Thursday, October 30, 2014

பனிச்சாரல் கடற்கரைக் காதல்!

பனிச்சாரல் கடற்கரைக் காதல்!


இமைகளை மூடாமல்
வியர்வைத்துளி
உப்போடு!
செய்து வைத்த மணல்வீட்டருகில்!
மனிதனை விழுங்கி
அவனே! "தலைவன்"
என்றழைத்த
மீன்வாடை படாத
அந்த வீட்டாரின்
மனையின் மீதோர்
கண்!
மணற்குவியலருகே அந்த
ஜல்லிக்குவியல் தான்
அனைவரின்
மனதையும் கவர்ந்தது அவளும் அதிலொருவள்!
ஓ!!! அடுத்த ஆட்டம் ஆரம்பமாயிற்றோ!
அதோ! அடியாள்
அதட்டுவானெனும்
பயத்திலே!
அழகழகான கல்லங்காயை
அடுத்தடுத்து பறிக்கிறது
அக்கைகள்!
அவளைக் கவர!
அடுத்த
கலையை அவிழ்த்து
விடுவதுதானே முறை!
கடற்கரை மணலைச்
சீண்டி!
ஓட்டை ஒடிச்சலில்லா ஒழுங்கான அச்சின்னஞ்சிறு சங்கினை எடுத்து! மணலையும்
துடைத்து!
ஐவிரல் மடக்கி மோதிரவிரலும் நடுவிரலும்
தாங்கிபிடிக்க!
அருகே என்னுதடு முத்தமிட!
அம்சமாய் எழுந்த அவ்வொலியில்! கூடியிருந்தோர் கும்மியடிக்க!
கண்கள் மட்டும் மனையடி நோக்கியே இருந்தது!
எனக்கு மட்டும்
அகிலம்
அமைதியானது!
அவளின் பார்வை தான் அதற்கு காரணமோ!
ஒன்றை மட்டும் உணர்ந்தேன்!
கண்ணன் இக்கடற்கரை வந்தால்! புல்லாங்குழலை புறக்கணித்துவிட்டு
அச்சின்னஞ்சிறு சங்கினை
தேர்ந்தெடுத்திருப்பான்!
இப்படியே சென்றது
எங்கள்
கடற்கரைக்காதல்!
கரையோர
அலைகளை கூட
கானாத கஞ்சங்களாய்!
ஆங்காங்கே முளைத்திருக்கும் வெந்நீர்க் காதலர்களே!
கேட்டீர்களா?
எங்கள் பனிச்சாரல் காதலை!
இனியுமா உங்களுக்கு முகமூடி தேவை! களையுங்கள்
கடற்கரை களங்கம் படாமலிருக்கட்டும்!

Wednesday, October 15, 2014

கருப்புடல் குமரியே!

கருப்புடலில்
கவர்ந்திழுக்கும்
காவியமே
கேளடி
கிளியோபாட்ரா
காலத்தின்
கண்ணாடியல்லவா
கண்டதும்
காதலுனை
கவர்ந்ததே
காரணம்
கேளடி
கருவிழியும்
கருப்புதானே
கட்டுடல்
கருப்பென
கர்வம்
கொள்ளடி
கடவுள்
கருவரையில்
காட்சியும்
கருப்புதானே
காதலில்
கருப்புடல்
கானமில்லை
கரம் கோர்த்தபின்
கார்மேகமே
நம் கைப்பிள்ளை
கருப்பொன்றும்
கேலிசொல்லில்லை
காதலுக்கு
கருப்பெழுதும்
கதையெல்லாம்
காட்சிப்பிழையில்லை
காதலோடு
குடையொன்றில்
குடியிருப்போம்
கருப்புடல்
குமரியே!

Thursday, October 09, 2014

நெசந்தானா!!!

நெசந்தானா! இது
நெசந்தானா!
ஏம்புள்ள
எழுத படிக்குது
நெசந்தானா!
ஏணிமேல
ஏறி!
எட்டடுக்கு
மாளிகனாலும்
எழவெடுத்த
உசுருமேல
எப்பவும்
கவலபடாம!
அந்தரத்துல
தொங்கிகிட்டு
அழகழகா
சுண்ணாம்படிக்க!
அடிச்ச
சுண்ணாம்போ! அலர்ஜியாக ஆஸ்துமாவும்
அழுத்தி புடிக்க!
அஞ்சாறு
காசு சேர்த்து!
அங்கங்க
கடன் கேட்டு!
அதோடு நோயுஞ்
சேர்த்து!
அமிச்சி வச்சேன் பள்ளிகொடத்துக்கு! அடுக்கடுக்கா
புஸ்தகம் படிக்க
ஆன செலவோ!
அஞ்சு சைபரு!
அழுது பொலம்ப நேரமில்ல! அழுது
பொரண்டாலோ
அதபார்த்து
அந்தபுள்ள!
நைனா!
படிப்பேதும் வேணா
அந்த!
கந்த பனியன குடு போட்டுகிட்டு நானுங் உங்கூட வரேன்னு அடம்புடிக்க
ஆரம்பிச்சிடுமோனு! பயந்தே!
பாதி கண்ணு
மங்களாச்சி!
மீதி கண்ணு
மீண்டுடிச்சி! புள்ளையாண்டான் புள்ளிமானு போல!
துள்ளி ஓடியாந்து
ஒரு
புஸ்தகத்த நீட்ட!
அதவாங்கி
நானும் பாக்க!
எம்பேரு! அவபேரு!
ஆயாபேரு!
தாத்தம்பேரு!
புள்ளபேருனு!
படிக்க தெரிலனாலும்! எழுத்து தெரிஞ்சிச்சு!
அத வாசிச்ச எம்புள்ள குரலும் கேட்டுச்சு! நோயெல்லாம் பஞ்சா பறந்தும்
போய்டுச்சு! நெசந்தானா!
இது
நெசந்தானா!
எம்புள்ள
எழுத படிக்குது
நெசந்தானா!

Featured post

டாக்டர் அனிதா நினைவலைகள்

பெருங்கடல்களுக்கு நடுவே நசுங்கிப்போன பல குரல்களின் "நீட்"சிகளாக தொடர்ந்து ஒரு குரல் அழுதுக் கொண்டே இருக்கிறது ... அசையாத ம...