்டும்
உள்ளம் நனைய ஒரு யுகம் கடந்து நீளும் கடற்கரையோர நுரை ததும்பலில் குழைத்து செதுக்கி காதலென்கிறோம் ...

வாழ்வு புசிக்கும் நரைமுடி கண்டு தளர்ந்த நிலையில்
முதிர் பருவ தவிப்புகள்
நமக்கில்லை ...

கடந்து வந்த பாதைகளின் நினைவுகளினூடே
என் கரம் பற்றி நீயும்
உன் கரம் பற்றி நானும்
மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்கிறோம் ...

எப்பொழும் அசாத்தியமானது
பேரன்பென பிதற்றுபவர்களை
ஆகாயத்தை காட்டி
மிதந்து வரும் மேகங்களில் நம் முகங்களை காட்சி படுத்துகிறோம் ...

வாழ்தலும் பேரன்பின்பால்
என விளங்கிக்கொள்ளும்
எல்லா திசைகளிலும்
நாம் உயிர்வாழ்கிறோம்
என் பேரன்பு கொண்ட ராட்சஷியே ...

Wednesday, April 17, 2019

நிர்வாணம்
அர்த்தமற்ற வார்த்தைகளாகும்
வாழ்வின் பெருங் கூச்சலிடையே
உனக்கு நானும் எனக்கு நீயும்
ஆறுதல் மொழிகளினூடே
ஆழ்மனதில் தேக்கி வைக்கிறோம்
இப்பெருங் காதலை ...

ஊடறுக்கும் இவ்வேளையில்
நிர்வாணம் பூசி
கண்ணீரில் கலந்திருக்கும்
உப்பு நீரால்
ஆழியில் மிதந்திருப்போம் ...

Sunday, April 14, 2019

சலனமற்ற கதவுகள் ...

சிதைந்து விழும்
சிறு சிறு கனவுகளின் வழியே
மணல் திட்டுகளில்
அடுக்கி வைத்து காத்திருக்கும்
நீள் சாமத்தில் சிதலமடைந்த ஓர் இறப்பின் அழுகையில் கொட்டித்தீர்த்திடும்
கண்ணீர் பெருவெளி வழியாகவும் அலசி , ஆராய்ந்து பார்க்கிறேன் ...

சிறு சிறு கனவுகளை கோர்த்து சேகரித்து மடியில் கட்டி திரியும்
சிலுவைகளிடம் மடிந்து கிடக்கும்
இப் பெருங்கனவை தின்றவர்கள் யாரென ...

ஞானம் கொண்டேன்
தினம் நான் சந்திக்கும்
மனிதர்கள் அவர்களென
அடித்துச் சொன்னது
யாருமற்ற அறையில்
சலனமற்ற கதவுகள் ...

Wednesday, April 10, 2019

பிதற்றல்

அவதியுற்ற வலிகளில்
புண் போன்று
ஒட்டிக் கிடக்கும்
வார்த்தைகளை மட்டுமே
கோர்த்து ...

கொன்றழித்த பிறகேனும் விடாமல்
வதை செய்திடும்  அரை சான் வயிற்று பசிதனில்
படிந்து கிடக்கிறது பாசிசங்களின் சூழ்ச்சிகள் ...

பசிக்கு தண்ணீர் தீர்த்தமென ஒவ்வொரு இரவாக கடந்து போகின்ற பொழுதுகளில்
பார்வையில் விழும் யாவும் பற்றியெறிந்து வெடித்துச் சிதறும் தீப்பிழம்பாகி விழுகிறது உணவுக்காக ஏங்கும் கரங்களில் ...

அவர்களை  போல
மாடி வீட்டு பால்கனியில் மிதந்து
பசியாற உண்டு விலையுயர்ந்த
பளிங்கு பேனாவால்
ஐஐஐ ... நிலா நிலா !!!

எனவெழுத ஆசைதான் ...

என்ன செய்ய ...

சாதியென்றும் மதமென்றும்
ஊறிப்போன சமூத்தில் ஆண்டாண்டுகால அடிமையிவன்(ள்) ...

பிதற்றல் வார்த்தைகளை கோர்த்து மூக்கு சிந்தும்
பேனாவால் முள்ளாய்
தேய்கிறேன் ...

விடிந்தால் கொஞ்சம் அசைத்தாவது பாருங்கள் எனதுடலை
பசியின் கொடுமையில்
அன்றுகூட செத்திருக்கிலாம்
நான் ...

Monday, April 08, 2019

கருநீலசிவப்பு
ஒரு அறைதலில் வெளிபடும்
வீரயத்தில் சிவந்திடும்
கன்னங்களில்
பதிந்துவிட்ட அச்சுகளில்
இன்னும் ஒட்டியிருக்கிறது
தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை ...

காய்ச்சி எடுத்த வெப்பச் சலனத்தில் எங்கும் புண்கள் முளைத்து 
வடுவென மாறிப்போன
அந்த தொழிலாளிகளின் கரங்களில் தங்கியிருக்கும் வலிகளில்தான்
அதிர்வுகளை காண்கிறது அதிகார வர்க்கம் ...

நிறங்களின் கிளைகளில்
படிந்துவிட்ட கரைகளை
சனநாயக சக்தி கொண்டு
மீண்டும் துளிர்விட துடிக்கிறது
எல்லோர் கைகளிலும் பூட்டப்பட்டு
கிடக்கும்  அடிமை விலங்கை
அதிர ... அதிர ...
உடைத்தெறிந்து கிடாசுகிறது
ஆதி மரத்தில் அழியாச் சுடராய் வீற்றிருக்கும் அப்பேராயுதத்தில்
நிறைந்திருக்கும் கருநீலசிவப்பு நிறங்கள் ...

வானுயர்ந்த  ஒற்றை மரக்கிளையில்
நிறங்களின் பூர்வ பகையை அசைப்போட்டுக் கொண்டே இருக்கிறது
எவனோ எழுதிவைத்துவிட்டுப் போன
சாதிமத சட்ங்குளின் வழியே ஒழுகும் மதமெனும் சாதியெனும்
வர்க்க பேதங்கள் சூழ்ந்த விஷ பரிட்சைகள் அப்படியே ...

தொழிலாளர் வர்க்கம் மீண்டெழாதபடிக்கு
அப்படியே ...

என்றேனும் ஒருநாள்
எதையும் அழித்தொழித்தல்
பகுத்தறிவின்பால்
எங்கும் நிறைந்திருக்கும்
எம் கருநீலசிவப்பு ...

Monday, April 01, 2019

பரிதவிப்புகள் ...
பறக்கவோ பரிதவிப்புகளை
விட்டுச் செல்லவோ இயலாத
ஒரு சிறு மரங்கொத்தி பறவை
உடுத்திவிட்டு போன மரக்கிளையிலிருந்து
மெல்ல எட்டிப் பார்க்கும்
அப்பாவி விதைகளின்  தலைகளின்
உச்சியில் கூர் ஆணி
செலுத்தப்படுகிறது

இந்த வாழ்வு எந்த தயக்கமுமின்றி
குருதி வெளியேற்றத்துடனே தன் குடியிருந்த மரப் பொந்தின் உள்ளேயே
சாவின் அடக்கமும் செய்தாகிவிட்டது ...

இனி நீதிகேட்டு அவைகள்
வாய்திறக்கப்  போவதில்லை
வாயடைத்திட்டு மென்மேலும்
நிதி பற்றாக்குறை என வேண்டுமானால் நீதிகள் மிரட்டல் விடுக்கலாம் ...

எது எதுவாகினும் திரும்ப ஒட்டப்படாத உயிர் பிறிந்த ஜீவனது
துர்வாடை வீசிவதை
அந்த மரப் பொந்தினுள்
கண்டுகொள்ள யாருமில்லை ..
ஆதி பெருமரம்
தன்னை ஊன்றி கொண்ட
தடிப்பு வேர்களை தவிர ...

வார்த்தைகளும் தடித்தே வருகிறது
விதைகள் கசியும்
பரிதவிப்புகளிலிருந்து ...

