Tuesday, September 08, 2015

மெல்லப் பேசுவோம் நாம்

வாய்ப்பேச்சில் ஓசை வேண்டாம்
வரும் பேச்சில் தடங்கல் வேண்டாம்

மௌனமாய் இருப்பது இரவுகளுக்கு
பிடிக்காதாம்
கொஞ்சிப் பேசு
கொஞ்சம் உரசிப்பேசு காதலின் மொழி
காதுகளுக்கு விருந்தாகும்

விலகிப் போகாதே
விழுந்து விடக்கூடாது உச்சரிப்புகள்
எதிரில் யாருமில்லை
பக்கத்தில் நீ மட்டுமே
இருந்தும் உரக்கப் பேசாதே உறங்கும் ஜோடிப் பறவைகளின் செவிகள் விழித்திருக்குமாம்

சில புதிரான தோற்றப் பொய்கள்
நம்மிடையே தங்கியிருக்கலாம்
விடைதேடும் ஆவலும் விளக்கேற்றும் நேர்த்தியும் நம் விரல்களுக்கிடையே
ஒளிந்திருக்கலாம்

யாரையும் மிஞ்ச வேண்டாம்
மிச்சமிருக்கும்
பொழுதுகளையாவது
புன்னகையோடு
பேசிக்கழிக்கலாம்
உண்மைகளை துரத்தியபடியே

வாய்ப்பேசுதல் ஒருபுறமிருக்க
வாய்ப்புகள் நழுவி விடாதபடி
நம் விரல்களும்
மொழிபேசுதலை
கண்டு ரசித்திட வேண்டாமா அந்த
நிலவு

என் பக்கத்தில்
நீ அமர்ந்தால்
இரவில் கூட
பூமலரும்
அறிந்த மனதில்
ஆசையோடு சாய்ந்துக்கொள்கிறேன்

ஆகாயம் வெளிச்சம்
நீட்டுகிறது இந்த நொடிபொழுது
இரவிலும்

நம் உதடுகள் இனியும்
பேசாமலிருந்தால்
காதல் சுவடுகள்
மறைந்து போகலாம்
மறக்காத நினைவுகள்
நமக்கு
வேண்டுமல்லவா

எதை எதை எங்கே
பேசினோம் எதிர்காலக் கனவுகளை எங்கே
தீர்மானித்தோம்
என்பதை
முதுமையில் நம்முதடுகள்
அசைபோட அப்படியே இறந்தாலும்
அதற்காக கண்ணீர் விடும் காதலுக்கேனும்
நாம் பேசிட வேண்டும்
யாருக்கும் எந்த
இடைஞ்சலுமில்லாமல்

ஆகவே நாம் மெல்லப் பேசுவோம்
மென்மையாக அனுகுவோம்
மெய்யுலகம் உறங்கும்
அந்த இரவு வேளையிலும்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...