Monday, February 29, 2016

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் அறிவுலகப் பணிகள்

தீவிர அரசியல் செயல்பாட்டாளராக
அறியப்படும் தாத்தா இரட்டைமலை
சீனிவாசனின் அறிவு ரீதியான
நடவடிக்கைகள் தாழ்த்தப்பட்டோர்
வரலாற்றிலும் , தமிழ்ச்சமூக
வரலாற்றிலும் என்றும் நினைவு
கூறத் தக்கதாகும். இரட்டைமலை
சீனிவாசனின் இதழியல் பணி பலரும்
அறிந்த ஒன்றேதான். பிற சாதியினரை
போல பறையர் (தலித்) சமூகத்தை
முன்னேற்றும் பொருட்டு பறையன்
என்னும் மகுடத்தோடு 1893
அக்டோபரில் பறையன் இதழை
தொடங்கியபோது அவருக்கு வயது 32
தான், பறையர் என்ற தலித்திய சமூக
அங்கத்தினர்களுக்காக பரிந்து
பேசுவதும், தலித்தியர்களுக்கான
அரசு அதிகாரம் மற்றும் உரிமைகளை
நாடியும், நல்லொழுக்க ஆதாரங்களை
பற்றியும் பத்திரிக்கை
வெளியிட்டுக்கொண்டிருந்தது என்கிறார்
இரட்டைமலை சீனிவாசன். நான்கு
பக்கத்தோடு மாத இதழாக
தொடங்கப்பட்டபோது அதன் விலை
இரண்டணா, இதழ் விளம்பரத்திற்கும்
முதல் இதழ் அச்சடிக்கவுமாக 10
ரூபாய் செலவானது. தொடங்கப்பட்ட
மூன்று மாதங்களுக்குப் பிறகு வார
இதழாக சனிக்கிழமைதோறும்
வெளியான இவ்விதழுக்கென்றே தனிய
அச்சு இயந்திரம் இரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தமாக
வாங்கப்பட்டது. பறையர்
சமூகத்தவர்களால் வெகுவாக
ஆதரிக்கப்பட்ட இவ்விதழ் பிற ஆதிக்க
சமூகத்தினரின் வெறுப்புக்கே
இலக்காகியிருக்கும் என்பதை அதன்
பெயர் மூலமும் அறிய முடிகிறது.
தலித் பறையர் சமூகத்தார்
கல்வியிலும், அறிவு தளத்திலும்
தீவிரமாக இயங்கவந்த காலமும்கூட
அது,,, பறையன் இதழுக்குப் பிறகு
தொடங்கப்பட்ட "தீவிர வலதுசாரியம்"
கொண்ட வ.வே . சுப்பிரமணியரின் "பால
பாரதி" இதழுக்கு 300
சந்தாதாரர்களுக்கு மேல் சேரவில்லை.
அ . மாதவனின் "பஞ்சாமிர்தம்"
இதழுக்குக் கூட 400
சந்தாதாரர்களுக்கு மேல் சேரவில்லை
என்று அறியப்பட்டபோது பறையன்
இதழ் அதிக சந்தாதாரர்களை
பெற்றிருந்ததோடு அதன் முதல் இதழ்
400 பிரதிகள் அச்சடிக்கப்பட்டு
இரண்டே நாட்களில்
விற்றுத்தீர்ந்தன,மேலும் 1893 முதல்
1900 வரை இரட்டை மலை
சீனிவாசன் மேலை நாடு
சென்றும்கூட தொடர்ந்து 7 ஆண்டுகள்
அவ்விதழ் வெளியானது. 1920 களின்
இறுதியில் மதுவிலக்கு
பிரச்சாரத்திற்காக வெளியான
"இராஜாஜியின் விமோச்சனம்" எனும்
மாத இதழ்கூட மொத்தம் பத்து
இதழ்களே வெளியாகி நின்று போனது
குறிப்பிடத்தக்கது. மேற்குறித்த தேசிய
நோக்கங்கொண்ட இதழ்களை
புறந்தள்ளிவிட்டு சமூக தளத்தில்
எழுச்சிக்கான முன்னுதாரனமாக
இரட்டைமலை சீனிவாசன்
இதழியல்பணி சிறப்பு பெற்றிருந்தது.
அயோத்திதாச பண்டிதரின் " தமிழன்"
இதழ்கூட அவரால் ஏழு
ஆண்டுகள்தாம் நடத்தப்பட்டது. இந்த
ஏழு ஆண்டுகால தமிழன் இதழின்
மறுஉயிர்ப்புதான் தாழ்த்தப்பட்டோரின்
வரலாற்றினை புதியதடத்தில்
நகர்த்தியுள்ளது. பிறகான சூழலில்
அயோத்திதாச பண்டிதர் அவர்கள்
"தமிழன்" என்கிற அடையாளத்தை
உடைத்துக்கொண்டு தம்மையும்
தலித்தின மக்களையும் "திராவிடன்"
எனக்கிற அடையாளத்துடன் இருக்க
விரும்பியதோடு அல்லாமல்
செயல்வடிவிலும் கொடுக்கிறார்.
இன்றை திராவிடத்திற்கு
முன்னொடியானவர் அயோத்திதாச
பண்டிதரே ஆவார்.