Friday, March 22, 2019

ஈரோட்டு கிழவன் கலகக்காரன் ...
இந்திய சமூக சாஸ்திரங்கள் மற்றும் பழக்க வழக்கங்களில் தமிழ் சமூகம் சில காரணிகளில் தனித்து நிற்கும் , அது எவ்வித சமரசமுமின்றி இந்தியாவில் நிலவும் எல்லா மதங்களையும் பகுத்தறிவின்பால் தீவிரமாக எதிர்க்கும் தன்மையை (குறிப்பாக இந்து மத சாதிய அடுக்குமுறைகளை) பெரியார் இங்கு நிறுவியிருக்கிறார் . நானே கூறினாலும் கேட்டறிந்து பகுத்துப்பார்த்து அதன்பின் பின்தொடர்ந்திடு ... என்று இதுவரை யாரும் பெரியாரை போல உரைத்தவரில்லை , பெரும்பான்மையாக நிலவும் சாதிய சமூகத்தில் அதனோடு கூடவே சம்பிரதாயங்கள் , மூடப்பழக்க  வழக்கங்கள் , மத சடங்குகள் , சாதிய சடங்குகள் என எல்லாவற்றையும் பகுத்தறிவின்பால் "அழித்தொழித்தல்" என்பதே ஈரோட்டு கிழவனின் செயல்முறையாக இருந்தது , மதங்கள் எவையெல்லாம் தீட்டு, புனிதம்  என்கிற இரண்டு வரைடறைக்குள் மக்களிடம் திணிக்கிறதோ அவற்றையெல்லாம் வெறும் வெங்காயம் என நசுக்கி "கல்வி" தான் உனது ஆகச்சிறந்த ஆயுதம் என அறச்சீற்றத்தோடு பெரியார் உரைத்தார் . இன்றும் இந்துத்துவ சக்திகள் மட்டுமல்லாது ஏனைய மதங்களும் உள்ளிழுக்க முடியாத பெரியாரின் சுயமரியாதை சித்தாந்தங்களை வெறும் கறப்பு நிற அடையாளங்களுக்குள் அடக்ககவிட விட முடியாது , பெரியாரின் பகுத்தறிவு சித்தாங்கள் நீலம் , கறுப்பு , சிவப்பு என்கிற சமத்துவ சுயமரியாதை நிறங்கள் மூன்றிலும் பயணிக்கக் கூடியது .
தன்னை எதிர்த்து கேள்வி கேட்கப்பட்டால் உடனே அவர்களை சமூக விரோதி , தேச விரோதி , மதத்திற்கு எதிரானவர்கள் , சாதியத்திற்கு எதிரானவர்கள் , அமெரிக்க கைக்கூலி , பாகிஸ்தான் உளவாளி என அடுக்கடுக்காக இன்றளவும் பழிகளை சுமத்தி அவர்கள் போன்றவர்களை வேட்டையாடத் துடித்து , கொன்றும் அழித்துக் கொண்டிருக்கும் சாதிய மதவாத சக்திகளிடமிருந்து , அவ்வாறு எதிர்த்து கேள்வி கேட்பர்களை பாதுகாக்கும் அரணாக பெரியாரிய சித்தாந்தங்கள் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது ... எதையும் பகுத்தறிவின் கீழ் கொண்டுவந்து அதிலிருக்கும் தீட்டை , புனிதத்தை உடைத்தெறிய ஓர் ஆயுதம் எதுவென்றால் அது ஈரோட்டு கிழவன் பெரியார் மட்டுமே என்பது தமிழகம் இன்று வரையிலும்  பார்த்துக்கொண்டுதானிருக்கிறது . பெரியார் கலகக்காரன் தான் ...

Thursday, March 21, 2019

ராட்சஷியவள்
வார்த்தைகளின் இடையிடையே
பெருங் காதலை ஒளித்துவைத்து
பார்வைகளில் இயல்பாய்
புதிர்கள் பல கண்டு
தவழும்  துரிகை சிதறல்களை
உரையாடல் என்பாய் ...

உணர்வுகளின் வெளிச்சத்தில்
கண்டு திளைப்பேன்
கிளையிலாடும் இலைபோல
காற்றில் காதலை சுமந்தவனாய்
நான் என ...

எப்போது நாமாவோம்
விடை சொல்வாய் என்
ராட்சஷி ...

#கவிதை_தினம்

Thursday, March 14, 2019

பொள்ளாச்சியில் நிகழ்த்தப்பட்ட பெண்கள் மீதான வன்கொடுமை குறித்து ...


சமூக வலைத்தளங்களில் இரண்டு நபர்களை ஒரு நான்கு,  ஐந்து பேர் சூழ்ந்து கொண்டு தாக்குவதும் குடும்பப் பெண்களை இப்படி சீரழிக்கிறாயடா பாவி என்று கல்லை எடுத்து அவர்கள் காலை உடைப்பது போன்ற ஒரு தாக்குதல் காணொளிக் காட்சியை பார்த்து இருப்பீர்கள்...

நாமெல்லாம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளியை காவல்துறை தாக்குகிறது என்று புரிந்து வைத்திருந்தோம்...

ஆனால் அந்த குற்றவாளிகளை தாக்குவது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் என்பதை காவல்துறை மறைத்துவிட்டார்கள்...

ஆம் இப்பொழுது மாட்டியுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தனது நெருங்கிய நண்பனின் தங்கையை வஞ்சகமாக பேசி வரவழைத்து  பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியது மட்டுமல்லாமல்
அதை அப்படியே படமாக பிடித்திருக்கிறான்.

சிறிது காலம் கழித்து எதர்ச்சையாக திருநாவுக்கரசின் போன் ஏதோ ஒரு சூழலில்  அவனின் நண்பர் கையில் கிடைக்கிறது, அவர் இதில் உள்ள வீடியோக்களை பார்க்கும்போது இது நமது நண்பனின் தங்கை ஆயிற்றே என்று அந்த வீடியோவை தனது போன் போனிற்க்கு மாற்றுகிறார்.

அதை தன் நண்பனிடம் அந்த வீடியோவை காட்டி தனது தங்கையிடம் விசாரிக்கிறார்..! அழுது கொண்டே நடந்த சம்பவங்களை சொல்லுகிறார் அந்தப் பெண்,

நன்பனின்  தங்கை என்றும் பாராமல் சீரளித்த திருநாவுக்கரசுவை தூக்கிக்கொண்டு வந்து அடித்து துவைத்து எடுக்கிறார்கள்...
(இந்த வீடியோதான் வளை தளங்களில் வருகிறது)

இந்த செய்தி பஞ்சாயத்தாக அந்தப் பகுதியைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரிடம் செல்கிறது,  அவரும் நண்பனின் தங்கையை இப்படி செய்கிறாயே என்று கண்டித்து தற்காலிகமாக சமரசம் செய்கிறார்.

மனம் ஆறாத அந்தப் பெண்ணின் அண்ணன் இவனை விட கூடாது என்று கூறி அந்த முக்கிய பிரமுகரிடம் மீன்டும் செல்கிறார்... அவரும் வேறு வழியில்லாமல் பேசாமல் நீ காவல்துறையில் புகாராக கொடு என்று வழிகாட்டுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனும் திருநாவுக்கரசு மற்றும் திருநாவுக்கரசு நண்பர்கள் போன்களை காவல்துறையிடம் ஒப்படைத்து புகாராக கொடுக்கிறார்.

அந்த மொபைல் போன்களை ஆராய்ந்த காவல்துறையினருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது ஏராளமான வீடியோக்கள், கற்பழிப்பு காட்சிகள்,  விதவிதமான பெண்கள் என அந்த மாவட்ட காவல் துறையே உறைந்து போய் நின்றது.

அதிர்ந்து போன காவல்துறை இந்த பிரச்சினையை எப்படி தொடங்குவது இதில் சம்பந்தப்பட்டவர்கள் அத்தனை பேருமே முக்கிய அரசியல் கட்சியைச்  சேர்ந்த பொறுப்பாளர்கள்...

கிளை நிர்வாகிகளில்  இருந்து மாவட்ட பொறுப்பாளர்கள் வரை, வார்டு மெம்பரிலிருந்து நகர மன்ற தலைவர்கள் வரை மிகப்பெரிய செல்வவான்களின் கைகள் இதில்  இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில்...

மனசாட்சியுள்ள சில காவல்துறை நபர்கள் இது மிக மோசமான இதுவரை வெளிவராத அதிர்ச்சிகரமான சம்பவங்கள் உள்ளடக்கிய பிரச்சனை இது...

நிச்சயமாக இதை இவர்கள் விசாரித்து உண்மையை கொண்டு வர மாட்டார்கள்..! வேண்டுமானால் இதில் உள்ள படங்களை காட்டி தொடர்புடைய நபர்களிடமும், பாதிக்கப்பட்ட பெண்களிடமும் பணம் பிடுங்க மட்டுமே பயன்படுத்துவார்கள் என்கின்ற காரணத்தினால் இந்த செய்தியை எப்படியாவது வெளியே கொண்டுவர வேண்டும் என்கின்ற அக்கறையோடு சில காவல்துறையினரே இந்த செய்தியை வெளியே கசிய விட்டார்கள்.

