Tuesday, June 07, 2016

மலடி அல்ல அவள்

மனதில் உட்புகுந்து
உயிரை
வதைக்குமந்த
"மலடி" எனும்
கொடுஞ்சொல்லை
மறக்கவே

மரணத்தின் வாசலில்
இருந்து அவள்
எழுதும் கடிதத்தின்
கடைசி வாக்கியத்தில்
ஓர் மழலையின்
கைநாட்டு

எப்படி?

பெற்றால்தான்
பிள்ளையா?
எதிர் கேள்வி
தொடுத்தது எதிர்வீட்டு
மழலை

ஆனாலும்
உள்ளம் உருகாமல்
மனதிறங்கியும் வராமல்
சொட்டுக் கண்ணீரின்றி
கல்நெஞ்சத்தோடு

அடுத்ததொரு
மரணத்திற்கு
அடித்தளமிடுகிறது
நாவில்
குடிகொண்டிருக்குமந்த
மலடி எனும் வார்த்தை

இறந்துபோன தாயின்
கல்லறையில்
இப்பொழுதும்
குழந்தையொன்று
தவழ்கிறது
நாளைக்கு அதற்கு
மரமென்று
பெயர் சூட்டி
அழைப்பார்கள்

மலடி அல்ல
அவளென்று
மண்ணிற்குள்
புதையுண்டிருக்கும்
விதைக்கு மட்டும்
தெரிந்திருக்கிறது,,,

2 comments:

  1. 'மலடி' என்று சொல்
    பெண்ணைத் தாக்குவதாக இருக்கும்
    ஆனால்,
    ஆணின் இயலாமையால்
    பெண் பிள்ளை பெறாவிட்டால்
    'மலடி' என்று சொல்லுக்கு மாற்றீடாக
    'மலடன்' என்று சொல்ல - எங்கள்
    மக்களாயம் (சமூகம்) ஏற்க முன்வராமை
    துன்பம் தருகிறதே!

    கவிதைக்கான கருப்பொருள் நன்று
    ஆனால்,
    எங்கள் மக்களாயத்தில் (சமூகத்தில்)
    மாற்றம் மலர வேண்டும்!

    ReplyDelete
  2. ஆணாதிக்கச் சமூகத்தில்
    "மடலன்" தேவையான வார்த்தைதான் தோழர்!
    தங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...