இரட்டைமலை சீனிவாசன் பறையன்
இதழை நடத்தியபோதே நூல்கள்
பலவற்றையும் சிறிதும்,பெரிதுமாக
வெளியிட்டுள்ளார். அந்நூல்கள் சாதி
இந்துக்களான ஆதிக்கர்களால்
அடையாளமற்ற நிலையை
பெற்றுவிட்டன. இன்றைக்கு அவரை
பற்றி அறியப்படுகிற வரலாறும்கூட
அவரே எழுதி வெளிமிட்ட "ஜீவிய
சரித்திர சுருக்கம்" என்னும்
சுருக்கமான சுயசரிதை நூலால்தான்
அறிய முடிகிறது. 1897 அக்டோடபர் 9
இல் வெளியான பறையன் இதழில்
"சாம்பான் குல விளக்கம்" எனும் நூல்
பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போலவே "பறையன்"பத்திரிக்கை
ஆபிஸில் நூல்கள் வெளியிடப்படும்
விருப்பமுள்ளோர் பெற்றுக்கொள்ளலாம் ,
என்கிற அறிவிப்பும்
வெளியாகியுள்ளது . இதன் மூலம்
நூல்களையும் இரட்டைமலை
சீனிவாசன் வெளியிட்டுள்ளார் என்பது
புலனாகிறது. 1900 ஆண்டு
மேலைநாடு பயணமான சீனிவாசன்
1921 இல் திரும்பி வருகிறார். 1923
இல் சென்னை மாகாண சட்டசபை
உறுப்பினராக நியமிக்கப்பட்டது முதல்
அவரின் பணி பெரும்பாலும் அரசியல்
தளத்தையே மையமாக கொண்டிருந்தது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக
நிற்கும் தீண்டாமையை ஒழிக்க
பல்வேறு சட்டமுறை தீர்வுகளை
உறுவாக்குவதில் அவர் ஈடுபட்டு
வெற்றியும் பெறத்துவங்கினார்.
சென்னை சட்டசபையில் ஞாயிற்று
கிழமைகளிலும், அரசு விடுமுறை
நாட்களிலும் சாராயக்கடைகள்
மூடப்படவேண்டும் என்று அவர்
தீர்மாணம் ஏற்கப்பட்டு
நடைமுறையில் இருந்தது. கிணறு,
குளங்கள், தெருக்களை எல்லா
மக்களும் சமமாய் பயன்படுத்த வகை
செய்யும் சட்டப்பிரிவுகளை, விளக்கி
சிறுநூல் ஒன்றை அவர்
வெளியிட்டார். அந்நூலில், பொது
நீர்திலைகளை அனைவரும்
பயன்படுத்தும் பொருட்டு
இரட்டைமலையார் கொணர்ந்த
தீர்மானமும், உறுவான சட்ட
பாதுகாப்பும் அம்பேத்கர்,
இரட்டைமலை சீனிவாசன் இணைப்பு
வாதங்களுக்கு கிடைத்த அரசமைப்பு
சட்ட உரிமையாகவே
பார்க்கப்படுகிறது. 1930 இல்
இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை
மாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் தலித்தின
உரிமை மீட்புக்கு துணையாக
அம்பேத்கருடன் இரட்டைமலை
சீனிவாசன் அவர்களும் சேர்ந்து
பணியாற்றி உரையாற்றினார்கள்.
அங்கு நடைபெற்ற நிகழ்வுகளை
நூலாக எழுதி சொந்த செலவில்
வெளியிட்டார் இரட்டைமலை
சீனிவாசன். காந்தி இந்திய அரசியலில்
முக்கிய சக்தியாக மாறி தீண்டாமை
எதிர்ப்பு கிளர்ச்சி நடத்த தயாரானபோது
அதுபற்றி,,, அவருக்கு பகிரங்க கடிதம்
எழுதுகிறார். அந்த கடிதத்தையும்
சிறுபிரசுரமாகவும் அவர்
அச்சிடுகிறார். காந்தியின் இந்து துறவி
கோலத்தையும், தாழ்த்தப்பட்டோர்
தலித்தின மக்களை "அரிசன்" என
விளிப்பதையும் கடுமையாக
சாடுகிறார். 1933 இல் சென்னைக்கு
வந்த காந்தியை நேரில் சந்தித்து
காந்தியிடம் தன்னுடைய நீண்ட
அறிக்கையொன்றை சீனிவாசன்
அளித்தார். அந்த அறிக்கை முழுவதும்
தீண்டப்படாதோர் உரிமை தொடர்பான
வேண்டுகோள்களையும்,
கண்டனங்களையும் கொண்டிருந்தது.
மேலும் "அரஜன சேவா சங்கம்"
முற்றிலுமாக ஒழிக்கப்பட
வேண்டுமென்றும்,
தாழ்த்தப்பட்டவர்களை அரிஜனங்கள்
என்று அழைக்கத் தொடங்கியபோது
அம்மக்களை யாரும்
கலந்தாலோசிக்கவில்லை எனவும்
காந்தியை சாடுகிறார். இதனை
(அ.ராமசாமி "தமிழ்தாட்டின் காந்தி")
மறுநாள் இந்து நாளேட்டில் விரிவாக
செய்தி வெளியிடுகிறார்.
இரட்டைமலை சீனிவாசன் அளித்த
அறிக்கையை பற்றிம விவரங்களை
காந்தி மறுபரிசீலனைக்கு
எடுத்துக்கொண்டார் என
செய்தியையும் வெளியிட்டார்.
இச்செய்திகள் யாவும் இரட்டைமலை
சீனிவாசன் கருத்தியல் தளத்திலும்,
அரசியல் தளத்திலும் இணையான
ஈடுபாடு கொண்டவராக இருந்தார்
என்பதை புலப்படுத்துகிறது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...