எந்த அரசியல் முக்கிய நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை காவல் நிலையத்தில் புகார் கொடு என்று அனுப்பி வைத்தாரோ அவரின் மகனும் இதில் ஒரு முக்கிய குற்றவாளியாக மாறுவார் என்று பாவம் அவருக்கு தெரியாது.

இந்த பாலியல் வண்கொடுமையில் தொடர்புடையவர்கள் அனைவருமே நெறுங்கிய நன்பர்கள் வட்டத்திலும்
குடும்பரீதியாகவும் நெறுக்கமுள்ளவர்கள்தான்..!

இதில் கல்லூரி மாணவிகள் மட்டும் அல்ல குடும்பப் பெண்கள் 40 வயதைத் தாண்டிய பெண்கள் என்று பலரும் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்,

இது இன்று நேற்று அல்ல ஏறக்குறைய ஏழு அல்லது எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பிரச்சனையாகும்.

கல்லூரிகளிலும், முகநூலிலும் நைச்சியமாகப் பேசி, பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை உடலுறவுக்கு உட்படுத்தி, அதை வீடியோவாக எடுத்து அந்தப் பெண்ணுக்கே அதை காட்டி,  மிரட்டி உன் நண்பர்களையும் அறிமுகப்படுத்து, இல்லை என்றால் இதை நான் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உன் மானத்தை கெடுத்து விடுவேன் என்று மிரட்டி பனிய வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பண்ணைகளும், மிராசுகளும், ஜமீன்களும் அவர்களின் வாரிசுகளான மைனர்கள் என்று அழைக்கப்படுபவர்களும் ஆண்டாண்டு காலமாக பெண்களை தூக்கிக் கொண்டு போய் கேள்வி கேட்பாரில்லாமல் தனது பாலியல் இச்சைக்கு பயண் படுத்திக் கொள்வார்கள், இதை நாம் வரலாறுநெடுகபார்த்ததுதான்

வளர்ச்சியும், தொலைத்தொடர்பு வசதியும் பெருகிய இந்த காலத்தில் அன்றைய மைனர் வாழ்க்கை இன்று வேறு ஒரு பரிணாமத்தில் பயணிக்கிறது.

இன்று ஒருபடி மேலே போய் மிகப்பெரிய செல்வந்தர்கள் என்று சொல்பவர்கள் கூட தன் பாலியல் இச்சைக்கு பெண்களை வன்புணர்ந்தாலும், அதை படமாக எடுத்து பிற நண்பர்களிடம் காட்டி ரசிப்பதும்,  தன் குலப் பெருமை பேசி எவ்வளவுப் பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறோமோ அந்த அளவிற்கு என் பராக்கிரமத்தைப் பார் என்கின்ற வக்கிர புத்தியும் மேட்டுக்குடி மைனர்களிடம் பெருகி இருப்பதையே இந்த பொள்ளாச்சி சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

பெரியார் சொல்வது போல் ஒருவன் எவ்வளவு படித்து இருக்கிறானோ அந்த அளவிற்கு அவன் அயோக்கியனாக இருக்கின்றான் என்பார், அதுமட்டுமல்லாமல் படித்தவன், பணக்காரன் பதவிகாரன் இவர்கள் மூவரும் சமூகத்திற்கு கேடானவர்கள் என்பார், இதைத்தான் இந்த பொள்ளாச்சி சம்பவம் நமக்கு உறுதிப்படுத்துகிறது...

Saturday, March 09, 2019

தங்கத் தாரகையின் வைரத்தாரகை ஊழல் ஜெயலலிதா
மறைந்த A1 குற்றவாளி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது தங்கத்தாரகை கௌரவத்திலிருந்து தற்போது வைரத்தாரகை ஊழல் ஜெயலலிதா என பரிமாற்றம் பெற்றிருக்கிறார் என்றே இதனை சொல்லலாம் . ஊழலுக்கு பெயர்போன கட்சியாக எப்பொழும் அதிமுக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் இங்கு சத்திய சோதனை...

இந்திய வைரச்சந்தையானது பெரும் சரிவை திடீரென சந்தித்துள்ளது , இதுகுறித்த தகவலின் அடிப்படையில்  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் திடீரென விற்பனைக்கு வந்துள்ளதாக விஷயம் வெளிவந்தது . வைரத்தின் மதிப்பு சரசரவென சரிவை சந்தித்திருக்கும் வேளையில்  கிட்டத்தட்ட 30 சதவிகித விலை சரிவு என கணக்கு காட்டப்படுகிறது .இந்த விலை சரிவு ஹாக்காங் மற்றும் ஏனைய உலக வைர சந்தையிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்க  இதன் காரணம் என்னவென வைர சந்தைகள் ஆய்வு மேற்கொண்டன. திடீரென இவ்வளவு அதிகமான மதிப்புள்ள வைரம் சந்தைக்கு விற்பனைக்கு வந்தது எப்படி என்பதை ஆராய்ந்தால் அது முன்னாள் முதல்வரும் ஊழல் குற்றவாளியென உச்ச நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவரும் தமிழக அதிமுக மறைந்த ஜெயலலிதாவிடம் வந்து முடிகிறது.

இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதா 2 லட்சம் கேரட் வைரத்தை, மும்பை வைரச் சந்தையில் இருந்து வாங்கியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்திய வைரச்சந்தையில் திடீரென விற்பனைக்கு வந்திருக்கும் 1 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்தே வந்துள்ளது எனக் குறிப்பிடும் அந்த செய்தி, அப்போது ஜெயலலிதா வாங்கிய வைரமே தற்போது விற்பனை செய்யப்படுவதாகவும் கூறுகிறது.டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் செய்தி, எவ்வளவு மதிப்புக்கு வைரம் வாங்கப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை, அதேவேளையில் அன்றைய  சந்தையில் அப்போது வாங்கப்பட்டது ' +11 ’ எனப்படும் நகைகளில் பயன்படுத்தப்படும் வைரம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது திடீரென சந்தையில் விற்பனைக்கு வந்திருப்பதும் இந்த வகையைச் சேர்ந்த வைரம்தான். என்பதும் உறுதிபடுத்துகிறது அச்செய்தி நாளிதழ்.

இந்திய வைர தொழிலின் தலைமையகமாக செயல்படுவது குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம். சூரத் வைர கூட்டமைப்பின் (Surat Diamond Association - SDA) தலைவர் பாபு குஜராத்தி இதுபற்றிக் கூறும்போது, ‘’பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபோது இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும் தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை வைரமாக வாங்கி வைத்துக்கொண்டார்கள். இப்படித்தான், தமிழ்நாட்டை சேர்ந்த மிக உயரிய அரசியல்வாதி ஒருவர்  2 லட்சம் கேரட் வைரத்தை வாங்கினார்கள். தற்போது அந்த வைரங்களை மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதால், வைரச் சந்தையும், இதன் வணிகமும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது என்பது உண்மை” என பேட்டி கொடுத்திருக்கிறார். அதன் நம்பகத்தன்மையையும் வெளிகாட்டுகிறார் . எனவே

இந்த வைர கொள்முதல் மற்றும் விற்பனையில் சந்தேகத்துக்கு உரிய பல மர்மங்கள் இருப்பதாக இந்திய வைர சந்தை நிறுவனங்கள் தெரிவித்திருக்கிறது .

01. 2016 நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட வைரம் ஜெயலலிதாவால் வாங்கப்பட்டிருக்கிறது என்றால், பண மதிப்பு நீக்கம் குறித்து ஜெயலலிதா முன்கூட்டியே அறிந்திருந்தது எப்படி?

02. ஜெயலலிதாவால் இந்த வைரம் வாங்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்குப் பயன்படுத்தப்பட்ட தொகை முழுவதும் கறுப்புப் பணம் என்பது உறுதியாகிறது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

03. 2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியில் வரவே இல்லை. அப்படியானால், 2016 நவம்பர் 8-ல் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு முன்னால் ஜெயலலிதா, இத்தனை பிரமாண்ட மதிப்பில் வைரம் வாங்கியது எப்படி?

