Saturday, January 09, 2016

எனக்கு நானே எழுதும் கடிதம்

"நான்" என்பது
எதுவரையில் நீளுமோ
தெரியவில்லை
எனக்கு,,,

ஆனாலும் முடிவென்பது
இருப்பதாலே
அது தோன்ற
எழுதுகிறேன்
கடிதமொன்றை
எனக்கு நானே எழுதும்
கடிதமெனும்
தலைப்பிட்டு,,,

தலைப்பை கண்டு
நிச்சயம் சிரிப்பாய்
சிரித்துவிடு
ஆனாலும் ஒன்று
எப்படி அழைப்பது
உன்னை,,,

நண்பனென்றா
தோழரென்றா
பங்கு என்றா
மச்சி என்றா
மாமா என்றா
பாஸ் என்றா
ஜி என்றா,,,

எதில் நீயிருக்கிறாய்
பதில் சொல்லிவிட்டு
பிறகு சிரித்துவிடேன்,,,

கொஞ்சம் வலிக்கத்தான்
செய்யும்
என் கடிதம் உனக்கு
வலி பொறுத்துக்கொள்
நீ நீயாக அல்லாமல்
"நாமாக" உணர
வேண்டுமல்லவா
அதற்காக,,,

சமீபத்தில் நீயெழுதிய
பல கடிதங்களை
வாசித்தேன்,,,

பெருமழை
வெள்ளத்திற்கு
யார் பொறுப்பு
தமிழகம் ஆளும்
அம்மாவிற்கு
மனம் திறந்த கடிதம்,,,

"பீப்"பாடலுக்கு
நடிகர் சிம்புக்கு
மனம் திறந்த கடிதம்,,,

சேவை மறுத்த
நடிகர் சங்கத்திற்கு
மனம் திறந்த கடிதம்,,,

ஊடக அவமதிப்பு
"த்தூ"
விஜயகாந்திற்கு
மனம் திறந்த கடிதம்,,,

அரசியலுக்கு
வா! தலைவா
சகாயத்திற்கு
மனம் திறந்த கடிதம்,,,

இப்படியே நீளும்
உனது கடிதங்களை
வாசித்து
மெய்சிலிர்த்தேன்
"நான்" என்பதாலே
நரம்புகள் புடைத்து
எழுகிறது புரட்சியென
எனக்குள்ளே
ஆனந்தமாய்
அது மனதிற்கு மட்டுமே
ஆறுதலாக,,,

கடிதங்களை அடுக்கிய
எண்ணங்களும்
எழுதுகோலும்
காகிதமும்
பாவமாய் பார்க்கிறது
என்னை மட்டுமே,,,

வேறெதுவும்
தோன்றவில்லை
எழுதுகிறேன்
எனக்கு நானே கடிதத்தை
மூன்றே மூன்று
விமரிசனம்
அதனுள் புதைத்து,,,

ஈழமோ மீனவ
சிறைவைப்போ
நிதி ஒதுக்கீடோ
நீதி கேட்டோ
பேரிடர் அறிவிப்பு
கோரியோ
அரசெனும்
அதிகாரம் எழுதும்
கடிதம் மட்டும்
கசக்கிறதே எப்படி?
வைக்கிறாயே
விமரிசனமொன்றை
கணினி யுகத்தில்
கடிதமா?
என்றழகாய்,,,

அரசு அதிகாரியாய்
அதே அரசிடம்
மண்டிக்கிடக்கும்
அழுக்குகளை
துடைக்கிறார்
சகாயம்
அவரின் பணி
அதுதானே
ஒப்புக்கொள்கிறாயா,,,

அரசியலில்
அழுக்கு படியாத
கைசுத்தம்
கண்ட நல்லகண்ணு
ஏன் தெரியவில்லை
தெளிவுள்ள
கண்களுக்கு,,,

பார்வைகள்
மழுங்கியும்
வெளிச்சம் படாத
இருட்டில்
நெய் விளக்கு
தேடுகிறாய்
ஆமாம்தானே,,,

ஆளும் அதிகாரம்
அழிந்து போகும்
சமூகத்து
மானுடர்களை
சந்திக்கவில்லை
என்கிறாயே
நீயேன்
நான்கு சுவற்றுக்குள்
வெறும்
கடிதமெழுதுகிறாய்
சுற்றத்தாரின்
முகவரிகள் கூட
தெரியாமல்
கடிதத்தில் மட்டும் ஏதோ
முகவரியிட்டு,,,

இம்மூன்று
விமரிசனமும்
எழுதுகையில்
"நான்" என்பவன்
இறந்திருக்கலாம்,,,

ஆனாலும் எனக்கு
எழுதிவிடு
பதில் கடிதத்தை
எனக்கு நானே எழுதும்
கடிதமெனும்
அதே தலைப்பில்,,,

முகவரி மட்டும்
மாற்றி எழுது
இவன் முகவரி
அற்றவனென்று,,,

மறக்காமல்
வாசித்துவிடுவேன்
"நாம்" எனும்
அடையாளத்தில்
வாழத்
தொடங்கியிருப்பதால்,,,

2 comments:

  1. அனைத்துக்கும் தீர்வு கடிதம் என்ற நிலையில் நமக்கு நாமே எழுதிக்கொள்வது பிரச்சினையில்லை!
    அருமை

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...