04. ஜெயலலிதா படுத்தப் படுக்கையாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது அவர் 2 லட்சம் கேரட் வைரம் வாங்கியதாக சொல்வது நம்பும்படியாக இருக்கிறதா?

05. அப்படியானால், ஜெயலலிதாவின் பெயரால் வாங்கப்பட்டுள்ள இந்த வைரத்தை உண்மையில் வாங்கியது யார்? யாருக்காக அந்த வைரம் வாங்கப்பட்டது?

06. ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த காலத்தில் அவர்தான் முதலமைச்சராக இருந்தார். ஒரு முதலமைச்சர் இத்தனை பிரமாண்டமான மதிப்பில் வைரம் வாங்கியிருக்கிறார் என்றால், அதற்கான கணக்கு என்ன? எங்கிருந்து வந்தது அந்தப் பணம்?

07. ஜெயலலிதாவுக்கே தெரியாமல் அவரிடம் கையெழுத்து பெற்று அல்லது அவருடைய கையெழுத்தை வேறு யாரேனும் போட்டு, இந்த வைரம் வாங்கப்பட்டுள்ளது என்றால், ஒரு முதலமைச்சரின் கையெழுத்தை போலியாக இட்டது மாபெரும் குற்றம் அல்லவா?

08. ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட அந்த வைரத்தின் தற்போதைய உரிமையாளர் அல்லது பாதுகாவலர் யார்? தற்போது அந்த வைரத்தை விற்பனை செய்பவர்கள் யார்?

09. அப்போது ஜெயலலிதாவின் பாதுகாவலராக உடன் இருந்த சசிகலா மற்றும் அவருடைய உறவினர் வலைப்பின்னலுக்கு இந்த வைரம் வாங்குவது குறித்து தெரியுமா? அவர்களின் பங்கு என்ன?

10. அப்போது செல்வாக்கு மிக்க அமைச்சர்களாக இருந்தவர்களும், நாள்தோறும் அப்பல்லோ சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிந்து ஊடகங்களிடம் பேசியவர்களுமான எடப்பாடி பழனிச்சாமி, ஓ,பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு இதில் உள்ள பங்கு என்ன?
11 . ஜெயலலிதா அவர்கள் இறந்துவிட்ட நிலையில் தற்போது அந்த வைரங்களை சந்தைபடுத்தியது யார்?
12. இன்றளவும் ஜெயாவின் சொத்துகளை பராமரிப்பதில் யாரென வெளிப்படையான தன்மை ஏன் அறிவிக்கப்படவில்லை .
13. ஜெயலலிதா ஏற்கனவே ஊழல் குற்றவாளி என்று தண்டனை பெற்ற பிறகும் அவருக்கு ஆட்சியதிகாரம் அளித்த மக்களின் நிலை என்ன?
14 . டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட இந்த வைர சந்தை ஊழலுக்கு தற்போது ஆட்சி செய்யும் அதே ஆளும் அதிமுக அரசு பெறுப்பேற்குமா? இது திரும்பவும் ஊழல் அரசு என்றுதானே நிரூபணம் ஆகியுள்ளது ?

இப்படி ஏராளமான கேள்விகள் எழுகின்றன. ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருந்தபோது அவருடைய பெயரை பயன்படுத்தி, பெரும் தொகையிலான கறுப்புப் பணம், வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மாபெரும் கறுப்புப் பண ஊழல் இதன்பின்னே மறைந்திருக்கிறது. பா.ஜ.க.வுக்கு  வியாபம் , ரஃபேல் ஊழல் என்றால், அ.தி.மு.க.வுக்கு வைர ஊழல் , இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் இருவரும் தான் தேர்தல் கூட்டணி அமைத்து 40 ம் நமதே என மக்களை குறிவைக்கிறார்கள் .
வேண்டுமானால் ஜெயாவின் இந்த " மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதை அவர்களின் அடிமைகள் ..
" வைர ஊழலால் நாங்கள் வைர சந்தை பண முதலாளிகளால் நாங்கள் என்று வேண்டுமானால் மாற்றி பிரச்சாரம் செய்தாலும் செய்வார்கள் ... ஏனெனில்  இங்கு வாழ்வது அப்பாவி தமிழ் மக்கள்தானே ...

ஆழிசை
ஆகையால் ...

கடற்கரை  காற்றில் விட்டுச்சென்ற
உன் அன்பை தேடி சுடும் மணலில்
என் காயங்களை மறந்து
ஆற்றும் மருந்தாய்
நின் கால்தடம் என்னில் பூசி
அழையா விருந்தில்
அரிதாக முளைக்கும் அதே ‌... கண்ணசைவுகளினூடே
பிரம்படி பட்டு நெளியும்
புழுபோல  சுருண்டு
எங்கோ யாருமற்ற கடற்கரையில் கண்ணயர்ந்து நின் நினைவுகளை செதுக்கிக் கொண்டிருக்கிறேன் ...

இதோ ... இந்த ... ஆழிசை ...
அவ்வப்போது என் சுயத்தை மீட்கிறது
நீ ... விட்டுச்சென்ற எச்சங்களை ...
எனக்குள் தத்தெடுத்துக்கொண்டே ...

Friday, March 08, 2019

வெயில்
பூரண சரணாகதி அடைகிறேன்

என் மேல் பூசி மெழுகும் வியர்த்தல் வேண்டி வெயிலிடம் ...பெருந் தழலில் காய்ந்து

வியர்வையில் நனைந்து

எனது ஆடையில் படிந்து போகும்  உப்பின் படிமங்களில்

முத்தங்களிட்டு உன்னை

எனக்குள் வரைந்து உதடுகளில் சரணடையும் ஆதி கனவுகளுக்குள்

பேரன்போடு உள்நுழைந்து

அழைப்பாய் ...வா .... ஒரு குளியலில்

கூடலாமென சினுங்கும்

அந்த மொழிக்காகவே

தினம் என்னில் வதைக்கும் சூரியனில்

வேண்டி தருகிறேன் என்னையே ...வதைத்தாலும் வெயில்

அழகென

எனக்கு மட்டுமே தெரியும் ...வியர்த்திடும் எல்லா பொழுதுகளிலும் விசிறி ஆடை போர்த்திவிடுகிறாய் ..உச்சி வெயிலில்

நீ ... தரும் உச்சந்தலை

முத்தத்தில் குளிர்ந்து விடுகிறது இந்த வெயில் ...சொல்கிறேன் ...

வெயில் பேரழகு ...

மழையை விடவும் ...

Wednesday, March 06, 2019

அம்பேத்கர் பெயர் பார்ப்பன ஆசிரியருடையதா ?

இந்தியாவில் எந்தவொரு  அறிவாளியும் ,  பகுத்தறிவாளரும் , மேதையும் , புரட்சியாளரும் பார்ப்பனரின் துணையின்றி அடையாளப்படுத்தவோ உறுவாகிடவோ முடியாது என்கிற மிக மோசமான மாய தோற்றத்தை உறுவாக்குவதில் பார்ப்பனியம் மெனக்கெடுத்து அதன் வேலைகளை செய்யும் . அப்படியாக உறுவாக்கப்பட்டதே நமது பாட புத்தகங்கள் . இந்திய கல்வி முறைகளை அப்படித்தான் பார்ப்பனியம்  கைப்பற்றி வைத்திருக்கிறது . பல்வேறு கட்டுக் கதைகளை வரலாறாய் திரிப்பதன் மூலம் மக்களை மக்களின் செயல்திறனை மழுங்கடிக்கச்செய்து அதன்மூலம் பார்ப்பனியத்தை வளர்த்தெடுப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது ஹிந்துத்துவம் . அப்படியான இரட்டிப்பு பார்ப்பன மோசடிதான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் "அம்பேத்கர்" என்கிற பெயர் அவரின் ஆசிரியரான பார்ப்பனரின் பெயரென திரித்து காட்டியது . உண்மையில் அம்பேத்கர் பெயர் ஒரு பார்ப்பன ஆசிரியர் பெயர்தானா? என்பதை தகுந்த தரவுகள் மூலம் அலசி அதன் பொய்யான தகவல்களை கட்டுடைத்து  பார்ப்பன புரட்டுகளை தோலுரித்து காட்டுகிறது " கழுவப்படும் பெயரழுக்கு" என்கிற இந்நூல் ... நூலின் ஆசிரியர் யாக்கன் அவர்கள் இதன் மூலம் ஒரு  நீண்டகால பார்ப்பனிய திரிபுவாத வரலாற்றை கழுவிலேற்றி தனது முத்திரையை பதிக்கிறார் ... இவ்வளவு காலமாக  அண்ணல் அம்பேத்கர் வெறும் பீமாராவ் ராம்ஜீ என்கிற பெயரில் மட்டுமே இருந்தார் அதன் பிறகு அவருக்கு முழுமையாக அறிவூட்டிய அவரின் பள்ளி ஆசிரியரான  பார்ப்பனர்  "அம்பேத்கர்"  ஆசிரியரியரின் ப்ரியத்தின்பால் பீமாராவ் ராஜீ பெயருக்கு பின்னால் "அம்பேத்கர்" சேர்த்துக்கொண்டார் என்கிற அப்பட்டமான பொய்யை நாம் தலையில் சுமந்து அல்லது திணிக்கப்பட்டிருக்கிறோம் ...

நூலாசிரியர் யாக்கன் அவர்கள்  அண்ணல் அம்பேத்கர் பெயர் அவருடைய இயற்பெயரே என பல்வேறு சான்றுகளை தனது "கழுவப்படும் பெயரழுக்கு" இல் பதிவு செய்கிறார் அதில் முக்கியமானது அம்பேத்கர் மோடி எழுத்து மொழியில் தனது சொந்த கையெப்பம் பள்ளி பருவத்தில் இட்டதை சுட்டிக்காட்டுகிறார் ... (மோடி மொழி  என்றதும் நம் gobackmodi புகழ் நரேந்திர மோடி என நினைத்துவிட வேண்டாம்) மோடி  என்கிற மொழி நம் தமிழ்நாட்டிலேயே புழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்கது ... அதற்கான
தரவுகள் கீழே சொடுக்கவும் ...

மோடி எழுத்து மொழி


மோடி எழுத்து மொழி 2போலவே இந்நூலுக்கு "கழுவப்படும் பெயரழுக்கு" என்கிற தலைப்பின் மூலம் தனது துணிச்சல் வாதத்தை வெளிகாட்டிய யாக்கன் அவர்களை பாராட்டுதல் நன்று ... இதன் மூலம் புரட்சியாளர் அம்பேத்கர் மீது பூசப்பட்டிருந்த பார்ப்பன அழுக்கு  முற்றிலுமாக துடைத்தெரியப்பட்டிருக்கிறது என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் ... ஹிந்துத்துவ பார்ப்பனியம் தனக்கேற்றார்போல் எப்படியெல்லாம் வரலாற்றுத் திரிபுகளை மேற்கொள்ளும் என்பதற்கு "பெயரழுக்கு நூலும் அதிலுள்ள தரவுகளும் சான்றாக அமைகிறது ..‌..

கழுவப்படும் பெயரழுக்கு நூலில் யாக்கன் அவர்கள் தரும் தரவுகள் இவை ...

அம்பேத்கர் இயற்பெயர் ;
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்.
அம்பேத்கர் தந்தை பெயர்;
ராம்ஜி மாலோஜி அம்பேத்கர்.

அம்பேத்கர் தபோலியில் உள்ள A.J. உயர்நிலைப்பள்ளியில் முதலில் பயின்றார்.அது இராணுவ வீரர்களின் குழந்தைகள் மட்டும் படிக்கும் பள்ளி.அம்பேத்கரின் தந்தை ஓய்வு பெற்ற சுபேதார் என்பதால் அம்பேத்கருக்கு அப்பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கு அம்பேத்கர் மராத்தி மொழியை மோடி எழுத்து வடிவில் பயின்றுள்ளார்.தானே கையொப்பமிடவும் கற்றுள்ளார். பின்னாலில் மராத்தி மொழி தேவநகரி எழுத்து வடிவத்தில் மாறியுள்ளது.

பணியின் காரணமாக அம்பேத்கரின் குடும்பம் சதாராவிற்கு குடிபெயர்கிறது, அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அம்பேத்கர் திரும்பவும் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார். அங்கு தான் அம்பேத்கர் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்டுள்ளார். அங்குள்ள ஆசிரியர் பெயர் தான் அம்பேத்கர் என்று பொய் கூறப்படுகிறது. அம்பேத்கர் அந்த பள்ளியில் சேர்ந்த அன்றே பள்ளி பதிவேட்டில் பீவா ராம்ஜி அம்பேத்கர் என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் சேர்ந்த அன்றே அம்பேத்கர் பீமா ராம்ஜி அம்பேட்கர் என்று மராத்தி மொழியில் மோடி எழுத்தில் கையெழுத்து இட்டுள்ளார். அந்த பதிவேடு இன்றும் அம்பேத்கர் படித்த பள்ளிக்கு அருகாமையில் உள்ள பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கையெழுத்தில் உள்ள அம்பேத்கர் கையெழுத்தை தமிழக அரசு செயலாளராக பணியாற்றிய மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆட்சியர் அதிகாரி விஷ்வநாத் ஷெகாவ்கர் என்பவர் உறுதி செய்துள்ளார்.

எனவே அம்பேத்கர் என்பது ஆசிரியரின் பெயரல்ல. அது அவரின் இயற்பெயர் என்பது உறுதியாகிறது.

1916 ஆம் ஆண்டு அமெரிக்கா செல்வதற்கு அம்பேத்கர்   பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது தனது இயற்பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றும் தனது தந்தை பெயர் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர் என்றும் தன் கைப்பட எழுதியுள்ளார். அதற்கான ஆதாரமும் உள்ளது.

மேலும் அம்பேத்கரின் தந்தை ஆங்கிலேயருக்கு அனுப்பிய கடிதங்களில் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர் என்று கையெழுத்திட்டுள்ளார். அந்தக் கடிதங்களை தன் தந்தையின் காப்பக பெட்டியில் பழைய காகிதக் கட்டுகளிலிருந்து கண்டெடுத்ததாக பிற்காலத்தில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

ஆகவே அம்பேத்கர் எனும் பெயர் அவரின் தந்தை பெயரிலிருந்தே புரட்சியாளர் அம்பேத்கருக்கு வந்துள்ளதே தவிர அது எந்த  ஒரு ஆசிரியர் பெயரும் அல்ல. இவை யாக்கன் அவர்கள் தனது "கழுவப்படும் பெயரழுக்கு" நூலில் கொடுத்துள்ள தரவுகளாகும் .
Sunday, February 17, 2019

காஷ்மீர் தாக்குதல் குறித்து ராணுவத் தோழர் ...

உலகின் கடும் பாதுகாப்பு வளையத்தில் உள்ள காஷ்மீர் சாலைகள்.!

ராணுவ கான்வாய் (இந்த வார்த்தையை எழுதுறப்பவே புல்லரிக்கும்) நாளை காலை புறப்படுகிறதென்றால் இன்றிரவு ROP எனப்படும் Road Opening Party புறப்படும். நான்கு வாகனங்களில் புறப்படும் வீரர்கள் சாலையை அங்குலம் அங்குலமாக பாதுகாப்புடன் அலசுவார்கள். மறுநாள் காலையில் அவரவர் தெய்வங்களை வேண்டிய பின்னர் கான்வாயின் ரெட் flag வண்டி புறப்படும். அந்த வண்டி சென்றபின்னர் பொதுமக்கள் சாலையை தாண்டக்கூடாது. எனது மேலதிகாரி சொல்வார் "இந்திய பிரதமரே குறுக்கே வந்தாலும் கான்வாய் நிற்காது". கான்வாய் தலைவராக நியமிக்கப்படும் அதிகாரிக்கு வானளாவிய அதிகாரம் உண்டு. கான்வாயை பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வார். அனைத்து வீரர்களுக்கும் AK 47 கட்டாயம் உண்டு. உரி செக்டாரில் புறப்பட்டால் அடுத்த ட்ரான்சிஷன் கேம்பில் தான் கான்வாய் நிற்கும். கான்வாய் வாகனங்களை அவ்வளவு சீக்கிரம் அடித்து தூக்கி விட முடியாது. காரணம் கான்வாய் வாகனங்கள் அனைத்துமே ரஷியாவின்(செக்) Tatra ட்ரக்குகள். சாதாரண பாம்க்கு மயிராக்கூட மதிக்காது அந்த வாகனம். ராணுவம் வேற மாதிரி அப்படிப்பட்ட கான்வாயை தீவிரவாதிகள் தூக்கிய வரலாறு உண்டு.

அப்படியிருக்கையில் சம்பவம் நடந்த புல்வாமா உரி - ஸ்ரீநகர் கான்வாய் பாதையில் சிஆர்பிஎப் வீரர்களை ஒரு சாதாரண பேருந்தில் எப்படி கொண்டு சென்றார்கள் என்று இரண்டு நாளாக மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறேன். எனது ராணுவ நண்பர்களிடமும் கேட்டேன் அவர்களும் ஆச்சரியத்தில் தான் இருக்கிறார்கள். ஒரு நண்பன் சொன்னான், "என்னமோ பண்றாய்ங்க மாப்ள"
அந்த வார்த்தைகள் என்னமோ செய்கின்றன என்னை.

அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று மனது பதைக்கிறது. ஒவ்வொரு நாள் காலையிழும் எழுந்து தெய்வங்களை வேண்டுகிறேன். பாவப்பட்ட அந்த ஜென்மங்களுக்கு எந்த கெடுதலும் நடந்து விடக்கூடாது. ராணுவத்தில் இருக்கும் காலத்தில் தான் அவர்களுக்கு குடும்பம் புள்ளக்குட்டின்னு சந்தோஷமான வாழ்க்கை இல்லை, ரிட்டயர்டாகியாச்சும் புள்ளக்குட்டியோட சந்தோஷமா இருக்கட்டும். மனைவிமார்கள் தங்கள் கணவனை இழந்து, குழந்தைகள் தங்கள் தந்தையை இழந்து தாய் தனது மகனை இழந்து வாடும் வலியை யாரும் அனுபவிக்க வேண்டாம். ராணுவ வீரர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவன் வெறும் சரக்கு பாட்டில் வாங்கிவரும் சாராய வியாபாரி அல்ல!
-ஜான்
(வாழ்வின் பொன்னான ஐந்தாண்டுகளை ராணுவத்தில் கழித்தவன்)

-John Gladson

விரட்டுகிறார்கள் ...
பெரும் பசியில் தன் பிச்சை பாத்திரத்தை துழாவி துழாவி தேடுகையில் ஒரு ரொட்டித்துண்டு விழுந்தது  கார்ப்பரேட் , ஆளும் அரசு
கரங்களிலிருந்து ...

வீழ்ந்து கிடந்த ராத்திரியில் 
அழுகி கிடக்கும் மரத்திடம்
தேடி அலையும் தன் வீடு  அழித்த பகைவனை தோண்டி அமிழ்த்தி பிடித்து
நீதி கேட்க எத்தனிக்கும் பொழுது
வெளியேறும் கார்ப்பரேட் மூளையை பசிக்க தின்று
பழி தீர்க்க துடித்திடும் வேளையில் மீண்டும் மீண்டும் வந்து சத்தம்போடுகிறது என் வீடு இடிக்க துடிக்கும் இயந்திர நகங்கள்
இன்னமும் ...

நகரங்களில் வாழ விடாது துரத்திக்கொண்டே கல்லறையை தோண்டி எடுத்தும் கார்ப்பரேட் கட்டிடங்கள் வந்து முளைக்கிறது
கால் தோய்ந்த பூர்வ நிலங்களை
அரசும் அழிச்சாட்டியம் செய்கிறது
காற்று கூட சுவாசித்தலை குறுக்கிட்டு தலித்துகள் இவர்களென விரட்டும் போல ...

     

(சென்னை புளியந்தோப்பு , கோவை உக்கடம் தலித்துகள் குடிசைகள் இடிக்கும் அரசை குறித்து )

Friday, February 08, 2019

பேரன்புக்காரன் அவன்
கூர்வாள் வீசும் அவன்
பார்வைகளில் பட்டுத் தெறிக்கும்
என் பெண்மையின் விழுதுகளை சுருட்டி
இழுத்துக் கட்டி
ஊஞ்சலாடுகிறேன்
காதலெனும் ஆல மரத்தினில் ...

என் கன்னத்தில் பூசிக்கொண்ட சிவப்பை எடுத்து அவனும் பூசிக்கொள்கிறான் ...

எவ்வளவு இடைவெளிகள் இருந்த பின்னாலும் பேரன்போடு எனக்காகவே ஏங்கித் தவிக்கும் வதைப்புகளினூடே
உட்புகுந்து அவன் மனதோடு பேசும் வித்தைகள் கற்றுத் தந்தவனும் அவன்தான் ...

அதீத ஆர்வம் கொள்கிறேன்
அவன் என் கண்களை கவர்ந்திழுக்கும் பொழுதுகளில் எல்லாம்
அக்கணமே அவன் நெஞ்சில் சாய்ந்திட வேண்டுமென்று ...

எனக்குள் இருந்து
நான் மட்டுமே காணும்
காதலெனும் பெருங்கடலில்
நீந்திப் பழகுகிறேன்
அவனுக்குள்  அலையென வீசி
அனுதினமும் ...

ஒருநாள் அந்த ஒருநாள்
என் மூச்சு ஊசலாடி
கண் மூடுமந்த
கடைசி நிமிடங்களில் கூட
அவன் கண்களில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளை தாண்டி
என்னை அவன் கண்களுக்குள் காண்பேன் அத்துணை
பேரன்புக்காரன் அவன் ...

Thursday, February 07, 2019

வாழத் தகுதியற்றவள் ...
விரிந்து கிடக்கும் மணற் போர்வைகள் வழியே ...
விளங்க முடியாத கையறு நிலையில்
நீட்சிகள் பெறும் சாபக்கேடுகளில்
ஒன்றை எடுத்து
தன் பாத இடுக்குகளில் நுழைத்து

நடக்க ஏதுவாக இன்னொரு
வரட்சியை  இறுக்கக் கட்டி
காலணி என உடுத்தி

எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியிலும்தான்
எத்துணை எத்துணை துரோகங்கள் ...

பித்து பிடித்தவளின் பிதற்றல் வார்த்தைகளில் யாதொரு குறியீடுகளுமின்றி
ஏமாற்றம் ஒன்றே பிரபஞ்சத்தின் வாழ்வியல் விதியென ஏக்கங்களை சுமந்து  மணற் போர்வைக்குள்ளிருந்து
சற்றே கடலலை அழைத்திடும்
தூரத்தில்  அவளும் போனாள் காட்சிகளுக்கு துணையாய் அல்ல ...

இந்நிலத்தில் எனக்கு ஏன்
வாழத் தகுதியற்றவளாக மாற்றி வைத்தீரென
கேள்வி கேட்க ...

Monday, February 04, 2019

சின்னத் தம்பி யானை - வனம் எங்கள் வாழ்விடம்
சுனாமியானாலும் தற்போதைய கஜா புயலானாலும் அதன் கோரத்தாண்டவத்தை இயற்கை சீற்றத்தை ஆதரிக்கின்ற மனநிலையை சின்னதம்பிகளை விரட்டிவிடும் மனுசப் பயல்களின் போக்கிலிருந்து மனம் சுயத்தின் அடிப்படையில் திரும்பிவிடுகிறது ,, யாரை நாம் "வந்தேறிகள் " என்று வாய்க்கூசாமல் சொல்கிறோமோ அவர்கள் யாவரும் இந்த மண்ணின் பூர்வக்குடிகளே , என்று சின்னத் தம்பிகள் உணர்த்துகிறது , சின்னத் தம்பி வெறும் யானை அல்ல , அது நில உரிமைக்கான போராடும் ஒரு உயிரென்று எப்போது உணரப்போகிறீர்கள் ... எப்பொழுதும் ஒன்று சொல்வதுண்டு " யானைகள் அத்துமீறி விளைநிலங்களில் நுழைகின்றன என்று தயவுசெய்து சொல்லாதீர்கள் ,, மனுசப் பயல்களாகிய நாம்தான்தான் அவைகளின் வனப்பகுதிகளை அழித்து அத்துமீறி வந்தேறிகளாக குடிபுகுகின்றோம் ....ஒரு நாட்டில் குறைந்தபட்சமாக 33% என்கிற அளவிலாவது காடுகளின் பரப்பு இருக்க வேண்டும். இந்த அளவு என்பது இறுதிகட்ட அபாய அளவு. ஆனால் இன்றைக்கு இந்த அபாய அளவையும் தாண்டி கீழிறக்கி இப்போது சுமாராக 15% அளவிற்கு  போனால் போகிறது என்கிற அளவில் மட்டுமே மலைச் சரிவுகளில் காடுகளை இடையிடையே விட்டு வைத்திருக்கிறோம்...

நமது நாட்டை பொறுத்தவரை மலை முகடுகளையும் சமவெளிகளையும் நமக்கே நமக்கானதாக ஆக்கிரமித்துக் கொண்டோம். இடையே விட்டுவைத்திருக்கிற அந்த மலைச்சரிவுகளே ஒட்டுமொத்த வனவிலங்குகளுக்கானது என வரையறுத்து வைத்திருக்கிறோம்.  இதற்குமேலும் இந்த நில அளவு சரியாமல் இருக்கவேண்டும் என்பது மட்டுமே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் இப்போது இருக்கின்ற அந்த குறைந்த பட்ச அளவையாவது இதோடு விட்டுவைத்து இதற்கு மேலும்  கீழே இறங்கி விடாமலிருக்கும்படி, அதிகார வர்க்கத்தின் மீதும் கார்ப்பரேட் சாமியார்கள் மீதும் நமது எதிர்ப்பு கிளம்ப வேண்டும் ... காடுகள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த மனிதர்கள் என்றுதான் உணரப்போகிறார்களோ ... ஒரு நாட்டின் வனத்தை அழித்து முற்றிலுமாக அங்கே காவி மயத்தை நிறுவி மக்களை மூடர்களாக வைத்திருக்கும் ஜக்கி வாசுதேவ் போன்ற கஞ்சா சுடுக்கிகளிடம் காட்டாத வீரத்தை இந்த அரசு ஒரு யானையிடம் பிரயோகிக்கிறது என்பது வெட்கக்கேடு இல்லையா ? முதலில் இதுபோன்ற போலிச்சாமியார்களிடமிருந்து காடுகளை மீட்டும் போலவே மற்ற மனுசப் பயல்களிடமிருந்தும் காடுகளை மீட்டு வன மிருகங்கள் வாழ ஏதுவாக காடுகளை பாதுகாத்தால் போது அவைகள் ஊருக்குள் நுழைவதை தன்னாலே நிறுத்திக்கொள்ளும் , இதில் அதிமுக்கியமாக peta பீட்டா  அமைப்புகள் இப்போது வரையில் சின்னத் தம்பி யானைக்காக எவ்வித அறிக்கையும் விடவில்லை என்பதை கவனித்தீர்கள் எனில் அவ்வகையான அமைப்புகள் விலங்குகள் பாதுகாப்பு என்று சொல்லிக்கொண்டு மேற்குறிப்பிட்ட போலிச் சாமியார்களின் சுகபோக வாழ்வுக்கு மட்டுமே துணைபோகும் என்பதை நன்கு அறியலாம் ... #savechinnathambi சின்னத் தம்பியை பாதுகாப்பதில் தான் மனித நேரம் நிரம்பியிருக்கிறது ...


Friday, February 01, 2019

நமக்கான கைபேசி உரையாடலில் ...
மௌனங்களை திறந்து
நானும் நீயும் கைபேசியில்
உரையாடலை தொடங்க ...

மூச்சுக்குழல் வழியே
பெரும் முனகல்கள் எழுப்பி "ம்ம்ம்" என்கிற
அடையாள மொழியில்
இன்னும் பேசு என்கிறாய் ...

உனக்கும் எனக்குமான
நீள உரையாடலை
முடித்து வைக்க ஏதுவாய் தோன்றிடும் இயல்பின் யாதொரு குறுக்கு நிழல்களுக்கும்
வழிவிடாது தொடரும்
பெரும் சமிக்ஞை கடத்துகை தானோ இந்த பேரன்பில் கசியும் காதல் ...

கொஞ்சி பேசுதல் குறைவே என்றாலும்
குழந்தை மொழியாகிறது உன் குரல் எனக்கு ...

தொட்டு விடும் தூரம் இல்லையென்றாலும்
தொடுதலோடு தொடங்கி இம்சையில் சினுங்குகிறது நம் கைபேசி ...

ஏதேதோ ... எண்ணங்கள்
தோன்றி வளர்ந்து வளர்ந்து விடைபெறும் பொழுதுகளில்
அழைப்பு துண்டித்த போதிலும்
உன் குரல் இன்னும் ஒலித்துக்கொண்டேதானிருக்கிறது

ராட்சஷி ...

Monday, January 28, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டம் நியாயமானதா ?
பிரச்சினை இதுதான் ... வெகுசன மக்கள் போராட்டம் நடத்துகின்றபோது "எனெக்கென்ன வந்துச்சு " என்கிற மனநிலையில் ஆசிரியர்கள் இருந்தமையாம் இன்று அவர்களுக்கு எதிராக  "அதிக சம்பளம்" என்கிற வரையறைக்குள் அடக்கி ஆசிரியர்களுக்கு எதிராக பொது சனங்கள் திரும்பியிருக்கிறது ...
இதனை எப்படி அணுகுவது என்று மற்ற அரசியல் இயக்கங்களுக்கும் விளங்கவில்லை .... அரசு மிகப்பெரிய அளவில் ஊதிய சுரண்டலில் ஈடுபட்டதை மறைக்க முயற்சிக்குமே தவிர அதனை சரிகட்டும் வேலையில் என்றுமே இறங்காது ... தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இருக்கும் வெகு சன மக்களை ஆசிரியர்களுக்கு எதிராக திருப்பி விடுவதையே ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது அரசு ... இன்று தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு அவ்வளவு பெரிய போட்டி நிகழ்கிறதெனில் 2011 முதல் 2019 வரையிலான அதிமுக அரசே காரணம் என்பதையும் ஏற்க மறுக்கிறார்கள் ... இடையில் பகுதிநேர ஆசிரியர்கள் என்கிற போர்வையில் "அரசு வேலைக்கு கமிஷன்" எனவும் கொள்ளையடித்த ஜெயாவை நோக்கி  "இரும்பு மங்கை " என்று புகழ்ந்தும் அனுதாபங்களை மக்கள் தந்துவிட்டார்கள் ... இதன் நீட்சி "துப்புரவு பணியாளர்கள்" நியமனம் வரையில் கமிஷனுக்கு அரசு வேலை என்று இப்பொழுது வரையில் நீடித்துக்கொண்டுதானிருக்கிறது . முழுக்க முழுக்க முதலாளித்துவ ஆட்சியை நோக்கி பாய வேண்டிய முழக்கங்கள் எப்படி போராடும் இயக்கங்கள் , அமைப்புகள் , சங்கங்கள் மீது திருப்பிவிடுகிறதென உணரும் பட்சத்தில்  ஒரு மாநிலத்தை ஆளும் ஏகாதிபத்திய  கட்சிகள் எவ்வாறு தங்கள் சுய லாபத்திற்காக மக்களை பயன்படுத்துகிறார்கள் என்பது நன்கு விளங்கும் ... அதுமட்டுமின்றி தற்போது ஜாக்டோ ஜியோ அமைப்பு  போராட்டம் முதல் மாற்றுத்திறனாளிகள் போராட்டங்கள் வரையில் ஆளும் ஏகாதிபத்திய  அதிமுக அரசின் அணுகுமுறைகளை மக்கள் சற்று சிந்தித்திட வேண்டும் , அதுபோலவே ஆசியர்களும் , இதுவரையில் மக்கள் போராட்டங்களில் அடையாள ஆதரவு கூட எங்கும் கொடுத்ததில்லை ஜாக்டோ ஜியோ அமைப்பு என்பது அவர்களுக்கே தெரியும் .  ஏன் அவர்கள் குரலெழுப்ப வேண்டும் என்று கேள்விகள் முன்வைக்கப்படலாம் ... அதற்கு பதில் இன்று  ஆசிரியர்கள் போராட்டத்தை அரசுக்கு எதிராக இல்லாமல் அதே ஆசிரியர்களுக்கு எதிராக திருப்பிவிடும் ஆளும் அதிமுக அரசின் அரசியல் யுக்தியை அறிந்திடவே ஜாக்டோ ஜியோ மக்கள் போராட்டங்களில் குரலெழுப்புவதன் மூலம் அறிந்து கொள்ளலாம் . ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையில் அவனோடு "அரசியல் " என்பது இயல்பாகவே பயணிக்கத் தொடங்குகிறது என்கிற உண்மை எப்போது உணர்கிறோமோ அப்பொழுது சனநாயகத்திற்கு வித்திடும் நல்லாட்சியை நாம் தேர்தெடுக்க முடியும் . ஆகவேதான் "அரசியல் பழகு " என அழுத்தமாய் சொல்லப்படுகிறது . ஆண்டாண்டுகால  "உழைப்புச் சுரண்டல் " இன்றும் தொடர்வதற்கு அரசியல் அறிவின்மையே காரணமாக அமைகிறது .  குறைந்தபட்சம்  ஆசிரியர்களின் CPS  பணம் 50000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருக்கும் அரசை நோக்கி தயவுசெயது கேள்வி கேட்கலாம் ... ஏனெனில் இந்த ஊழல் வாதிகள் அவர்களுக்குள்ளாகவே தங்கள் இஷ்டம் போல சட்டமெழுதி "சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு " என இயற்றியபோது நாம் அமைதியாகவே வேடிக்கை பார்த்தோம் , அதுமட்டுமின்றி மக்களை ஆளும் எந்த அரசியல் அதிகார வர்க்கத்திற்கும் (மருத்துவம் , சட்டம், தவிர...)  "எங்களை ஆள இன்ன தகுதிதான் பெற்றிருக்க வேண்டுமென்கிற வரையறை இல்லாத போது அப்படியே எதற்கெடுத்தாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் அவர்களுக்கு சனநாயக ரீதியாக நாம் உரிமை தந்திருக்கிறோம்  அதனடிப்படையில் இவர்களும் TET , NEET , என பல்வேறு அடக்குமுறைகளை மாணவர்கள் மீதும் ஏவுகிறார்கள் . அப்படியே அந்த தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றாலும் மறுபடியும் "கமிஷனுக்கே அரசு வேலை " என்கிற சுழற்சிக்குள் மட்டுமே சுழலும் ஆளும் அதிகார வர்க்கம் . இங்கு இதன்படி எந்தவொரு அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்திடும் மனப்பான்மையில் அரசு இல்லை என்பதை உணர்ந்து கொள்வீர்கள் எனில் மொத்த குரல்களும் நிச்சயமாய் அரசுக்கெதிராகவே திரும்பட்டும் . 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற 17000 ஆசிரியர்களை இன்னமும் பணியமர்த்தவில்லை இந்த அரசு என்பது குறிப்பிடத்தக்கது .

ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் :


Sunday, January 27, 2019

பத்மஸ்ரீ கங்காரு ச்ச்சீ பங்காரு அடிகளார்
இந்துத்துவம் முற்றிலுமாக பரவி கிடக்கின்ற காவி தேசத்தில் மாட்டு கோமியத்திற்கு கூட விருது வழங்கப்படலாம் , இதில் அதிர்ச்சியாகவோ , ஆச்சர்யப்படவோ ஒன்றுமில்லை , கடவுளர்களை காட்டி மக்களின் மனங்களில் மூடநம்பிக்கை எனும் நஞ்சை விதைத்து அதன் மூலம் கொழுத்து அலையும் போலிச் சாமியார்களை கொண்டுதான் இந்த பாசிச பாஜக "ராம ராஜ்ஜியம்" என்று திரும்பவும் மனு சாஸ்திர குப்பைகளை மக்கள் மீது திணிக்கிறது , இதற்கு ஆளுகின்ற மாநில அரசுகளும் அடியாட்களாய் போய் நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை , தமிழகத்தில் எந்த பெரிய அரசியல் கட்சிகளானாலும் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் என்கிற அயோக்கியனின் பணத்தை நன்கொடையாக பெற்று தேர்தல் அரசியலை சந்துத்துவிடுகிறது என்பது எதார்த்த உண்மை , இது இப்பொழுது மட்டுமல்ல அந்த போலிச் சாமியார் உறுவான காலத்திலிருந்தே இதுதான் நிலைமை . அம்பேத்கர் உரைப்பார் ,,,
 பெண்களை ஆணாதிக்கத்திலிருந்து விடுவித்து , அவர்களுக்கு அரசியல் அறிவை ,அடிப்படை கல்வியின் மூலம் புகுத்தினால் பெண்கள் தாங்களாகவே "பெண்ணடிமை" தளத்தை உடைத்துக்கொண்டு வெளியேறுவார்கள் என்று ...

ஆனால் இப்போதைய காலக்கடத்தில் இது தலைகீழ் விகிதங்களாய் போனது  பங்காரு அடிகளார் எனும் அயோக்கியனின்  காலை கழுவி மரியாதை செய்வதிலிருந்து தங்களை தாங்களே " சுய மரியாதை" யை இழக்கின்றனர் , நில மோசடி , பல்வேறு கொலைகள் , அதிலும் குறிப்பாக சிறுமிகளை நரபலியிடுதல் , நில ஆக்கிரமிப்பு , தன்னையே தெய்வமாக கட்டமைத்தல் என அனைத்து களவாணி வேலைகளையும் மிகக் கச்சிதமாக "ஹிந்து மதம் " என்கிற கற்பிதங்களுக்குள் செய்பவன்தான் இந்த கங்காரு "ச்ச்சீ பங்காரு அடிகளார்.

யாருக்கு ? பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதென மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது நிசர்சன உண்மை ... அதேவேளையில் மத்திய காவிமய ஹிந்துத்துவ பாஜக அரசு " பெண்களை கருவறைக்குள் அனுமதிப்பதால் " பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதென கூறுகிறது ... இதை ஏன் சபரி மலை ஐய்யப்ப கோவிலில் செய்தால் இதே பாசிக பாஜக எதிர்க்கிறது ?   இங்கு பூசாரிகளும் , அர்ச்சகர்களையும் வேறு வேறு திசைகளாகவே அணுகுகிறது  ஹிந்துத்துவம் என்பது வெட்டவெளிச்சமாகிறதல்லவா ... என்னதான் இருந்தாலும் அவாள்  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நெருங்கி விடலாம் , ஆனால் இதே கங்காரு ச்ச்சீ பங்காரு அடிகளார் எனும் சூத்திரன்  அவாளின் கோவில்களில் உள்ளே தேவஸ்தானத்தில் சென்று பூஜை செய்ய முடியாது .... இதுதான் எதார்த்தம் ... நிலைமை இப்படியிருக்க பார்ப்பனிய இந்துத்துவ மோடி கும்பல் "பத்மஸ்ரீ விருது" என்கிற பெயரில் தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறதே தவிர அவர்களுக்கு இந்த போலிச்சாமியார்களால் பெரும் நிதியுதவி பெற்று கட்சியை இந்துத்துவத்தை வளர்ச்சியடைய கருவியாக பயன்படுத்துவார்களே தவிர , வேறென்ன உள்நோக்கம் இருந்துவிடப்போகிறது .  கங்காரு அடிகளார் என்பதே எச் ராஜாவின் ட்விட்தானே ஒழிய இங்கு இந்த  இந்துத்துவ போலிச் சாமியார்களை இதைவிட கேவலமாக பேசிவிடலாம் ... மதம் மனிதனை மிருகமாக்கும் என்கிற பெரியாரின் எழுத்திலிருந்து முளைபெற்ற தமிழகம் இப்படி கவிகளின் பின்னால் போவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது . குரங்கு (அனுமான்) கையில் பூமாலை கிடைத்தது போல இவர்கள் கையில் " பத்மஸ்ரீ விருது" படாதபாடாய் படுகிறது .

Wednesday, January 23, 2019

வார்த்தைகளில் ஒளிந்து கொள்கிறாய் ...
மிக சொற்ப சொற்களால் குறித்தெழுதும் கனவுகள் எனக்கு மட்டுமே ‌
வாய்த்திருக்கிறதென எண்ணுகிறேன் ...

உனை காணும் பொழுதெல்லாம் தேனருந்தாமலே பூக்களின் மகரந்த வாசனையில் லயித்து மயக்கம் கொண்டு ...

சிரிக்குமந்த  மலர்களிலே வீழ்ந்து கிடக்கும் ஒரு பட்டாம்பூச்சியின்
பிதற்றல் வார்த்தைகளில் ஒளிந்து கொண்டலையும் காதல் மயக்கம் கொள்கிறேன்...

என் நாடித்துடிப்புகளில்
இப்படித்தான் உன் மீதான காதல் ஒளிந்து கொண்டிருக்கிறது போலும் ...

Monday, January 21, 2019

லயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி ...


லயோலா கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஓவிய கண்காட்சிகளில் இடம்பெற்ற புகைப்படங்கள் இவை ... நாள்  : திங் :21 :2019Featured post

டாக்டர் அனிதா நினைவலைகள்

பெருங்கடல்களுக்கு நடுவே நசுங்கிப்போன பல குரல்களின் "நீட்"சிகளாக தொடர்ந்து ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ... அசையாத ம...